
ராம நாமம், ராம மூர்த்தி, ராம காதை – இம்மூன்றும் நாராயணன் நமக்கருளிய திவ்யமான ரத்தினங்கள். ராமன் என்ற பெயரோடு நாராயணன் அவதரித்தான். அந்த நாமம் நமக்கு தாரக மந்திரமானது. ராமன் என்ற அற்புதமான வடிவத்தில் பகவான் அவதரித்தான். அந்த ரூபம் நமக்கு தியானம் செய்வதற்கு அனுகூலமான திவ்ய மங்கள விக்ரகமானது. மூன்றாவது ராம கதை. ராம கதையின் சிறப்பு என்னவென்றால் படிக்கும் போது ஆனந்தத்தை அளிக்கக் கூடியது. அதோடு நம் உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அதர்மமான எண்ணங்களை நீக்கி தர்மத்தோடு கூடிய செயல்களில் ஈடுபடுத்தக் கூடியது.
இவை எல்லாவற்றையும் விட ராமாயணத்தில் மந்திர ரகசியங்கள் நிறைந்து உள்ளதால்தான் அதிலுள்ள பகுதிகளைப் பாராயணம் செய்யும் போது நம் வாழ்க்கையில் பரிணாமங்கள் ஏற்படுகின்றன. கிரக தோஷங்களை நீக்கும் சக்தி கூட இராமாயண பாராயணத்தில் உள்ளது. வால்மீகி மகரிஷி ஒவ்வொரு அட்சரத்தையும் மந்திரத்தால் இணைத்துச் சேர்த்து நமக்களித்துள்ளார்.
சிலர் ஆழமாக ஆராய்பவர்கள் இருக்கிறார்கள். காயத்ரி மந்திரத்தைக் கொண்டு ராமாயணம் படைக்கப்பட்டுள்ளது என்று கூறுவார்கள். ஏனென்றால் காயத்ரி என்றால் வேதமாதா. ராமாயணம் வேதத்தின் சொரூபம். வேதங்களில் உள்ள மந்திரங்களுக்கு இதுதான் பொருள் என்று திட்டவட்டமாகக் கூறும் சக்தி சாமானியர்களுக்கோ படித்தறிந்த பண்டிதர்களுக்கோ கூட கிடையாது. அது த்ரஷ்ட நிலை பொருந்திய அதாவது திவ்ய சக்தியால் பார்க்கக் கூடிய ருஷிகளுக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியது.
அப்படிப்பட்ட ருஷியான வால்மீகி, வேதங்களில் கூறப்பட்ட தர்மங்களனைத்தையும் வாழ்ந்து காட்டிய ராமச்சந்திர மூர்த்தியின் கதை மூலம் சாமானியர்களான நமக்கு வேத தர்மத்தை அளித்துள்ளார்.
தர்மத்தை எடுத்துக் கூறும் வேத மந்திரங்களுக்கு ஒரு சக்தி உள்ளது. வேதமே ராமாயணமாக ஆனதால் ராமாயணத்தின் ஒவ்வொரு சுலோகத்திற்கும் வேத மந்திரத்திற்கிணையான சக்தி உள்ளது. ஸ்காந்த புராணத்தில் வியாச மகரிஷி கூறுகிறார், “இராமாயண பாராயணம் பலவித நற்பலன்களை அளிக்கிறது” என்று.
முக்கியமாக நவார்ண தீட்சையோடு இராமாயண பாராயணம் செய்யும் முறையைக் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ராமாயணத்தின் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பிரயோஜனம், ஒவ்வொரு பலன் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயம் பாராயணம் செய்வதை அனுசரித்து கிரக தோஷங்கள் விலகும் பலன் கூட உள்ளது. இவையனைத்தும் சாஸ்திரங்களில் தெளிவாக கூறப்பட்டுள்ளன. இவையெல்லாம் யாரும் ஊகித்துக் கூறுபவை அல்ல.
ராம ஆராதனா கல்பம் என்ற நூலில் ராமாயணத்தின் எந்தப் பகுதியை, எந்த அத்தியாயத்தைப் பாராயணம் செய்தால், எத்தகைய நற்பலன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாவிட்டாலும் ராமாயணத்தை சிரத்தையோடு படித்தால் அதற்கான பலன் கிடைத்தே தீரும் என்பதில் ஐயமில்லை.
ஸ்காந்த புராணத்தில் ராமாயணத்தைப் பற்றிக் கூறுகையில் வியாச மகரிஷி “கோரமான கலியுகத்தில் ராமாயணத்தைப் பாராயணம் செய்வதை நியமமாகக் கடைபிடித்தால் அதாவது ராமாயணமே கதி என்று சரணடைந்தால், அதிலிருக்கும் சுலோகங்களையும் நிகழ்வுகளையும் மனனம் செய்தால் சகல துயரங்களிலிருந்தும் விடுபட்டு பரமபதத்தைச் சேருவார்கள்” என்கிறார்.

மேலும், “குறைந்த பட்சம் ஒரு சுலோகமாவது படித்தாலும் போதும். சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தி சிறப்பான பலனைக் கொடுக்கும். சுலோகத்தின் பாதியையாவது சிரத்தையோடு படித்தாலும் அது சிறப்பாக பலனளிக்கக் கூடியது” என்கிறார் வியாசர். இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. ஏனென்றால், “ராமாயணத்தின் ஒவ்வொரு எழுத்துக்கும் பாப நாசனம் செய்யும் சக்தி உள்ளது” என்கிறார் வியாசர்.
மேலும், “சமஸ்த புண்ய பலதம் சர்வ யக்ஞ பலப்ரதம்” என்றும் கூறுகிறார். அனைத்து புண்ணியங்களையும் அளிக்க வல்லது. அனைத்து யாகங்கள் செய்த பலனையும் அளிக்கக் கூடியது என்கிறார்.
அதிலும் இந்த வசந்த நவராத்தியில் எந்த ஒரு நாளிலானும் சரி, இராமாயண பாராயணம் செய்வது மிகவும் உயர்ந்தது.
புனர்வசு நட்சத்திரத்தில் தொடங்கி மீண்டும் புனர்வசு நட்சத்திரம் வரை ஒரு மாத காலம் இராமாயண பாராயணம் நியமமாகச் செய்யக் கூடிய பெரியவர்கள் சிலர் இருக்கிறார்கள். இன்றைக்கும் அவ்வாறு செய்து நற்பலன்களை அனுபவிக்கக் கூடியவர்கள் உள்ளார்கள்.

விசேஷமாக ராமாயணத்தில் சுந்தர காண்டம் ராமாயணத்தின் முழு சக்தியையும் கொண்டுள்ளது. இது பிரத்தியேகமாகப் பாராயணம் செய்யப்பட்டு சீதா, ராமர், ஆஞ்சநேயர் மூவரின் அருளுக்கும் நம்மைப் பாத்திரமாக்குகிறது. மற்றொரு புறம் நமக்கு தர்மத்தையும் போதிக்கிறது. சுந்தர காண்டம் ராமாயணத்திற்குள் ராமாயணம் போன்றது. இத்தகைய சிறப்பு இதற்குள்ளது. இவ்வாறு ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது.
ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு ராமமூர்த்தியின் சக்தி உள்ளதாக ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அந்தந்த காண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு அந்தந்த ராம மூர்த்தியின் அருள் கிடைக்கிறது.
“ராமாயணம் ஆதி காவ்யம் சர்வ வேதார்த்த சம்மதம்…!” என்பது வியாசர் கூற்று. ராமாயணம் ஆதி காவ்யம் என்று வியாசர் கூறுகிறார். இதன் மூலம் வால்மீகியிலிருந்துதான் சுலோகம் படைப்பது, சுலோகத்தின் மூலம் அழகாக விஷயங்களை விளக்குவது போன்றவற்றை வியாசர் கற்றுக் கொண்டுள்ளார் என்பது கூட நமக்கு பிரம்மாண்ட புராணத்தின் மூலம் தெரிய வருகிறது. இதனைக் கொண்டு வியாசர் போன்றவர்களுக்குக் கூட வழிகாட்டியாக இருந்தவர் வால்மீகி என்பது தெரிகிறது.
ஏனென்றால் வால்மீகிக்கு முன்பு அபௌருஷேயமான வேதங்கள் மட்டுமே இருந்தன. ஸ்லோகத்தால் இயற்றப்பட்ட காவிய வடிவம் எதுவும் இருக்கவில்லை. அது வால்மீகியிலிருந்துதான் தொடங்கியது என்பதால் ராமாயணம் ஆதி காவியம் என்றும் வால்மீகி ஆதிகவி என்றும் போற்றப்படுகிறார்கள்.
மேலும், “சர்வ வேதார்த்த சம்மதம்” என்கிறார். சர்வ வேதங்களின் அர்த்தத்தையும் கொண்டுள்ளது ராமாயணம் என்று விசேஷமாகக் கூறுவதால் வேதம் எத்தனை உயர்ந்ததோ ராமாயணமும் அத்தனை உயர்ந்தது என்றறிந்து ராமாயணத்தை வெறும் கதை சொல்லும் காவியம் என்று எண்ணாமல் சாட்சாத் வேத மந்திரம் போல் பவித்திரமானது என்றுணர்ந்து அனைவரும் படித்து வாழ்வில் நிறைவடைய வேண்டிய உத்தம காவியம் என்று அறியவேண்டும்.
அதனை நமக்களித்த வால்மீகிக்கு வந்தனம். இராமாயண வடிவில் உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு வந்தனம்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



