‘நிரந்த மெகா கூட்டணி’ 5 மாதத்தில் முறிந்து போனது! உடைத்த மாயாவதி! உடைந்த அகிலேஷ்!

Published:

mayavati akilesh - 2026

பாஜக.,வின் அபார வெற்றியை அடுத்து முதல் அதிர்ச்சி அளிக்கும் அரசியல் பூகம்பமாக, உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி முறித்துக் கொண்டுள்ளார். நிரந்தர கட்பந்தன் – என்று தொடங்கப்பட்ட மஹாகட்பந்தன் – மெகா கூட்டணி, 5 மாதத்தில் முறிந்து போனது. இருப்பினும், இந்தக் கூட்டணி முறிவு தற்காலிகமானதுதான் என சமாதானம் கூறியுள்ளார் மாயாவதி!

உத்தரப் பிரதேசத்தில் பாஜக.,வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே எதிரெதிர் துருவங்களான சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்தித்தன. இரண்டுமே சாதீயப் பின்னணியில் உள்ள கட்சிகள் தான் எனும் போது, சாதீய மரபுகளில் ஊறித் திளைத்த உத்தரப் பிரதேச மக்கள் வாக்களிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்தது. அது, தேர்தல் முடிவில் வெளிப்பட்டுவிட்டது.

இந்த மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் – மாயாவதி கூட்டணி எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 15 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது இந்தக் கூட்டணி. இதிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களிலும் மட்டுமே வெற்றி பெற்றன. அதே நேரம், பாஜக., 62 இடங்களில் வெற்றி பெற்றது.

mayavati mulayam - 2026இந்நிலையில், மஹாகட்பந்தனின் இணைப்புக் கயிறு அறுந்துவிட்டது. அதனை அறுத்து எறிந்துள்ளார் மாயாவதி. வரும் 11 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலிலும், அடுத்து வரும் 2022 சட்டமன்றத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளார் மாயாவதி. இது குறித்து தனது கட்சியினருக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக தேர்வு செய்யப் பட்ட எம்.பி.க்கள்., கட்சி நிர்வாகிகளுடன் 3 மணி நேரத்துக்கும் மேல் ஆலோசனை நடத்தினார்.

ALSO READ:  தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

இது குறித்து விளக்குவதற்காக செய்தியாளர்களைச் சந்தித்த மாயாவதி, “சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு இடையே கூட்டணி அமைந்ததும் அகிலேஷும் அவரது மனைவி டிம்பிளும் எனக்கு நல்ல மரியாதை கொடுத்தனர். நானும் கடந்த கால நிகழ்வுகளை மறந்துவிட்டு அவர்களுக்கு மரியாதை அளித்தேன்.

ஆனால் அரசியல் நெருக்கடிகளை நாங்கள் புறக்கணிக்க முடியாது. மக்களவைத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியான ‘யாதவ’ சமுதாயத்தினர் அவர்களை ஆதரிக்கவில்லை. அக்கட்சி வலுவாக உள்ள இடங்களிலும் அவர்கள் தோல்வியைத் தழுவியிருக்கின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள பிரிவு தற்காலிகமானதுதான். சமாஜ்வாதி தலைமை தனது அரசியல் பணியில் திறமையாக செயல்படுவதை நாங்கள் உணரும்போது, மீண்டும் அக்கட்சியுடன் இணைந்து செயல்படுவோம். அவ்வாறு செயல்படாவிட்டால், தனியாக களம் காண்பதே எங்களுக்கு நல்லது. எனவே வரும் இடைத்தேர்தலிலும் 2022 சட்டமன்றத் தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என்று கூறினார் மாயாவதி.

mulayamsinghyadav - 2026இதனிடையே, மாயாவதியின் முடிவு குறித்து தனது கருத்தைத் தெரிவித்த அகிலேஷ் யாதவ், இது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இருப்பினும் மஹா கூட்டணி என்பது முக்கியமல்ல. இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம். அதற்கான ஆயத்தப் பணிகளை செய்து வருகிறோம் என்று கூறினார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ராஜேந்திர சௌத்ரி, யார் இவ்வாறு சொன்னது? நாங்கள் சேர்ந்தே தேர்தலை சந்திப்போம். ஊடகங்கள்தான் பிரிவினையை ஏற்படுத்துகின்றன என்று கூறினார்.

முன்னதாக, அகிலேஷ் தனது கட்சியின் அனைத்து செய்தி தொடர்பாளர்களையும் ஒரு மாதம் வாய்ப்பூட்டு போட்டு, ஊடகங்களில் எவரும் பேசக் கூடாது என்று கட்டளையிட்டு விட்டார்.

இந்தக் கூட்டணி அமையும் போது தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தவர் அகிலேஷின் தந்தையும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ். அவருக்கு வாக்காளர்களின் எண்ண ஓட்டம் புரியும் என்பதால், மாயாவதியுடனான கூட்டணியால் கட்சிக்கு இழப்பு தான் ஏற்படுமே தவிர பலன் எதுவும் இல்லை என்று கூறினார். ஆனால், தனித்த இரு கட்சிகளின் பலத்தை ஒன்றாகச் சேர்த்தால் பெரும் வெற்றி பெறலாம் என்ற அகிலேஷின் திட்டம் தவிடுபொடியாகியுள்ளது. .காரணம், சாதி ரீதியாக கட்சிகள் இரண்டுமே வளர்க்கப் பட்டு விட்டதுதான்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img