
ஆதி ப்ரம்மத்தின் திரு நாமத்தை இராம என்பர் அந்த நாமமே ஜீவனை அவிக்கும் தன்மை கொண்டது ஆகையாலே காசி விஸ்வநாதர் ராம நாமத்தை சொல்லி அந்த ஜீவனின் பிறப்பை முடித்து வைக்கிறார் என்கிறது காசி புராணம்
ராமன் பிறப்பதற்கு முன்பே ராம நாமத்தைப் பல மஹரிஷிகளும், பரமேஸ்வரனும் ஜபம் செய்து வந்தனர்.
ஓம் என்னும் ப்ரணவ மந்திரம் ப்ரபஞ்சத்தின் படைத்தல், அழித்தல் காத்தலுக்கான அ,உ,ம் ஆகிய ஒலிகளின் சேர்க்கையாக அமைந்துள்ளது.
இந்த ப்ரணவ மந்திரத்தை தொடர்ந்து ஜபம் செய்ய ப்ரபஞ்சத்தின் ஆதார சக்தியுடன் நமக்குத் தொடர்பு ஏற்படுதுகிறது
அதைத் தவம் போன்று உச்சரிக்க நிறைய நியமங்களும் உச்சரிக்கும் முறையும் பெரியோர்களால் வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ப்ரபஞ்சத்தின் ஆதார சக்தியுடனான தொடர்பு அவசியம் என்பதால் அழிக்கும் சக்தியின் ஒலியான ‘உ’ வை நீக்கிவிட்டு, அ, ம் என்ற இரண்டு ஒலிகளை மட்டும் இணைத்து ‘ராம்’ என்பதாக ஆக்கி அதை அனைவரும் ஜபம் செய்யலாம் என்று வரையறுத்தனர். ராம் என்பது மந்திரம். ராம என்பது நாமம்.
வசிஷ்டர் தான் சூரியவம்சத்தின் குலகுரு. அக்காலங்களில் குழந்தைக்கு குருவோ, யாராவது மஹானோ அல்லது வீட்டிலுள்ள பெரியோர்களோதான் பெயர் வைப்பார்
பரமேஸ்வரனிடமிருந்து ராம நாமத்தை உபதேசமாக வாங்கிக்கொண்ட வஸிஷ்டர் அதைப் பலகாலமாக ஜபம் செய்து வந்தார். அவருக்கு, தான் ஜபம் செய்யும் மந்திரத்தை ஒரு குழந்தைக்குப் பெயராக வைக்கவேண்டுமென்று ஆசை

பதினாறு கலைகளுடன் ஆதி ப்ரம்மமான பகவான் நாராயணன் பூர்ணாவதாரமாக முதன் முதலில் அவதரித்தான இந்தக் குழந்தையைப் பார்த்ததும் நாம் ஜபம் செய்யும் மந்திரத்திற்கேற்ற குழந்தை இதுதான் என்று அதையே ராம என்று பெயராக வைத்தார்.
இந்த ராம நாமம் ப்ரபஞ்சத்தின் ஆக்கும், மற்றும் காக்கும் சக்தியின் ஆதார ஒலிகளால் ஆனது.
தாரக மந்திரமான ராம நாமத்திற்கு ஸகுணப்ரணவம் என்றொரு செல்லப்பெயர் உண்டு.
மதங்களுக்கப்பாற்பட்டது.
அதை நிரூபிக்க வந்த மஹான் கபீர்தாசர் ஆவார்.
கபீர்தாசர் காசியில் வாழ்ந்துவந்தார். பிறவியில் அவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் அல்லர். ஆனாலும் அவருக்கு ராம நாமத்தின் மீது பெரிய ஈர்ப்பு வந்துவிட்டது. காசியில் இருந்த பரம உத்தமமான ஸாதுவான ராமானந்தரிடம், பல முயற்சிகளுக்குப் பிறகு, இறைவனின் கருணையால் ராம நாம உபதேசம் பெற்றுக்கொண்டார்.
குருவிடமிருந்து உபதேசமாக வாங்கிக்கொள்ளும் மந்திரம் சிறிய தீபம் போன்றது. அதை விடாமல் ஜபம் செய்ய செய்ய உள்ளிருக்கும் தீபம் சுடர்விட்டு ஞான ஒளி ப்ரகாசிக்கும்.
வாங்கிக்கொண்ட மந்திரத்தை இரவுபகல் பாராமல் ஜபம் செய்தார் கபீர். அதற்காகத் தன் மத அனுஷ்டானங்களையோ, தன் தோற்றத்தையோ மாற்றிக்கொள்ளவில்லை.
கபீர்தாசரின் மனைவி, மற்றும் அவரது மகன் கமால் அனைவரும் ராம நாமம் ஜபம் செய்வார்கள்.
அவரது வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள் தான் எத்தனை!
கபீர் நமது பாண்டுரங்கனை தரிசனம் செய்ய அடிக்கடி பண்டரிபுரம் வருவார். ஒரு சமயம், பண்டரியில் மச்சேந்திரநாதர் என்னும் ஸாதுவின் கருணைக்கு ஆளானார். காசிக்குச் சென்று தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு பண்டரியிலேயே வந்து தங்கிவிடலாம் என்று முடிவு செய்து கிளம்பினார்.
குடும்பத்துடன் பண்டரியை நோக்கி வரும் வழியில் கோரக்பூர் அருகே மகர் என்னும் கிராமத்தில் சிறிது நோய்வாய்ப்பட்டு இறைவனின் திருவடியை அடைந்துவிட்டார்.
அவரது மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வழக்கப்படி சமாதி வைக்கவேண்டும் என்று சொல்ல, கபீரின் அடியார்கள் அவரை நமது மத வழக்கப்படி சடங்குகள் செய்யவேண்டும் என்று சொல்ல சண்டை வந்துவிட்டது.
அப்போது விட்டலன் ஒரு வயதானவரின் உருவில் அங்கு வந்து ஒரு பெரிய அதட்டல் போட்டு,
ஏன் சண்டையிடுகிறீர்கள்? போர்த்தியிருக்கிறீர்களே. முதலில் அவரது உடல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள் என்றார்.
கபீரின் உடலைப் போர்த்தியிருந்த துணியை விலக்க, அவரது இடது பக்க உடல் ஸப்ஜா என்னும் விபூதிப் பச்சிலைச் செடியாகவும், உடலின் வலது புறம் துளசிச் செடியாகவும், முகம் ஒரு பெரிய ரோஜா மலராகவும் மாறியிருந்தது.
மகர் என்னும் அந்த கிராமத்திலேயே துளசிச் செடியை வைத்து நமது வழக்கப்படி ஒரு ப்ருந்தாவனமும், ஸப்ஜாவை வைத்து அந்நிய மத வழக்கப்படி கபீர்தாசருக்கு ஒரு சமாதியும் அருகருகே வைக்கப்பட்டன.
கபீரின் மகனான கமால் ரோஜாமலரைக் கொண்டு வந்து தன் தந்தை வாசம் செய்ய விழைந்த பண்டரியில் அவருக்கு ஒரு ஸமாதி அமைத்திருக்கிறார்.
அந்த வீடு ஏற்கனவே கபீர் வசித்த வீடேதான்.
அதன் பின் கமாலும் குடும்பத்தினரும் பண்டரியிலேயே வசித்தனர்.
இங்கு கபீரின் ஸமாதி, மற்றும் மஹாத்மாவான கமாலின் ஸமாதி, கபீர், கமால் ஆகியோர் பயன்படுத்திய பாதுகைகள், தம்பூரா ஆகியவை இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அகில பாரதீய பத்மசாலி என்னும் இடத்தின் மிக அருகில் உள்ளது இப்புனிதத்தலம்.
உள்ளே நுழையும்போதே நம்மை தெய்வீகச் சூழல் ஆட்கொள்கிறது. இத்தலம் மிகவும் பாழடைந்து காணப்படுகிறது.
கபீர் தோஹா எனப்படும் அமைப்பில் பல பாடல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு நாமமே தெய்வம். கபீர் உருவ வழிபாடு செய்யவில்லை. அவரது பாடல்களில் இறைவனின் கருணை, குரு மற்றும் ஸாதுக்களின் மஹிமை, நாமத்தின் பெருமை ஆகியவையே பேசப்படுகின்றன.
கபீரின் பாடல்கள் சீக்கியர்களின் புனிதப் புத்தகமான குரு கிரந்த ஸாஹிபில் காணப்படுகின்றன