நான் (பொட்டை) குருடுதான்) கட்டுரையாளர்;ரா.கணபதி. தட்டச்சு;வரகூரான் நாராயணன். சீடர்களைச் சீண்டி விளையாடியது மட்டுந்தானா? குருவான தம்மையுமே எப்படியெல்லாம் பரிஹஸித்துக் கொண்டிருக்கிறார்? சிறக்க வைக்கும் சிரிப்பாக மட்டுமன்றி உருக்க வைப்பதாகவும், உள்ளம் குருதி சுரக்க வைப்பதாகவும்கூட ஹாஸ்யம் செய்து கொண்டிருக்கிறார். ‘OUR SINCEREST LAUGHTER ‘WITH SOME PAIN IS FRAUGHT’ என்ற கவி வாக்கு எவ்வளவு உண்மை எனக் காட்டும் நகைச்சுவையில் தம்மையே நையாண்டி செய்து கொண்டிருக்கிறார். பெரியவாள் காடராக்ட் ஆபரேஷன் ஆகிச் சில நாட்களுக்குப் பிறகு. ஓர் அம்மாள் பெரியவாள் திருமுன் திடுமெனப் பாட ஆரம்பிக்கிறாள் பொருத்தமான.பாடல் குரு ப்ரசம்ஸை யாகத் தியாகையர் அருளியுள்ள “நீ சித்தமு நிர்மலமு நிச்சலமநி” என்ற தந்யாஸி ராகப் பாடல். சாஸ்திர தர்மத்திற்கே முற்றிலும் அடிபணிந்து வாழ்ந்து காட்டிய ராமபிரானை குருஸ்வரூபமாகத் துதிக்கும் பாடலை, அதே குண நலம் படைத்த நம் குருவின் முன் பாட வேண்டுமென்று அப்பெண்மணிக்குத் தோன்றியது மிகப் பொருத்தந்தான். ஆயினும் உச்சரிப்பு சரியாயிருக்க வேண்டும் என்ற முக்யமான அம்சத்தைக் கவனிக்கவேயில்லை. ஸம்ஸ்கிருதத்திலும்,தெலுங்கிலும் க,ச,ட,த,ப முதலியவற்றிலுள்ள வல்லொலி, மெல்லொலி மாறுபாடுகளைக் கவனிக்காமல் பாடினாள். கிருதியில் ஓரிடத்தில் குரு அஞ்ஞான இருளைப் போக்கும் ஞான சூரியனாதலால் “குருடே பாஸ்கரடு” என்றும், அடுத்து அவரே மங்கலம் நல்குபவர் என்பதால் “குருடே பத்ருடகு” என்றும் வருகிறது.இவ்விரு இடங்களிலும் “gurude” என்பதை அவள் “Kurude” என்று பாடியது,”நல்ல பாட்டைக் கெடுக்கிறாளே!” என்று வருத்தம் தந்தது. அவள் போன பிற்பாடு குருநாதர் “குருடு” பற்றிக் குறிப்பிட்டார். குருடு மட்டுமின்றிச் செவிடுமாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர். அவள் அவ்வளவாக உரத்த குரலில் இன்றி, அதிலும் பேச்சாக இன்றிப் பாட்டாகப் பாடியதில், ku-வுக்கும் gu-வுக்கும் எப்படி மாறுபாடு கண்டாரோ? “அவ பாடினது மட்டுமில்லே, நீ எழுதினாலும் அப்படித்தானே போடுவே?” என்று சீண்டினார்’!. ஆம் தமிழில் ga-கார, ka-காரங்கள் இரண்டிற்கும் ஒரே ‘க’தானே போட வேண்டும்? “பொட்டை,பொட்டை….! இந்த gurudu நெஜமாகவே kurudu-தான். நெஜத்தைத்தான் அவ பாடிட்டுப் போய்ட்டா.(கண்களைத் தொட்டுக்கொண்டு). இந்தக் குருட்டை ஆபரேஷன் பண்ணி ஸரி ஆக்கலாம்.ஆனா, பூரணமான குரு-ன்னா இருக்க வேண்டிய ஞான த்ருஷ்டியிலே நான் (பொட்டை) குருடுதான். அதை ஆபரேஷன் ஸரி பண்ணாது!” என்று ஒரு போடு போட்டார். இது ‘குருடு”வை வைத்து செய்தது,”மடாதிபதி” “பீடாதிபதி” என்பவைகளை வைத்து அவர் சிரித்துச் சிரித்து ஒரு சமயம் சொன்னதும் அவரொருத்தரால்தான் முடியும்.
நான் (பொட்டை) குருடுதான்
Popular Categories