spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்உலகத்திலே எதை வெல்வது கடினம் தெரியுமா?

உலகத்திலே எதை வெல்வது கடினம் தெரியுமா?

krishna arjuna rath
தறிகெட்டு ஓடும்…… என்ன செய்வது?

உலகத்திலே எதை வெல்வது கடினம். தெரியுமா? புலன் களை வெல்வது தான் கடினம்.
புலன்களை வென்றவன் ஞானியாகிறான். புலன்களால் வெல்லப்பட்டவன் பேதையாகிறான்!
திருமங்கை ஆழ்வார் முதல் பாசுரத்திலேயே கூறிவிடுகிறார்.
…………….. கூடினேன் கூடி
இளையவர் தம்மோடு அவர் தரும் கலவியே கருதி …
ஐந்து புலன்கள் ஆளை புரட்டி எடுத்துவிடும்.

கருடபுராணத்தில் ஒவ்வொரு புலன்களும் எப்படி அழிவுக்குக் காரணமாக இருக்கின்றன என்று அபாரமாக விளக்கப்பட்டிருக்கிறது.

ஐந்து புலன்களும் ஒரு சேர மனிதனைப் படாதபாடு படுத்தும்போது அவன் என்ன செய்யமுடியும்?.

முற்றும் துறந்ததாகச் சொல்லிக் கொள்கிறவர்களுக்குக் கூட கஷ்டம். பல யோகங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டே வந்த பகவான் கடைசியாக மோட்ச சந்நியாச யோகத்தைப்பற்றிச் சொல்கிறான்.

மோட்சம் என்றால் விடுதல் என்று பொருள். சந்நியாசம் என்றால் துறத்தல்! மோட்சம் பெற்ற பின் என்னவிடவேண்டும். அல்லது விடுவதற்கு அங்கே என்ன இருக்கிறது! மோட்சம் பெற்றோம் என்று நினைப்பதையே விடவேண்டும்.

ஒரு துறவி இருந்தார். கையில் கிடைத்ததைச் சாப்பிடுவார். கிடைக்காத போது பேசாமல் இருந்து விடுவார். இருக்குமிடம் தேடி என் பசிக்கே அன்னம் உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன் என்ற கொள்கையை உடையவர் அவர்.

ஒரு நாள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஓர் வயல் வரப்பிலே படுத்துக் கொண்டிருந்தார்.
வரப்பு மண்னை கொஞ்சமாக கையால் பிடித்து தலைகாணிபோல் உயர்த்தி வைத்துக் கொண்டு ஏகாந்தமாகப் படுத்துக் கொண்டிருந்தார். சற்றுத் தொலைவில் ஓர் குளம் இருந்ததது. அந்தக் குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக சில பெண்கள் குடத்தோடு சென்று கொண்டிருந்தனர்.

ஒருத்தி சாமியாரைச் சுட்டிக்காட்டிச் சொன்னாள். “துறவு நிலை என்றால் இதுதான். நமக்குத்தான் தூக்கத்திற்கு ஆயிரம் வசதி தேவைப்படுகிறது. இரவு கொஞ்ச நேரம் ஃபேன் காற்று நின்று விட்டாலும் தூக்கம் கெடுகிறது… சாமியாரைப் பார். அரைமுழம் துணி ! ஒரு திருவோடு. வேறென்ன இருக்கிறது. துறவு என்றால் இதல்லவா துறவு”

அடுத்ததாக வந்து கொண்டிருந்த பெண் நறுக்கென்று கேட்டாள்.”துறவு என்றால் எதுவும் இருக்கக்கூடாது. இங்கு எல்லாம் இருக்கிறதே …”

முதல் பெண் சொன்னாள்.
“என்ன எல்லாமும் இருக்கிறது. ஒரே ஒரு திருவோடு தானே இருக்கிறது…”

“ஆமாம் . ஆமாம் திருவோட்டில் இருந்துதான் எல்லாம் ஆரம்பிக்கும் …. பிறகு சாமியாரே மாமியார் தேட ஆரம்பித்து விடுவார்…”

‘அப்படியா சொல்கிறாய்…!”

‘ஆம்! இதற்கு முன் ஒரு சாமியார் நம் ஊரில் இருந்தாரே… அவர் என்ன செய்தார். தன்னுடைய ஒரே துணியான கௌபீன வஸ்திரத்தை அவ்வப்போது எலி கடித்து விடுகிறது என்பதற்காக ஓர் பூனை வளர்த்தார். இவருக்கே பிச்சை எடுக்க வேண்டும். பூனைக்கும் சேர்த்தல்லவா கேட்கவேண்டும் சரி. தினசரி ஒரு நாள் போலவா வீட்டுக்கு வீடு பூனைக்குப் பால் தர முடியும் என்று யாரோ ஒரு புண்ணியவான் கோதானம் செய்கிற சாக்கில் ஒரு நோஞ்சான் பசுவைத் தந்தார். அந்த நோஞ்சான் பசுவுக்கு பால் கறக்க புல்லைப் போட வேண்டும். சாணத்தை அள்ள வேண்டும். ஒரு கால் ஏக்கர் நஞ்செய் நிலத்தைத் தானம் செய்தார் இன்னொரு புண்ணியவான். அப்புறம் …. புல்லறுக்க …. மாட்டைக் குளிப்பாட்டி பராமரிக்க என்று ஓர் பெண்ணை நியமித்துக் கொண்டார். இப்போது சம்சாரியாக இருக்கிறார்…”

அடுத்த நாள் அதே பெண்கள் தண்ணீர் எடுக்கப் போனார்கள். சாமியார் தன்னுடைய திருவோட்டைத் தூக்கி தூர எறிந்து விட்டு வரப்பு மேலே மண்ணைக் குவித்துப் படுத்திருந்தார்.

ஒரு பெண் ஆச்சரியத்தோடு சொன்னாள்.

“அக்கா! நேற்று ஏதோ சொன்னாயே! திருவோடு சொத்தாக வைத்துக் கொண்டிருப்பவர் எப்படித் துறவியாக முடியும் என்று … இன்றைக்குத் திருவோட்டை தூக்கி எறிந்து விட்டு என்ன ஏகாந்தமாய் ராஜா மாதிரி படுத்திருக்கிறார் பார் …”

“என்ன பார்ப்பது ..?. அது தான் ராஜா மாதிரி படுத்திருக்கிறாரே! நமக்குப் பஞ்சு தலை காணி இல்லாவிட்டால் தூக்கம் வருவதில்லை. அவருக்கு வரப்பே தலைகாணியாக இருக்கிறது. தூக்கத்தில் கூட துறவிக்கு சுகம் வேண்டியிருக்கிறது என்றால் சாமானிய மக்கள் எம்மாத்திரம்?”

“நீ மோசமான ஆள்!”என்றாள் முதல்பெண். இது காதில் விழுந்த சாமியார் அடுத்தநாள் என்ன செய்தார் என்றால் சமமான புல்தரையில் படுத்துக்கொண்டார்.
இதே பெண்கள் மறுநாளும் போனார்கள்.

அதே பெண் கேட்டாள்.”பார்த்தாயா! இன்றைக்கு சமதரையில் தலைக்கு கையைக் கூட வைத்துக் கொள்ளாமல் படுத்துக் கொண்டிருக்கிறார். இவரல்லவோ துறவி… ”

“என்ன துறவி? எந்தப் பெண்கள் எதைப் பேசுகிறார்கள் … என்று காதைத் தீட்டிக் கொண்டு கிடக்கும் இவரைப்போய் துறவி என்கிறாயே… ”

அடுத்தநாள் அந்தத் துறவி இல்லை.

புலன்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் கஷ்டம். ஏதாவது ஒரு புலன் நம்மைக் கவிழ்த்துவிடும்.

அதனால்தான் ஆழ்வார் காவலிற் புலனை வைத்து என்று சொன்னார்.

“என்னுடைய ஐந்து புலன்களின் கட்டுப்பாட்டில் நான் இல்லை. என்னுடைய ஐந்து புலன்களும் இருக்கின்றன”.

இது சுவாரசியமான அர்த்தம். அவ்வளவுதான். ஆனால் உரையாசிரியர்கள் காவல் இல் புலனை வைத்து என்று உரை காண்கிறார்கள்.

புலன்களை என்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல் கண்டபடி திரியவிட்டு என்று பொருள் காவல் இல் (-) காவல் இல்லாமல்…

ராகா தய : கதம ஜேதும் ஸக்யா வர்ஷஸதைரபி:
தயோக யோக்யம் ஹி மநோ ராகாதி பிரநிர்ஜிதை : ( விஷ்ணு புராணம்)
நூறு வருஷங்களானாலும் காமம், க்ரோதம் முதலிய வைகளை ஜெயிக்க முடியுமா ?
இவைகளை வெல்ல முடியாதபோது மனதில் கர்ம, பக்தி, ஞான விஷயங்கள் எப்படி நுழையும்?

ஒரு துறவி நதிக்கரையோரமாக தியானத்தில் அமர்ந்தார். ஒரு பெண் ஜல் ஜல் என சதங்கை ஒலியுடன் ஆற்றுக்குப் போய்க் கொண்டிருந்தாள். இவரை அறியாமலேயே கண்கள் அவள் பின்னால் போனது. அவள் மறையும் வரை கண்கள் அதே திசையில் தான் போனது.

“ம்…. இன்றைக்கும் தவம் இவ்வளவுதான்” என்று எழுந்தார்.

மறுநாள் ஒரு காரியம் செய்தார். வரும்போதே நல்ல கருப்புத் துணியொன்றை எடுத்து வந்தார். நான்கு பட்டையாக மடித்து கண்களில் கட்டிக்கொண்டார். தியானத்தில் அமர்ந்தார். கொஞ்ச நேரம் போயிற்று.

எங்கேயோயிருந்து சின்னதாக சதங்கை ஒலி கேட்டது. மனம் விழித்துக் கொண்டது.
கொஞ்சம் கொஞ்சமாக அந்த சதங்கை ஒலி பெரிதாகிக் கொண்டே வந்து, அப்படியே மெலிந்து தேய்ந்து மறைந்தது. இவர் இதயமும் அப்படியே ஆனது.

அடுத்தநாள் கொஞ்சம் பெரிய பஞ்சு உருண்டைகளாக இரண்டு உருண்டைகளைக் கொண்டு வந்தார். காதில் நன்றாக அடைத்து வைத்துக் கொண்டார். தவத்தில் உட்கார்ந்தார்.

ஏதோ ஒரு உணர்வு அவள் வருகையை தெரிவித்தது. மனது இப்போது யோசிக்க ஆரம்பித்தது. மெல்லிய மல்லிகைப்பூ வாசம்… அடுத்த நாள் மூக்கையும் அடைத்துக்கொண்டு முயன்றார். மனம் தானாகவே விழித்துக் கொண்டது. ம்…. இப்போது வருகிற நேரம் தான் என்று சொல்லி, உட்புறமாகக் கண், காது, மூக்கு ஆகிய புலன்களைத் திறந்துவிட்டது.

பயிற்சி பெற்றவர்களாலேயே முடியாத காரியம் அல்லவா இது ! ஐந்து புலன்களும் தறிகெட்டு ஓடுவது இருக்கட்டும். ஏதாவது ஒன்றாவது கட்டுப்படுமா!

கோகுலாச்சாரி, புவனகிரி

(ஆசிரியர், ஆலய தரிசனம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe