October 20, 2021, 2:09 pm
More

  ARTICLE - SECTIONS

  சொன்னது ஒன்று! புரிந்து கொண்டதோ வேறு!

  yashoda krishna - 1பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்  பாடத்திட்டம் இல்லாமலே!  போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த பாடில்லை! அப்போது சொன்னார்… “நம்ம ஸ்கூலுக்கு சில ‘பஸ்’ தான் வருதேயொழிய, இன்னும் ‘சிலபஸ்’ வந்தபாடில்லை!”

  அட! இந்த மாதிரி நாமும் பேசும்போது உபயோகித்தால் என்ன? என்ற ஆர்வம் அப்போது துளிர் விட்டது. அதன் பிறகு இருபொருள் தரும் சொல்லை அகராதியில் தேடத் தொடங்கியது மாணவ உள்ளம்.

  இச் சொல் பயன்பாட்டில் சில நேரம் விபரீதம் தந்தாலும் பல நேரங்களில் சுகமாகத்தான் இருந்தது… காரணம் பலரும் பொருள் தெரிந்து ரசித்ததால். நம்மால் நாலுபேரை சந்தோஷப்படுத்த முடிகிறதே என்ற எண்ணம்தான்!

  ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டு நண்பரிடம் “நாளை சீக்கிரம் எழுந்து நெல்லை ஜங்ஷனுக்குப் போகணும்…” என்று சொல்லி வைத்தேன். மறுநாள் காலை… வழக்கம் போல் சோம்பல். வியப்போடு பார்த்த நண்பர் கேட்டார்… “ஏ என்ன? போலயா?” கேள்வி கேட்ட வேகத்துக்கு ஈடு கொடுத்து “போல” என்றேன். விறுவிறுவென என் அப்பாவிடம் சென்ற நண்பர் சொன்னார்… “மாமா, உங்க பையன் என்னை ‘போல’ ண்ணு  சொல்லிட்டான்…”  ‘போகல’ என்ற சொல்லில் ‘க’ கண்ணாமூச்சி காட்டியதால் எழுந்த வினை இது!

  சொலவடையா? சிலேடையா? எப்படி இருந்தால் என்ன? பயன்பாட்டில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்! என்ன பேசுபவருக்கும்  கேட்பவருக்கும் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்! கி.வா.ஜ வின் சிலேடைகளைக் கேட்டு இன்புறாத தமிழர் உள்ளமும் உண்டோ?

  தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த உத்தி இருந்து வருகிறது.

  நம் இன்னொரு தொன்மையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் சிலேடைக்கவிகள் ஏராளம். அவற்றில் பெரும்பாலும் உவமையாகவே கையாளப்பட்டிருக்கும்.

  தமிழில் கடைசி முடிப்பு, இரண்டுக்கும் பொதுவாக அமைந்து அழகு காட்டுவது போல், பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்தில் பாடலின் முதல் வரியிலேயே சிலேடை இன்பம் வெளிப்படும். காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை எவ்வளவு தூரம் நாம் அசை போட்டிருப்போம்…? ‘எள்ளுக்கும் பாம்புக்கும்’ காட்டும் ‘ஆடிக்குடத்தடையும்’ பாடல் நம் காதுகளிலே ரீங்காரம் இடுகிறதே!

  சம்ஸ்க்ருதக் கவி…
  ஜீவனக்ரஹணே நம்ரா: க்ருஹீத்வா புநருந்நதா:/
  கிம் கனிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: கடீயந்த்ரஸ்ய துர்ஜனா://

  கடீ யந்த்ரம்  நீர் இறைக்கும் எந்திரம்  ஏற்றச்சால். துர்ஜனா  தீயோர். சந்தர்ப்பவாதி என்றும் கொள்ளலாம். இவ்விரண்டில் எந்திரம் தீயவனுக்கு இளையவனா? மூத்தவனா? என்று கேள்வி கேட்டு, இரண்டுக்குமான ஒப்புமையை இரு பொருள் தரும் வகையில் கவி கையாண்டிருக்கிறார். ‘ஜீவன க்ரஹணே’ என்றதில் ‘ஜீவனம்’ என்று, தண்ணீருக்கு ஒரு பெயர் உண்டு.

  ஜீவிகை என்றதான உயிர் வாழ்தலுக்கும் ஒரு பெயர் உண்டு. ஏற்றச் சாலில் தண்ணீர் மொண்டு கொள்வதற்காக அது கிணற்றில் இறங்கும்போது, தலை தாழ்த்தியிருக்கும். நீரை மொண்டு கொள்ளும் வரையில்தான் தலை வணங்கும்; மொண்டு கொண்ட பிறகு உடனே தலை தூக்கும். அதுபோல் தீயோர்(சுயநலவாதிகள்) பயன் அடையும் வரையில்தான் மற்றோர் காலில் விழுந்து கிடப்பர். பிறகு செருக்கோடு தலை நிமிர்ந்து அலைவர்.

  இதுபோல் கத்திக்கும் கருமிக்குமான சிலேடை சுவையானது; உள்ளத்தை ஊடுருவுவதும் கூட!
  த்ருடதர நிபத்தமுஷ்டே: கோச நிஷண்ணஸ்ய ஸஹஜமலிநஸ்ய/
  க்ருபணஸ்ய க்ருபாணஸ்ய ச கேவலமாகாரதோ பேத://

  க்ருபணன்  கருமி; க்ருபாணம்  கத்தி. இரண்டுக்கும் உச்சரிப்பில் ஒரு ‘ஆ’காரம்தான் வேற்றுமையே தவிர இரண்டின் சுபாவமும் ஒன்றுதான்! இவ்விரண்டின் சுபாவத்தை மூன்று விஷயங்கள் ஒற்றுமைப்படுத்தி, சிலேடை இன்பம் தருகிறது. ‘த்ருடதர நிபத்தமுஷ்டே’  கத்தியைக் கையில் பிடிக்க, நன்றாக முஷ்டி பிடித்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். கருமியும் அப்படியே! எங்கே கை திறந்தால் காசு விழுந்து விடுமோ என்று அஞ்சி கையை இறுக்கிப் பிடித்திருப்பான்.

  ‘கோச நிஷண்ணஸ்ய’  கத்தி உறையையும் பொக்கிஷத்தையும் ‘கோசம்’ என்பர். கத்தி அதன் உறையில் தங்கும். கருமி எப்போதும் பொக்கிஷத்தைக் காவல் காத்து, பூட்டைப் பற்றியவாறு தொங்கிக் கொண்டு கிடப்பான்.

  ‘ஸஹஜ மலிநஸ்ய’  கத்தி, இரும்பால் செய்யப்படுவதால் இயற்கையாகவே கருப்பாக இருக்கும்; அழுக்கடைந்து துருப்பிடித்து இருக்கும். கருமியோ வெள்ளைத் துணி அழுக்காகும்; அதை சலவைக்குக் கொடுத்தால் காசு செலவாகுமே என்று அஞ்சி அழுக்குத் துணியையே அணிந்திருப்பான். ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாமல் மலினனாகவே இருப்பான். அதனால் இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ‘கேவலம் ஆகாரதோ பேத:’ என்றபடி ‘ஆ’கார சப்தத்தில் மட்டுமே வேற்றுமை என்பதை உணரலாம்.

  இப்படி ஒரு பொருளுக்கும் மனிதனின் குணத்துக்கும் ஏற்ப ஒப்பிட்டு சிலேடை இன்பத்தைத் தருவது கவிகளுக்குக் கைவந்த கலையே!

  கண்ணனைப் பாடிய கவிகள், எத்தனையோ சொல்லின்பத்தையும் பக்தி இன்பத்தையும் தந்திருக்கிறார்கள். கண்ணனின் குறும்புகளை தம் கவித்திறனால் அழகுற வெளிப்படுத்திய நம் பாரதியைப் போல், பிற இந்திய மொழிகளிலும் இச்சுவை உண்டு. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில்,  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான், தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்…’ என்று கோபியருடன் கண்ணன் செய்த குழந்தைத் தனக் குறும்புகளை பாரதி வெளிப்படுத்தியது போல், சம்ஸ்க்ருதக் கவிஞரும் இதைப் பாடியிருக்கிறார். அதிலே சிலேடை உண்டு; கண்ணனின் வார்த்தை சமத்காரமும் உண்டு.

  அம்ஸே ஸலீலமதிரோப்ய சுகம் ஸ்வஹஸ்தாத்
  கோப்யா பயாகுல த்ருச: குதுகீ முகுந்த:/
  அம்ஸம்கதம் சுகமிஹா பநயேதி வாசம்
  தஸ்யா நசம்ய ச ததம் சுகமாசகர்ஷ//

  கண்ணனின் லீலா விநோதம் இந்தப் பாடலில் அனுபவிக்கப் படுகிறது. கண்ணன் ஒரு கோபியின் தோளில் விளையாட்டாக ஒரு கிளியை ஏறவிட்டான். திடீரென ஏதோ ஒன்று தோளில் தட்டுப்பட, பயந்து போன கோபி கண்ணனிடம் சொன்னாள்… “ஹே க்ருஷ்ணா, அம்ஸம் கதம் சுகம் அபநய…” என்று! அம்ஸம்  தோளை, கதம்  அடைந்திருக்கும், சுகம்  கிளியை, அபநய  அப்புறப்படுத்து… அதாவது, “கண்ணா! என் தோளின் மேல் ஏறியுள்ள இக் கிளியை அகற்று” என்ற பொருளில் சொன்னாள்.

  ஆனால் அதை அப்படியே கேட்டுச் செய்தால் கண்ணனுக்கு என்ன சிறப்பு? கண்ணன் குறும்பு எப்படி வெளிப்படும்? கோபி சொன்ன வார்த்தைக்கு சிலேடையாகப் பொருள் கொண்டு, கண்ணன் ஒரு குறும்பைச் செய்கிறான்…

  கோபி சொன்ன ‘அம்ஸம் கதம் சுகம் அபநய’  என்பதையே, ‘அம் ஸங்கதம் சுகம் அபநய’ என்று ஆக்கிக் கொண்டான் கண்ணன். அம் ஸங்கதம்  அம் என்ற எழுத்தோடே சேர்ந்த; சுகம் அபநய  சுகத்தைத் தள்ளு… அதாவது, அம் என்பதோடு சேர்ந்த சுகம்  அம்சுகம்! அதற்கு ‘ஆடை’ என்று பொருள்! இப்படிப் பொருள் கொண்டு, அம் என்ற சுகத்தோடு அம்சுகத்தைத் தள்ளு என்று பொருள் கொண்டு, கோபியின் தோளின் மேலேறியிருக்கும் மேலாடையைப் பிடித்திழுத்தான்… பிறகு “கோபி நீ சொன்னபடியேதான் நான் செய்தேன்…” என்று கள்ளச் சிரிப்பும் சிரித்தான்!

  கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,569FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-