
ஆதிசங்கரர் கூறிய, “அர்த்தமனர்த்தம் பாவய நித்யம்…!” என்ற ருஷி வாக்கியத்தைச் சிந்தித்து, ‘அர்த்தம்’ எனப்படும் செல்வதால் விளையும் ‘அனர்த்தம்’ எனப்படும் தீமைகளைப் பற்றி வியாச மகரிஷி என்ன கூறியுள்ளார் என்பதை இப்போது பார்ப்போம்.
இதனைக் கொண்டு தனம் பற்றிக்கூட ருஷிகள் கூறியிருக்கிறார்கள் என்றால் முழுமையான வாழ்க்கை தொடர்பான விஷயங்களை கூறுபவர்களே ருஷிகள் என்பதை அறிய முடிகிறது.
ஏனென்றால் மனிதன் ஏதோ ஒரு ஆசையோடு வேலை செய்வான். முன்னும் பின்னும் யோசிக்க மாட்டான். முன்னும் பின்னும் பார்க்காததால் ஏற்படும் அனர்த்தங்களை, சேதங்களை, தீமைகளைக் குறித்து ருஷிகள் எச்சரிக்கிறார்கள். அதனை அறிந்து கொண்டு கவனமாக அடி எடுத்து வைத்தால் வாழ்க்கையில் தோல்வியடையாமல் இருக்க முடியும். இறுதியில் பரமார்த்தத்தை நோக்கிச் செல்ல முடியும். அவ்விதம் ருஷி வாக்கியங்கள் நமக்கு தினசரி வாழ்க்கையில் திசைகாட்டி உதவுகின்றன.
முக்கியமாக செல்வம் ஈட்டுபவர்கள் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்களை வியாசபகவான் எத்தனை அழகாக எடுத்துரைக்கிறார், பாருங்கள்! செல்வத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் எத்தனை விதங்களில் இருக்கிறது என்பதை விவரிக்கிறார்.
மேன்மை, சிரேயஸ் வேண்டுமென்று விரும்புபவர் செல்வத்தின் தொடர்பிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்கிறார் வியாசர். ஏனென்றால் செல்வத்தினால் பதினைந்து வித அனர்த்தங்கள் விளைகின்றன என்கிறார்.
முதலாவது- சௌரியம். அதாவது திருட்டு. தனம் ஒரு இடத்தில் இருக்கிறது என்றால் நிச்சயம் அங்கே திருட்டு பயம் இருக்கும். சம்பாதித்த பின் அதனை காப்பாற்றுவதென்பது பலவித கஷ்டங்களோடு கூடியது. திருட்டுத்தனம் பலவிதங்களில் நிகழ வாய்ப்புள்ளது. வீட்டில் வைத்தால் திருட்டுப் போய் விடும் என்று எண்ணி வேறு இடத்தில் வைக்கிறோம். அங்கே மட்டும் திருட்டு நடப்பதில்லையா, என்ன? அதனால் முதல் அனர்த்தம் திருட்டு பயம்.
இரண்டாவது- ஹிம்சை. தனத்தினால் ஹிம்சை நடக்கிறது. ஏனென்றால் செல்வந்தர்களைத் துன்புறுத்தி பணத்தை அபகரித்து விட வேண்டும் என்று பலர் காத்திருப்பார். அதேபோல் செல்வம் அதிகம் இருப்பவரும் பிறரைத் துன்புறுத்துவர்.
மூன்றாவது- அசத்தியம். பணத்தை சம்பாதிப்பதற்காக எத்தனையோ பொய்கள் சொல்வான் மனிதன். அதேபோல் அவனிடமிருந்து எப்படியாவது பணத்தைப் பிடுங்க வேண்டுமென்று சுற்றிலும் உள்ளவர்களும் பொய் சொல்லி ஏமாற்றுவார்கள். “நீ பணம் கொடுத்து உதவவில்லையென்றால் என் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும்!” என்றெல்லாம் பொய்யுரைத்து கண்ணீர் வடித்து பணம் பறிக்கும் உறவும் பிறரும் எத்தனையெத்தனை பேர் உலகில் இருக்கிறார்கள்!! அதனால் செல்வத்திற்காக பொய்யுரைக்கிறார்கள்.
நான்காவது- டம்பம். கையில் கொஞ்சம் பணம் கொழித்தால் போதும்…! மனிதன் அடித்துக் கொள்ளும் டம்பம் கொஞ்சநஞ்சமில்லை. எத்தனை ஆடம்பரம் செய்வானென்றால் அவனிடம் பணமிருப்பது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக படாடோபம் காட்டுவான். அதன் மூலம் கர்வம் வளர்ந்து டம்பம் ஏற்படும். ஆடம்பரமும், திமிரும் டம்பம் என்ற சொல்லிற்குப் பொருள்கள்.
ஐந்தாவது- காமம், ஆசை. உண்மையில் காமத்திற்காகவே பணம் சம்பாதிக்கிறான் மனிதன். கோரிக்கைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலருக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையின் கோரிக்கையாக இருக்கிறது. அது மட்டுமல்ல. தனம் அருகில் இருந்தால் தர்மத்திற்குப் புறம்பான கோரிக்கைகளைக் கூட தீர்த்துக் கொள்வான். பணத்தால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும் அல்லவா? அவனைவிட தரித்திரனின் வாழ்க்கையே மேல் என்று கூறவேண்டும். ஏழ்மையால் தேவையற்ற சாமான்களை வாங்கிக் குவிக்க மாட்டான். அதேபோல் அதர்மமான போகங்களின் வழியில் செல்ல மாட்டான். ஓரொருமுறை தரித்திரமே மனிதனை தர்மாத்மாவாக சீர்படுத்துகிறது என்று கூற வேண்டும். செல்வம் சேரச் சேர மனிதன் அருந்தக் கூடாதவற்றை அருந்துவான். தின்னக்கூடாதவற்றைத் தின்பான். செய்யக்கூடாதவற்றைச் செய்வான். எனவே தர்மத்திற்குப் புறம்பான காமத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தாகமும், அதனைத் தீர்த்துக் கொள்ளும் வாய்ப்பும் செல்வத்தால் ஏற்படுவதால் ஐந்தாவது அனர்த்தமாக காமத்தைக் கூறியுள்ளார்கள்.
அடுத்தது- குரோதம். இது ஒரு விகார புத்தி. இதுவும் செல்வதால் ஏற்படுகிறது. ஒருவரிடம் செல்வம் இருப்பதைப் பார்த்து, “ஐயோ! என்னிடமில்லையே!” என்று மற்றொருவனுக்கு குரோதம் ஏற்படுகிறது. அந்தச் செல்வத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்று குரோதத்தோடு கூடிய எண்ணங்களைக் கொண்டிருப்பான். பொறாமை, அசூயை, கர்வம்… இந்த மூன்றும் குரோதத்தின் உடன்பிறப்புகள்.
ஏழாவது- விஸ்மயம். அதாவது குழப்பமான, விசித்திரமான நிலைமை. செல்வம் சேருவதற்கு முன் மனிதனின் நிலை வேறு. செல்வம் சேர்ந்த பின் அவன் போடும் வேஷங்களைப் பார்ப்பவர்கள் வியப்பில் ஆழ்ந்து குழம்பிப் போவார்கள். செல்வம் சம்பாதிப்பதற்காக விசித்திரமான பல வேஷங்களைப் போடுவான் மனிதன். அதேபோல் செல்வம் சேர்ந்த பின்பும் விசித்திரமாக நடந்துகொள்வான்.
அடுத்தது- கர்வம். இதற்கு விளக்கமே தேவையில்லை.
அடுத்து- பேதபுத்தி. அதாவது வேறுபாட்டுணர்வு. செல்வம் சேர்ந்த பிறகு அதற்கு முன்பிருந்த நண்பர்கள் விரோதிகளாகவோ அல்லது அற்பமானவர்களாகவோ தென்படுவர்.
அடுத்து- வைரம். அதாவது விரோதம். செல்வம் இருந்தால் கட்டாயம் எதிரிகள் இருப்பார்கள்.
அடுத்தது- அவிசுவாசம். செல்வம் சேர்ந்து விட்டால் அவன் யாரையும் நம்ப மாட்டான். தன்னிடமிருந்து செல்வத்தை அவபகரிப்பதற்காகவே அனைவரும் முயற்சிக்கிறார்கள் என்ற எண்ணத்தோடு எந்நேரமும் யாரையும் நம்பாமல் வாழ்வான்.
சண்டை சச்சரவு, அதர்மமான வழியில் பெண்கள் தொடர்பு, சூதாட்டம், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாவான்.
இதுபோன்ற பதினைந்து வித அனர்த்தங்கள் செல்வத்தினால் ஏற்படும் என்பதால்தான் செல்வத்திற்கு மகாத்மாக்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்கிறார்கள்.
உண்மையில் இந்த பாடத்தை பால்யத்திலிருந்தே நம் குழந்தைகளுக்கு கற்பிக்க முடியுமானால் செல்வத்தால் அனுபவிக்கக்கூடிய ஆடம்பரங்களோ தீய பழக்கங்களோ வாழ்க்கையின் இலக்கு அல்ல என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். தர்மத்தோடு கூடிய நாணயமான வாழ்க்கை முறையை வாழ வேண்டும். அது உலகத்திற்கு பயன்படக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற லட்சியத்தை உணர்வார்கள்.
அப்படியின்றி செல்வம் சேர்ப்பது மட்டுமே வாழ்வின் லட்சியம் என்ற எண்ணம் ஏற்பட்டால் சிறுவயதிலிருந்தே அனர்த்தமான தீமைகள் பழக்கமாகி விடும் வாய்ப்புள்ளது.
எனவே அர்த்தத்தில் (செல்வத்தில்) உள்ள அர்த்தமற்ற நிலையைப் புரிந்துகொண்டு அனர்த்தங்களான பதினைந்தையும் அருகில் நெருங்கவிடாமல் இருக்கக்கூடிய வாழ்க்கையை அருளும்படி பரமாத்மாவைப் பிரார்த்திப்போம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



