தமிழ்கூறும் நல்லுலகின் கண் காவிரியின் வளம் பெற்றுத்திகழும் சோழவள நாட்டில் தென்கரையில் அமைந்து தேவார ஆசிரியர் மூவராலும் பாடல் பெற்ற தலங்களில், அதிக பாடல் பெற்ற வரிசையில் மூன்றாவது இடம் பெற்ற பெருமையும், சிவபெருமானை பெருமாள் தம் விழி மலரால் அர்ச்சித்து சக்கரம் பெற்ற இடமாகவும், காத்தியாயன முனிவரின் திருமகளாக அவதரித்த உமையம்மையைத் திருமணம் புரிந்து கல்யாண சுந்தரராகத் திருக்கோலக்காட்சியில் அருள்பாலிக்கும் புகழும் கொண்டு விளங்கும் மாபெரும் தலம் திருவீழிமிழலை எனும் வீழிநாதர் திருத்தலம்.

” திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டு உள்ளங் குளிரவென் கண்குளிர்ந்தனவே ” என்று சேத்தனார் பெருமானாரால் பாடப்பட்டவனும், ” பழகி நின்னடி சூடிய பாலனை கழகின் மேல்வைத்த காலனைச் சாடிய அழகனே அணி வீழிமிழலையுள் குழகனே அடியேனைக் குறிகொளே ” என்று திருநாவுக்கரசரால், சுவேதகேது எமனை வென்றதைக் கூறிப் பாடப்பட்டவருமான திருவீழிநாதர் இத்தலத்தில் அன்பர்களுக்கு அருள்பாலித்த நிகழ்வுகள் பல. அவற்றுள் ஒன்றான ” படிக்காசு பெற்ற வரலாறு ” எனும் திருவருள் நிகழ்வையே இங்கு காணப்போகிறோம்.

எம்பெருமான் ஈசனின் அன்பையும் அருளையும் ஒருங்கே பெற்ற அருட்பெரும் செல்வங்களான திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் பல தலங்கள் சென்று இறைவனைப் பாடிப் பணிந்து வரும் காலத்தில் ஒரு சமயம் தீருவீழிமிழலை வர விரும்பி அத்தலம் நோக்கி பயனித்தனர். அச்செய்தி கேட்ட ஐந்நூற்று மறையவரும் * ( தில்லை மூவாயிரம் போல் இங்கும் சிபிவேந்தனால் வேதாகமங்களை நன்குணர்ந்தொழுகும் ஐந்நூறு மறையவர் கொண்டுவந்தமர்த்தப்பட்டனர் ) மற்ற அடியார்களும் பூர்ணகும்பங்கள் ஏந்திப் பொற்சுண்ணமும் பொரியும், நறுமலரும் தூவி இரு பெருமக்களையும் எதிர்கொண்டனர். இரு பெருமக்களும் அம்மறையவர்களோடு கூடி திருநகரினுள்ளே புகுந்து, ” அரையார் விரிகோவண ஆடை ” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி இரு கைகளையும் தலைமேல் தூக்கியவாறு ஆலயத்துள் சென்று இறைவனைப் பணிந்து இன்னிசைப் பாமாலைகள் சூட்டி இன்புற்றனர். பின்பு மறையவரும் மற்ற அடியார்களும் இருவருக்கும் மற்றைய அடியவர்களுக்கும் அமுதூட்டி ஆவன செய்தனர்.பின், ஞானசம்பந்தரும் வாகீசரும் ஆலயத்துக்கு வடபக்கத்தில் திருமாடங்களில் தங்கிக் காலந்தோறும் பரமனைப் பாடிப் பலநாள் மகிழ்ந்திருந்தனர்.

சில காலஞ்சென்றதும் அருவிலைக்காலமாகிய பஞ்சகாலம் வந்தது. வானம் பொய்த்தது, மழை குறைந்தது. நதிகளும் தவறின மண் வளம் சுருங்கியது. உணவு தடைப்பட்டு எங்கும் பஞ்சம் பரவியது. அப்போது சம்பந்தரும் வாகீசரும் இக்காலத்தால் ” நெற்றிக்கண் பெருமானின் திருத்தொண்டர்களுக்கும் இக்கவலை வருமோ ! ” என்று கருத்தில் கோண்டு வருந்தினர். வானாகி, நிலனாகி, அனலுமாகி, மாருதமாய், இருசுடராய், நீருமாகி, ஊனாகி, உயிராகி, உணர்வுமாகி, உலகங்களனைத்துமாகி, உலகுக்கப்பால் ஆனாத வடிவமாகி நின்ற சிவபெருமான் திருவடிகளை தியானித்து அன்றிரவு இருவரும் துயில் கொண்டார்கள். தூங்கும்போது வீழிமிழலைப்பெருமான் மான், மழுக்கரத்தோடும் இருவருடைய கனவிலும் தோன்றி, ” கால நிலைமையால் உங்கள் மனதில் வாட்டம் கொள்ளமாட்டீர்கள். ஆயினும் உங்கள் அடியார்களுக்காக நாடொறும் ஒரு பொற்காசு ஒவ்வொருவருக்கும் தருகின்றோம் அதுகொண்டு அமுதூட்டி இன்புறுவீர்களாக. பஞ்சம் நீங்கியதும் அக்காசு பெறுதல் இலையாகும் ” என்று கூறியருளினார்.

கணவு நீங்கி, பெருமான் கருணையை வியந்து வைகறையில் ஆலயத்துள் சென்று, சம்பந்தர் கிழக்குப் பீடத்துள்ள பொற்காசை எடுத்துக்கொண்டு வலமாக வரும்பொழுது மேற்குப் பீடத்திலும் ஒரு காசு இருத்தலைக் கண்டு வாகீசரும் அதை எடுத்துக்கொண்டார்.இறைவனைப் போற்றினர் இருவரும். வாக்குத் தவறாத வள்ளலின் வாய்மையை வியந்தனர். அமுதாக்குபவர்களிடம் அக்காசுகளைக் கொடுத்து, ” இக்காசு கொண்டு வேண்டிய பண்டங்களை வாங்கி அமுதமையுங்கள் ” என்றார்கள். அவர்களும் அவ்வாறே முறையாக தினமும் அமுது செய்தார்கள். பரமனடியார்கள் அனைவரும் தினந்தோறும் நல்விருந்து உண்ணும் படி பறை சாற்றி, ” நம்பிரான் அடியார்கள் நாளும் நாளும் நல்விருந்தாய் உண்பதற்கு வருக ! வருக ! ” என்று அறிவிக்கப்பட்டது. வரும் தொண்டர்களுக்கெல்லாம் திருவமுது, கறிவகைகள், நெய், பால், தயிர் முதலியனவற்றால் இரண்டு பொழுதும் துருவமுது படைக்கப்பட்டது.

சில நாட்கள் சென்றன. நாவுக்கரசரின் திருமடத்தில் அடியவர்கள் காலத்தோடு உச்சிப் பொழுதிற்கு முன் அமுது அருந்திச் செல்வதையும் தம்முடைய திருமடத்தில் கால தாமத்தோடு அமுது அருந்திச் செல்வதையும் கண்ட ஞானசம்பந்தர் வியப்புற்றார். பின் அவர் அமுது ஆக்குபவர்களை நோக்கி அதன் காரணத்தை வினவினார். அதற்கு அவர்கள் ” தேவரீர் ! இதன் தன்மையை நாங்கள் அறிந்திலோம். சிவபெருமானிடத்தில் நீர் பெறும் காசைக் கடைவீதிக்குக் கொண்டு சென்றால் வணிகர்கள் உம் பொற்காசுக்கு வட்டங்கேட்டுத் தீர்த்துப் பின்புதான் பண்டங்களைக் கொடுக்கிறார்கள். நாவுக்கரசர் பெறுங்காசுக்கு அவர்கள் வட்டம் கேட்பதில்லை உடனே விரும்பி வாங்கிக்கொள்கிறார்கள், நம் மடத்தில் காலம் தாழ்ப்பதற்குக் காரணம் இதுவே ! ” என்று கூறினர். அதைக் கேட்ட ஞானசம்பந்தர் சிந்தித்து ” அப்பர் கைத்தொண்டு செய்கிறார் அதனால் அவர் வாசியில்லாத நல்ல காசு பெறுகிறார், நமக்கு சிவபெருமான் தரும் காசு இனி வரும் நாட்களிலாவது நல்ல காசாக மாறவும் வாசி தீரவும் பாடுவேன் ! ” என்று முடிவு செய்து அமுது செய்பவர்களிடம் ” நாளைமுதல் நற்காசு பெற்றுத் தருகிறோம், காலத்தோடு அமுதமையுங்கள் ” என்று கூறினார். பின்னர் திருமால் வழிபடுவதற்காக விண்ணிலிருந்து இறங்கிய விமானக் கோவிளுள் சென்று அருட்கூத்து ஆடிய திருவடிகளை வணங்கி ” வாசி தீரவே காசு நல்குவீர் ” எனும் திருப்பதிகத்தைப் பாடினார். நற்காசு பெற்றார்.

அதுமுதல் காலத்தோடு அமுதமைத்துப் பலகாலம் அமுதூட்டினார். பின்பு மழை பெய்து எங்கும் செழித்து விளை பொருள்கள் மிகுந்தன. சம்பந்தரும் வாகீசப் பெருமானும் பல தலங்களையும் வணங்கத் திருவுள்ளம்கொண்டு மிழலைப்பெருமானிடத்தில் அருள்பெற்றுப் பிரியாவிடை கொண்டு அரிதினீங்கித் திருவாஞ்சியம் முதலிய பல தலங்களையும் வணங்கித் திருமறைக் காட்டுக்கு எழுந்தருளினார்கள். இத்தலமானது அப்போது பெரிய நகராகியிருந்தது. சுவாமி பெயர் செட்டியப்பர். அம்பாள் பெயர் படியளந்தநாயகி. உற்சவமூர்த்தி தராசுபிடித்த கரத்தோடு இருக்கின்றார். அம்பாள் படியைப் பிடித்த கரத்தோடு இருக்கின்றார். இத்தலத்திலேயே இறைவன் ஞானசம்பந்தருக்கு சீர்காழி திருத்தோணியில் தாம் இருக்கும் காட்சியை இத்திருக்கோவில் விமானத்தில் காட்டியருளினார். அவ்வாறல்லாமல் இக்காட்சியை இறைவன் திருவீழிமிழலை திருக்கோவிலில்தான் சம்பந்தருக்குக் காட்டியருளினார் என்று கூறும் நூல்களும் உண்டு.

மேற்கூறிய நிகழ்வை படிக்கும்போது சிலருக்கு ஒரு கேள்வி மனதில் எழலாம். அப்பரோ மொழிக்கு மொழி தித்திக்கும் தீந்தமிழால் ஈசனைப் பாடி அவன் வாக்கினிலேயே ” நாவுக்கரசர் ” எனப் போற்றப்பட்டவர். சம்பந்தரோ உலகநாயகியாம் உமையின் திருக்கரங்களால் திருவமுதூட்டப் பெற்றவர், இவர்களுள் பேதம் ஏது ? அதிலும் ” பச்சிளங்கைகள் தாளம் போடுவதால் நோகக் கூடாது ” என ஈசனே நெகிழ்ந்து ” ஐந்தெழுத்து பொறிக்கப்பட்ட செம்பொன்னால் செய்யப்பட்ட தாளத்தை ” வழங்கினாரெனில் வேறென்ன சொல்லவேண்டும் ? அன்று செம்பொன் தாளத்தை வழங்கிய ஈசனே இன்று குறை கண்டானோ ? இவை போன்ற கேள்விகள் எழலாம். ஆனால் இவற்றிட்கெல்லாம் ஞானசம்பந்தப் பிள்ளையாரே பதில் கூறிவிட்டார். அதை நாம் புரிந்துகோண்டால் மட்டும் போதும். அருவிலைக் காலத்தில் எண்ணிறந்த அடியார்களுக்கும் உணவிற்கு வேண்டிய எல்லாப் பண்டங்களையும் ஒரு காசு பெற்றுத் தரவல்லவர் பரமனைத் தவிர எவரால் முடியும் ! எனவே நாமும் இறைவனிடம் ” வாசி தீரவே நல்ல எண்ணங்களையும், நல்ல ஒழுக்கங்களையும், நல்ல பக்தியையும் நல்குவீர் ” என வேண்டுவோம்.

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே,
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

** இச்செய்திகளை நாம் அழகியமாமுலை அம்மை பிள்ளைத் தமிழிலும் காணலாம்.

|| அருள்தரு அழகியமாமுலையம்மை உடனாய அருள்மிகு வீழிநாதர் திருப்பாதம் சரணம்.||

நன்றி,
அறுபத்துமூவர் கதைகள், பிரேமா பிரசுரம், சென்னை – 24.
திருவீழிமிழலை தலவரலாறு, சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.

  • ஸ்ரீராம் கிருஷ்ணஸ்வாமி

Recent Articles

காப்பான்… விசிலடிச்சான் குஞ்சுகளின் தமிழைப் படித்து கதி கலங்கிய காவல் ஆய்வாளர்!

ஆவ்யாளர் என்ற சொல் மட்டுமல்ல மொத்த கடிதமுமே தப்பும் தவறுமாகத்தான் இருக்கின்றது. என்ன படிச்சாங்களோ எப்படித்தான் தேர்ச்சி அடைஞ்சாங்களோ

வந்தே மாதரத்தை ஏற்போர் மட்டுமே இந்தியாவில் இருக்க வேண்டும்-பிரதாப் சாரங்கி அதிரடி.!

# 72 ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீர் மக்களுக்கான முழு உரிமையையும், மோடி தலைமையிலான அரசு வழங்கியுள்ளது. #

வயிற்றுவலிக்கு காட்டச் சென்ற பெண்! மருத்துவர்கள் கூறிய செய்தியால் அதிர்ச்சி!

கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று சினேகா கூறாத நிலையில் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மிகுந்த வருத்தத்திலும் கவலையிலும் உள்ளனர். இதையடுத்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்துனர்.

நவராத்திரி ஸ்பெஷல்: பால்பேடா!

பால்பேடா : தேவையான பொருட்கள் : பால் ...

வாழையின் மணத்தோடு தொன்னை இட்லி

வாழை இலைகளை தொன்னைகளாகச் செய்து, அவற்றினுள்ளே லேசாக எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, அவற்றை ஆவியில் வேக வைக்கவும். இது, வாழை இலை மணத்துடன் சுவையாக இருக்கும். பரிமாறும் வரை இட்லி தொன்னையிலே இருக்கட்டும்.

Related Stories