
மானிட செயல்பாடுகளின் குறிக்கோள்கள் நான்கு வகைப்பட்டவை: கடமைகளை நிறைவேற்றுதல், திரவியம் திரட்டுதல், ஆசைகளைப் பூர்த்தி செய்தல், (முடிவில்) மோக்ஷம் அடைதல்.
இவைகளில் மோக்ஷம் பெறுதல் உன்னதமானது. ஆத்ம ஞானத்தால் மட்டுமே மோக்ஷம் கூடிவரக்கூடியது. இது ஸ்ருதியில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது
அதாவது மரணத்திற்கு அப்பால் உள்ள நிலை தன்னை அறிந்து கொண்ட பின்பே கிட்டும். ஆத்மஞானமான தன்னை அறிந்து கொள்வது ஒரு குருவினிடம் இருந்துதான் பெறக்கூடும்.
தனக்கென்று ஒரு குரு உள்ளவன்தான் உண்மையிலேயே மனிதன் என்றும் ஸ்ருதியில் கூறப்படுகிறது
குரு என்பவர் யார் என்ற கேள்வி தோன்றுகிறது. அதாவது குரு என்பவர் எல்லா தர்மங்களையும் கரைத்துக் குடித்தவரும் தன் சீடனின் நல் வாழ்வில் ஈடுபட்டவருமாவர் என்ற பதில் கிடைக்கிறது.
ஒரு குருவின் இந்த குணம் ஸ்ரீசங்கர பகவத்பாதரிடம் முழுமையாக காணப்பட்டிருந்தது. அவருக்கு எல்லா சாஸ்திரங்களிள் மறைந்துள்ள தத்துவங்களும் தெரியும்.
அவர் முழுமனித வம்சத்தின் நன்மைக்காக பாடுபட்டார். அநேக நூற்றாண்டுகள் கழிந்த பின்பும், அவர் அருளிய உறைகள் வேதங்களுக்கு வழிகாட்டும் விளக்காக பிரகாசிக்கின்றன.
உபநிஷத்துகளில் உள்ள அத்வைதத்தையே ஸ்ரீசங்கரரும் உபதேசித்தார். அவர் புது தத்துவம் எதையும் தோற்றுவிக்கவில்லை. இந்த தத்துவம் ஸ்ரீ கிருஷ்ணரால் பகவத் கீதையிலும் வேதவியாஸரால் ப்ரம்ஹஸுத்திரத்திலும் வெளிப்படுத்தப்பட்ட அத்வைத தத்வமே என்பது அறிஞர்களின் ஒருமித்த கருத்து.
ஆகவே வித்வத்ஸ்வரூபியும் ப்ரேம ஸாகரமுமான ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் ஜன்மதினத்தை நாம் எல்லோரும் கொண்டாட வேண்டும்.
நல்வாழ்வை நாடுபவர் நிச்சயம் இம்மாதிரி ஆத்ம ஞானிகளை பூஜிக்கவேண்டும் என ஸ்ருதி கூறுகிறது. ஸ்ரீ சங்கர பகவத்பாதரின் அனுக்ரஹம் எல்லா ஆஸ்திகர்களுக்கும் கிடைக்கட்டும்! முயற்சி செய்கிறவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கட்டும்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்