Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்துளசி கல்யாணம்: ஸ்தோத்திரம்..!

துளசி கல்யாணம்: ஸ்தோத்திரம்..!

thulasi
thulasi

ஸ்ரீதுளசிகல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு “#பிருந்தாவன_துவாதசி’ என்று பெயர். அன்று துளசியை மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டதாக புராணம் கூறுகிறது.

நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுவதால், துளசி மாடத்தில் நெல்லி மரக் கொம்பையும் நட்டு, வாழை மர, தோரணங்களுடன், மாக்கோலமிட்டு அலங்கரித்து பூஜை செய்வார்கள்.

பஞ்ச பூதத்தில் அரச மரம் ஆகாயத்தையும்,
வாதராயண மரம். காற்றையும்,
வன்னி மரம் அக்கினியையும்,
நெல்லி மரம். தண்ணீரையும்,
ஆலமரம் மண்ணையும் குறிக்கிறது..

நிறைய தீபங்கள் ஏற்றி, பெண்களுக்கு தாம்பூலம், இனிப்பு அளிப்பது வழக்கம்.

துளசி இலையின்,
நுனியில் பிரம்மாவும், மத்தியில் விஷ்ணுவும் அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில், இரு அசுவினி தேவர்களும், எட்டு வசுக்களும், பதினோரு ருத்ரர்களும் பன்னிரண்டு ஆதித்யர்களும் எழுந்தருளி இருப்பதாக ஐதீகம்.

தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும் போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம் என்பது ஐதீகம்

சங்கு, துளசி, சாளக்கிராமம் மூன்றையும் ஒன்றாக வைத்துப் பூஜிப்பது விஷேஷம் …

கார்த்திகை மாதத்தில் ஏகாதசிக்கு அடுத்த நாள் துளசி தேவியை மகாவிஷ்ணு மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

thulasi 1
thulasi 1

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றியவர் என்பதால், கார்த்திகை ஏகாதசி அன்று துளசிச் செடியுடன், நெல்லி மரத்தடியில் பூஜை செய்ய வேண்டும்.

வீட்டில் உள்ள துளசி மாடத்தில் நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்துப் பூஜித்து துளசி கல்யாணம் செய்தால், திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
சுமங்கலிப் பெண்கள் கணவருடன் மகிழ்ச்சியாக நீடு வாழ்வர்.

கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. இதனால் யமவாதனை, யமபயம் நீங்கும்.

மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவரை மேற்படி நாளில் “உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ’ என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின், துளசி மாடத்தைச் சுற்றி தூய்மை செய்து மெழுகிக் கோலமிட்டு காவி இடவேண்டும். துளசிச் செடிக்கு பஞ்சினாலான மாலையும், வஸ்திரமும் அணிவிக்க வேண்டும். கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம். வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்க
வேண்டும். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.

thulasi 4
thulasi 4

மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும். அப்போது,

“அநாதி மத்ய நிதனத்ரை
லோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி நேச்வர
பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸிம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ’

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும். நல்ல முகூர்த்த நேரத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது சிறப்பு.

துளசி என்ற சொல்லுக்கு “தன்னிகரற்றது’ என்று பொருள். துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

துளசி தளம் திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்தது. மகாலட்சுமி சொரூபமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு வாசம் செய்வார். அதனால் துளசிக்கு “விஷ்ணுப்ரியா, ஹரிப்ரியா’ என்ற பெயர்களும் உண்டு.

thulasi 5
thulasi 5

துளசியின் தோற்றம் குறித்து ஒரு புராணக் கதையைக் காண்போமா?

மகாவிஷ்ணுவை மணாளனாக அடைவதற் காக பிருந்தை என்ற பெண் தவமிருந்தாள். அவள் தவத்தினைப் போற்றிய திருமால், “”உன் விருப்பம் இந்தப் பிறவியிலும் அடுத்த பிறவியிலும் நிறைவேறாது. அதற்கடுத்த பிறவியில் நிறைவேறும்” என்றருளினார்.

அதன்படி பிருந்தை என்ற பெயரிலேயே பிறந்தாள்; ஜலந்திரன் என்ற அசுரனை மணந்தாள்.

ஜலந்திரன் வரங்கள் பல பெற்றவன். அதிலொன்று, “எப்பொழுது என் மனைவி கற்பை இழக்கிறாளோ, அப்போது என் மரணம் நிகழவேண்டும்’ என்பதாகும். இந்த வரம் குறித்து அவன் மனைவி பிருந்தையும் அறிவாள்.

ஜலந்திரனின் அட்டகாசம் அதிகமானதால் அவனை சம்ஹாரம் செய்ய வேண்டிய நிலை சிவபெருமானுக்கு ஏற்பட்டது. ஜலந்திரனுக்கும் சிவபெருமானுக்கும் போர் நடந்தது. இதனையறிந்த பார்வதி தன் அண்ணன் மகாவிஷ்ணுவிடம் சென்று, “”ஜலந்திரனின் மனைவி கற்புள்ளவளாக இருக்கும்
வரையில் அவனை அழிக்க முடியாது. ஜலந்திரனின் மனைவி பிருந்தையின் பதிவிரதா தர்மத்தை உடைத்தால்தான் சிவபெருமானால் ஜலந்திரனை வெல்லமுடியும். இதற்கு தாங்கள்தான் ஒரு உபாயம் செய்து எங்களைக் காத்தருள
வேண்டும்” என்று முறையிட்டாள்.

thulasi matt
thulasi matt

பார்வதிக்கு அபயம் கூறிய மகாவிஷ்ணு ஒரு முனிவராக மாறி, பிருந்தை வசித்த பாதாளலோகத்திற்குச் சென்றார். அவரை வரவேற்ற பிருந்தை, ஆசனம் அளித்து உபசரித்தாள்.

“”மகளே, என்னை உபசரிப்பது இருக்கட்டும். உன் கணவன் சிவபெருமானுடன் புரிந்த போரில் இறந்துவிட்டான். அதைச் சொல்லத் தான் வந்தேன்” என்று கூறி, தன் சக்தியால் மாய ஜலந்திரனை உண்டாக்கி, அவனது உடலை இரண்டு பேர் தூக்கி வரும்படி செய்தார்.

தன்முன் வைக்கப்பட்ட கணவனது உடலை நிஜமென்று நம்பி கதறி அழுதாள் பிருந்தை.

அவளைத் தேற்றிய மகாவிஷ்ணு, “”கவலைப் படாதே பிருந்தை. என் தவவலிமையால் உன் கணவனை உயிர்ப்பிக்கிறேன்” என்று சொல்லி உயிர்ப்பித்தார். உயிர் பெற்றெழுந்த மாயஜலந்திரனை அரவணைத்து மகிழ்ந்தாள் பிருந்தை. அப்போது அவளுக்கு வித்தியாசமான ஒரு உணர்ச்சி ஏற்பட்டது. “தான் கற்புடன் இருக்கும்பொழுது தன் கணவர் எப்படி இறக்க முடியும்?’ என்று யோசித்த பிருந்தை தன் எதிரே இருந்த முனிவரை உற்று
நோக்கினாள்.

“”முனிவரே, மாயத்தோற்றத்தில் வந்திருக்கும்’ நீர் யார் என்பதை அறிந்தேன். உம் தங்கை பார்வதியைக் காப்பாற்ற, என் கணவர் போன்ற மாய உருவத்தை உண்டாக்கி என்னை கட்டிப்பிடிக்கச் செய்தீர்” என்றதும், முனிவரான மகாவிஷ்ணு தன் சுயஉருவில் காட்சி தந்தார். இருந்தாலும் ஜலந்திரன் போன்ற மாய உருவத்திலிருந்தவனைக் கட்டிப்பிடித்ததால் அவள் பதிவிரதா தன்மை அகன்றது. அதனால் போர்க் களத்தில் உண்மையான ஜலந்திரன் மாண்டான். இதனையறிந்த பிருந்தை, “”பகவானே, இந்த இழிசெயலைப் புரிந்த நீர் உன் மனைவியைப் பிரிந்து வருந்துவீர்” என்று சாபம் கொடுத்தவள், தீ வளர்த்து, அந்தத் தீக்குண்டத்தில விழுந்து சாம்பலானாள்.

“தங்கையின்மீது கொண்ட பாசத்தால் ஒரு பெண்ணின் மரணத்திற்குக் காரணமாகி விட்டேனே’ என்று பிருந்தையின் சாம்பல்மீது விழுந்து கதறியழுதார் மகாவிஷ்ணு.

அண்ணனின் கதறல் சத்தத்தை கயிலையில் கேட்ட பார்வதி அங்கு ஓடோடி வந்தாள். அண்ணனை தேற்றினாள்.

பிருந்தையின் சாம்பலை ஒன்றாக்கி, அதைத் துளசிமாலையாக்கி தன் அண்ணனிடம் கொடுத்தாள். “”அண்ணா, பிருந்தையின் சாம்பல் துளசிமாலையாக இருக்கிறது. இதை அணிந்து கொள்ளுங்கள். பிருந்தை உங்களுக்கு இரக்கம் காட்டுவாள். அவளது முன்ஜென்ம விருப்பமும் இதனால் நிறைவேறும்” என்றாள் உமாதேவி. மகாவிஷ்ணுவும் துளசிமாலையை அணிந்துகொண்டார்.

(பிருந்தையின் சாபத்தால்தான், மகாவிஷ்ணு ராமாவதாரத்தில் தன் மனைவி சீதையை சில காலம் பிரிந்து வருந்தினார் என்பது யாவரும் அறிந்த கதை.)

thulasi 3
thulasi 3

இதுபற்றி இன்னொரு கதையும் உண்டு.

சிவபெருமானுக்கும் ஜலந்திரனுக்கும் போர் நடந்துகொண்டிருந்த சமயம், மகாவிஷ்ணுவே ஜலந்திரன்போல் வடிவம் கொண்டு பிருந்தையிடம் வந்து, “”தேவி, போரில் நான் வென்றுவிட்டேன்”

என்றார். மகிழ்ச்சிகொண்ட பிருந்தை அவருக்கு பாதபூஜை செய்து நெற்றியில் திலகமிட்டாள். பிருந்தை திலகமிட்டதும், மகாவிஷ்ணுவாகக் காட்சி கொடுத்தார் பகவான். அதைக் கண்ட பிருந்தை,

“”பிற ஆடவரைத் தொடும்படி நேரிட்டதே” என்று துடிதுடித்து, “”கல்மனம் கொண்ட நீர், உருவமற்ற சாளக்கிராமக் கல்லாக மாறி கண்டகி நதியில் கிடக்கக் கடவீர்” என்று சாபமிட்டாள்.

“”பிருந்தை, உன் சாபம் பலிக்கும்.

ஆனால் நீ எனக்கு அன்புடன் பாதபூஜை செய்தாய். எனவே நான் சாளக்கிராமக் கல்லில் உறைந்திருக்கும்போது, நீ துளசி யாக மாறி எனக்கு மகிழ்ச்சியூட்டுவாய்.
அப்போது உன்னை எல்லாரும் போற்றுவர்” என்றார்.

கடந்த பிறவியில் சிறந்த விஷ்ணு பக்தையாக இருந்து, விஷ்ணுவையே கணவராக அடையவேண்டும் என்று தவமிருந்து, அந்தத் தவத்தின் பலனால் இந்தப் பிறவியில் ஜலந்திரனின் மனைவியாக இருந்து, பிறகு தீக்குளித்து மாண்டதால் பிருந்தா என்ற துளசியாக மாறினாள். அதன்பின் அவளை மகா விஷ்ணு மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
மேலும், கிருஷ்ணாவதாரத்தில் துளசிதான் ருக்மணியாக அவதரித்து கிருஷ்ணனை மணந்தாள் என்ற தகவலும் உள்ளது. துளசி பாற்கடலில் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. எப்படியிருந்தாலும் துளசி தெய்வீக சக்தி கொண்டது.

துளசிக்கு ஸுலபா, ஸரசா,
அம்ருதா, ச்யாமா,
வைஷ்ணவி,

கௌரி, பகுமஞ்சரி என்று வடமொழிகளில் பல பெயர்கள் உள்ளன. மேலும், ஒன்பது வகையான துளசிச் செடிகள் உள்ளன. அவை:

கரியமால் துளசி, கருந்துளசி, கற்பூர துளசி, செந்துளசி, காட்டுத்துளசி, சிவதுளசி, நீலத்துளசி, பெருந்துளசி, நாய்த்துளசி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம் கொண்டவை.

இதேபோல் ஆன்மிகத்திலும் இதற்கு தனிப்பெயர்கள் உள்ளன. அவை: திருத்துழாய், துளபம், துளவம், சுகந்தா, பிருந்தா, வைஷ்ணவி, லட்சுமி, கவுரி, மாதவி, ஹரிப்ரியா, அம்ருதா, சுரபி.

துளசி இலையின் நுனியில் பிரம்மனும், அடியில் சிவனும், மத்தியில் மகாவிஷ்ணுவும் வாசம் செய்கிறார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. துளசிச் செடியில் 12 ஆதித்யர்களும், 11 ருத்ரர்களும், எட்டு வசுக்களும், அஸ்வினி தேவர்களும் வசிக்கிறார்கள். எனவே துளசி இலையுடன் கூடிய நீர், கங்கை நீருக்கு சமமாகக் கருதப்படுகிறது.

ஆண்கள் காலையில் நீராடியபின் தெய்வத்தை மனத்தால் வணங்கி துளசியைப் பறிக்கவேண்டும். அப்போது,

“துளசி ஸ்யமருத ஜந்மாஸிஸதாத்வம்
கேஸவப் பிரியே
கேஸவார்தாம் லு நாமித்வாம் வரதாபவ
ஸோபதே’

என்ற சுலோகத்தை சொல்லிப் பறிக்க வேண்டும். நான்கு இலைகளுக்கு நடுவில் தளிரும் இருப்பதுபோல் (ஐந்து தளங்கள்) துளசியைக் கிள்ளிச் சேகரிக்க வேண்டும். பௌர்ணமி, அமாவாசை, துவாதசி திதிகளிலும்; ஞாயிற்றுக்கிழமை, மகரசங்கராந்தி, நண்பகல், இரவுப்பொழுது, சூரிய உதயத்திற்கு முன்பும் துளசியைப் பறிக்கக்கூடாது. குளிக்காமலும் துளசி இலையைப் பறிக்கக்கூடாது.

திருமால் ஆலயங்களில் துளசிவனம் இருக்கும். மேலும் துளசிமாடம் இருப்பதையும் காணலாம். துளசி மாடத்திற்கு தினமும் பூஜைகள் நடைபெறும்.

பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில், ஸ்ரீஆண்டாள் சந்நிதிக்குச் செல்லும் வழியில் மிகவும் போற்றக்கூடிய துளசி மாடம் ஒன்றுள்ளது. இது மற்ற துளசிமாடத்தைவிட மாறுபட்டது. ஆமையின் திருவுருவத்தின்மேல் அமைந்துள்ளது இந்தத் துளசி மாடம். இதன் அருகில் வில்வமரமும் உள்ளது.

ஜலந்திரனை அழிக்க சிவபெருமானுக்கு உதவிய மகாவிஷ்ணு ஆமை அவதாரத்தில் இருக்க, அவருக்குப் பிடித்தமான பிருந்தையான துளசி அவர் முதுகில் மாடத்தில் உள்ளாள். இந்தத் துளசிமாடத்திற்கருகில் நெய்விளக்கு ஏற்றி கணவனும் மனைவியும் வலம் வந்தால் அவர்கள் மகாவிஷ்ணு, மகாலட்சுமியின் அம்சமாக அப்பொழுது மாறுவதாக ஐதீகம். இந்தத் துளசி மாடத்தை கன்னிப் பெண்கள் விளக்கேற்றி வழிபட, அவர்களுக்குப் பிடித்தமான வரன் அமையும்; சுமங்கலிகள் நீடூழி வாழ்வர்.

வீட்டில் துளசிமாடம் இல்லாதவர்கள் பெருமாள் கோவிலில் உள்ள துளசி மாடத்திற்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் சுகமான வாழ்வு கிட்டும். பிருந்தா துவாதசி அமைகிறது. அன்றைய தினம் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

mattthulasi marriage
mattthulasi marriage

ஸ்ரீ துளசி மந்திரம்.

ஸ்ரீமத்துளசியம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளிக்கிழமை தன்னில் -விளங்க வந்த மாதாவே
செவ்வாய்க் கிழமைதன்னில்–செழிக்க வந்த செந்திருவே தாயாரே உந்தன்–தாளடியில் நான் பணிந்தேன்.
பச்சைப் பசுமையுள்ள–துளசி நமஸ்தே
பரிமளிக்கும்- மூலக்கொழுந்தே நமஸ்தே
அற்பப் பிறப்பைத்–தவிர்ப்பாய் நமஸ்தே
அஷ்ட ஐசுவரியம்–அளிப்பாய் நமஸ்தே
வனமாலி என்னும்–மருவே நமஸ்தே
வைகுண்ட வாஸியுடன்–வாழ்வாய் நமஸ்தே. அன்புடனே நல்ல–அருந்துளசி கொண்டு வந்து விருந்தே எனும்
மண்ணின் மேல்நட்டு–மகிழ்ந்து நல்ல நீரூற்றி முற்றத்தில்தான் வளர்த்து—முத்து போல்க் கோலமிட்டு செங்காவி சுற்றுமிட்டு–திரு. விளக்கை ஏற்றி வைத்து
பழங்களுடன் தேங்காயும்—தாம்பூலம் தட்டில் வைத்து புஷ்பங்களைச் சொரிந்து—பூஜித்த பேர்களுக்கு என்ன பலன் தருவாயென்று—ரிஷிகேசர் தான் கேட்க
மங்களமான துளசி—மகிழ்ந்தே தானே எடுத்துரைப்பாள்.

மங்களமாய் என்னை வைத்து–மகிழ்ந்து உபாஸித்தவர்கள் தீவினையைப் போக்கி—சிறந்த பலன் நானளிப்பேன் அரும் பிணியை நீக்கி– அஷ்ட ஐசுவரியம் நானளிப்பேன். தரித்திரத்தை நீக்கி –ஸம்பத்தை நான் கொடுப்பேன்.
புத்திரனில்லாத பேர்க்கு–புத்திர பாக்யமளிப்பேன்‌கன்னியர்கள் பூஜை செய்தால்—நல்ல கணவரையும் கூட்டி வைப்பேன் கிரஹஸ்தர்கள் பூஜை செய்தால்–கீர்த்தியுடன் வாழ வைப்பேன்.
ஸுமங்கலிகள் பூஜை செய்தால்–தீர்க ஸுமங்கலியாயிருப்பர் மும்முக்ஷுக்கள் பூஜை செய்தால்—மோக்ஷ பலனடைவர்.

கோடி காராம்பசுவைக் கன்றுடனே கொண்டுவந்து கொம்பிற்கு பொன்னமைத்து–குளம்பிற்கு வெள்ளிகட்டி கங்கைக் கரைதனிலே—கிரஹண புண்ய காலத்தில் வாலுருவி அந்தணர்க்கு–மஹாதானம் செய்த பலன்
நானளிப்பேன் ஸத்யமென்று–நாயகியும் சொல்லலுமே அப்படியே ஆக என்று–திருமால் அறிக்கையிட்டார்
இப்படியே அன்புனே –ஏற்றித் தொழுதவர்கள் அற்புதமாய் வாழ்ந்திடுவார்—பரதேவி தன்னருளால்.
தாயே ஜெகன்மாதா அடியார் செய்கின்ற பூஜையை ஏற்றுக்கொண்டு அடியார் செய்கின்ற சகலபாவங்களையும் மன்னித்து காத்து ரக்ஷிக்கும் வரங்களைக் கொடுத்து அனுக்கிரகம் செய்ய வேண்டும் துளசி மாதவே.

துளசி விவாகத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் தெரியுமா?

 1. துளசி மாடத்தை அலங்கரிப்பது.
 2. நாலு பக்கம் கொம்பு நட்டு, துணியில் விதானம் அமைத்து மண்டபமாக செய்வது. விளக்கேற்றுவது,
 3. துளசி செடிக்கு பட்டுத்துணியில் புடவை.துளசி மணி வளையல். குங்கும தாரணம்.
 4. சின்ன பிள்ளையார் விக்ரஹம், சாளிக்ராமங்கள், அருகே வைத்து பூஜை.
 5. துளசி மந்த்ரம் ஜபித்தல் ” ஓம் துளஸ்யை நம: 108 தடவை. குங்குமார்ச்சனை.’
  8 தூப தீப ஆராதனை. தேங்காய் உடைத்தல்..
  9 துளசி செடியை, மாடத்தை, 7 முறை வலம் வருதல்- பரிக்ரமம்.
  10 துளசிக்கும், சாளக்ராமங்களுக்கும் ஆர்த்தி. மங்கள கீதம் பாடுவது.
  விவாகம் முடிந்துவிட்டதே.
  விஷ்ணு பூஜை துளசி இல்லாவிட்டால் வீண். எந்த நைவேத்யமும் துளசி தளம், ஜலம் ப்ரோக்ஷணம் இன்றி பூர்த்தியாகாது.துளசி சர்வ பாபங்கள், ஏன் வியாதிகளையும் போக்கக்கூடிய அரு மருந்து. துளசியின் வேரிலிருந்து கிளை, இலை,அனைத்திலும் எல்லா தேவதைகளும் இருக்கிறார்கள்.

தேவாசுரர்கள் பாற் கடலைக் கடைந்தபோது துளசி லக்ஷ்மியின் தங்கையாக தோன்றுகிறாள். விஷ்ணுவையே அவளும் மணக்க விரும்புகிறாள். லக்ஷ்மி அவளை துளசி செடியாக மாற்றுகிறாள். விஷ்ணு அவள் விருப்பத்தை நிறைவேற்ற நான் சாலக்ராமமாக இருக்கும்போதெல்லாம் துளசி என்னோடு இருப்பாள் என்கிறார்.

விஷ்ணு ஆலயங்களில், மாத்வர்கள் வீட்டில் எல்லாம் துளசி பிரதானமானவள். துளசி மாடம் இல்லாத ஹிந்து வீடுகள் இல்லை. அவளை வணங்காமல் பூஜை இல்லை, விஷ்ணுவுக்கு நைவேத்யம் இல்லை. காலையிலும் மாலையிலும் துளசிக்கும் தான் தீபம் நமஸ்காரம். ப்ரார்த்தனை .
லக்ஷ்மி விஷ்ணு மார்பில், துளசி அவர் கழுத்தில், உடலில், காலடியில் எங்குமே.

பத்ம புராணத்தில், பாதாள காண்டத்தில் ஒரு விஷயம் தெரியுமோ ?

சிவபெருமான்: ”நாரதா, துளசியின் பெருமையைப் பற்றி சொல்கிறேன் கேள்’
எவன் ஒருவன் துளசி தேவியைப் பற்றி அறிகிறானோ, அவனது சகல ஜன்ம பாபங்களும் விடுபட்டு, ஸ்ரீ ராதா கிருஷ்ணனை அடைகிறான். எவனது உடல் துளசி கட்டையோடு தகனம் செய்யப்படுகிறதோ அவனுக்கு உடலோடு அவன் பாபங்களும் எரிந்துவிடும் எவன் அந்திம காலத்தில் விஷ்ணுவின் நாமத்தை சொல்கிறானோ, துளசி கட்டையை தொடுகிறானோ , அவன் மோக்ஷம் எய்துவான்.
கிருஷ்ணனே அவனை எதிர் கொண்டு அவன் கையைப் பிடித்து தன்னோடு அழைத்து செல்வார் .
எவன் துளசி கட்டையை, சமித்துகளோடு சேர்த்து வைத்துக்கொள்கிறானோ, அவன் ஹோமத்தில் இடும் ஒவ்வொரு தானியத்திற்கும் ஓர் அக்னிஹோத்ர பலன் அடைவான்.
துளசி கட்டையை உபயோகித்து கிருஷ்ணனுக்கு செய்யும் தூப ஆராதனை, 100 அக்னி ஹோத்ர பலனையும், 100 கோ தான பலனும் கொடுக்கும்.
கிருஷ்ணனுக்கு நைவேத்யம் பண்ணும் உணவு, துளசி கட்டை கலந்த அக்னியில் தயாரிக்கப் பட்டிருந்தால் மேருமலை அளவு தானியங்களை தானம் செய்த பலன் தரும்.

ஒரு சிறு துளசி குச்சியால் ஏற்றிய தீபம், பல லக்ஷம் தீபங்களை கிருஷ்ணனுக்கு ஏற்றிய பலன் தரும். இப்படி விளக்கேற்றியவனைப் போல கிருஷ்ணனுக்கு பிடித்தவன் வேறு யாருமில்லை.
துளசிக்கட்டையை அரைத்து சந்தனம் போல் கிருஷ்ணனுக்கு சாற்றியவன் ஈடில்லாத கிருஷ்ண பக்தன்.
துளசிச்செடி அடியில் உள்ள மண்ணை கொஞ்சம் குழைத்து தனது உடலில் சாற்றிக்கொண்டவன் 100 கிருஷ்ண பூஜைகளை அன்று செய்த பலன் பெறுவான்.
துளசியை ஆராதித்து கிருஷ்ணனுக்கு அர்ச்சிப்பவன், எல்லா புஷ்பங்களை அர்ச்சிப்பதன் பலன் பெறுவான். இறந்தபிறகு கிருஷ்ணனையே அடைகிறான்.

இன்னொன்று சொல்லட்டுமா. எவன் வழியிலே எங்காவது ஒரு துளசி தோட்டம், நந்தவனத்தை கடந்து வணங்கி போகிறானோ, அவன் சர்வ பாப, தோஷங்கள் நீங்கப் பெறுவான்.

துளசி செடி எந்த வீட்டில் இருக்கிறதோ, அந்த வீட்டில் வசிப்பவர்களில் கிருஷ்ணனும் ஒருவன்.

காற்றில் எங்கிருந்தாவது துளசி வாசனை வந்து அதை நுகர்வதாலும் கூட ஒருவன் பரிசுத்தமாகிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

(துளசி கட்டை வேண்டும் என்பதற்காக துளசி செடியின் கிளையை ஓடிக்கவோ, வெட்டவோ வேண்டாம். காய்ந்த துளசி செடியிலிருந்து அதை சேகரிக்கலாம்)

பத்மபுராணத்தில் இன்னொரு காட்சி.

முருகன்; ”அப்பா, எந்த தாவரத்திலிருந்து தெய்வ பக்தி பெருகுகிறது?

சிவன் : ”என் அன்புச் செல்வா ,ஆறுமுகா, துளசி ஒன்று தானடா அந்த தெய்வீகம் கொண்டது. கிருஷ்ணனுடன் நெருங்கியதல்லவா அது.

உலகில் வெகு காலம் முன்பு, கிருஷ்ணன் பிருந்தா தேவியை பூலோகத்தில் பித்ருக்களுக்கான திருப்திகர சேவைக்காக துளசியாக அறிமுகப் படுத்தினார். எதை அளித்தாலும் சிறிது துளசி இல்லாவிட்டால், கிருஷ்ணன் அதை ஏற்பதில்லை.

தினமும் துளசி தளத்தால் கிருஷ்ணனை அர்ச்சிப்பவன் வேறு எந்த புண்யமும் தேடாமலே கிடைத்தவன்.

கங்கை எப்படி அந்த நதியில் ஸ்நானம் செய்தவர்களை பரிசுத்தப் படுத்துகிறாளோ அதுபோல், துளசி மூன்று உலகங்களையும் பரிசுத்தமாக்குபவள். துளசி செடி அருகே அமர்ந்து தியானிப்பவன் கிருஷ்ணனை எளிதில் அடைகிறான்.

துளசி செடி வளரும் வீட்டிலோ அருகிலோ கூட தீய சக்திகள் நெருங்குவதில்லை.

தினமும் கிருஷ்ணனை அர்ச்சித்த ஒரு துண்டு துளசி தளத்தை புசிப்பவன் நோயற்றவன், தீர்க்காயுள் கொண்டவன். பாபம் விலகியவன்.

துளசி ஒரு தளத்தையாவது கிருஷ்ணனுக்கு அர்ச்சித்தவன் வைஷ்ணவன் ஆகிறான். துளசியை நமஸ்கரித்து கிருஷ்ணனை ஆராதிப்பவன் மீண்டும் தாய்ப்பால் குடிக்க நேரிடாதவன்.

துளசியால் கிருஷ்ணனுக்கு பூஜை செய்தவனின் முன்னோர்களும் கூட பாபத்திலிருந்து விடுதலை பெறுவார்கள். மீண்டும்

ஜனன மரணம் இல்லாதவர்கள்.

சிவன்: ‘மகனே ஷண்முகா, இன்னும் துளசி மகிமை சொல்லிக்கொண்டே போகலாம். முடிவே இல்லை. புரிகிறதா? ‘

பத்ம புராணத்தில் துளசி ஸ்தவ காண்டத்தில் ஒரு சம்பாஷணை:

ஒரு பிராமணன்; ”ஆச்சர்ய வியாச தேவா, இதுவரை எங்களுக்கு துளசி தேவி மகிமை சொன்னீர்கள். துளசியை போற்றும் துளசி ஸ்தவம் (பிரார்த்தனை) போதிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்’

வியாசர்; ”இதே கேள்வியை ரிஷி சதானந்த முனிவரிடம் அவரது சிஷ்யன் ஒருவன் கரம் கூப்பி பவ்யமாக கேட்டான். அப்போது அந்த

சிறந்த கிருஷ்ண பக்தர் சதானந்த முனிவர் என்ன சொன்னார் தெரியுமா?

”துளசி நாமம் சொன்னாலே போதும். கிருஷ்ணன் உன் பாங்களை தொலைத்து விடுவான். துளசி செடியை கண்ணால் பார்த்தாலே போதும். கோ தான பலன். துளசியை பூஜித்து ஸ்தோத்ரம் பண்ணுபவன், அவனே ஒரு விக்ரஹம். அவனையே மற்றவர்கள் கலியுகத்தில் வணங்க யோக்யமானவன்.

துளசி செடியை வீட்டில் வளர்த்தவனை யம தூதர்கள் வாசல் அருகே கூட வர முடியாதவர்களாக ஆக்கிவிடுவாள்.

எவனொருவன் துளசிஸ்தவ ஸ்தோத்ரம் சொல்லி துளசியை பறிக்கிறானோ, கிருஷ்ணனை துளசியால் அர்ச்சிக்கிறானோ அவன் புண்ய பலன் பல லக்ஷம் மடங்கு அதிகமாகும்.

துளசி ஸ்தவம் ஸ்தோத்ரம்

1 முனிவர்களே, சித்தர்களே, காந்தர்வர்களே, பாதாள லோக நாக வாசிகளே, கணீரென்று கிருஷ்ணனை, துளசியை பாடுங்கள்.
2 உபதெய்வங்கள் பிரபாவத்தை, சக்தியை எத்தனை கோடியாக புகழ்ந்தாலும், கேசவனின் சக்திக்கும் மகிமைக்கும் அவை ஈடாகுமா.
3 கிருஷ்ணன் அனுக்ரஹத்தால் பாற்கடல் கடையப்பட்டபோது துளசியை தனது சிரத்தில் விஷ்ணு தாங்கினார்.
4 துளசி மாதா,நமஸ்காரங்கள். விஷ்ணுவின் சரீரத்தில் நீ சாற்றப்படும் போது, எல்லோரையும் நீ பரிசுத்தமாக்குபவள்.
5 துளசி தேவி, உனது தளத்தால் நான் ஸ்ரீ ஹரி யை அர்ச்சிக்கும்போது எனக்கு ஒரு குறையும் தடையும் இல்லை. நான் தான் உன் பாதுகாப்பில் இருக்கிறேனே.
6 துளசியம்மா, உன்னை செடியாக கோமதி நதிக்கரையில் வளர்த்து அந்த கிருஷ்ணன் உலகை ஸ்ரேஷ்டமாக்கி, கோபியரை ரக்ஷித்தான்.
7 துளசி தேவி, பிருந்தாவனத்தை செழிப்பாக்கவும், கம்சன் மற்ற ராக்ஷசர்களை அழிக்கவும், விஷ்ணுவுக்கு பக்க துணையாக இருந்தவளே நீ தானே.
8 துளசி மாதா,நீ சாமான்யமானவளா. சரயு நதிக்கரையில் வசிஷ்டர் அறிவுரையில் ராமன் உன்னை வளர்த்து தானே ராக்ஷசர்களை அழித்தார்.உனக்கு நமஸ்காரம்.
9 அசோக வனத்தில் சீதா தேவி ராமனைப் பிரிந்து வாடும்போது, உன்னை அல்லவா த்யாநித்தாள். நீ அல்லவோ அவளுக்கு தெம்பை தந்தவள்.
10 அம்மா துளசி, சிவ பிரானை அடைய, ஹிமகிரியில் உன்னைத்தானே வளர்த்து பார்வதி தேவி வணங்கினாள் . எங்கள் நமஸ் காரத்தையும் சமர்பிக்கிறோம். ஏற்றுக்கொள்
11 அம்மா துளசி, கயாவிலே , தர்மாரண்யத்தில் பித்ருக்களை திருப்தி படுத்துபவளே. பரிசுத்த காரணி. உனக்கு நமஸ்காரங்கள்.
12 துளசி தேவி, ஸ்ரீ ராமபிரான் உன்னை வளர்த்தார்,லக்ஷ்மணன் உன்னை வணங்கினான், தண்டகாரண்யத்தில் சீதை உன்னை வளர்த்து பூஜித்தாள் . உனக்கு நமஸ்காரங்கள்.
13 துளசி தேவி, உன் பெருமை அறிவோம். எப்படி கங்கை மூன்று லோகங்களிலும் புனிதமாக போற்றப்படுகிறதோ, அதே போல் சகல ஸ்தாவர ஜங்கம ஜீவர்களும் வணங்குபவள் நீ.
14.அம்மா உன்னை வணங்கி தானே, ரிஷ்யமுக பர்வதத்தில் வானர ராஜன் சுக்ரீவன், வாலியை கொல்லவும், தாரையை அடையவும் முடிந்தது. உனக்கு நமஸ்காரங்கள்

ஹனுமான், உன்னை வணங்கியபிறகு தானே, சமுத்ரத்தை தாண்டினான், ராம கர்யத்தை வெற்றி கரமாக முடித்து திரும்பினான்.உனக்கு நமஸ்காரங்கள்.

துளசியை தொடுவதாலே, சகல பாபங்களும் விலகுகிறதே, பிரம்மஹத்தி தோஷமும் கூட தீருமே. ரிஷி திலகங்களும் நாடும் துளசி மாதா உனக்கு நமஸ்காரங்கள்.

ஒரே ஒரு துளசி தளத்தை ஜலத்தில் இட்டு, ஸ்நானம் செய்தவன்,கங்கா ஸ்நான பலனையும், பாத்து பசுக்களை தானம் செய்த புண்யமும் பெறுவானே. உனக்கு நமஸ்காரங்கள் தாயே.

தேவ தேவிகளுக்குள் சிறந்தவளே, ஹரியின் பிராண வல்லபி, பாற்கடலில் பிறந்தவளே, எங்கள் நமஸ்காரங்களை சமர்பிக்கிறோம்.

துவாதசி அன்று துளசியை பிரார்த்திப்பவனை கிருஷ்ணன் அவன் செய்த பாபங்களை மன்னித்து அருகிறார். துளசிஸ்தவம் பிரார்த்தனை புஸ்தகம் இருக்கும் வீட்டில் துரதிர்ஷ்டம் இல்லை. ஏன் என்றால் அங்கே அதிர்ஷ்ட தேவதை குடி கொண்டவள்.
துளசி ஸ்தவம் பாராயணம் செய்பவன் மனதில் கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் கிடையாதே

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Support us! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when readers and people like you to start contributing towards the same. Please consider supporting us to run this web team for our 'Hindu Dharma'.

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,075FansLike
374FollowersFollow
53FollowersFollow
74FollowersFollow
1,981FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அழகான மகனுடன் ஸ்ரேயா கோஷல்! வைரல்!

மகனின் புகைப்படங்களை எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார்.

காதலர்தினம் வருதோ… ரொமான்ஸ் வீடியோ வெளியிட்ட நட்சத்திர தம்பதி!

ஆத்யந்தா பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

வலிமையைத் தொடர்ந்து சித் ஸ்ரீராமின் அடுத்த அம்மா பாடல்!

சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் 'கணம்' படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சர்வானந்த்...

எங்கள் குடும்பப்பெயரை கெடுக்கிறார்கள்: நடிகர் சாந்தனு!

நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்...

Latest News : Read Now...