
தவம் என்ற சொல் நம் சாஸ்திரங்களில் அதிகம் காணப்படுகிறது. தவம் செய்தார்கள், தவத்தில் ஈடுபட்டார்கள் என்று அடிக்கடி கேள்விப்படுகிறோம். தவத்தில் ஈடுபடுவது என்றால் என்ன? வீடு வாசலைத் துறந்து காட்டிற்குப் போய் மூச்சை பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பது மட்டுமல்ல தவம் என்பது.
தவம் என்ற சொல்லிற்கு நியமத்தோடு கூடிய கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்வது என்று பொருள். தன் ஸ்வதர்மத்தைத் தான் கடைப்பிடித்து அதிலிருந்து வழுவாமல் வாழ்க்கை நடத்துவதே தவம்! கஷ்ட நஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு லாபத்தின் மீது ஆசை வைக்காமல் தர்மத்தைக் கடைப்பிடிப்பது கூட தவமே!
தவம் என்றால் உடலை வருத்திக் கொள்ளுதல் என்று பொருள்படும். ஏனென்றால் அத்தனை எளிதானதல்ல தர்மத்தைக் கடைப்பிடித்தல் என்பது. பல கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டி வரும். ஓரொரு சமயம் தர்மத்தை கடைப்பிடிக்கையில் பேராசைக்கு உட்பட வேண்டிவரும். அவற்றின் மேல் மனதை ஈடுபடுத்தாமல் சுய தர்மத்தில் மனதை நிலை நிறுத்துவதும் தவமே!
“தபஸ் ஸ்வதர்ம வர்த்தித்வம்” என்று மகாபாரதத்தில் தர்மபுத்திரன் யக்ஷனிடம் தெரிவிக்கிறான். அதனால் தர்மத்தைக் கடைப்பிடித்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கடமையாக உள்ளது.
உதாரணத்திற்கு காலை சூரியோதயத்திற்கு முன் துயிலெழுவது, தெய்வ வழிபாடு செய்வது, மந்திர ஜபம் செய்வது, நியமத்தோடு தெய்வ பூஜை செய்த பின் உணவு உண்பது, உணவு உண்பதிலும் நியமத்தை வழுவாமல் கடைப்பிடிப்பது, சத்தியம் பேசுவது, அகிம்சையை கடைபிடிப்பது… இவை அனைத்தும் தவமே!
தவத்திற்குக் கூட சத்தியம் என்று பெயர் உள்ளது. சத்தியம் என்றால் முக்காலங்களிலும் அழியாதது என்று பொருள். தவமும் முக்காலங்களிலும் நீங்காமல் நம்மை காத்தருள்வதால் சத்தியம் என்றழைக்கப்படுகிறது.
ஆயின் நாம் செய்துவரும் தவம் செலவழியாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது மிகவும் முக்கியம்.

ராவணாசுரன் வாய்க்கு வந்தபடி பிதற்றியபோது சீதாதேவி,
“அசந்தேஸாத்து ராமஸ்ய தபஸஸ்சானு பாலநாத் !
ந த்வாம் குர்மி தசக்ரீவ பஸ்ம பஸ்மார்ஹ தேஜஸா !! என்கிறாள்.
“நான் உனக்கு சாபம் அளித்து எரித்து விட கூடியவள். ஆனால் என் தவத்தை காத்துக் கொள்வதற்காகவும் ராமனிடமிருந்து செய்தி இன்னும் வரவில்லை ஆதலாலும் உன்னைச் சாம்பலாக்காமல் விட்டு வைக்கிறேன்” என்று எச்சரிக்கிறாள்.
இதன் பொருள் என்ன? ஒருவேளை சீதாதேவி இராவணன் எரிந்து போகட்டும் என்று சங்கல்பித்து ஒரு வார்த்தை கூறி இருந்தால், ராவணன் அப்போதே எரிந்து சாம்பலாகி இருப்பான். அவ்வாறு சாபம் அளிக்கக்கூடிய சக்தி சீதாதேவிக்கு எவ்வாறு வந்தது? அவள் செய்த தவத்தால் வந்தது. எத்தனையோ கஷ்டங்களைப் பொறுத்துக் கொண்டு பதிவிரதை தர்மம் என்ற ஸ்வதர்மத்தை சீதாதேவி கடைபிடித்து வந்தாள். அதுதான் தவம் என்பது. ராமனிடம் கொண்ட அன்பால் அதை கடைப்பிடித்தாள். அசுரனிடம் கொண்ட அருவெருப்பாலும் தன் ஸ்வதர்மத்தை விடாமல் கடைப்பிடித்தாள். ராமனைத் தவிர பிறரிடம் மனதைக்கூட போகவிடாத மகா பதிவிரதை சீதாதேவி. அத்தகைய தவத்தில் அவள் நிலைநின்றாள்.
அதே போல் அங்கே பல கஷ்டங்களை அனுபவித்த போதிலும் ராம நாமத்தை ஜபம் செய்தபடி இருந்தாளே தவிர தன் தவத்தை அவள் செலவழிக்கவில்லை. உதாரணத்திற்கு சீதாதேவி தன் தவச் சக்தியால் சங்கல்பம் செய்திருந்தால் அவளுடைய தவத்தின் விளைவால் ஒரே கணத்தில் அவள் ராமனிடம் திரும்பி சென்றிருப்பாள். ஆயினும் அவள் தன் தவத்தைச் செலவிடவில்லை. ஏனென்றால் தவம் என்பது பாதுகாத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
தவச் செல்வம் நம்மிடம் இருக்கும் வரை அது நம்மை காப்பாற்றி வரும். நமக்கு ரட்சணையாகத் துணையிருக்கும். நம்மிடம் தேஜஸாக ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
அதனால் இலங்கையில் இருந்த சீதை பத்து மாதங்களாக ராமனிடம் இருந்து எந்த ஒரு ஜாடையோ செய்தியோ கிடைக்காத போதிலும் க்ஷேமமாக இருந்தாள் என்றால் அவளுடைய தவத்தால் அவள் காக்கப்பட்டதே காரணம். அது குறித்து அனுமனும் சொல்கிறான். ராமனும் சொல்கிறான். சீதாதேவி தன் தவத்தால் தன்னையே பாதுகாத்துக் கொண்டாள்.
அதனால் நாம் தர்மவழியில் இருந்து வழுவாமல் வாழ்ந்து வந்தால் அது தவமாக மாறி நம்மைக் காத்தருளும். கெட்ட காலத்திலும் கூட வாழ்க்கையை இழக்காமல் நம்மைக் காப்பது நாம் எப்போதோ செய்த தவமே! இதனை நினைவில் கொள்ளவேண்டும்.
இதனையே “தர்மோ ரக்ஷதி ரக்ஷித:” என்கிறோம். இவ்வாறு ஒவ்வொருவரும் அவரவர் செய்த நல்ல செயல்களின் வழிமுறையையே தவமாகத் தம்மிடத்தில் பாதுகாத்து வருகிறார்கள். அதுவே அவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகிறது.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



