நம் வாழ்க்கையில் சுகமும் துக்கமும் இறைவனால் ஏற்படுகிறது என்று நினைக்கிறோம். தெய்வம் என்ன செய்கிறது? நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலனளிக்கிறது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ற பலன்களைத் திரும்பப் பெறுகிறோமே தவிர செய்த வினைகளுக்கு எதிரான பலன்களை இறைவன் அளிப்பதில்லை. இது குறித்து சிறந்த கருத்துக்களை புராணங்களில் காணமுடிகிறது.
தட்சனுடைய யக்ஞம் வீணாகியது. யக்ஞம் நிறைவு பெறாமல் பாதியில் அழிக்கப்பட்டால் அதன் மூலம் உலகத்திற்கு ஏற்படவேண்டிய நன்மை பாதிக்கப்படும். அதனால் பிரம்மா விஷ்ணு முதலியோர் பரமசிவனிடம் சென்று, “சுவாமி! தட்சன் அபராதம் செய்தது வாஸ்தவம்தான். தங்களை அவமதிக்கும் விதமாக யக்ஞம் செய்தான். பெரியவர்களை அவமதிப்பவர் தீய பலன்களை பெறுவர் என்பதற்கு ஏற்ப தீய பலனை அனுபவித்தான் கூட. ஆனால் இப்போது உலக நன்மை பாதிக்கப்படுவதால் யக்ஞத்தை மீண்டும் பூர்த்தி செய்தருள வேண்டும்” என்று பிரார்த்தித்தனர்.
அப்போது பரமசிவன் கூறிய பதில் என்னவென்றால், “தட்சனின் யாகத்தை நான் துவம்சம் செய்யவில்லை. என்னிடமிருந்து வெளிப்பட்ட வீரபத்ரனும் நாசமாக்கவில்லை. தட்சனிடமிருந்த துவேஷ எண்ணமே அவனுடைய செயலை அழித்தது” என்று கூறுகிறார்.
இங்கு ஒரு அழகான ஸ்லோகம் ருஷி வாக்கியமாக நமக்குக் கிடைக்கிறது.
“பரம் த்வேஷ்டி பரேஷாம் யதாத்மனஸ்தத் பவிஷ்யதி !
பரேஷாம் க்லேதனம் கர்மா ந கார்யம் தத் கதாசனா !!
இப்படிப்பட்ட ஸ்லோகங்களை சமுதாயத்தில் இளைஞர்களுக்கு கற்றுத் தரவேண்டும். “பிறரை வெறுப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான். பிறரிடம் கொண்ட வெறுப்பால் நாம் எந்த நற்செயல் செய்தாலும் அது பலனளிக்காமல் போவதோடு தீய பலனை அளிக்கிறது”.
துவேஷ பாவனையில்லாமல் நல்ல பிரயோஜனத்தை எதிர்பார்த்து நற்செயல் புரியும் போது அது நிச்சயம் நற்பலனை அளிக்கும். நற்செயலாக இருந்தாலும் பிறர் மேல் வெறுப்போடு செய்தால் அந்த நல்ல செயல் வீணாகிறது என்பதை அறிய வேண்டும். சிலர் பிறர்மீது பொறாமையோடு பிறர் மனதை நோகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறரை அவமதிக்க வேண்டும் என்றோ பிறரை விட தாம் உயர்ந்தவர் என்று காட்டிக்கொள்ள வேண்டும் என்றோ பெரிய பெரிய நற்காரியங்களை செய்து வருவார்கள். நல்ல செயல் தானே செய்கிறார்கள்? நல்ல பலன் கிடைக்கும்! என்று நாம் நினைப்போம். ஆனால் செயலின் பின்னால் உள்ள எண்ணத்தைப் பொறுத்து எந்த செயலானாலும் பலன் விளையும். அதனால் செய்யும் வேலையை விட அதைச் செய்யும்போது உள்ளத்தில் உள்ள எண்ணம் மிகவும் முக்கியம்.
இறைவன் நம் மனதிலுள்ள பாவனையையே கவனிப்பான். நீ எத்தனை அதிகமாகச் செய்தாய்? எத்தனை செலவு செய்தாய்? எத்தனை விளம்பரம் செய்தாய்? எத்தனை ஆர்ப்பாட்டங்கள் செய்தாய்? என்றெல்லாம் இறைவன் பார்ப்பதில்லை. உள்ளத்தை மட்டுமே கவனிப்பார்.
இங்கு தட்சன் யாகம் செய்தான். யக்ஞம் என்பது நற்செயல்தான். ஆனால் எத்தகைய உள்ளத்தோடு செய்தான்? துவேஷ பாவனையோடு செய்தான். அதுவும் சாமானிய வெறுப்பு அல்ல அவனுடையது! சாட்சாத் பரமேஸ்வரனையே அவமதிக்கும் உத்தேசத்தோடு செய்தான்.
“பிறரிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோமா அதற்கேற்ற பலனையே நாம் அனுபவிக்க வேண்டிவரும்” என்ற சிறந்த கருத்தை பரமசிவன் அவர்களிடம் எடுத்துக் கூறினார்.
இதனை ருஷி வாக்கியம் என்பதைவிட ஈஸ்வர வாக்கியம் என்று கூறினால் பொருத்தமாக இருக்கும்.
“உலகத்தின் மீது அன்போடு எந்த செயலைச் செய்தாலும் அது மிகச் சிறிய செயலானாலும் பிறர்மேல் வெறுப்பின்றி நல்ல உள்ளத்தோடு செய்தால் அது அற்புதமான பலன்களை அளிக்கவல்லது. எனவே செயல் நல்லதேயானாலும் துவேஷம் வெறுப்பு போன்ற தீய குணங்கள் சேரும் போது தீய பலனே வந்து சேரும். அதேபோல் தக்ஷன் யக்ஞம் செய்த போதிலும் பாதிக்கப்பட்டான். அவனிடமிருந்த வெறுப்பு குணத்தினால் அவன் செய்த செயல் பலனளிக்கவில்லையே தவிர நானோ வீரபத்திரனோ காரணமல்ல” என்றார்.
இதன் மூலம் ஈஸ்வரன் வினைகளுக்கு ஏற்ப பலனளிப்பாரே தவிர தன்னுடைய விருப்பு வெறுப்பினால் அல்ல என்பதை அறியலாம். இன்னும் ஒரு உயர்ந்த கருத்தைக் கூட கூறினார். ”பரேஷாம் க்லேதனம் கர்மா ந கார்யம் தத் கதாசனா !”
அதனால் மனிதன் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியது என்னவென்றால் பிறருக்குத் துன்பம் விளைவிக்கும் செயல்கள் செய்யக்கூடாது. இதுதான் தர்மம் என்பது. இதனையே “பரோபகாராய புண்யாய பாபாய பர பீடனம் !” என்ற ஒரே வாக்கியத்தில் கூறியுள்ளார் வியாச மகரிஷி.
“பிறருக்கு உதவி செய்வதே புண்ணியம்! பிறரைத் துன்புறுத்துவதே பாவம்!”. பாவ, புண்ணியங்களுக்கு இத்தனை அழகான விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
அதனால் எப்போதும் நாம் காலையில் எழுந்தது முதல் பிரார்த்திக்க வேண்டியது என்னவென்றால், “என் மூலம் பிறருக்கு எந்த துன்பமும் வரக்கூடாது”. இதனை எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தால் போதும். அதேபோல் யாரிடமும் எப்போதும் பொறாமை, வெறுப்பு போன்ற தீய எண்ணங்களை வளர்த்துக் கொள்ளக் கூடாது. ஒருவேளை அது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டால் சிந்தித்துப் பார்த்து தன்னைத்தானே ஆழ்ந்து விசாரணை செய்து அவற்றை நீக்கி கொள்ள வேண்டும். தீய குணங்களை வளர்த்து போஷிக்கக் கூடாது.
ஒருவரிடம் நமக்கு கோபம் வந்தது என்றால் உடனே நம்மை நாமே விசாரணை செய்து அதனை நீக்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிறிது சிறிதாக அது குரோதமாக மாறி நம் மனம் முழுவதும் படர்ந்து, துவேஷத்தையும் தீமையையும் வளர்த்து விடும். அதே எண்ணத்தோடு நாம் எந்த வேலை செய்தாலும் அது பாதிக்கப்படும். அதனால் தீய பாவனையின் பலனையே பெறுவோம். இதை நினைவில் கொள்ளவேண்டும்.
அதனால்தான் உலகத்தில் செயல்கள் எத்தனை முக்கியமோ அவற்றின் பின்னால் உள்ள எண்ணம் கூட அத்தனை முக்கியம் என்று எச்சரிக்கிறார்கள் பெரியவர்கள்.
மன்மதன் சிவன் மீது மலர் பாணத்தை விடுத்தான். பக்தர்களும் சிவனை பூக்களால் அர்ச்சனை செய்கிறார்கள். இருவரும் சிவன்மேல் பூக்களையே போட்டனர். ஆனால் மன்மதனை சிவன் எரித்துச் சாம்பலாக்கினார். பக்தர்களின் பூக்களை பக்தியோடு ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் இறைவன் பொருட்களை பார்ப்பதில்லை. அந்த பொருட்களை அளிப்பவரின் உள்ளத்தைப் பார்க்கிறார் என்ற கருத்தை பெரியவர்கள் அழகாக கூறியுள்ளார்கள்.
“சிவனை நான் பணியை வைப்பேன்! மலர் பாணத்தால் வீழ்த்துவேன்! அவரை வெற்றி கொள்வேன்!” என்ற எதிர்மறை பாவனையோடு மன்மதன் மலர் பாணத்தை சிவன் மீது ஏவினான். போடுவது மலரே ஆனாலும் மனதில் போட்டி பாவனை இருந்தது மன்மதனுக்கு. ஆனால் பக்தனோ பரமாத்மாவிடம் பக்தி பாவனையோடு அன்பாக பூக்களை சமர்ப்பிக்கிறான்.
நாம் எச்செயலைச் செய்தாலும் எந்த உள்ளத்தோடு செய்கிறோம் என்பதை விஸ்வமெங்கும் வியாபித்துள்ள இறைவன் கவனித்து வருகிறார். அதற்கேற்ற பலனை அளிக்கிறார்.
தட்சன் பிரஜாபதியேயானாலும் அவனுக்கு பிரம்மா இந்திரன் போன்ற தேவதைகளின் துணை இருந்தாலும் அவன் செய்தது யக்ஞம் என்ற சத் கர்மாவானாலும் அதில் துவேஷ பாவனை என்ற ஒன்று இருந்ததால் அவன் முழுமையாக பாதிக்கப்பட்டான்.
இதனை புரிந்து கொள்ள முடிந்தால் வேற்றுமை பாவனையற்ற நற்செயல்களையே நாம் தர்மமாக ஏற்று செய்வோம். வெளியே சிறந்த செயல்களாக தென்பட்டால் பலனில்லை. இதனை அறிய வேண்டும்.
எப்போதும் நம் செயல்களின் பின்னுள்ள எண்ணங்கள் தூய்மையாக உள்ளதா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இது போன்ற கதைகள் வழியே புராணங்கள் நமக்கு நற்கருத்துக்களை அளிக்கின்றன. எனவே கதைகளை மேலோட்டமாகப் பார்த்து நகர்ந்து விடாமல் அவற்றில் கூறப்பட்டுள்ள உள்ளர்த்தங்களை சிந்தித்துப் பார்த்து பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை அறிய வேண்டும்.
இதே கருத்தை மகாபாரதத்தில் கூட வியாசபகவான் தெரிவிக்கிறார். “பிறர் நம்மிடம் எவ்வாறு நடந்து கொண்டால் நாம் வருத்தமடைவோமோ அது போல் பிறரிடம் நாம் நடந்து கொள்ளக் கூடாது”. இதனை அறிந்து கொண்டால் நமக்கு வருத்தமளிக்கும் செயலை நாம் பிறருக்குச் செய்யாமல் இருப்போம். அதைவிட நற்செயல் வேறொன்றுமில்லை என்று விளக்குகிறது மகாபாரதம்.
செயலுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விட செயலின் பின்னுள்ள எண்ணத்துக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்ற உண்மையை எப்போதும் நினைவில் நிறுத்துவோமாக!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்