spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!

ருஷி வாக்கியம் (9) -ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல!

- Advertisement -

samavedam 1pic e1528681369149

ராம வாக்கியங்கள் ரிஷி வாக்கியங்களே! ஏனென்றால் வேதங்கள் என்றாலே ரிஷி வாக்கியமென்று பொருள். ரிஷிகள் கூறிய வாக்கியங்களை வாழ்க்கையில் கடைபிடித்துக் காட்டியவன் ராமச்சந்திர மூர்த்தி. அதனால் ராமனின் பேச்சு, நடத்தை இரண்டையும் நாம் ரிஷி வாக்கியங்களாகவே அறிய வேண்டும்.

ஆயின் ரிஷி வாக்கியங்கள் ராம வாக்கியமா? ராம வாக்கியம் ரிஷிவாக்கியங்களா? என்று விவாதித்தால் ராமன் சாட்சாத் நாராயணனே! படைத்தல், காத்தல், லயித்தல் என்று மூன்றிற்கும் காரணமான பரமாத்மா. அவனிடமிருந்தே வேதங்கள் தோன்றின. அந்த வேதங்களை ருஷிகள் தரிசித்தனர். அதனால் பரமாத்மா ராமனாதலால் ராம வாக்கியங்களே ரிஷி வாகியங்கள்.

பரமாத்மா ராமனாக அவதரித்தபின் ரிஷி வாக்கியங்களை கடைபிடித்துக் காட்டினான். சில இடங்களில் போதித்தும் கூறினான். அப்படிப்பட்ட சந்தர்பங்கள் ராமாயணத்தில் அற்புதமாக சில இடங்களில் காணப்படுகின்றன.

ராமச்சந்திர மூர்த்தி வனவாசத்திற்குச் சென்ற போது மீண்டும் அவனை அயோத்திக்கு அழைத்து வர வேண்டுமென்று பரதன் முயற்சிக்கிறான். அவனோடு கூட அனேக மகரிஷிகள், நாட்டு பிரமுகர்கள், அந்தப்புரவாசிகள் போன்ற பலரும் சித்ரகூட பர்வதத்திற்கு வருகிறார்கள். அவர்கள் அனைவரும் ராமனை திரும்ப வரச் சொல்லி அழைக்கிறார்கள்.

ஆனால் ராமன், “சத்தியப் பிரதிக்ஞைக்குக் கட்டுப்பட்டு தந்தையின் வாய்மையை நிலைநாட்டுவதற்காக நான் வனவாசம் செய்வதால் திருப்பி வர இயலாது” என்கிறான்.

அது கேட்டு வசிஷ்டர் மனதிற்குள் மகிழ்ந்தாலும், பரதன் முதலியோர் வரச் சொல்லி அழைப்பதால் அவரும், “அப்பனே! மூத்த மகன் அரசாள வேண்டுமென்பது தர்மமாதலால் நீ திரும்ப வரலாம்” என்று பரதனின் பக்கமிருந்து பேசுகிறார். ஆனால் அசிஷ்டருக்கு மட்டும் ராமச்சந்திர மூர்த்தி சத்தியத்திற்கு கட்டுண்டு வன வாசம் செய்வதே தர்மம் என்பது தெரியும். அதனால் எவ்வளவு கூற வேண்டுமோ அவ்வளவே கூறுகிறார்.

ஆனால் அங்கு வந்திருந்த மகரிஷிகளில் ஜாபாலி என்ற மகரிஷியும் இருந்தார். அவர் மகாத்மா. வேத தர்மத்தை அனுசரிப்பவர். ஆனால் ராமச்சந்திர மூர்த்தியை திரும்ப அயோத்திக்கு அழைத்து வர வேண்டுமென்ற அன்பினால் ஈர்க்கப்பட்ட அவசரத்தால் ஒன்று கூறினார்.

“ஸ நாஸ்தி பரமித்யேவ குரு புத்திம் மஹாமதே I
ப்ரத்யக்ஷம் யத்ததாதிஷ்ட பரோக்ஷம் ப்ருஷ்டத குரு II”

“மேதாவியே! நீ என்றோ மரணித்துவிட்ட தந்தையாரின் சொல்லை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு வனத்தில் அலைகிறாய். உன் தந்தையே இங்கு இல்லாத போது, அவர் மரணித்து வேறோர் லோகத்தில் இருக்கையில் நீ இன்னும் அவருக்குக் கொடுத்த வாக்கையோ அல்லது அவர் கூறிய வார்த்தையையோ கடைபிடிப்பேன் என்று கூறிக் கொண்டு இங்கு அமர்ந்திருப்பது பிடிவாதச் செயலாகும். அதனால் உன் பிடிவாதத்தைத் தளர்த்தி விட்டுவிடு. மீண்டும் அயோத்திக்கு வந்து நாட்டைப் பரிபாலனம் செய்வாயாக!” என்கிறார்.

மேலும், “பரலோகம் என்று ஒன்று உள்ளது என்று எண்ண வேண்டாம். இங்கு நாம் படைக்கும் சிராத்தம் போன்றவை பரலோகத்திலிருப்போருக்குப் போய்ச் சேரும் என்று நினைப்பது மூடத்தனம். ஒரு மனிதன் வேறொரு நாட்டுக்குச் சென்ற போது நாம் இங்கு அவரை நினைத்துக்கொண்டு வேறு யாருக்காவது உணவளித்தால் அவருக்கு வயிறு நிறையுமா? அதே போல் பரலோகத்தில் இருக்கும் உன் தந்தையார் எப்போதோ அளித்த வாக்கிற்காக நீ இப்போது இங்கு கஷ்டப்படுவதும், எங்களைக் கஷ்டப்படுத்துவதும் சரியல்ல. அதனால் பரலோகம் என்று எதுவுமில்லை என்று அறிவாயாக! பிரத்யக்ஷமாக கண்ணில் தெரிவதை மட்டுமே நம்புவாயாக! பரோக்ஷமாக உன் கண்ணிற்குத் தென்படாதவற்றை நீ நம்பாதே! அதன் மீது விசுவாசம் வைக்காதே!” என்கிறார்.

இது முழுமையாக நாஸ்திக வாதம். கண்ணிற்குத் தென்படுவதே சத்தியம் என்றும் கண்ணால் பார்க்க முடியாதவற்றை இல்லவே இல்லை என்று மறுப்பதுமே நாத்திக வாதம். இது போன்றதையே ஜாபாலியும் கூறுகிறார்.

rama2 1

அதற்காக ஜாபாலி முனிவரை நாஸ்திகர் என்று கூறி விட முடியாது. எப்போதும் சரி, சந்தர்பத்தைப் பொறுத்து ஒரே மனிதன் ஒரு சமயம் ஆத்திகனாகவும் ஒரு சமயம் நாத்திகனாகவும் இருப்பான். இது வெறும் பிரேமையால், ராமனின் மீதிருந்த பக்தியால் அவன் அயோத்திக்குத் திரும்ப வர வேண்டும் என்ற உற்சாகத்தால் கூறிய வார்த்தைகளே தவிர வேறல்ல. அதானால் ஜாபாலி முனிவரை நாஸ்திகர் என்று முடிவு கட்டிவிட இயலாது.

எனவே அவர் இந்த வார்த்தைகளைக் கூறிய உடனே பரம பிரசன்னமாக இருக்கக் கூடியு ராமச்சந்திர மூர்த்திக்குக் கோபம் வந்து விட்டது. இந்தக் கோபம் தர்மத்திற்காக ஏற்படத் ஆக்ரஹம். எனவே சொற்களில் சிறிது கடினம் காட்டி, அதே சமயம் மிக வினயாமாக பேசினன் ராமன்.

“மகோன்னதமான பண்பாடு கொண்ட உத்தமமான முனிவரே!” என்றழைத்து பணிவோடு கோபத்தைக் காட்டுகிறான். “தாங்கள்… எனக்குப் பிரியம் அளிக்க வேண்டும் என்பதற்காக எதைப் பேசினீரோ அது வெளிப்பார்வைக்கு நன்றாக இருப்பதாகத் தோன்றினாலும், அது செய்யக் கூடாத வேலை. ஏனென்றால் உலகில் மரியாதைகள் சில உள்ளன. மரியாதைகள் எப்போதும் பிரத்யக்ஷ வாதங்களைப் பற்றிக் கொண்டு இருக்காது. ஒருவன் மற்றவனுக்கு ஒரு வாக்குக் கொடுத்தால் அந்த வாக்கினைக் காபாற்ற வேண்டும். அது தர்மம். அது சத்தியம். அதனை பிரத்யக்ஷ சித்தாந்தத்தால் நிரூபிக்க முடியாது. ஏனென்றால் இன்றைக்கு அந்த வாக்கினை ஏன் காப்பாற்ற வேண்டும்? என்ற கேள்வி எழுந்தால் என்ன பதில் கூற முடியும். வாக்கு கொடுத்தால் அதனைக் காக்க வேண்டும். வார்த்தை மாறினால் என்ன ஆகும்? தர்மம் தவறினால் பாபம் ஏற்படும் என்ற நம்பிக்கை ஆத்திகவாதிக்கு இருக்குமே தவிர நாஸ்திகவாதிக்கு இருக்காது. எனவே ஆஸ்திக வாதம் என்றாலே அது தர்மத்தோடு கூடியது என்று பொருள். தர்மத்திற்கும் சத்தியத்திற்கும் கட்டுப்பட்டு யாருக்கு வார்த்தை கொடுத்தோமோ அந்த மனிதர் உலகத்தில் இல்லாவிட்டாலும் கூட அவர் வேறொரு உலகத்திலாவது இருப்பார் என்பதால் அவருக்கு நற்கதி ஏற்பட வேண்டுமென்றால் அவருடைய சத்தியத்தை நாம் காப்பாற்ற வேண்டும் என்ற உத்தேசத்தொடு இங்கு தர்மத்தைக் கடைபிடிக்கிறோம். எனவே ஆத்திகவாதத்தில் மட்டுமே தர்மத்திற்கு இடமுண்டு. நாஸ்திகனுக்கு தர்மமும் இல்லை. நியாயமும் இல்லை. அவன் அவகாசவாதி. சந்தர்ப்பவாதி. அவனால் அவனுக்கும் கேடு. உலகத்திற்கும் கேடு. எனவே நீங்கள் பேசிய சொற்கள் மரியாதைகள் அற்றவை!” என்கிறான் ராமன்.

மேலும், “நிர்மர்யாதஸ்து புருஷ: பாபாசார சமன்வித:” என்கிறான்.

rama3

“மரியாதைகளை அலட்சியம் செய்து நடந்து கொள்பவன் பாவச் செயல்களைச் செய்பவனாகிறான். அப்படிபட்டவனால் உலகிற்கும் நலம் விளையாது. அவனுக்கும் நன்மை விளையாது. நீங்கள் கூறிய சொற்களின்படி ஒவ்வொருவரும் தம் இஷ்டத்திற்கு நடந்து கொள்ளத் தொடங்கினால் உலகம் என்னவாகும்?” என்று கேட்கிறான்.

மேலும்,
“காமவ்ருத்தஸ்த்வயம் லோக: க்ருத்ஸ்ன: சமுபவர்ததே I
யத்வருத்தா: சந்தி ராஜானஸ் தத் வ்ருத்தா: சந்தி ஹி ப்ரஜா: ” என்று கூறுகிறான் ராமன்.

இந்த ஸ்லோகத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தினமும் படிக்க வேண்டும். அது மட்டுமல்ல ராமச்சந்திர மூர்த்தி கூறும் அத்தனை விஷயங்களையும் அனைவரும் படித்துக் கடைப்பிடிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக நாட்டை ஆளுவேன் என்றும் மக்களுக்கு சேவை செய்வேன் என்றும் பேசிக் கொண்டு முன் வரும் தலைவர்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ள ஸ்லோகம் இது.

இஷ்டம் வந்தாற்போல் நடந்து கொள்பவனால் உலகத்திற்குத் தீங்கு நேரும். நமக்குத் தோன்றுவதுதான் தர்மம் என்பதல்ல. நியமத்திற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். சத்தியம் என்றால் நியமம். சத்தியம் என்றால் தர்மம். எனவே சத்தியம் என்றால் நியமத்தை அனுசரித்து நடந்து கொள்வது என்று பொருள்.

அப்படியில்லாமல் “காம வருத்தஹ…” அதாவது தன் சுயநலத்திற்காக இஷ்டப்படி நடப்பவன் அரசனாக வாய்த்தால் குடிமக்களும் சுயநலவாதிகளாக தர்மத்தையும் நியமத்தையும் மீறுவார்கள்.

இன்றைய நவீன காலத்தில் கூட ஒரு அரசாட்சி நல்லவிதமாக நடக்க வேண்டுமென்றால் தலைவன் அந்த நாட்டின் அரசியல் சட்டங்கள் கூறும் நியமங்களையாவது கடைபிடிக்க வேண்டும். அந்த நியமங்களை மக்கள் கடைபிடிக்கக் வேண்டுமென்றால் முதலில் அரசாளுபவன் கடைபிடிக்கக் வேண்டும்.

எனவே அரச தர்மமோ சாஸ்திர தர்மமோ எதுவானாலும் மக்கள் பின்பற்ற வேண்டுமென்றால் முதலில் தலைவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

நீதி, நியமங்கள் தலைமைப் பண்பிற்கு மிகவும் தேவை என்ற கூற்றை அழுத்தமாகக் கூறுகிறான் ராமச்சந்திர மூர்த்தி. இது போன்று யுகங்களுக்கு முன் நடந்த ராமாயணம் இன்றைக்கும் பிரபஞ்சத்திற்கு அளிக்கும் மிகச் சிறந்து கருத்து என்னவென்றால் அரசாளுபவர் தன்னிஷ்டத்திற்கு சுயநலமாக நடந்து கொள்ளக் கூடாது. அரசன் அவ்விதம் நடந்து கொண்டால் பிரஜைகளும் நியமங்களை மீறுவார்கள். மக்கள் நியமங்களை மீறி நடந்தால் நாகரீகம் அழிந்து போகும். நாட்டில் பாதுகாப்பும் அமைதியும் நிலவாது. மக்கள் நீதியையும் தர்மத்தையும் கடைபிடிக்காமல் புறக்கணிப்பார்கள். அதனால் சிறிது சிறிதாக கெட்டுப் போவார்கள் என்று அழுத்தமாகக் கூறுகிறான் ராமன். இது ராமன் கூறும் அற்புதமான கருத்து.

ராம ராஜ்ஜியம் என்றால் மத ராஜ்ஜியம் அல்ல என்பதை அறிய வேண்டும். ஒவ்வொரு மதத்தவரும், “இந்த நாடு எம்முடையதாக வேண்டும்! எங்களுடைய அரசாட்சியே நிலவ வேண்டும்” என்று ஆசைப்படுகிரார்கள். ஆனால் சனாதன தர்மம் அவ்வாறு கூறவில்லை. சனாதன தர்மம் ராமராஜ்ஜியம் வேண்டும் என்று கூறுகிறது. ராம ராஜ்ஜியம் என்றால் ஒரு மதத்தோடு தொடர்புடைய அரசாட்சி அல்ல. ராமராஜ்ஜியம் என்றால் தர்ம ராஜ்ஜியம். அனைத்து மதத்தவர்களுக்கும் நன்மை விளைவிக்கக் கூடிய தர்மத்தை ராமன் போதித்துள்ளான்.

அதனால் நம் பாரத தேசம் ராம ராஜ்ஜியமாக விளங்க வேண்டும். ராமன் கூற்றே பாரத தேசத்தை ஆள வேண்டும் என்று பிரார்த்திப்போம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe