“எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” – பெரியவா

(குழம்பின தொண்டர்களுக்கு-அரளி புஷ்பத்துக்கு தெலுங்கு மொழியில் ‘ஸ்வர்ண கண்டா’ என்று பெயர்.சம்ஸ்கிருதத்தில் ‘ஸ்வர்ண புஷ்பம்’-என்றும் பெயர்-பெரியவா)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-170-A
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு நாள் தரிசனம் கொடுப்பதற்காக வெளியே வந்து அமர்ந்தார்கள், பெரியவாள்.
சில பக்தர்கள் பழம் – மலர்த் தட்டுகளை வைத்து வந்தனம் செய்து கொண்டார்கள்.
பெரியவாள் கையைச் சொடுக்கி ஒரு சிஷ்யரைக் கூப்பிட்டு, “எனக்குத் தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுப்பாரே, அந்த முதலியார் எங்கே?” என்று கேட்டார்கள்.
தொண்டர்களுக்கு விளங்கவில்லை.தங்க புஷ்பம் கொண்டு வந்து கொடுக்கும் அன்பர் யாரையும் அவர்கள் பார்த்ததில்லை.
தற்செயலாக, அந்த சமயம் ஒரு முதலியார் தரிசனத்துக்கு வந்தார். உள்ளூர்க்காரர் .அநேகமாக நாள்தோறும் வருபவர். வந்தவர் நேரே பெரியவாளிடம் சென்று, தங்க அரளி மாலையைச் சமர்ப்பித்தார். பெரியவாள் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு தலையில் வைத்துக் கொண்டார்கள்.
தெலுங்கு மொழியில், இந்த புஷ்பத்துக்கு ‘ஸ்வர்ண கண்டா’ என்று பெயர் .சம்ஸ்கிருதத்தில் ‘ஸ்வர்ண புஷ்பம்’ என்று நேரடி மொழி பெயர்ப்பாகக் கூறுவதுண்டு.
பெரியவாள் தொண்டர்களைப் பார்த்து;
” இந்த முதலியார் தினமும் எனக்கு இந்த புஷ்பத்தை (தங்க அரளி) கொண்டு வந்து கொடுக்கிறார். அதை நானே ஏற்றுக் கொள்கிறேன் ..சந்த்ரமௌலீஸ்வரர் பூஜையில்இதைச் சேர்த்துக்கொள்வதில்லை.
ஏன் தெரியுமோ? ஈஸ்வரனுக்கு, நிஜமாக ஸ்வர்ண புஷ்பம் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர, டூப்ளிகேட் புஷ்பம் சமர்ப்பிக்க எனக்குச் .சம்மதமில்லை. சாக்ஷாத் ஸ்வர்ண புஷ்பம் இருந்தால் சமர்ப்பிக்கலாம்”.
முதலியாருக்கு,சந்திரமௌலீஸ்வரரைக் காட்டிலும், பெரியவாளிடம் நிரம்ப பக்தி. தான் கொண்டு வந்து கொடுக்கும் தங்க அரளிப் புஷ்பத்தைத் தன் சிரசில் பெரியவாள் வைத்துக் கொள்வதைப் பார்த்துப் பரவசப்பட்டுப் போவார்.
பின்னர், ஒரு சூட்சுமமும் தெரிந்தது. பால் உள்ள புஷ்பங்களை பகவானுக்கு சமர்ப்பிக்கக் கூடாது என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறதாம்.அந்த சம்பிரதாயத்துக்கு மதிப்புக் கொடுத்துத்தான் ,பெரியவாள் இப்படி செய்தார்களோ?
அன்பர் மனம் நோகாத அருள்வழி.



