
நியமத்தோடு வாழ்வதன் மூலம் மேன்மை கிடைக்கிறது. “நியமாத் ஸ்ரேய மாப்நோதி I” என்று சாஸ்திரங்களில் ஒரு வார்த்தை உள்ளது.
நியமம் என்றால் என்ன? ஒழுக்கத்தோடு கூடிய வாழ்க்கை முறை. சாஸ்திரம் கூறியவற்றை கடைபிடித்து வாழும் வாழ்க்கை முறை. அதுவே தவம் எனப்படுகிறது.
அப்படிப்பட்ட தவத்தில் ஈடுபடுவதன் மூலம் தெய்வீகமான பலன்களைப் பெற முடிகிறது. நியமத்தோடு கூடிய வாழ்க்கை வாழ்பவர்களிடம் தெய்வீக சக்தி குடிகொள்கிறது. அத்தகைய பவித்திரமான சக்தி அவர்களை ரட்சிப்பதோடு அவர் மூலம் மற்றவர்களுக்கும் பாதுகாப்பளிக்கிறது.
மேலும் சாத்வீகமான, நியமமான, கபடமில்லாத வாழ்க்கையை கடைபிடிப்பவர்களால் சுற்றுச்சூழல் பவித்திரமாகிறது என்ற அற்புதமான விஞ்ஞானத்தை மகரிஷிகள் விளக்கிக் கூறியுள்ளார்கள். அதனால் நாம், நம் சுற்றுச்சூழல், நம்மவர்கள் அனைவரும் சக்தியோடு கூடியவர்களாக, பாதுகாப்பு பெற வேண்டுமென்றால் முதலில் நாம் நியமத்தோடு கூடிய ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும். சாஸ்திரத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அப்போது கிடைக்கக்கூடிய பவித்ரத் தன்மை அளிக்கும் ஆனந்தம் செல்வம் சேர்ப்பதன் மூலம் கிட்டாது. செல்வத்தைப் பெருக்கும் முயற்சியில் நாம் ஒழுங்குமுறையோடு கூடிய நியமமான வாழ்க்கை முறையை விட்டு விலகி விடுகிறோம்.
ஆனால் நியமத்தோடு கூடிய வாழ்க்கை வாழும் போது எந்த ஒரு செல்வமும் அளிக்க முடியாத அமைதியையும், திருப்தியையும் பெற முடியும்.
புராதன காலத்தில் வாழ்ந்த மகரிஷிகளின் ஆசிரம வர்ணனைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். புராணங்களிலும் இதிகாசங்களிலும் மகரிஷிகளின் ஆசிரமங்களை எவ்விதம் வர்ணித்துள்ளார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதன் மீது ஒரு ஆய்வு கூட நடத்தலாம்.
எவ்விதம் ஒரு உயர்ந்த மனிதரின் சிறப்பான மானசீக சக்தியலைகளின் பிரபாவம் சுற்றுச்சூழலை மாற்றக் கூடியதாக உள்ளது என்பதை அந்த வர்ணனைகள் விவரிக்கின்றன.
மகாபாரதத்தில் ஒரு காட்சி. கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு துஷ்யந்தன் வருகிறான். அப்போது அந்த ஆசிரமம் எப்படி இருந்தது என்று வர்ணிக்கையில் மிகவும் அற்புதமான விஷயங்களை கூறுகிறார் வியாசர்.
கங்கா நதி தீரத்தில் இருக்கும் நர நாராயணர்கள் ஆசிரமம் போலவே கண்வ மகரிஷியின் ஆசிரமம் இருந்தது என்பதை துஷ்யந்தனின் பார்வை மூலம் நமக்குக் காண்பிக்கிறார் வியாசர்.
அங்கே பல இடங்களில் யஞ்ய, யாகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஒருபுறம் வேத அத்யயனம் நடக்கிறது. மறுபுறம் முனிவர்கள் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள். அனைவரும் தம் அனுஷ்டானங்களை தவறாமல் செய்தபடியே சாஸ்திரம் விதித்த விதத்தில் பவித்திரமான வாழ்க்கை வாழ்கிறார்கள். அதனால் சுற்றிலுமுள்ள இயற்கையில் கூட அனுகூலமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அங்கிருந்த முனிவர்களின் சக்தி எப்படிப்பட்டது என்பதை காண்கிறான் துஷ்யந்தன். அதன் மூலம் அற்புதமான வர்ணனை நமக்கு கிடைக்கிறது. அங்கு சாம கானம் ஓதப்படும் போது அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த கிளிகள் அவற்றைக் கற்றுத் திரும்பச் சொல்கின்றன.
வேஷ மந்திரங்களைக் கேட்டபடி அசையாமல் நின்றிருந்தன யானைகள். யானைகளின் தும்பிக்கைகளில் இருந்து நீர்த் துளிகள் விழுகின்றன. அவற்றால் புத்துணர்ச்சி பெற்ற சிங்கங்கள் யானைகளின் அருகாமையில் அமர்ந்திருந்தன. அங்கே பரஸ்பர பகையற்ற பிரசாந்தமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை நாம் கவனிக்கவேண்டும். சிங்கத்திற்கும் யானைக்கும் இயல்பாக பகை உண்டு. ஆனால் அந்த ஆசிரமத்தில் யானைகளும் சிங்கங்களும் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து ஒன்றோடொன்று அன்பாக நடந்து கொள்கின்றன. சகஜப் பகை கொண்ட விலங்குகள் கூட அன்போடும் நட்போடும் விளங்குகின்றன.

மற்றுமொரு வர்ணனை கூட உள்ளது. நம் கலாச்சாரத்தில் பூத யக்ஞம் என்று ஒரு நடைமுறை உள்ளது. வைஸ்வதேவம், தெய்வ வழிபாடு போன்றவற்றைச் செய்தபின் சிறிது அன்னத்தை ‘பலி போஜனம்’ என்று வைப்பார்கள். சூட்சுமமாக விளங்கும் பூதங்களை சாந்தப்படுத்துவதற்காக அவ்வாறு வைப்பது வழக்கம். அந்த ஆசிரமத்தில் அவற்றைத் தின்பதற்காக பூனைகளும் எலிகளும் சேர்ந்து வந்து தின்கின்றன. உண்மையில் எலியைப் பார்த்தால் பூனை விட்டு வைக்காது. ஆனால் எலியும் பூனையும் சேர்ந்து அங்கே பகை மறந்து நட்போடு பழகுகின்றன. எனவே பகை என்னும் தீய குணம் இல்லாத அற்புதமான ஒரு இடத்தை நம் புராணங்கள் நமக்கு கண்முன்னே காட்டுகின்றன. அத்தகைய இடங்களே ருஷி ஆசிரமங்களும், தபோவனங்களும்!
தபோவனங்களும் ருஷி ஆசிரமங்களும் எத்தனை அதிகமாக ஏற்படுகின்றனவோ அத்தனை அமைதி பிரபஞ்சத்திற்கு கிடைக்கும். பகை விலகும்! நட்பு பெருகும்!
அதனால் தவம், அனுஷ்டானம், சாந்தமான, சாத்வீகமான, அகிம்சையோடு கூடிய, தர்மத்தோடு கூடிய வாழ்க்கை முறை, இறைவனை நினைத்து வாழும் பாகவத ஜீவனம்…. இப்படிப்பட்ட இல்லங்கள்…. இப்படிப்பட்ட மனிதர்கள் அதிகமாக இருந்தால் இயல்பாகவே உலகில் அமைதி நிலவும் என்று மகரிஷிகள் கூறும் இந்தக் குறிப்பினை கௌரவித்து கடைப்பிடிப்போம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



