களவு போன கோவிந்தன் கிரீடம் |Sri #APNSwami #Trending

  களவு போன கோவிந்தன் கிரீடம்

வைகுந்தத்தில் ஒரே களேபரம்!!! நித்யசூரிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கின்றனர்! எதையோ தேடிக்கொண்டிருக்கின்றனர்!! ஸ்ரீதேவி, பூமிதேவிகள் ஆதிசேஷனாகிய படுக்கையை இப்படியும், அப்படியுமாகப் புரட்டிப்போட்டு உதறிக் கொண்டிருக்கின்றனர். வருடக்கணக்கில் தேங்கியிருந்த தும்புகள், தூசிகள் அதனால் பறந்து, ஸத்வமயமான வைகுண்டம் ரஜோ(தூசி) மயமானது.

வைகுண்டப் பணியாளர்களை வரிசையாக நிற்கவைத்து விஷ்வக்சேனர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். தன் கையிலிருந்த திருப்பிரம்பை அசைத்து, அசைத்து, கண்களை உருட்டி அவர் விசாரணை செய்கிறார்.

த்வாரபாலகர்கள், சாமர கைங்கர்யம் புரிபவர் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சந்தேகப்படும் நபர்கள் எவராவது வந்தனரா?! இன்று வைகுண்டத்திற்கு வந்தவர்களின் வருகைக் குறிப்பேடு சரிபார்க்கப்பட்டதா?! ஆதிசேஷனின் ஆயிரம் கண்களும் நடந்த சம்பவத்தை கண்காணிக்கவில்லையா?!

ஒன்றிலும் பொறுப்பில்லை!! எப்போது பார்த்தாலும் தூங்க வேண்டியது!” என்று அவ்வப்போது பிராட்டி பெருமாளைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டேயிருந்தாள். பெருமாளோ, பாவமாக(!) ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்.

இவ்வளவு பரபரப்பிற்குக் காரணம், இன்று நம் பெருமாளின் கிரீடம் காணாமல் போய்விட்டது. பாதுகாப்பு நிறைந்த வைகுண்டத்திலேயே வைரகிரீடம் காணாமல் போனால் மற்ற தெய்வங்களின் நிலை என்ன ஆவது? காணாமல் போன கோவிந்தனின் கிரீடத்தைத் தேடித்தான் இத்தனை களேபரமும்.!!

பக்தர்கள் மட்டுமே உள்ளே வரும் வைகுண்டத்தில், கிரீடம் களவு போக வாய்ப்பேயில்லையே?!”

பெருமாள் தூங்கும்போது ஆதிசேஷனின் உடல் மடிப்பில் எங்காவது இடுக்குகளில் விழுந்திருக்குமோ!” எனத் தேடுவதற்காகத்தான் ஆதிசேஷனை பிரித்து உதறினார் லக்ஷ்மியும், பூமியும்.

தனது பெருத்த உடலை முக்கி, முனகி அசைத்து அசைத்து நெகிழ்த்தினார் ஆதிசேஷன்.

இதுதான் சமயமென்று கருடனும் தனது கூரிய அலகினால் அனந்தனை அப்படியும் இப்படியும் புரட்டினார்.

ம்ஹூம்….. எங்கு தேடியும் காணவில்லை.

நடுநடுவே பிராட்டி பெருமாளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

ஓவியத்தில் எழுதவொண்ணா உருவத்தன் கோவிந்தன், இப்போது சோகத்தில் ஆழ்ந்திருந்தான்.

திடீரென்று கருடனுக்கு பொறி தட்டியது. இன்று மஹரிஷிகளைத் தவிர வேறு யார் இங்கு வந்தனர்?” என யோசித்தவன், ஆஹா! கரெக்ட், கரெக்ட்… அவனேதான்…. அவனேதான்…..” என்று கூவினான்.

பாற்கடலில் நழுவி உள்ளே விழுந்திருக்குமோ?” எனக் கருதி உள்ளே மூழ்கிய சில சூரிகள் கருடத்வனி கேட்டு அலைகளின் மேலே வந்தனர்.

எல்லோரும் கருடன் சொல்வதையே கவனித்தனர்.

தாயே! மஹாலட்சுமி! இன்று அசுர குல வேந்தன் விரோசனன் வந்தானல்லவா!! அவன் தான் கிரீடத்தை அபகரித்திருக்க வேண்டும் என்றான் சுபர்ணன்.

வைனதேயா! அவசரப்பட்டு வார்த்தைகளை விடாதே! விரோசனன் பக்தன். ப்ரஹ்லாத மஹாராஜா வழியில் வந்தவன். அவன் களவு கொண்டிருப்பதாகச் சொல்வது பாகவத அபசாரம் – மஹாலட்சுமி எச்சரித்தாள்.

தாயே! இந்தப் போலி பாகவதனைக் கண்டு எனக்கொன்றும் பயமில்லை. நிச்சயம் சொல்கிறேன்; விரோசனன்தான் பெருமாளின் கிரீடத்தை கொள்ளையடித்திருப்பான் கருடன்.

ஆமாம்.. ஆமாம்…. கருடன் சொல்வது சரியாகத்தான் உள்ளது என ஏனைய சூரிகளும் தெரிவித்தனர்.

உடனடியாக விரோசனனைத் தேடி பாதாள லோகத்திற்கு விரைந்தான் கருடன். அவன் எதிர்பார்த்தபடியே, விரோசனன் கோவிந்தனின் கிரீடத்தை கவர்ந்து வந்திருந்தான்.

அவனை வீழ்த்தி பெருமாளின் கிரீடத்தை கருடன் கொண்டுவரும் வழியில்,  ப்ருந்தாவனத்தில் கண்ணனைக் கண்டான். “இந்த கோவிந்தனுக்குக் கிரீடத்தை அர்ப்பிக்கலாமே” என எண்ணி கண்ணனுக்கு அதை அணிவித்தான்.

கண்ணன் அந்த வைர கிரீடத்தைத் தனது ஆராதனப் பெருமாளான ராமப்ரியருக்கு அணிவித்தான். அதுவே இன்றளவும் வைரமுடியாக பொலிகின்றது.

வைகுண்டத்தில் களவுபோன கோவிந்தனின் கிரீடமே வைரமுடியாகும்.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami.


இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...