October 20, 2021, 6:39 pm
More

  ARTICLE - SECTIONS

  இஸ்லாமியர் மனதை மாற்றிய இராமபக்தி!

  pandu
  pandu

  கபீர்தாசர் சுகரின் அம்சமாக காசியில் (கங்கையில்) சுயம்புவாக அவதரித்தார். தமால் ஜீஜபாய் என்ற துணி வியாபாரம் செய்யும் இஸ்லாமிய தம்பதிகள் எடுத்து வளர்த்தனர். சிறு வயதில் ஒரு சாது, “இராம” நாமம் சொல்வதை கண்ட கபீர் அதையே செபித்து வந்தார்.

  ஒரு நாள் தாயின் ஆணை கிணங்கி துணி விற்க செல்ல அங்கு அந்தணர் ஒருவர் வந்து குளிர் மிகுதியால் அவரின் துணியை கேட்க இவரோ வஸ்திரத்தில் பாதியை கிழித்து தந்தார். அந்தணரோ பதிலுக்கு இராம நாமத்தின் மகிமையை எடுத்து கூற கபீரும் ஆனந்தமாக கேட்டார். சிறிது நேரத்தில் அவர் எதிரே ஒரு ஃபக்கீர் வந்தார்.

  கபீரை நெருங்கி, “ஐயா, குளிர் மிகுதியாக இருக்கிறது. நீங்கள் ஸாதுக்களுக்கு தான தருமங்கள் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன். ஒரு முழம் துணியைத் தந்தால் தலையில் கட்டிக் கொண்டு பனியிலிருந்து காத்துக் கொள்வேன்” என்றார்.

  சற்றுமுன் அந்தணர் கூறியவற்றை மனத்தில் நினைத்தவராக கபீர், “ஜெய் சீதாராம்” எனக்கூறி அந்தத் துண்டை ஃபகீரிடம் தர, அவரோ, “அல்லாவின் பெயரல்லாது ஏதோ மனிதனின் பெயரைச் சொல்கிறாயே. உன்னிடம் வாங்க மாட்டேன்” எனக்கூறி அவரது பெற்றோரிடம் கூற விரைந்தார்.

  கபீர் ஒரு பாழடைந்த வீட்டில் ஒளிந்து கொண்டார். ஃபகீர் ஜிஜ்ஜா பீபீயிடம் சென்று, “உன் மகன் குலத்தைக் கெடுக்க வந்திருக்கிறான். இன்று காலையில் யாரோ ஓர் அந்தணருக்கு ஓர் அழகான துணியை வருந்தி வருந்திக் கொடுத்துக் கொண்டிருந்தான். நான் எனக்குக் கொடுக்கச் சொன்னேன். இரண்டாகக் கிழித்து ஆளுக்குப் பாதி என்கிறான். நான் சின்னத் துண்டு வேண்டாம் என்றேன். என் தாயாரிடம் போய்க் கேள் பெரிய துணியாகக் கிடைக்கும், ஆனால் நான் தானம் செய்ததைச் சொல்லாதே என்று பாழடைந்த இந்த வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான்” எனக் கூறினார்.

  துணியை விற்ற பணத்துடன் கபீரை எதிர்பார்த்த ஜிஜ்ஜா பீபீ கோபத்துடன் ஃபகீரைப் பின் தொடர்ந்து கபீரை, ஃபகீரின் பிரம்பினால் இரண்டு அடி அடித்தார். கபீர், “ஹரே ராம்! ஹரே ராம்!” எனக்கதற அந்த அடிகள் உலகிலுள்ள சகல ஜீவராசிகள் மீதும் விழுந்தன.

  இறைவனது முதுகிலும் பட்டன. இறைவன் பிரத்யக்ஷமாகி கபீரைத் தழுவிக்கொண்டு ஜிஜ்ஜா பீபீயிடம், “அம்மா! நீ பாக்யவதி, கபீர் பரம ஞானி, என் மெய்த்தொண்டன். நீ அவனை அடித்தது என் முதுகில் பட்டிருக்கிறது பார், என்று காட்டினார். இறைவனைக் கண்டு மூர்ச்சையுற்ற பீபீயைத் தெளிவித்து விட்டு, தகுந்த குருவை அடைந்து பக்தி மார்க்கத்தைப் பின்பற்றும்படி கூறிவிட்டு மறைந்தார்.

  வாரணாசியில் ஸ்ரீஇராமானந்தர் என்ற பெரும் ஞானி பலரைப் பக்திமார்க்கத்தில் வழிநடத்தி வந்தார். கபீர் அவரிடம் உபதேசம் பெற விழைந்தார். ஆனால் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரென அவரை ஸ்ரீ இராமானந்தரின் சிஷ்யர்கள் மடத்துக்குள்ளேயே விடாது தடிகளால் அடித்துத் துரத்தினார்கள். அடிகளையும் பொறுத்துக் கொண்டு கபீர் அங்கேயே உட்கார்ந்து விட்டார்.

  அவர்கள் மேலும் அடிக்கவே கதறிய கபீரின் குரல் கேட்டு ஸ்ரீஇராமானந்தரே வெளியே வந்தார். கபீரைப் பார்த்து மனமும் இரங்கினார். ஆனால் அவரது சிஷ்யர்கள் கபீர் ஒரு திருடனெனக் கூறி அவரை அடித்து விரட்டிவிட்டனர். அடிபட்டு வந்த கபீரைக் கண்டு அவரது பெற்றோர் மனம் வெதும்பி ஸ்ரீஇராமானந்தரையும் அவரது சிஷ்யர்களையும் திட்டினார். கபீரோ மனம் தளராதவராக மீண்டும் சென்று அடிபட்டுத் திரும்பினார்.

  கடைசியில் வேறு வழியின்றி விடியற்காலையில் ஸ்ரீஇராமானந்தர் கங்கையில் நீராடவரும் வழியில் படியில் படுத்திருத்தார் கபீர். அவரை இருட்டில் மிதித்துவிட்ட ஸ்ரீஇராமானந்தர் வழக்கப்படி “ராம் ராம்!” என உச்சரித்தவண்ணம் இறங்கி கங்கையில் நீராட, அதையே பாத தீக்ஷையாகக் கொண்டு கபீர் வீட்டுக்குத் திரும்பி நெற்றித் திலகமிட்டு துளஸி மாலையணிந்து பூஜைக்குரிய பொருள்களுடன் மடத்துக்குள் சென்று மற்றவர்களுடன் அமர்ந்து இராமநாம ஜபம் செய்யலானார்.

  சீடர்கள் அவரை ஸ்ரீஇராமானந்தரிடம் அழைத்துச் செல்ல அவர் கோபித்துப் பாதுகையை வீச அது கபீரின் நெற்றியில் பட்டது. பிறகு கருணையுடன் மறைமுகமாக உபதேசித்து இராம நாமத்தை ஜபித்துவரப் பணித்தார். “இவ்வளவு கிடைத்ததே மஹாபாக்யம்” என மனநிறைவுடன் கபீர் வீட்டுக்குத் திரும்பினார்.

  கபீரின் இராமநாம ஜபம் எவ்வளவு நாளுக்கு நாள் வலுத்ததோ அவ்வளவு அவருக்கு எதிராக முகம்மதியரைத் தூண்டியது. அவர்களுடன் வாதிட்ட கபீர் அவர்களை இராமனும் ரஹீமும் ஒன்றே என்பதையும் இறைவன் ஒருவனே என்றும் ஒப்புக்கொள்ள வைத்தார்.

  அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற ஒரு பெரியவர் இருந்தார். அவருடைய சிஷ்யர் கோரக்நாதர் என்பவர் அஷ்டமா ஸித்திகளும் கைவரப்பெற்றவராக, அதனாலேயே கர்வம் கொண்டவராக, ஊர் ஊராகச் சென்று அனைவரையும் வாதத்தில் வெல்லத் துணிந்தார்.

  ஸ்ரீஇராமானந்தரையும் வெல்ல விரும்பியவராக காசி மாநகரில் அவரது மடத்துக்கு வந்து அவரை வாதுக்கு அழைத்தார். ஸ்ரீஇராமானந்தரின் சிஷ்யர்கள் இந்த ஸித்திகள் யாவும் கைவரப்பெற்ற துஷ்டனைக் கண்டு ஓடி ஒளிந்தனர்.

  சாந்தசீலரான ஸ்ரீஇராமானந்தர் செய்வதறியாது திகைத்தவராகத் தியானத்தில் ஆழ்ந்தார். இவை யாவற்றையும் கேள்வியுற்ற கபீர் கோரக்கருடன் வாது புரிய ஸ்ரீஇராமானந்தரின் அனுமதியைக் கோரினார்.

  ஆனால் ஸ்ரீஇராமானந்தரோ இதைச் சிறுபிள்ளைத்தனம் எனக் கருதி கபீர் வாதில் தோற்றால் அது தன்னைப் பாதிக்கும் என எண்ணினார். ஆனால் கபீரோ அவரது ஆசிகள் மட்டுமே தான் வாதில் ஜெயிக்கப் போதுமானது எனக்கூறி அவரை வணங்கிச் சென்றார்.

  கோரக்கரின் எதிரில் சென்று, “கோரக்கரே! என் குருவின் வல்லமை தெரியாது மோதுகிறீர். வாதிலும் ப்ரஹ்ம ஞானத்திலும் அவர்முன் நிற்கக்கூட உமக்குத் தகுதி இல்லை. மரியாதையாகச் சென்றுவிடும்” என்று கர்ஜித்தார்.

  “சிறுவனே! உன்னை என்ன செய்கிறேன் பார்” என கோரக்கர் எழுந்தார். தனக்கு உதவ வந்த ஸ்ரீஇராமானந்தரையும் தடுத்த கபீர் தன் கையிலிருந்த பட்டுநூல் கண்டை ஆகாயத்தில் வீசினார். அது பூமியிலிருந்து ஆகாயம் வரை ஒரு வலிய மரம்போல் நின்றது. அதன் மேலேறி உச்சியில் அமர்ந்த கபீர் கோரக்கரை வானவெளியில் அமர்ந்து வாது புரிய அழைத்தார்.

  கோரக்கர் திகைத்தார் எனினும் நொடியில் ஸ்ரீஇராமானந்தரின் உருவத்தில் நின்று அவரைக் கீழே அழைத்தார். உண்மையான ஸ்ரீஇராமானந்தர் தன் சீடனைக் காப்பாற்ற இறைவனை வேண்ட கபீர் உற்சாகமடைந்தவராகத் தான் மச்சேந்திரரின் உருவை அடைந்து நின்றார்.

  உடனே கோரக்கர் மஹாவிஷ்ணுவானார். கபீரும் ஸரபமூர்த்தியானார். இப்படி கோரக்கருக்கு ஒருபடி மேலாகவே தன்னை வெளிப்படுத்திக் கொண்ட கபீரது திறன் கண்டு கர்வம் தொலைந்தவராக “இப்படிப்பட்ட சிஷ்யனை அடைந்த ஸ்ரீஇராமானந்தர் பாக்யசாலி” எனக்கூறி வணங்கி கோரக்கர் அகன்றார்.

  தனது பாதத்தில் பணிந்த கபீரைக் கண்டு மகிழ்ந்தவராக ஸ்ரீஇராமானந்தர், “இந்த இளம் வயதிலேயே இறைவனை அடையும் ப்ரஹ்மஞானத்தை அடைந்துவிட்ட நீ நீடூழி வாழ வேண்டும்” என ஆசி கூறினார். காசிநகர் முழுவதும் ஸ்ரீஇராமானந்தரையும் ஸ்ரீகபீர்தாசரையும் புகழ்ந்தது.

  மகனுக்கு மணமுடித்துப் பார்க்க விரும்பி ஸுந்தரா என்ற பெண்ணையும் நிச்சயம் செய்த ஸ்ரீகபீர்தாசரின் பெற்றோர் “ஸுன்னத்து செய்து கொள்ளாத பிரஷ்டனுக்குப் பெண் கொடுக்கமாட்டோம்” எனப் பெண் வீட்டார் கூற, மனம் வெதும்பினர். ஆனால் ஸுந்தராவின் தந்தையின் கனவில் ஓர் ஃபகீர் வந்து “உன் மகளைக் கபீருக்கே மணம்முடி” எனக்கூற, ஸுந்தராவும் “அவரையே மனத்தால் வரித்துவிட்டேன். வேறு ஒருவரை மனதாலும் நினையேன்” எனப் பிடிவாதமாக இருக்க, இறுதியில் இறைவனே ஒரு ஃபகீர் வேடம் பூண்டு மாணவர் புடைசூழ வந்து ஒவ்வொருவரிடமும் சமாதானமாகப் பேசி விவாகத்தைச் செய்து வைத்தார்.

  மணமகள் ஸுந்தரா புகுந்தவீடு வந்ததும், ஸ்ரீ இராமானந்தரைத் தரிசித்து வணங்கத் தன் விருப்பத்தைக்கூறி ஸ்ரீகபீர்தாசரின் பக்திக்கு நான் உறுதுணையாக நிற்பேன்” என தன் கணவரது மனம் பெருமகிழ்ச்சியால் விம்மச் செய்தாள்.

  ஸ்ரீ கபீர்தாசரது இல்லறம் நல்லறமாக நடந்தது. நெசவுத் தொழிலுடன் இறைவனின் நாமஜபத்தையும் என்றும் மறவாத அவர் ஸாதுக்களைத் தம் இல்லத்தில் உபசரிப்பதையே வழக்கமாகக் கொண்டார். ஆனால் பெருமளவு நேரத்தை இறை வழிபாட்டிலேயே கழித்த அவருக்கு வறுமையிலும் விருந்தோம்பல் இனியதானது.

  தாங்கள் உண்ணாமலும்கூட சாதுக்களின் பசியாற்றினார். பக்ரீத் பண்டிகையின் போது உயிர்வதை கொடிய பாவம் என்பதை உணரவைத்து முஸ்லிம்களின் மனத்தை மாற்றினார் ஸ்ரீ கபீர்தாசர்.

  தனக்கு இனியவர்களைத்தானே இறைவனும் சோதிப்பான்? ஒருநாள் நூறு சாதுக்கள் புடைசூழ இறைவன் ஸ்ரீகபீர்தாசரின் இல்லத்துக்குப் பசியாற வந்தான். வீட்டிலோ ஒரு மணி அரிசியும் இல்லை. ஸ்ரீ கபீரும் அவர் மனைவியுமே பட்டினி.

  இந்நிலையில் அடகு வைக்கவும் ஏதுமில்லாத நிலையில் ஸுந்தரா ஒரு யோசனை கூறினாள். “கடைத்தெருவில் ஒரு சௌகார் நெடுநாளாக என்மேல் கண் வைத்திருக்கிறான். ஒருமுறை அவனது விருப்பத்துக்கு நான் இணங்கினால் கொட்டித் தருவதாகக் கூறுகிறான். இந்த சாதுக்களின் பசிதீர்க்க உதவுமானால் அப்படிச் செய்தாலென்ன?” என்றாள்.

  ஸ்ரீகபீரும் அவளுடன் கிளம்பி சௌகாரின் வீட்டுக்குச் சென்று, “நூறு சாதுக்களுக்கு உணவளிக்கப் பொருள் வேண்டும். அதற்கு விலையாக இவளை இங்கு விட்டுச் செல்கிறேன். விருந்தோம்பல் முடிந்தபின் வந்து அழைத்துச் செல்கிறேன்” என்றார். மதிமயங்கி அவனும் பொருளளிக்க சாதுக்களுக்கு வயிறார விருந்து படைத்தனர்

  . பிறகு ஸ்ரீ கபீர்தாசர் வாக்களித்தபடி ஸுந்தராவை வியாபாரியின் வீட்டுக்குக் கொட்டும் மழையில் சேறுபடாது சுமந்து சென்றார். அவளை வேற்றுடை அணியச் சொல்லி தன் அந்தரங்க அறைக்கு அனுப்பிவிட்டு வியாபாரி காத்திருக்க, அந்த ஊர் கொத்தவால் வீட்டினுள் புகுந்து திருட்டுச் சொத்து அங்கிருப்பதாகக் கூறி வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தார்.

  உள்ளே ஸுந்தராவைக்கண்டு, “இவள் ஸ்ரீகபீர்தாசரின் மனைவியாயிற்றே; இந்த உத்தமியையா கடத்தி வந்தாய்?” எனக்கூறி ஸுந்தராவை அழைத்துச் சென்று அவளது வீட்டிலேயே விட்டுச் சென்றார்.

  வீட்டுக்குத் திரும்பிய அவள் கூறியதைக் கேட்டு வெகுண்ட ஸ்ரீகபீர், “என் விஷயத்தில் தலையிட நீர் யார்?” என கொத்தவாலின் வீட்டுக்குச் சென்று திட்டி அடிக்கவும் கை ஓங்க, இறைவன் தோன்றி, “கொத்தவாலாகச் சென்று உன் மனைவியை மீட்டது நான்தான்; ஆகவே உனக்கு அடிக்க வேண்டுமெனத் தோன்றினால் என்னை அடி” என்றார். ஸ்ரீகபீர்தாசர் இறைவனுக்கு அடிபணிந்தார். தமாலும், ஜிஜ்ஜா பீபீயும் மகனது பெருமை நாளும் ஓங்குவது கண்டு மகிழ்ந்தவர்களாக காலக்கிரமத்தில் முக்தியடைந்தனர்.

  ஸ்ரீகபீர்தாசருக்கு இரண்டு குழந்தைகள் தோன்றினர். மகன் பெயர் கமால். மகனாக மட்டுமல்லாமல் கமால் மஹானாகவும் விளங்கித் தந்தையை மகிழ்வுற வைத்தான். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய கமால் ஏழு வயதிலேயே தீர்த்த யாத்திரை செல்ல விரும்பினான்.

  அவனைப் பிரிய மனமின்றி ஸ்ரீகபீர் முதலில் மறுத்தாலும் பின்னர் இணங்கும்படி ஆயிற்று. செல்லும் இடமெல்லாம் இறைவனது நாமத்தின் பெருமைகளைக் கமால் பரப்பினார். கூட்டம் கூட்டமாக வந்து அவரைத் தரிசித்த மக்கள் அவரை ஸ்ரீகிருஷ்ணரின் உருவாகவே கண்டனர். எங்கும் இருப்பதுபோல் புகழ சிலர் இருந்தால் இகழவும் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்! ஒரு ரத்ன வியாபாரியின் இல்லத்தில் சிலர் கமாலைப்பற்றி இகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

  தீராத வயிற்று நோயினால் துன்புற்ற அந்த வியாபாரி, “இந்த நோயைத் தீர்க்க முடிந்தால் கமால் ஒரு மஹான் என நம்பலாம்” என்றான். மறுநாள் காலையில் வலியினால் துடித்தபோது முன்தினம் தான் கமாலைப்பற்றிப் பேசியது நினைவுக்கு வந்தது.

  கமாலைப் பற்றி நினைத்தவுடனேயே அவனது வயிற்றுவலி மறைந்தது. உடனே அவன் கமாலைத் தனது வீட்டுக்கு அழைத்து வணங்கி பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளிக்க, கமால் “இதைக் கட்டிக் காத்து வீட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் திறமை சிறுவனான எனக்கில்லை” என ஏற்க மறுத்தார்.

  வியாபாரி அவரே அறியாது அவரது உத்தரீயத்தில் விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்துவைத்தான். வீடு திரும்பி கமால் பெற்றோரை வணங்கும்போதுதான் மரகதம் அவர்கள் கண்ணில் பட்டது. அதே சமயம் பக்தனுடன் விளையாட விரும்பிய ஸ்ரீஇராமர் ஓர் அந்தணராக அங்கு தோன்றி கமால் அந்தப் பச்சைக்கல்லைத் தன்னிடமிருந்து திருடிவிட்டதாகக் கூற ஸ்ரீகபீர்தாசர் தன் மகனை அடிக்கக் கை ஓங்கிவிட்டார்.இறைவனோ சீதா, லக்ஷ்மண, பரத, சத்ருக்ன, ஹனுமத் சமேதராக அங்கு தோன்றி அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்த ஸ்ரீஇராமானந்தருக்கும் திவ்ய தரிசனம் தந்தார்.ஒரு நாள் இரவு களைத்தவர்களாகவும், பசித்தவர்களாகவும் நூற்றுக்கணக்கான சாதுக்கள் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்றிருந்த ஸ்ரீகபீர்தாசரின் இல்லத்தைத் தேடி வந்தனர். வீட்டிலோ வறுமை. வேறு வழியின்று தந்தையும் மகனுமாக மளிகைக் கடையில் திருடவும் துணிந்தனர். சிறுவன் கமால் சுவரிலுள்ள பிளவு மூலம் சென்று பொருட்களை ஸ்ரீகபீரிடம் தந்துவிட்டு அந்தப் பிளவு மூலமாகவே வெளியேறிவிடுவதெனத் திட்டமிட்டுப் பொருள்களை எடுத்துத் தந்தையிடம் தந்துவிட்டுக் கமால் வெளியேறுமுன் கடைக்காரன் வந்துவிட்டான். பாதி வெளியேறிய நிலையில் கமாலின் கால்கள் கடைக்காரனின் கைப்பிடியில் சிக்கிக் கொண்டன.சற்றும் தயங்காது கமால் தந்தையின் இடையில் இருந்த தறிவேலை செய்யும் கூரிய கத்தியை அவர் கையில் தந்து, “என் தலையை வெட்டி எடுத்துச்சென்றுவிடுங்கள். தலையின்றி அவர்களால் என்னை அடையாளம் காண முடியாது” என வற்புறுத்தினான். தயக்கத்துடன் ஸ்ரீகபீரும் அவ்வாறே செய்யக் கடைக்காரர் உடலைமட்டும் கொத்தவாலிடம் ஒப்படைத்தான். மற்ற திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என நாற்சந்தியில் அந்த உடல் தொங்கவிடப்பட்டது. விருந்து முடிந்த நிலையில் மறுநாள் சாதுக்கள் பஜனை செய்தவாறே அவ்வழி வர தலையற்ற அந்த உடல் அவர்களைத் தொழுது நின்றது. சாதுக்களும், கண்ட ஊர்மக்களும், திகைக்க, இறைவன் அசரீரியாக “கபீர்! உலகிலே மனைவி மக்களிடம் கொண்ட பாசம்தான் வெல்ல முடியாதது. அவ்விரண்டையும் சாதுக்களுக்குச் செய்யும் சேவைக்காகத் துறந்த உன் பக்தியே உயர்ந்தது.”அன்பனே! கமால்! எழுந்திரு!” எனக்கூற அடுத்த கணம் கபீரிடம் இருந்த கமாலின் தலையானது வந்து உடலில் சேரக் கமால் சிரித்த முகத்துடன் நாராயண ஸ்மரணத்துடன் எழுந்து சாதுக்களையும், பெற்றோரையும் வணங்கினார்.ஆசை யாரை விட்டது? கோரக்கர் நப்பாசை கொண்டு மறுபடி ஒருமுறை ஸ்ரீகபீர்தாசரிடம் வாதம் புரிய வந்து தோற்றார். ஸ்ரீகபீர்தாசரும் நானக்ஷா என்பவருக்கு ஹிந்துமதத் தத்துவங்களைப் போதித்ததுடன் ரோகிதாசர் என்ற தீண்டத்தகாதவருடன் ஸ்ரீஇராமன் பரமாத்மா, ஸ்ரீகிருஷ்ணன் பரமாத்மாவா? என்றும் விவாதித்தார். மற்ற முஸ்லிம்கள் குறைதீர்க்க மெக்காவுக்கு யாத்திரையும் செய்து அங்கும் ஸ்ரீஇராமநாமத்தைப் பரப்பினார் இறுதி காலத்தில் பண்டரிக்கு குடும்பத்தோடு புறப்பட்டு வழியிலயே மறித்தார். பிறகு அவர் உடல் ஒரு பகுதி சப்ஜா விதையாகவும் மறுபகுதி துளசியாகவும் தலை ரோஜா மலராக மாற இஸ்லாமியர்கள் சப்ஜா விதையை மெக்காவிலும் துளசியை இந்துகள் காசியிலும் ரோஜாவை அவர் மகன் கமால் பண்டரியிலும் நல்லடக்கம் செய்தனர்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,570FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-