![]()
சைத்ரமாதம் மது மாதம் என்று அழைக்கப்படுகிறது. மது என்றால் இனிப்பு, மகிழ்ச்சி என்று பொருள். இது வசந்த காலம். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
படைப்பின் ஆரம்ப காலமே வசந்த காலம்தான் என்பது புராண வசனம். சைத்ர மாதத்தில் வரும் முதல் திதியில் பிரம்மதேவர் சிருஷ்டியைத் தொடங்கினார் என்று கூறப்படுகிறது. அதனால்தான் அந்த மாதத்தை நாம் ஆண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகிறோம். இது சிருஷ்டி ஆரம்ப மாதம் என்பதால் அதன் பின் வரிசையாக வரும் திதிகளுக்கும் மிகுந்த சிறப்பு உண்டு.
சைத்ர மாதம் சுக்ல பட்சம் திருதீயை திதியன்று மத்ஸ்யாவதாரம் நிகழ்ந்தது என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. மத்ஸ்யாவதாரம் என்றால் வெறும் ஒரு மீன் வடிவெடுத்து பகவான் இறங்கி வந்தார் என்று பொருளல்ல. அவர் காலத்தின் சொரூபம். ஒரு காலத்திலிருந்து மற்றொரு காலத்திற்கு இடையே வரும் மாற்றத்தில், கடந்த காலத்தின் பீஜங்களைப் பாதுகாத்த அவதாரம் மத்ஸ்யாவதாரம்.
அதாவது அப்போதுவரை நடந்த மகா யுகம் முழுமையடைந்து அடுத்த மகா யுகம் தொடங்கும் போது அந்த கல்பத்தின் இறுதிக் காலத்தில் அது வரை இருந்த சிருஷ்டியின் பிரதானமான பீஜங்களை சத்தியவிரதன் என்ற மகாராஜாவைக் கொண்டு காப்பாற்றச் செய்தார். அதன் பின் அந்த அரசர் கூட மனுவானார்.
பகவான் மத்ஸ்யாவதாரம் எடுத்து பிரம்மதேவருக்கு வேதங்களை அருளினார். இதன் மூலம் மத்ஸ்யாவதாரத்தின் மற்றுமொரு கோணத்தை நாம் பார்க்க முடிகிறது. “வேதோத்தாரகன்” என்பதுவே அது. மத்ஸ்யாவதாரம் குரு சொரூபம்.
பழைய கல்பம் பூர்த்தியானபின் அடுத்த கல்பம் ஆரம்பமாகும் வரை பிரம்மதேவருக்கு ஒரு நித்திரை இருக்கும். அது நீண்ட கால நித்திரை. அந்த நித்திரையின் போது சர்வ ஜகத்தும் ஒன்றாகிவிடும். அச்சமயத்தில் மத்ஸ்யாவதாரம் தன் மாயையால் ஒரு படகைப் படைத்து அதில் சப்த ரிஷிகளையும் சத்தியவிரத அரசனையும் ஏற்றிக் கொண்டு வாசுகி எனும் சர்பத்தை கயிறாக்கி தன் கொம்பில் கட்டி அந்தப் படகை நிலையாக நிறுத்தி வைத்து அத்தகைய பிரளய கால நேரத்திலும் அங்கிருந்த சப்த ரிஷிகளுக்கும் அரசனுக்கும் ஞானத்தை போதித்தார். இக்காரணத்தால் மத்ஸ்யாவதாரம் ஞானாவதாரமாகப் போற்றப்படுகிறார்.
வேதங்களை பிரம்ம தேவருக்கு அருளியதோடு மட்டுமின்றி மகா பிரளய காலத்தில் ஞானத்தை போதித்தவர் மத்ஸ்யாவதாரம். அதனால் மீனவேஷி, மத்ஸ்யவேஷி என்று போற்றப்படும் சுவாமியின் சொரூபத்தை தியானம் செய்து வணங்கும் நாள் இது.
மத்ஸ்ய நாராயண சொரூபமே வேத நாராயண மூர்த்தியாக போற்றப்படுகிறது. இவர் சம்பூர்ண ஞானாவதாரம். ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஞானாவதரமாக ஹயக்ரீவரை எவ்வாறு போற்றுகிறோமோ அதே போல் மத்ஸ்யாவதாரம் கூட போற்றப்படுகிறார். எனவே இதனை வெறும் மீன் வடிவெடுத்தவர் என்று சாமானியமாக எண்ணுவதற்கு இடமில்லை.
சைத்ர மாதத்தில் வரும் அடுத்த திதிகளில் பஞ்சமி முதலானவற்றுக்கும் சிறப்புகள் உள்ளன. சைத்ர சுத்த பஞ்சமியன்று நாக பூஜை செய்ய வேண்டும் என்று ஒரு விதானம் உள்ளது. சாதாரணமாக நாக பஞ்சமி விரதம் ஸ்ராவண மாதத்திலோ கார்த்திகை மாதத்திலோ கடைபிடிக்கப்படுகிறது. அதே அளவு முக்கியத்துவம் சைத்ர சுத்த பஞ்சமிக்கும் கூட உள்ளது.
அடுத்து வரும் சஷ்டி சுப்ரமணிய ஆராதனைக்கு முக்கியமானது. சைத்ர சுக்ல அஷ்டமி, நவமி இவ்விரண்டும் மிகவும் முக்கியமானவையாகக் கூறப்பட்டுள்ளன. ஜகன்மாதாவை மொத்தம் சரந் நவராத்திரியில் ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் சைத்ர மாத அஷ்டமி நவமி நாட்களிலாவது பூஜிக்க வேண்டும்.
முக்கியமாக சிவ புராணத்தில் சைத்ர சுத்த நவமியன்று பார்வதி தேவியாக ஜகன்மாதா அவதரித்தாள் என்று தெளிவாக காணப்படுகிறது. “மது மாதத்தில் சுக்லபட்ச நவமியன்று மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் அம்பாள் அவதரித்தாள்” என்று உள்ளது. ராமாவதாரம் ஏற்பட்ட போது அன்றைக்கு புனர்வசு நட்சத்திரம் காணப்படுகிறது. நவமி இருவருக்கும் பொதுவாக இருந்தாலும் நட்சத்திர பேதம் உள்ளது.
மருக்கொழுந்து பூஜை:-
இந்த வசந்த நவராத்திரியில் எந்த தேவதையை வழிபட்டாலும் மருக்கொழுந்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். மருவம், தவனம், தமனம் என்றெல்லாம் அழைக்கபப்டும் இவை சுகந்தமான பத்ரங்கள் / இலைகள். இந்த இலைகளால் சகல தேவதைகளையும் பூஜிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. நவமியன்று அம்பிகையையும் ஸ்ரீராமரையும், சதுர்த்தியன்று கணபதியையும், சஷ்டியன்று முருகனையும் வழிபடும் இந்த வழிபாட்டிற்கு “தமனோற்சவம்” என்று சிறப்புப் பெயர் கூட உள்ளது.
இவ்விதம் சைத்ர மாதமான மது மாதத்தில் இறை வழிபாடு செய்வதன் மூலம் ‘மது லட்சணம்’ அதாவது ஆனந்தமாக இருக்கும் குணத்தை நாம் ஆண்டு முழுவதும் பெற முடியும்.
சாதாரணமாக உலகியலில் ஒரு பழக்கம் உள்ளது. பிரபஞ்சத்தில் யாராயிருந்தாலும் அவரவர் கணக்குப்படி ஆண்டின் தொடக்கம் எதுவாகிலும் அன்றைய தினம் எவ்வாறு கொண்டாடுகிறார்களோ அதே பாவனை ஆண்டு முழுவதும் தொடரும் என்ற எண்ணம் இருக்கிறது. ஆண்டின் முதல் நாள் நன்றாக இருந்தால் எல்லா நாட்களும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒன்பது என்ற எண்ணிற்கு பூரண காலம் என்று பொருள் உண்டு. சைத்ர மாதத்தில் ஒன்பது நாட்களும் நாம் பக்தியோடு வழிபாடு செய்ய முடிந்தால் ஆண்டு முழுவதற்கும் அதன் பலன் கிடைக்கும் என்பதால் நம் ருஷிகள் வசந்த நவராத்திரியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளர்கள். அத்தகைய நம் ரிஷிகளுக்கு வந்தனம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



