spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்இக்கட்டிலும் கேடுகளை நீக்கும் பஞ்ச முக ஆஞ்சநேயர்!

இக்கட்டிலும் கேடுகளை நீக்கும் பஞ்ச முக ஆஞ்சநேயர்!

- Advertisement -

பஞ்சமுக ஆஞ்சநேயர்.

ஶ்ரீமத் ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்தம் நடக்கிறது யுத்தத்தில் ஶ்ரீராமரும் லஷ்மணனும் வானர வீரர்களான சுக்ரீவன் நளன் அங்கதன் நீலன் ஹனுமன் மற்றும் உள்ள வானர சைன்யமும் அரக்கர் சேனைகளை துவம்சம் செய்ய ராவணனது பல சேனாதிபதிகள் மகன்களான இந்திரஜித் உட்பட பலர் மரணமடைந்தனர்

ராவணன் மிகுந்த கவலை அடைந்து இவர்களை எப்படி எதிர்கொள்வது என சிந்தித்திருந்த வேளையில் பாதாள லோகத்தில் இருந்த அஹிமஹி ராவணர்களை நினைக்க உடனே மஹிராவணன் ராவணன் முன் தோன்றி நண்பா ராவணா என்னை நினைத்து அழைத்தது ஏனோ தங்களது முகமும் கவலையில் உள்ளதே என வினவினான்

ராவணன் சூர்ப்பனகை மானபங்கம் தொடங்கி தான் தாயர் சீதாதேவியை சிறைபிடித்தது ஜடாயு வதம் தாயார் சீதாவின் பிடிவாதம் மற்றும் வானர ஹனுமன் வந்தது இலங்கையை எரித்தது இப்போது ஶ்ரீராமன் வானரபடையுடன் போர் செய்ய வந்து அரக்கர் கூட்டத்தையும் இந்திரஜித் உட்பட பலரை அழித்தது என எல்லாவற்றையும் கூற எனக்காக நீ இப்போது அவர்களை எதிர்த்து சண்டையிட வேண்டும் என கூறினான்

ஹா ஹா என பலமாக சிரித்த மஹிராவணன் நாளை நடக்கபோகும் போரில் ஶ்ரீராம லஷ்மணனுடன் அந்த வானர சேனைகளையும் துவம்சம் செய்து விடுகிறேன் என கூறி படைகளுடன் வர புறப்பட்டான்.

மறுநாள் சொன்னபடிக்கே மஹிராவணன் தன் படைகளுடன் வந்து ஶ்ரீராம லஷ்மணனர்களுடன் கடும் போர் புரிகிறான்

ஒருபுறம் வானர சேனையை மஹிராவணனின் சேனை விரட்ட வானர சேனையின் முக்கிய வீரர்கள் அவர்களை காப்பாற்ற துணையாக நிற்க மறுபுறம் ஶ்ரீராம லஷ்மணர்களுடன் மஹிராவணன் தந்திர போர் புரிய ஒரு கட்டத்தில் ஶ்ரீராம லஷ்மணர்கள் சோர்வடைய மாலைநேரம் வந்து விட்டதால் மறுநாள் போர் என இரண்டு பக்க படையும் பிரிந்தனர். ஶ்ரீராம லஷ்மணர் நிலையை கண்ணுற்ற ஹனுமன் வேகமாக சென்று விபீஷணனிடம் ஹே விபீஷணரே இப்போது ஶ்ரீராமருடன் போரிடுபவரை நான் இலங்கையில் கண்டதில்லையே அந்த வீரன் யார் இவ்வளவு வீரம் எப்படி வந்தது இவர்கள் அம்புகளை தாங்கும் இவனுக்கு மரணமில்லையா என வினவினார்.

ஹனுமனே வந்தருப்பது பாதாள லோக அசுரன் மஹிராவணன் இவனும் ராவணனை போல் பிரம்மாவிடம் தவம் இருந்து அழியா வரம் வாங்கியுள்ளான் இவன் தன் உயிரை பத்திரமாக, ஏழுகடல் தாண்டி உள்ள ஒரு தடாகத்தில் அழகிய தாமரை மலரில் ஐந்து வண்டுகள் உருவில் வைத்து உள்ளான் இதை ஒருமுறை அவன் ராவணனிடம் கூறியபோது கேட்டுள்ளேன்.

இவனை அழிக்க வேண்டும் எனில் அந்த தடாகத்தில் உள்ள ஐந்து வண்டுகளை அழித்தால் மட்டுமே முடியும் என கூறினார்

அவ்வளவுதான் ஹனுமன் இரவோடு இரவாக ஏழுகடலை தாண்டி அந்த தாடகம் உள்ள இடத்துக்கே சென்றுவிட்டார்.

அங்கோ அழகிய தடாகம் தடாகம் முழுவதும் அழகிய பலவிதமான தாமரை மலர்கள் ஆனால் யாருமே இல்லாத இடமாக தோன்றியது

ஹனுமன் தடாகத்தில் உள்ள தாமரை மலர்களில் வித்யாசமான ஒரு தாமரை மலரை கண்டதும் அதனை பறிக்க தடாகத்தில் இறங்க அவ்வளவுதான் ஒரு அசுரபடையே ஹனுமனை சூழ்ந்து போரிட்டனர்

ஹனுமன் ஶ்ரீ்ராமரை துதித்தபடியே அத்தனை அசுரர்களையும் தன் வாலில் அன்று இராவணன் வைத்த தீயால் இலங்கையை எரிக்க எப்படி நீட்டினாரோ அப்படியே நீட்டி கொண்டு அவர்களை அந்த நீட்டிய வாலால் சுருட்டி நெருக்க அத்துனை அசுரர்களும் வலிதாளாமல் கதறி மாண்டனர்.

காரணம் வாலில் அந்த பராசக்தி அல்லவா இருக்கிறாள்.

அவர்களை காய்ந்த இலைகள் மரத்தில் இருந்து காற்றடித்தால் உதிருவது போல் வாலில் இருந்து உதறி தள்ளியபடியே வாலை முன்புபோல் சுருக்கி தடாகத்தின் மத்தியிலிருந்த அந்தத் தாமரைப்பூவை நெருங்க அதில் விபீஷணன் கூறியபடியே தாமரைபூவின் நடுவே ஒரு சிறிய பெட்டி இருப்பதைக் கண்டான்

அவ்வளவுதான் அதில்தான் மஹிராவணன் உயிர் அடங்கிய அந்த ஐந்து விஷ வண்டுகளும் இருக்கக்கூடும் என்று அனுமானித்தவன்

மிகவும் ஜாக்ரதையாக அந்த பெட்டகத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் வாயுவேகம் மனோவேகமாக கண்இமைக்கும் நேரத்தில் ஸ்ரீராம லஷ்மணர்கள் இருக்கும் இடம் திரும்பினார்.

ஹனுமன் திரும்பும் முன்பே மறுநாள் போர் ஆரம்பித்து ஶ்ரீராம லக்ஷ்மணர் இருவரும் மஹிராவணனோடு கடுமையாக யுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்

வெகு நேரம் நீண்ட போரால் இன்றும் ஸ்ரீராம லக்ஷ்மணர்கள் மிகவும் சோர்ந்து போயிருந்தார்கள

ஆனால் பிரம்மனிடம் வரம் பெற்ற மஹிராவணன் மட்டும் தனது மாயாசக்தியால் தனது பலத்தை மேலும் புதுப்பித்த வண்ணம் இருந்தான்

இந்த நிகழ்வை கண்ட ஹனுமனின் விழிகள் கண்ணீர் வழிய மஹிராவணை நோக்கி கனலை கலக்கினார்

அடேய் துஷ்ட மஹிராவணா இதோ உனக்கான எமன் இங்கே இருக்கிறேன்.

இதோ என்னிடம் போர் செய்யவா என பெருங்குரலில் கர்ஜித்த படியே பார்ப்பவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவது போன்ற ஒரு விசித்திரமான வடிவத்தை எடுத்தார் ஹனுமன்.

அதாவது ஹனுமன் நினைத்த நேரத்தில் தன் உருவத்தை மாற்றிகொள்ளும் வர்த்தை பெற்று இருந்தபோதும் ஶ்ரீராமராவண யுத்த களத்தில் தான் ஒரு ஶ்ரீராம தூதனாக இதுவரையிலும் செயல்பட்டவர் இப்போது ஶ்ரீராமனுக்காக எப்போதும் எடுத்திராத புதிய உருவமாக ஐந்து வேறு வேறு முகங்கள் பத்து கரங்கள் கொண்ட வானர வீரனாக விஸ்வரூபம் எடுத்தார்.

அதாவது ஒரு முகம் வராகமாக
ஒரு முகம் சிம்ஹமாக
ஒருமுகம் ( நடுமுகம்) தன் வானர முகமாக
ஒரு முகம் ஹயக்ரீவ [குதிரை] முகமாக
ஒரு முகம் கருட முகமாக என பஞ்சமுகனாக அன்று போர்களத்தில் காட்சி அளித்தான் அஞ்சனை மைந்தனான வாயுபுத்ரன்.

வீர ஹனுமனின் இந்த பஞ்சமுக தோற்றம் ஶ்ரீராம லக்ஷ்மணர்களையே மிகவும் அதிசயிக்க வைத்தது.

ஐந்து முகம் பத்து கரங்கள் என உரு மாறிய ஹனுமன்

மஹிராவணின் எதிரே சென்று உக்கிரமாக நின்று கொண்டுதான் தடாகத்தில் இருந்து தாமரையின் நடுவே இருந்து கொண்டுவந்த பெட்டியை சட்டென்று திறந்தார்.

அவ்வளவுதான் அந்த பெட்டியில் இருந்து ஐந்து வண்டுகளும் திசைக்கொன்றாக பறந்து சென்றன.

உயிரை காப்பாற்ற பூமியை குடைந்து உள்ளே நுழைய பிரயத்தனம் செய்த ஒரு வண்டை வராக முகம் துரத்தி இரு கைகளால் பிடிக்க, திறந்த வேகத்தில் பூமியின் விழுந்து வேகமாகப் பாய்ந்து ஓடிய ஒரு வண்டை சிம்ஹமுகம் துரத்தி இரு கைகளால் பிடிக்க, திறந்த வேகத்தில் பறந்து பறந்து அங்கிருந்த மரத்துக்கும் கோட்டைக்கும் பறந்து சென்ற வண்டை தன் சுயமான வானர முகம் கொண்டு விரட்டி இரு கரங்களால் பிடிக்க, திறந்த வேகத்தில் கீழே விழுந்து மற்றொரு வண்டு தன் ஆறுகால்களை கொண்டு அதிவேகமாக உதைத்தவாறே பூமியில் ஓட அந்த வண்டை குதிரை முகமாக கொண்டு துரத்தி இரு கைகளால் பிடிக்க, மற்றொரு வண்டோ கீழேயும் விழாமல் மரம் கோட்டை என ஓடாமல் மேலே ஆகாயத்தை நோக்கி பறந்து செல்ல அந்த வண்டை கருட முகமாக துரத்தி இரு கரங்களால் பிடிக்க, இப்படியாக ஐந்து முகங்களால் ஐந்து வண்டுகளை தன் பத்து கரத்தின் உதவிகொண்டு ஒரே நேரத்தில் பிடித்து மிக உக்ரமாக அவைகளை அந்தந்த உருவில் இருந்த வாயால் கடித்து குதறி எறிந்தார்.

அந்த யுத்தகளமே அதிரும்படி துடிதடித்து கதறி கொண்டே கீழே விழுந்து இறந்தான் மஹிராவணன்

மஹிராவணின் அழிவை கண்ட வானர சைன்யம் மிகவும் ஆரவார சப்தமிட்டு ஆனந்த கூத்தாட அந்த சத்தத்தின் வேகம் ஹனுமனை கோபத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது.

ஹனுமன் தன் எதிரே இருந்த ஶ்ரீராம லஷ்மணர் தாள்களில் விழுந்து வணங்க, ஹனுமனை மிகவும் நெகிழ்ச்சியோடும் ஆனந்தத்துடனும் ஏறிட்ட ஶ்ரீராமன்

ஹே வாயுபுத்ரா

இன்று எந்த பஞ்ச முகத்தால் மஹிராவணின் உயிரான விஷ வண்டுகள் எல்லாவற்றையும் அழித்து எனக்கும் லஷ்மணனுக்கும் போரில் உதவி செய்தாயோ அந்த பஞ்சமுகத்தை இந்த நிகழ்வை மனதில் கொண்டு வணங்குகிறார்களோ அவர்களுக்கும் இதே பஞ்சமுகத்தோடயே இருந்து நீ அவர்கள் உன்னிடம் வேண்டும் நல்ல காரியங்களை ஜெயமாக்கி உதவ வேண்டும் என ஆசி வழங்கினார்

ஹனுமனை பஞ்சமுக ஆஞ்சனேயராக த்ரேதா யுகம் தொடங்கி இப்போதைய கலியுகம் வரை வழிபட தொடங்கினர் ஶ்ரீராம பக்தர்கள்.

அன்று முதல் ஶ்ரீராமனின் கட்டளையைச் சிரம்மேற் தாங்கி இன்றும் பஞ்சமுகத்தோடு பல ஊர்களில் சேவை சாதிக்கின்ற ஹனுமன் தன்னை நாடி வருகின்ற பக்தருக்கு தன் பஞ்சமுகத்தால் பக்தர்களின் ஐம்புலன்களால் (கண் காது மூக்கு வாய் நாக்கு) அவர்களுக்கு நேருகின்ற பலவித கேடுகளையும் எல்லாம் களைகின்றான்

அது மட்டுமல்ல உடல் (பூமி) அக்னி (சூடு) வாயு ( காற்று) நீர்( உடல் தண்ணீர்) ஆகாயம் (புறவெளி) என்ற ஐம்பூதங்களால் ஆன இந்த மனித சரீரத்தில் ஏற்படும் பலவித உடல் (உபாதை) துன்பங்களயும் போக்கி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டிய ஆனந்தத்தை அளிக்கிறான்

அன்பர்களே பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்குவதால் நமக்கு பல நன்மைகள் உண்டு

ஶ்ரீராமாயணத்தில் ஶ்ரீராம தூதனான சுந்தரமான இந்த சுந்தரனின் அன்பை பெற நீங்கள் செய்யவேண்டிய ஒரு சுந்தரமான செயல் இந்த சுந்தரன் சதா சர்வகாலமும் உச்சரிக்கும் ஶ்ரீராம நாமத்தை எப்போதும் உச்சரிப்பதே
எனவே நாமும் என்றும் எப்போதும் உச்சரிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe