
“அபிஷேகாத் ஆத்மசுத்தி: !” என்பது ரிஷி வாக்கியம். இறைவனை அபிஷேகம் செய்வதால் மனத்தூய்மை வாய்க்கிறது. சாக்ஷாத் வியாச பகவான் கூறிய உயர்ந்த வாக்கியம் இது. அபிஷேகம் என்பது சாஸ்திரம் கூறியுள்ள அம்சம். யாரோ மனிதர்கள் உருவாக்கியது அல்ல.
போதாயனர், வேதத்தில் கூறப்பட்டுள்ள மந்திரங்களை பூஜைக்கு எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்பதை விவரிக்கும் போது யஜுர் வேதத்தின் ஒரு பாகமான ருத்ர நமகத்தை பற்றி கூறுகையில் அந்த மந்திரங்களை ஜபம், ஹோமம், அபிஷேகம், அர்ச்சனை என்ற நான்கு செயல்களுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். அதாவது அங்கு கூறப்பட்டுள்ள இறைவனின் நாமங்களையும் மந்திரங்களையும் கொண்டு ஜபம் செய்யலாம் ஹோமம் செய்யலாம் அபிஷேகம் செய்யலாம் அர்ச்சனை செய்யலாம்.
ஒரு காலத்தில் அக்னிஹோத்திரம், ஹோமம் போன்ற செயல்களை வெளிப்படையாக மட்டுமே பார்த்து சிலர் ஏளனம் செய்தனர். நெருப்பில் நெய்யை ஊற்றுவதாவது? என்றார்கள்.
ஆனால் அவற்றின் மூலம் விளையக்கூடிய சூட்சும செயல்கள் என்ன? அவற்றால் ஏற்படும் அற்புதமான பலன்கள் என்ன? என்பது பற்றிய விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பின் அக்னிஹோத்ரம் என்ற செயலின் சிறப்பை தற்போது பிரபஞ்சத்தில் பல்வேறு விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நம் நாட்டு ரிஷிகள் விதித்த நியமங்களின்படி ஹோமம் செய்தால் சுற்றுச்சூழலில் தெய்வீகம் ஏற்படுகிறது என்று கண்டறிந்துள்ளார்கள்.
அதேபோல் அபிஷேகம் குறித்தும் பல பரிசோதனைகள் நடத்தி தற்போது அதன் மகிமையை அறிந்து ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எந்தச் செயலானாலும் அவரவர் இஷ்டத்திற்கு செய்தால் அது எதிர்மறை வடிவம் எடுத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் செய்யும் செயல்களை தவறுகள் இல்லாமல் செய்ய வேண்டுமே தவிர அந்தச் செயலே தேவையில்லை என்று கூறக்கூடாது. சரிவரச் செய்ய வேண்டும்.
சாப்பிடும் விஷயத்தில் சிலவற்றை உண்ணக்கூடாது கவனமாக இருக்க வேண்டும் என்று கூற வேண்டுமே தவிர சாப்பிடவே கூடாது என்று சொல்லக் கூடாது அல்லவா? அதே போல் அபிஷேகம் போன்ற செயல்களையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டு கடைப்பிடிக்க வேண்டும். ஏதோ புண்ணியம் வரும் என்று சொன்னார்களே என்று ஆர்வத்தோடு கையில் கிடைத்ததையெல்லாம் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அதேபோல் அதிகமாக ஏராளமான திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யவும் தேவையில்லை. தகுந்த அளவில் அபிஷேகத் திரவியங்களை உபயோகிக்க வேண்டும்.
அதுவும் நம் நாட்டுப் பசு மாட்டின் பால், அதிலிருந்து வந்த தயிர், அதன் மூலம் கிடைத்த நெய் இவற்றை அபிஷேகத்திற்குப் பயன்படுத்த வேண்டும். அப்படியின்றி பால் பாக்கெட்டை கத்தரித்து அப்படியே அபிஷேகம் செய்வது தோஷம். சுத்தமான பசும்பாலை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். எவர்சில்வர் போன்ற இரும்பு கலந்த பாத்திரங்களை பயன்படுத்தக் கூடாது. பித்தளை, வெள்ளி, தங்கம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.
அதேபோல் இளநீரை உடைத்து அதை அப்படியே ஊற்றக் கூடாது என்று சாஸ்திரம் எச்சரிக்கிறது. இளநீரை உடைத்த பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து அந்த பாத்திரத்தால் அபிஷேகம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்கள். உண்மையில் நம் சாஸ்திரங்களில் விவரித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நம் கோவில்களில் அபிஷேகம் செய்து வந்தால் எங்கும் சுற்றுச்சூழல் மாசு இருக்காது, ஆபத்தும் இருக்காது என்பதை அறிய வேண்டும்.
சோம்பல் காரணமாக செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால்தான் எல்லா ஆபத்துகளும் வந்து சேருகின்றன. அதேபோல் சந்தனம் கூட மார்க்கெட்டில் கிடைக்கும் பொடியை வாங்கிய இறைவன் மேல் தூவக்கூடாது. சுத்தமான சந்தனத்தை அரைத்து பயன்படுத்த வேண்டும்.
பச்சைக் கற்பூரம் போன்ற சுகந்த திரவியங்கள், திவ்யமான ஒளி, தூபம், புஷ்பங்கள் போன்றவற்றிற்கு தேவதைகளையும் தெய்வீக சக்திகளையும் ஆகர்ஷித்து வரவேற்கும் குணம் இருப்பதால் அவற்றை தெய்வ பூஜையில் உபயோகிக்கிறோம். அவற்றின் மூலம் தெய்வீக சூழலும் தெய்வீக சிந்தனையும். ஏற்படுகிறது. தேவதைகள் அதுபோன்ற சுகந்தங்களுக்கு பிரியர்களாக இருப்பார்கள். “சுகந்திம் புஷ்டிவர்தனம்” என்று கூறிகிறார்போல.
அபிஷேகத்தின் முக்கியமான பலன் மனத் தூய்மை.
பிரம்மாண்டமெங்கும் வியாபித்துள்ள ஈஸ்வர சைதன்யம் அமிர்தத்தால் நனைக்கப்படுவதாக தியானித்தால் போதும் பிரபஞ்சத்தில் அமைதி ஏற்படும் என்று ஆகமங்கள் தெரிவிக்கின்றன.
“ஆபாதாள நப:ஸ்தலாந்த புவன ப்ரஹ்மாண்ட மாவிஸ்புரத்
ஜ்யோதி:ஸ்பாடிக லிங்கமௌளி விலசத் பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதமேக மீசமனிசம் ருத்ரானுவாகன் ஜபன்
த்யாயேதீப்ஸித சித்தயே த்ருவபதம் விப்ரோபிஷிஞ்சேத் சிவம் !!”
என்று சிவலிங்க தியான ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமெங்கும் வியாபித்துள்ள ஒரு மகா சைதன்யமாக சிவலிங்கத்தை தியானித்து அது அமிர்தத்தில் நனைவதாக நினைக்க வேண்டும் என்றார்கள்.

சிவன் ஞான ஸ்வரூபம். அமிர்தம் ஆனந்த சொரூபம். அதனால்தான் ஞானத்தை அக்னி தத்துவமாகவும் ஆனந்தத்தை ஜல தத்துவமாகவும் கூறுகிறார்கள். இந்த ஞானானந்த தத்துவத்தை அபிஷேகத்தில் நாம் பார்க்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால் ஹோமத்தில் எழுகின்ற அக்னியில் ஹவிஸ் சமர்பிக்கிறோம். நெய்யை தாரையாக ஊற்றுகிறோம். அதேபோல் அங்கு நடக்கும் ஹோமம் என்ற செயலும் இங்கு நடக்கும் அபிஷேகம் என்ற செயலும் ஒன்றேதான். அங்கிருக்கும் அக்னிஹோத்ர ஸ்வரூபமே சிவலிங்கம். அதன் மேல் ஹோம திரவியமாக அபிஷேகம் உள்ளது.
அதுமட்டுமின்றி முக்கியமாக ஆகம சாஸ்திரத்தில் பல நோய்களுக்கும் பல பிரச்சனைகளுக்கும் பலவித நிவாரணங்களை கூறியுள்ளார்கள். பரமேஸ்வரனை ருத்ர மந்திரங்களாலும் வேதத்தில் கூறப்பட்டுள்ள ம்ருத்யுஞ்ஜயம் முதலான மந்திரங்களாலும் அபிஷேகம் செய்தால் பல்வேறு வியாதிகளும் குணமாகின்றன. அதே போல் பல தரித்திரங்களும் பீடைகளும் விலகுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. இது ‘பாசுபத தந்திரங்கள்’ முதலான சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவை வெறும் மூட நம்பிக்கைகளின் முட்டை அல்ல. விஞ்ஞானத்தின் அறிவுச்செல்வம்.
அவ்விதமாக எந்த திரவியத்தால் பரமாத்மாவுக்கு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று கூறியுள்ளார்கள். பசும்பாலால் அபிஷேகம் செய்தால் என்ன பலன் என்று கூறுகையில் அது அமிர்தத்தால் அபிஷேகம் செய்த பலனைக் கொடுக்கும் என்று தெரிவிக்கிறார்கள்.
சந்தனத்தாலும் தேனாலும் அபிஷேகம் செய்கையில் ‘சந்தத’ தாரையாக ஊற்றி மகா மிருத்தியுஞ்ஜய மந்திரமும் ருத்ர மந்திரமும் உச்சரிப்பதால் அகால மிருத்யு, அப ம்ருத்யு தோஷங்களிரண்டும் விலகிப் போய்விடும் என்று கூறப்பட்டுள்ளது. இவை ‘தாராபிஷேக ப்ரக்ரியா’ என்ற சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விவரங்கள்.
மந்திரங்களுக்கும் அபிஷேகத்திற்கும் அத்தகைய உயர்ந்த சக்தி உள்ளது. அவ்வாறு அபிஷேகம் செய்த ஜலத்தை தீர்த்தமாக நாம் ஏற்கும்போது நாம் தூய்மையடைகிறோம். அது மருந்தாக பலனளிக்கிறது.
சமீபத்தில் அறிவியல் அறிஞர்கள் கூறும் ஒரு விஷயம் என்னவென்றால் பாரத தேசத்தில் கோவில்களிலோ வீடுகளிலோ சிவனுக்கு அபிஷேகம் செய்கையில் அந்த ஜலம் சிவலிங்கத்தின் மீது படுகின்ற கோணமும், ஜலம் படும் நேரமும் பொறுத்து அந்த ஜலத்தில் மருத்துவ குணங்கள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்.
எனவே அவற்றை பௌதீகமாக ஆராய்ந்து பார்த்தால் ஔஷத குணங்களும், சூட்சுமமாக நோக்கினால் ஆன்மீக விழுமியங்களும் நமக்குக் கிடைக்கின்றன. தெய்வீக சக்தியை இவ்விதம் பெறமுடிகிறது.
அதனால் நம் மூதாதையரின் மூலம் வழிவழியாக நமக்குக் கிடைக்கின்ற ஒரு நல்ல சம்பிரதாயத்தை சிந்தித்துப் பார்க்காமல் மறுத்து ஒதுக்குவது அறியாமையாகும்.
மேலோட்டமாகப் பார்த்தால் இதென்ன…? இப்படிச் செய்கிறார்களே…! என்று தோன்றலாம். அர்த்தமற்ற செயலாகத் தென்படலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஆலோசனை செய்து அதிலுள்ள அர்த்தத்தை கிரகித்தறிய வேண்டும். உதாசீனப்படுத்தக் கூடாது.
இல்லாவிட்டால் தட்டு நிறைய சாப்பாடு சாப்பிடுவதற்கும் நம் உடலுக்கு சக்தி வருவதற்கும் என்ன தொடர்பு என்று கேட்பது போல் இருக்கும். அந்த உணவு மனித உடலுக்குள் சென்று எத்தனை சூட்சுமமாக மாறி சக்தியை அளிக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டுமல்லவா?
அதேபோல் அபிஷேகம் போன்றவை நடக்கும் போது அந்த மந்திரங்களின் மூலம் தெய்வசக்தி தூண்டப்படுகிறது. அதனால் அபிஷேகம் முதலான செயல்களுடன் பிரதானமாக நாம் இறைவனை வழிபடும் போது ஒவ்வொரு திரவியத்திற்கும் ஒவ்வொரு பிரயோஜனம் கூறியுள்ளார்கள்.
இன்னுமொன்றும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த திரவியங்கள் அனைத்தும் சாத்வீக திரவியங்களே தவிர தீவிரமான திரவியம் ஒன்றுகூட கிடையாது. மிளகாய் வற்றல் மிளகு போன்றவற்றை அபிஷேகத்திற்கு யாரும் உபயோகப்படுத்துவதில்லை.
அதேபோல் சர்க்கரையை அபிஷேகம் செய்வது பற்றி தற்போது கிடைக்கும் சர்க்கரையை உபயோகிக்காமல் இருப்பது நல்லது என்று கூறி பெரியவர் ஒருவர் தடுத்துள்ளார். ஏனென்றால் நம் முன்னோர்கள் கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை கரைத்த நீரால் அபிஷேகம் செய்தார்கள். அது உத்தமம். வெல்லம் கரைத்த நீர் கூட சிரேஷ்டம் என்று கூறப்பட்டுள்ளது.
நாம் இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்கள் எல்லாம் கூட நல்ல மருத்துவ குணம் கொண்டவையே! மேலும் மூலிகைகளால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் அது ஒரு சிறந்த பலனை அளிக்கிறது.
அதனால் ஒவ்வொரு உபசாரத்தின் பின்னாலும் ஒரு பரமார்த்தம் உள்ளது. அந்த உபசாரங்கள் ஆச்சரியப்படும் விதமாக நம் வாழ்க்கையை மாற்றக்கூடியவை. நம் ஜாதகத்தையே மாற்றக் கூடியவை என்று அறிந்து கொண்டு, முன்னோர் கூறிய திரவியங்களால் பரமேஸ்வரனை சுப காலங்களில் அபிஷேகம் செய்து மேன்மை பெறுவோமாக!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



