October 16, 2021, 7:56 am
More

  ARTICLE - SECTIONS

  பக்தன் மனம் வாட பொறுக்காத பரமன்! வாடிய மலரை தேடிப் பெறுவான்!

  puri jagannath
  puri jagannath

  பூரியில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதர் பக்தவாத்சல்யர் என்று அழைக்கப்படுகிறார். பக்தர்களுக்கு மிகவும் அனுகூலமானவர், பக்தர்களை தன்னிடையே ஈர்ப்பவர், மேலும் பக்தர்களின் பெருமையை காப்பவர்.

  பூரியில் உள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மரச்சிற்பங்களினால் ஆனவர்.

  ஜகந்நாதருக்கு ஒருபுறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொருபுறம் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

  தனது பக்தர் துன்பப்படும்போதோ தன்னை காணவியலாமல் தவிக்கும்போதோ ரத்தின சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும் ஜகந்நாதரால் பொறுத்துக்கொள்ள முடியாதாம்.

  அப்படி ஜகந்நாதன் பொறுத்துக்கொள்ள முடியாமல் தனது அடியார்களின் துயர் தீர்க்க ஓடோடி வந்த சம்பவங்கள் பலவற்றை வரலாறும் பதிவு செய்து வைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட சம்பவங்களுள் ஒன்றை காணலாம்.

  கி.பி. 10 ஆம் நூற்றாண்டு ஒரிஸ்ஸா மாநிலத்தை உத்யோத் கேசரி என்னும் மன்னன் ஆண்டு வந்தான், ஒரிஸ்ஸாவில் பாயும் புனித நதி ரிஷிகுல்யா. அதன் கரையோரம் சஹாபூர் என்கிற அழகிய கிராமம் ஒன்று உண்டு அங்கு பக்த மனோகர் தாஸ் என்னும் அடியவர் வாழ்ந்து வந்தார்.

  பூரியில் உள்ள ஜகந்நாதரை தரிசிக்கவேண்டி, ஒரு நாள் கால்நடையாக சஹாபூரிலிருந்து புறப்பட்ட மனோகர் தாஸ், பல நாட்கள் இரவு பகல் மழை வெயில் பாராமல் பூரி நோக்கி நடந்தவண்ணமிருந்தார்.

  இவ்வாறு நடந்து வந்த மனோகர் தாஸ் ஒரு நாள் வழியில் சாலையோரத்தில் ஒரு அழகிய குளத்தை பார்த்தார். அதில் மிகவும் அபூர்வமான நூறிதழ் தாமரை மலர்கள் பூத்து மிதந்துகொண்டிருந்தை பார்த்தார்.

  lotus
  lotus

  “இத்தனை அழகான தாமரை மலர்களை இதுவரை பார்த்ததில்லையே… இதை ஜகந்நாதனுக்கு சூட்டினால் எப்படியிருக்கும்” என்று கருதியவர், தாம் பூரி சென்று சேரும் வரை பூவானாது வாடாமல் இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் குளத்தில் இறங்கி மலர்களை பறித்து தனது தலையில் இருந்த துண்டை அவிழ்த்து அதில் கட்டிக்கொண்டார்.

  பின்னர் தொடர்ந்து பூரி நோக்கி நடக்கலானார். ஒரு தை மாத அமாவாசையன்று பூரியை அடைந்தார் மனோகர் தாஸ். பூரி கோவிலின் கிழக்கு பக்கம் புர்பா துவாரம் அருகே இருக்கும் படாசட்டா மடத்தில் தங்கினார்.

  கால் கடுக்க பல நூறு மைல்கள் நடந்து வந்திருந்தாலும் அவருடைய மனம் என்னவோ ஒரு வித குதூகலத்தில் இருந்தது. காரணம் ஜகந்நாதனுக்கு தாமே பறித்து வந்த தாமரையை சூட்டப்போகிறோமே என்று.

  வேறு எந்த சிந்தனையும் அவர் மனதில் எழவில்லை. இரவு உறங்கியதும், அதிகாலை எழுந்து கோவில் குளத்தில் நீராடிவிட்டு, திருமண் தரித்துக்கொண்டு ஜகந்நாதரை தரிசிக்க கோவிலுக்குள் சென்றார்.

  ஒரு பரதேசி போல தோற்றம் கொண்ட அவரை கோவிலின் பாதுகாவலர்கள் அவரை மறித்து, “துண்டில் என்னத்தை கட்டி உள்ளே கொண்டு போகிறாய்?” என்றனர்.

  அவர் உடனே துண்டை விரித்து காட்ட, அந்தோ பரிதாபம் அதன் உள்ளே இருந்த தாமரை மலர்கள் யாவும் பறித்து நாளாகிவிட்டபடியால் வாடி வதங்கி அழுகிப்போய் காட்சியளித்தன. தாமரைக்குரிய நிறம் வேறு மங்கி கறுத்துவிட்டிருந்தன.

  “அவனவன் என்னென்னவோ கொண்டு வருகிறான். நீ இந்த அழுகிப் போன மலர்களையா ஜகந்நாதருக்கு கொண்டு வந்தாய்? பைத்தியக்காரா…” என்று அவரை கீழே தள்ளினர். தடியால் அடித்து நையப்புடைத்தனர். கடும்காயமும் அதிர்சியுமடைந்த மனோகர் தாஸ் சில நிமிடங்களில் சுயநினைவின்றி கீழே விழுந்தார்.

  அதற்குள் விஷயம் படாசட்டா மடத்துக்கு எட்டியது. கோவிலுக்கு சென்ற யாத்ரீகர் ஒருவர் காவலாளிகளால் தாக்கப்பட்டு உள்ளே வீழ்ந்து கிடக்கிறார் என்று கேள்விப்பட்டு கோவிலுக்கு விரைந்து வந்த மடத்து ஊழியர்கள் மனோகர் தாஸை தூக்கிச் சென்று முதலுதவி அளித்து மடத்தில் படுக்கவைத்தனர்.

  அரண்மனையில் பூரி மன்னன் கஜபதி மஞ்சத்தில் படுத்திருக்கிறான்…
  அவனுக்கு திடீர் என்று ஒரு கனவு, கனவில் தோன்றிய ஜகந்நாதன், “என் அடியவன் மனோகர் தாஸ் கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டு தாக்கப்பட்டு படாசட்டா மடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளான்.

  நீ அவனை சகல மரியாதையோடு சன்னதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய், அவன் கொண்டு வந்திருக்கும் மலர்களையே எனக்கும் சூட்டுவாயாக!” என்று கட்டளையிட்டு மறைந்தார்.

  திடுக்கிட்டு விழித்த கஜபதி, உடனே தனது ராஜகுரு பவாதேவா என்பவரை அழைத்து கனவில் ஜகந்நாதர் கட்டளையிட்ட விபரத்தை கூறினான். அவரும் உடனே படாசட்டா மடத்துக்கு விரைந்து, மனோகர் தாசிடம் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு, மனோகர் தாஸையும் அவர் மூட்டைகட்டி கொண்டு வந்த மலர்களையும் எடுத்துக்கொண்டு மூலஸ்தானம் விரைந்தார்.

  எந்த ஆலயத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டாரோ அதே ஆலயத்துக்குள் ராஜ மரியாதையோடு அழைத்து வரப்பட்டார் மனோகர் தாஸ். எந்தக் காவலர்கள் தாக்கினாரோ அவர்கள் இவரை கரம் குவித்து வரவேற்றார்கள். நடப்பதெல்லாம் கனவா நனவா என்றே மனோகர் தாஸ்க்கு புரியவில்லை. கண்களில் நீர் ஆறாக பெருகி வழிந்து கொண்டிருந்தது.

  அங்கு மூலவர் முன்பு அனைவரும் நிற்க, மனோகர் தாஸ் கொண்டு வந்த மூட்டை பிரிக்கப்பட்டு மலர்கள் ஜகந்நாதர் முன்பு கொட்டப்பட்டது. என்ன ஆச்சரியம், வாடி வதங்கி அழுகிப்போயிருந்த மலர்கள் அன்று பூத்த புத்தம் புது மலர்கள் போல புத்துணர்ச்சியுடன் காணப்பட்டன.

  மேலும் அந்த இடமெங்கும் தாமரை இதழுக்கென்றே உரிய நறுமணம் வீசியது.
  அதை ஏற்றுக்கொண்ட ஜகந்நாதர் சுபத்ராதேவியுடனும் தனது மற்றொரு அவதாரமான பலராமருடனும் தேஜோமயமாக காட்சியளித்தார்.

  “ஜகந்நாதா… ஜகந்நாதா..” என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது. கடைக்கோடி பக்தன் மீதும் பரந்தாமன் கொண்டுள்ள இந்த வாத்சல்யத்தை நினைவு கூறும் வகையில் இன்றும் ஆண்டு தோறும் வசந்த பஞ்சமி அன்று (மாசி மாதம் சுக்ல பட்சம் பஞ்சமி திதி) தாமரை மலர்களால் ஜகன்னாதருக்கு அலங்காரம் செய்விக்கப்படுகிறது.

  இதை பத்மாபிஷேகம் என்று அழைப்பர். இந்நன்னாளில் மனோகர் தாஸ் தங்கிய படாசட்டா மடத்திலிருந்து ஜகந்நாதருக்கு பாயசம் படைக்கப்பட்டு அடுத்த நாள் பக்தர்களுக்கு அது பிரசாதமாக விநியோகிக்கப்படுவது வழக்கம்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,142FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,560FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-