
“இது ஒரு தண்டம். எதற்கும் பிரயோஜனம் இல்லையே. பாண்டுரங்கா! பாண்டுரங்கா! என்றே பொழுதைப் போக்குகிறதே….
என்ன சொல்லியும் மாறவில்லையே” என்று நாமதேவனின் தாய் மிகவும் வேதனையுற்றாள்.
அவனோ… குடும்பமோ, உறவோ,செல்வமோ உணவோ எதைப்பற்றியுமே சிந்தனையின்றி எந்நேரமும் விட்டலனைப் பாடியும் புகழ்ந்துமே பரவசமாயிருந்தான் அவன் தேவைகளை அவன் பார்த்துக்கொண்டான்.
நாம்தேவ் வேலை வெட்டி இல்லாமல் இப்படியிருந்தால் குடும்பத்துக்கு வருமானம் ஏது?
ஒருநாள் எப்படியோ அவரை முடுக்கி கடைத்தெருவில் ஒரு கடை வைத்து அதில் நாம தேவரை உட்கார்த்தினாள் அவர் தாய்.
அவர் பார்த்துக்கொண்டது ஒரு துணிக்கடை… ” இந்தா நாம்தேவ், இந்த துணி இவ்வளவு விலை, இவ்வளவு தான் அளவு. விலை குறைக்கக் கூடாது. கடனே கிடையாது.
கணக்கு சரியாக போட்டு பணத்தை வாங்கு. சாமர்த்தியமாக பேரம் பேசு. கடையில் நன்றாக வியாபாரம் செய்” என்றெல்லாம் மற்ற வியாபாரிகள் அவருக்கு பாடம் நடத்தினார்கள்.
அவரும் புரிந்து கொண்டதாக தலையாட்டினாரே தவிர அவருக்கு, விலை, பணம், அதிகம், லாபம், போன்ற வார்த்தைகளிலோ அவற்றின் அர்த்தத்திலோ மனம் செல்லவில்லை.
அவருடைய அப்பா, அம்மா விரட்டினதால் துணி மூட்டையோடு சென்றார். ஒரு பெரிய கல் ஒன்றை பார்த்து வைத்திருந்தார்.
பஜாரில் நிறைய பேர் வந்து போகும் இடம் அது. அதன் மீது உட்கார்ந்து பஜனை செய்துகொண்டிருந்தார்.
சாயந்திரம் அந்தி சாய்கிற வேளை வரை அங்கே அமர்ந்து கொண்டிருந்து விட்டு பிறகு கோவிலுக்கு போகவேண்டும் என்ற எண்ணம் வந்தவுடனே தான் அன்று முழுதும் ஒரு துணி கூட விற்கவில்லையே என்ற நினைப்பு வந்தது .
வீட்டுக்குப்போனவுடன் அப்பா வெளுத்து விடுவாரே என்று அச்சம் தோன்ற என்ன செய்வது? எப்படி விற்பது? தான் உட்கார்ந்திருந்த அந்த பெரிய கல்லிடமே ” இந்த எல்லா துணியையும் உனக்கே விற்றுவிட்டேன் என்று சொல்லிவிட்டு துணியெல்லாம் அந்த கல்லின் மேலேயே போட்டுவிட்டார்.
“பொருள் யாரிடமாவது கொடுக்கும்போது ஒரு சாட்சி வைத்துக்கொள்” என்று வியாபாரிகள் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் வந்தது. இப்போது இந்தக் கல்லிடம் நான் துணிகளை எல்லாம் விற்றதுக்கு ஒரு சாட்சி யார்? பார்த்தார். அருகே ஒரு சின்னக்கல் கண்ணில் பட்டது.

” நீயே சரியான சாட்சி. நீ தான் நான் இந்தப் பெரிய கல்லுக்கு துணி விற்றதற்கு சாட்சி’ என்று சொல்லி சின்னக் கல்லைத் தூக்கி பெரிய கல்லின் மேல் விட்டு வந்த துணி மூட்டைமேல் வைத்து விட்டு நேராக வீடு திரும்பினார்.
நாம்தேவ் வியாபாரம் செய்த அழகைக்கேட்டவுடன் அவரது அப்பா சுனாமியானார். என்ன ஒரு “தொண்டியா”வையா சாட்சிக்கு பணத்துக்குப் பொறுப்பாக வைத்தாய். போய்க் கொண்டுவா அவனை?” (தொண்டியா” உபயோகமற்ற மனிதர்களையும் கல்லையும் குறிப்பிடும் மராத்தி வார்த்தை) என்றார்.
நாம்தேவ் மீண்டும் சென்றார். இரவு வெகுநேரம் ஆகியதே. கல்லின் மேல் துணி மூட்டையைக் காணோம்! சிறிய கல் (சாட்சி) கீழே விழுந்து கிடந்தது.
” எங்கே என் பணம்?” கல் பேசுமா?.
“உன்னை நம்பித் தானே துணிகளை பெரிய கல்லுக்கு விற்றேன்? . நீ பணம் கொடுக்கும் வரை உன்னை விடமாட்டேன்”. சாட்சிக்கல் ஒரு பெட்டிக்குள் வைத்து பூட்டப்பட்டது.
நேராக விட்டலன் ஆலயம் சென்றார்.
விட்டலா உனக்குத் தெரியும் நான் பொய் சொல்லவில்லை. நீதான் என் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டு ம்”
அன்று மாலை நாமதேவர் அப்பா, வந்ததும் வராததுமா தொண்டியா எங்கேடா?” பணம் கொடுத்தானா?

” உள்ளே வீட்டுக்குள் ஒரு பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன்”
அப்பா அடிப்பார் என்று ஒரே ஓட்டமாக விட்டலன் ஆலயத்துக்கு போய்விட்டார் நாம்தேவ்.
அப்பா கோபமாக பெட்டியைத் திறந்தார். உள்ளே ….? ‘ஒரு பெரிய தங்கக்கட்டி!. சிறிய சாட்சிக் கல் தான் தங்கக்கட்டியாக மாறியிருந்தது.”
அப்பாவோ நாமதேவின் வியாபார சாமர்த்தியத்தில் ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருந்த போது விட்டலனிடம் நாம்தேவ்: “விட்டலா! பாண்டு ரெங்கா! எனக்கு நீ என்ன செய்வாய் என்று தெரியாது. அப்பா என்னை அடிக்காமல் நீ-தான் ஏதாவது செய்து என்னைக் காப்பாற்றவேண்டும் ” என்று விட்டலன் முன்பு கல்லும் உருக வேண்டினான்.
மறுபுறம் தங்கக்கல்லை உருக்க அப்பா கடைக்குச் சென்று கொண்டிருந்தார் விட்டலனின் மாயம் புரியாமல்