
செங்கோட்டை: அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயில் மகோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஐயப்பன் தர்மசாஸ்தா கோயிலில் மண்டல மகோத்ஸவ விழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 26 கி.மீ., தொலைவில் உள்ளது அச்சன்கோவில். ஐயப்பனின் படை வீடுகளில் அரசனாக வீற்றிருக்கும் படைவீடான அச்சன்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான மண்டல மகோத்ஸவ விழா, கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, நாள்தோறும் ஸ்ரீதர்மசாஸ்தா ஐயப்ப ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
விழாவின் 9ஆம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக, ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஐயப்பன் அலங்கரிக்கப் பட்ட புதிய தேரில் எழுந்தருளினார்.

அதைத் தொடர்ந்து, மூங்கிலால் ஆன வடத்தை பக்தர்கள் பிடித்திழுக்க, தேரோட்டம் தொடங்கியது. தேர், ரத வீதிகள் வழியாக வலம் வந்தது.

தேருக்கு முன்பாக கோயில் செயல் அலுவலர் ஐயப்பனின் தங்கவாளை ஏந்தியவாறு செல்ல, பின்னால் பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின் போது கருப்பன்துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டத்தில் கேரளம், தமிழகத்தைச் சேர்ந்த திரளான பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.