
ஒரு கதையைச் சிலர் கூறி வருவதைக் கேட்கிறோம். ஒருமுறை ஆதிசங்கரர் தன் சீடருடன் காசி க்ஷேத்திரத்திற்குச் சென்றாராம். அங்கு விஸ்வநாதர் ஆலயத்தில் வணங்கிய பின், “நான் சில தவறுகள் செய்து விட்டேன். மன்னிக்க வேண்டும்!” என்று பிரார்த்தனை செய்தாராம். அதைக் கேட்ட சீடர், “சுவாமீ! நீங்கள் தவறு செய்வதாவது?” என்று வியந்தாராம். ஆதிசங்கரர் தான் செய்ததாக கூறிய மூன்று தவறுகள் பற்றி விவரித்தாராம்.
இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்று தெரிந்தும் காசியில் இருக்கிறான் என்று வந்தது முதல் தவறு என்றாராம். கடவுளுக்கு உருவம் கிடையாது. எங்கும் பரந்துள்ளவன் என்று தெரிந்தும் லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கியது இரண்டாவது தவறு என்றாராம். ஞானம் பெறுவதால் பவித்திரமாகுவோம் என்று தெரிந்தும் கூட கங்கையில் ஸ்நானம் செய்து பவித்திரமாக ஆகிவிட்டோம் என்று எண்ணியது மூன்றாவது தவறு என்றாராம்.
இந்தக் கதையைச் சொல்பவரும் கேட்பவரும் ஆஹா ஓஹோ என்று ரசிப்பார்கள். ஆனால் இந்த கதை எந்த ஒரு பிரமாண நூலிலும் கிடையாது. யாரோ ஆதிசங்கரர் மீது தாமாகவே இட்டுக்கட்டி பரப்பி வரும் கட்டுக்கதை இது.
இக்கதையில் உள்ள குற்றங்களை நாம் ஆராய வேண்டும். ஏனென்றால் ஞானி என்பவர் அனைத்தும் அறிந்தவராக எங்கும் இறைவனைக் காணும் ஆற்றல் பெற்றவராக இருப்பார். ஆயினும் க்ஷேத்திரங்களுக்கும் தீர்த்தங்களுக்கும் செல்வதை நிறுத்த மாட்டார். இதை அறிய வேண்டும்.
எங்கும் நிறைந்த இறைவனைக் காணும் சக்தி படைத்த ஞானி க்ஷேத்திரங்களில் இறைவனை தரிசிப்பதற்குச் செல்ல மாட்டார் என்று சொல்வதற்கில்லை. அப்படிப்பட்ட பிரம்ம ஸ்திதியில் இருப்பவர்கள் கூட க்ஷேத்திர தரிசனம் செய்வார்கள். புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வார்கள். அவர்களே அவ்வாறு செய்யும் போது இன்னும் அது போன்ற ஞான நிலைக்குச் செல்லாத நாம் கட்டாயம் புனிதத் தல தரிசனங்களும் புண்ணிய நதி ஸ்நானங்களும் செய்து தீர வேண்டும்.
ஞானி அவ்வாறு செய்வதற்கும் ஞானம் பெறாதவர் செய்வதற்கும் வேறுபாடு உள்ளது. ஞானம் அடைந்தவர், “நான் அனாவசியமாக இங்கு கடவுளைக் காண வந்தேனே! எங்கும் நிறைந்தவர் அல்லவா இறைவன்! இந்தத் தலத்தில் இருப்பாரா?” என்று எண்ண மாட்டார்.
எங்கும் இறைவனை காண்பவர் அந்த க்ஷேத்திரத்திலும் இறைவனை காண்பார். அங்கு வந்து வணங்குவதைத் தவறாக நினைக்க மாட்டார்.
உண்மையான ஞானி அது போன்ற பேச்சுக்களைப் பேசமாட்டார். ஞானமடைந்து விட்டோம் என்ற பிரமையில் இருப்பவர் மட்டுமே, “கோயில்களுக்கு ஏன் போகவேண்டும்? இறைவன் எங்கும் நிறைந்துள்ளான்! கங்கையில் மூழ்கி எழுந்தால்தான் பவித்திரமாக மாறுவோமா? உள்ளம் பவித்திரமாக இருந்தால் போதாதா?” என்பது போன்ற கள்ளப் பேச்சுக்களை உதிர்ப்பார்கள். இதுபோன்றவை சாஸ்திரங்களை ஏளனம் செய்யும் பேச்சுக்கள்.
“கங்கையில் குளித்தால் பவித்திரமாக ஆவோம்!” என்பது ருஷிகள் கூறியுள்ள வாக்கியம். அதிலும் நம் உடலில் உள்ள அழுக்குகள் அதாவது வெறும் பௌதீகமான உடலழுக்கல்ல… பாவ மலங்கள்…. கர்ம மலங்கள். அவை நம் கண்ணில் தென்படமாட்டா!
கண்ணில் படாத தீவினைப் பயன்களான மலினங்களையும் மனதின் அழுக்குகளையும் முற்பிறவியின் பாவ வாசனைகளையும் கங்கை முதலிய தீர்த்தங்கள் நம் கண்ணில் படாத சக்தியால் போக்கடிக்கின்றன.
அதனால் ஆன்மீக சாதகன் கட்டாயம் க்ஷேத்திர யாத்திரை மேற்கொள்ள வேண்டும். இறைவனை தரிசிக்க வேண்டும். எங்கும் நிறைந்த இறைவனின் அனுபவத்தை அனைவராலும் எளிதில் பெற இயலாது. ஆனால் தலயாத்திரை செய்தால் அங்கிருக்கும் இறைசக்தியை நிச்சயம் நாம் அனுபவிக்க முடியும்.
ஞானிகள் ஏன் புனிதத் தலங்களில் இறை தரிசனம் செய்கிறார்கள் என்று கேட்டால் அவர்கள் எங்கும் எதிலும் இறைவனையே காண்கிறவர்களாதலால் அந்த ஆலயத்தில் இருக்கும் இறைவனையும் அவர்கள் கௌரவிக்கிறார்கள்.
மேலும் அது போன்ற மகாத்மாக்கள் தீர்த்த ஸ்நானம் செய்வதாலும் க்ஷேத்திர தரிசனம் செய்வதாலும் அவற்றின் சக்தி மேலும் பெருகி அங்கு வரும் சாமானியர்களுக்கும் அதன் பலன் கிட்டி அவர்களின் சித்த சுத்திக்கு காரணமாகின்றது. அதனால் எப்போதும் புனித தலங்களையும் புண்ணிய நதிகளையும் ஆன்மீக சாதனைகளையும் ஏளனம் செய்யக்கூடாது. அவற்றுக்கு மிகுந்த சக்தி உள்ளது.
சாதாரணமாக நாம் வெளி இடங்களுக்குப் போவதற்கு பதில் ஒரு புண்ணிய தலத்திற்கோ தீர்த்த ஸ்த்லத்திற்கோ சென்றால் கட்டாயம் இறைச் சிந்தனையில் நம் மனம் திளைக்கும் என்பதை கவனிக்க இயலும். அதோடு அவை எப்படிப்பட்ட தோஷங்களையும் போக்கக்கூடியவை. இப்போதும்கூட நமக்குள்ள பலவித பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பல க்ஷேத்திரங்கள் நம் பாரத தேசத்தில் காணப்படுகின்றன.
அப்பேர்ப்பட்ட அற்புதமான பலன்களை அளிக்கும் தலங்களையும் நதிகளையும் உண்மையான ஞானி நிந்திக்கமாட்டார். ஞானமடைந்து விட்டதாக பிராந்தி கொண்டவர் மட்டுமே அவ்வாறு ஏளனம் செய்வார்.

இதன் தொடர்பாக ஒரு யோகீஸ்வரர் தன் அனுபவத்தை விளக்கிக் கூறிய கதை ஒன்று உண்டு. அவர் பெயர் பரமஹம்ச யோகானந்தா. மகாவதார் பாபாஜியின் சீடர் லாஹிரி மகாசயர். அவரின் சீடரான சுவாமி ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் கிரியா யோக தீட்சை பெற்றவர் பரமஹம்ச யோகானந்தா. அற்புதமான அனுபவங்களை யோக சாதனை மூலம் பெற்றவர் பரமஹம்ச யோகானந்தா.
அவர் ஒருமுறை ‘தூங்காத மகான்’ என்றழைக்கப்பட்ட ராம்கோபால் மஜூம்தார் என்பவரை காணச் சென்றார். அவருடைய இல்லம் தாரகேஸ்வரர் ஆலயத்தின் அருகில் இருந்தது.
யோகானந்தா செல்லும் வழியில் ஆலயத்தின் உள்ளே சென்று மகாதேவரை பார்த்தார். ஆனாலும் கூட தாரகேஸ்வர மகாலிங்கத்தை அவர் வணங்கவில்லை. ஏனென்றால் அப்போது அவர் யோக சாதனை செய்து வந்ததால் இதயத்திலேயே இறைவன் இருக்கையில் சிவலிங்கத்தை வணங்குவது எதற்காக என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. எனவே சிவலிங்கத்தை மண்டியிட்டு வணங்காமலேயே மகானைத் தேடிச் செல்லத் தொடங்கினார்.
ஆனால் வழி தவறி விட்டார். ஒருவரிடம் வழி விசாரித்தபோது அவர் வலது பக்கம் திரும்பிப் போகச் சொன்னார். நாள் முழுவதும் திரிந்தும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இரவானதும் ஒரு கிராமத்தை அடைந்து ஒருவரை விசாரித்த போது, “நீங்கள் இடது பக்கமாக சென்றிருக்க வேண்டும்!” என்றார் அவர். அங்கேயே இரவு உணவு உண்டு உறங்கினார் யோகானந்தர்.

விடியற்காலையில் எழுந்து இடது புறம் பார்த்து நடக்கத் தொடங்கினார். மதியம் வெயில் உச்சிக்கு வந்த பின்னும் அவர் வயல் வெளிகளிலேயே நடந்து கொண்டிருந்தார். தூரம் நீண்டதாகத் தெரிந்தது. மயங்கி விழும் நிலையில் இருந்த அவரை “தூங்காத மஹான்” தானாகவே வந்து சந்தித்தார். சூட்சுமப் பார்வை கொண்ட அந்த மகான், “யோகியாகி விட்டதாக எண்ணி வழியில் மகாலிங்கத்தைக் குனிந்து வணங்காமல் வந்துவிட்டாய்” என்றார். “சர்வ வியாபகமானவரும் எல்லையில்லாதவருமான மகாதேவனின் சக்திக் கேந்திரம் அந்த ஆலயம். அப்படிப்பட்ட சக்திக் கேந்திரத்தை வெறும் சிலையாக எண்ணி நிராகரித்து விட்டாய். அந்த தவறின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பதால்தான் இடதும் வலதும் வழி கூறும்போது மாறி விட்டன” என்றார்.
மீண்டும் திரும்பிச் செல்லும்போது அந்தக் கோவிலுக்குச் சென்று மகாலிங்கத்தை வணங்கி மன்னிப்புக் கோரினார் யோகானந்தா.
இதனை நாம் கவனித்தால் ஆதிசங்கரரை பற்றி முன்பு கூறியது வெறும் கட்டுக் கதை என்பது புரியும். எனவே மகாத்மாக்கள் நிச்சயம் சர்வ வியாபகமான பரமாத்மாவை அனுபவத்தில் உணர்ந்த போதிலும் தலங்களுக்கும் புண்ணிய நதிகளுக்கும் சென்றபோது அங்குள்ள தெய்வீக சக்தி கேந்திரங்களை வணங்கி வருவார்கள்.
நமக்கு மானுட உடலுணர்வு இருக்கும் வரை தலங்கள் தெய்வங்கள் நதிகள் இவற்றை தரிசிப்பது என்பது கட்டாயம் செய்ய வேண்டிய கடமை.
ஞான நிலையை எய்தியவர்களுக்கு இவற்றின் அவசியம் இல்லையானாலும் அவற்றை கெளரவிப்பார்கள். ஞானம் பெறும் வரை ஒவ்வொருவரும் அவற்றை தரிசித்து வணங்க வேண்டும். அங்கு செய்யவேண்டிய நற்செயல்களைப் புரிய வேண்டும். அதன்மூலம் உள்ளத்தூய்மை, பக்தி, முக்தி அனைத்தும் கிடைக்கும்.
அதனால் ஞானி அவற்றின் தேவை இல்லாவிட்டாலும் கௌரவிப்பான். நாம் தேவை இருப்பதால் அவற்றை கட்டாயம் தரிசித்து வணங்கி உய்வு பெற வேண்டும். இவை க்ஷேத்திர தீர்த்த மரியாதைகள்!
இப்படிப்பட்ட அற்புதமான விஞ்ஞானத்தை அருளிய மகரிஷிகளுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



