
ஸ்காந்தபுராணத்தில் ஒரு சுவையான கதை உள்ளது. பரீட்சித்து மகாராஜாவுக்கு ஸ்ருங்கி மகரிஷி ஒரு சாபமளித்தார். தட்சகன் என்னும் நாகம் ஏழு நாட்களுக்குள் பரீட்சித்தைக் கடித்து அவர் மரணமடைத்து விடுவார் என்பதே அந்த சாபம்.
அந்த விஷயத்தை அறிந்த பரீட்சித்து மகாராஜா, “எல்லோரும் எப்போதோ ஒரு சமயத்தில் மரணிக்கத்தானே வேண்டும்? எனக்கு ஒரு வாரத்தில் மரணம் என்பது முன்கூட்டியே தெரிந்து விட்டது” என்று எண்ணி அந்த நேரத்தை வீணாக்காமல் இறை தியானத்திலும் பகவானின் கதையைக் கேட்பதிலும் செலவழித்து புனிதமாக்கிக் கொண்டார்.
ஆனால் மகாராஜாவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மந்திரிகளும் அதிகாரிகளும் ஒரு உபாயத்தை கண்டறிந்தார்கள். “எப்படிப்பட்ட விஷமானாலும் முறியடிக்கக்கூடிய வைத்தியர்கள் இருப்பார்கள். மூலிகைகள் இருக்கும். அப்படிப்பட்ட வைத்தியர்களில் யாராவது முன்வந்து அரசரை தட்சகன் கடிக்காமல் இருக்கும்படியும் ஒருவேளை கடித்துவிட்டால் விஷத்தை முறியடிக்கும்படியும் செய்வாரானால் அவர்களுக்கு சிறந்த காணிக்கைகள் தரப்படும்!” என்று அறிவித்தார்கள்.

அந்தப் பிரகடனத்தைக் கேட்ட காசியபன் என்ற சிறந்த வைத்தியன் கிளம்பி வந்தான். வரும் வழியில் தட்சகன் என்னும் நாகம் மாறுவேஷத்தில் அவனை எதிர்கொண்டு, “நீ சிகிச்சை செய்தாலும் பலன் இருக்காது. அரசன் சாபம் பெற்றவன். எனவே மரணம் நிச்சயம். நீ திரும்பிச் செல்! மருந்து ஏதாவது கொடுத்து அரசன் பிழைத்து எழுந்துவிட்டால் தட்சகனான எனக்கு அபகீர்த்தி வந்து சேரும். என் விஷம் வேலை செய்யவில்லை என்று எல்லோரும் சிரிப்பார்கள். எனவே திரும்பிச் செல்! ஒருவேளை நீ சிகிச்சை செய்து அரசன் பிழைத்தால் அந்த அரசன் எத்தனை காணிக்கை கொடுப்பானோ அதைவிட பலமடங்கு உனக்கு இப்போதே நான் காணிக்கை தருகிறேன். திரும்பிச் செல்!” என்று கூறுகிறான் தட்சகன்.
காசியபன் பொருளின் மீது கொண்ட ஆசையால் “சரி” என்று சம்மதித்து தட்சகன் அளித்த காணிக்கைகளை பெற்றுக் கொண்டு திரும்பிச் சென்றுவிடுகிறான்.
பின்னர் தட்சகன் தீண்டியதால் பரீட்சித்து மகாராஜா மரணமடைந்து விடுகிறார். அதனால் வைத்தியர்களும் பண்டிதர்களும் காசியபனை அவமதித்து ஏளனம் செய்யத் தொடங்கினார்.
“நீ அரசனுக்கு சிகிச்சை செய்வதாகச் சொல்லி கிளம்பிச் சென்றாய். ஆனால் பொருளாசையால் திரும்பி வந்து விட்டாய்! நீ மகா பாவம் செய்தவன்” என்று கூறி காசியபனை தம்மோடு சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்தார்கள். அதனால் காசியபனுக்கு தன்னைப் பற்றிய குற்ற உணர்வு ஏற்பட்டது. வெட்கப்பட்டான். அனைவரும் அவனைத் துரத்திவிடவே, தனியாக வருத்தத்தோடு சென்று சாகல்யர் என்ற மகரிஷியை சந்தித்தான்.
“நான் என்ன தவறு செய்தேன்? என்னை அனைவரும் மகாபாதகம் செய்பவனைப் போல் பார்க்கிறார்களே! நான் உண்மையில் எதுவும் பாவம் செய்யவில்லையே! சிகிச்சை செய்யாமல் திரும்பி வந்தேன். அவ்வளவுதானே? நான் யாரையும் கொலை செய்யவில்லை. யார் பொருளையும் திருடவில்லை” என்று கேட்கிறான்.
அதைக் கேட்ட சாகல்யர் புன்னகை செய்துவிட்டு சில வாக்கியங்களை கூறுகிறார். ஒவ்வொரு மருத்துவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. அதேபோல் வைத்திய சாஸ்திரம் படித்து எதிர்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த போதனைகளை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இது சாகல்ய ருஷி வாக்கியம்! “விஷத்தாலோ நோயாலோ வருந்தும் நோயாளியை காப்பாற்றக்கூடிய சக்தி சாமர்த்தியம் இருந்தும்கூட காப்பாற்றாத வைத்தியன் மகா பாதகங்களைச் செய்தவனை விட மகா பாதகன்!” என்கிறார்.
“பலரைக் கொன்ற பாவத்தை விட பெரிய பாவம் என்னவென்றால் உனக்கு சாமர்த்தியம் இருந்தும் மருத்துவம் செய்ய மறுப்பதும், செய்யாமல் இருப்பதும்தான்” என்று தெரிவிக்கிறார்.
“நீ கேட்கலாம் அரசன் எப்படியும் சாபத்தால் மரணிக்கத்தானே போகிறான் என்பதால் நான் சிகிச்சை செய்யவில்லை. அதில் தவறென்ன? என்று நீ கேட்கலாம். அவ்வாறு எப்போதும் நினைக்கக்கூடாது. உயிர் போகும் நிலையில் கூட, அடுத்த கணத்தில் இறந்துவிடுவான் என்று தெரிந்தாலும் கூட சிகிச்சை செய்யக் கூடியவன் சிகிச்சை செய்ய வேண்டுமே தவிர மறுக்கக் கூடாது” என்கிறார்.
“ஏனென்றால் காலம் எப்படி இருக்கும் என்று யாராலும் கூற இயலாது. காலம் ஆச்சரியகரமாக சிகிச்சைக்கு பலனளிக்கும்படி செய்யக்கூடியது. நீ கொடுக்கும் மருந்தினால் அவன் உயிர் பிழைக்கலாம். ஏனென்றால் பூர்வ ஜன்மங்களில் செய்த பாவத்தின் பலனாகத்தான் நோய்கள் வருகின்றன. அந்த நோய் தீருவதற்கு ஔஷதம், மந்திரம், மணி என்ற மூன்றும் பயன்படும். மூன்றாலும் சிகிச்சை செய்ய வேண்டும். இம்மூன்றும் செய்தாலும் மரணித்துவிட்டான் என்றால் அப்போது பிராரப்தம் என்றும் காலத்தில் விளைவு என்று நினைக்க வேண்டுமே தவிர நீ சிகிச்சை செய்யாமலேயே, ‘எல்லாம் காலத்தின் கோளாறு! எப்படியும் சாகத்தானே போகிறான்?’ என்று கூறக் கூடாது” என்பதை அழுத்தமாக போதித்தார்.
“தட்சகனின் பேச்சைக் கேட்டு அரசனை காப்பாற்றாமல் திரும்பிச் சென்று விட்டதால் நீ மகாபாதகம் செய்தவர்களை விட பெரிய பாதகம் செய்தவனாவாய். ஏனென்றால் ஜாதகத்தின்படி ஆயுள் இல்லாவிட்டால்கூட மரணிக்கும் வரை சிகிச்சை செய்ய வேண்டிய பொறுப்பு வைத்தியர்களுக்கு உள்ளது. அப்படியின்றி வைத்தியர் பேராசையாலோ குரோதத்தாலோ காமத்தாலோ பயத்தாலோ மருத்துவ சிகிச்சை செய்யாமல் மறுத்தால் அவன் மகா பாபம் செய்தவனாகிறான்” என்கிறார். இத்தனை ஸ்பஷ்டமாக கூறுகிறது சாஸ்திரம்.
இதனை தற்கால மருத்துவர்கள் அனைவரும் அறிவது அவசியம். பொருளாசையால் நோயாளிகளை வஞ்சித்து, தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனாவசிய டெஸ்டுகள் செய்து நோயாளியை மேலும் தொல்லைகுள்ளாக்கி பணம் பறிப்பவர்கள் எத்தனை பாவம் செய்கிறார்களோ! மேல் நாட்டிலிருந்து பெரும் பொருட் செலவில் புதிய கருவிகளை மருத்துவமனையில் வாங்கிப் போட்டிருக்கிறோம் என்று கூறி தாம் போட்ட முதலீடு திரும்ப வரவேண்டும் என்பதற்காக பல மருத்துவர்கள் தேவையற்ற டெஸ்டுகளை எடுக்கச் செய்து அந்த இயந்திரங்களின் ரேடியேஷன் மூலம் நோயாளிகளை மேலும் நோய்க்கு ஆளாக்குகிறார்கள்.
அப்படிப்பட்ட சமயங்களில் மருத்துவர்களுக்கு சில நியமங்களை நம் சாஸ்திரங்கள் கூறியுள்ளன என்பதை அறிய வேண்டும். தற்காலத்திலும் கூட மருத்துவப் படிப்பு படிப்பவர்களிடம் மருத்துவப் பட்டம் பெறும் போது சில வாக்குறுதிகளைப் பெறுகிறார்கள். ஆனால் அதோடு சரி அந்த வாக்குறுதிகள்! அதற்குத் தகுந்த மனத்தூய்மை இருப்பதில்லை.
மனத்தூய்மை இன்றி பிரதிக்ஞை செய்தால், அது பிற்பாடுள்ள வாழ்க்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. அதனால் முதலிலிருந்தே பாவச் செயலின் மீது பயமும், தர்மச் செயலின் மீது விருப்பமும் இருந்தால், ‘வாக்குறுதிகளில் கையெழுத்திட்டிருக்கிறோமே! அதற்கு எதிராக நடந்து கொள்ளக் கூடாது’ என்று பயமாவது இருக்கும்.
செல்வத்தின் மீது கொண்ட பேராசையோடு மருத்துவத் தொழிலை செய்வதால் பல பாவங்கள் அவர்களை வந்தடைகின்றன.
வைத்தியத் தொழிலில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு திருப்திபடுவதில் தவறில்லை. ஆனால் சிகிச்சையில் வஞ்சனை கூடாது. சிகிச்சை செய்யாமல் இருப்பதும் கூடாது.
பணம் கொடுக்க இயலாத ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்க மறக்கக் கூடாது. பணம் கொடுக்கிறார்கள் என்பதற்காக அனாவசிய சிகிச்சைகள் செய்து அவர்களை தொல்லைக்காளாக்கவும் கூடாது.
இவை அன்றைய ரிஷிகள் கூறியுள்ள வைத்திய நியமங்கள். இது போன்றவை இன்றைய தலைமுறைக்கும் தேவையானதே என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



