
ஆனந்தம் எவ்வாறு கிடைக்கும்? என்ற கேள்வியை பலரும் கேட்டுக் கொள்வார்கள். உலகில் ஒவ்வொருவரும் தினமும் காலையில் எழுந்தது முதல் மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகவே முயற்சிக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.
வருத்தம் எவ்வாறு கிடைக்கும்? எப்போதும் அழுவோம்? என்று யாரும் கேள்வி கேட்டுக்கொள்வதில்லை. எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதே அனைவரின் கேள்வியும்!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு முயற்சிப்பவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியைப் பெறுகிறார்களா? இல்லை என்பதே பதில். பலரும் அதில் தோல்வி கண்டு துக்கப்படுகிறார்கள். அதனைக் கொண்டு நம் முயற்சியை ஆதாரமாகக் கொண்டு ஆனந்தம் உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
ஆனந்தம் எதனால் கிடைக்கும் என்ற கேள்விக்கு இதுவரை யாராவது விடை கூறியுள்ளார்களா என்று தேடினால் அந்த விடையைப் பெரியவர்கள் எவ்வாறு கூறியுள்ளார்கள் என்பதைக் காண முடியும்.
ஒரு குறிப்பிட்ட பொருள் நமக்குக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவோம் என்று சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அதே பொருளை அடைந்தவனிடம் சென்று அவன் ஆனந்தமாக இருக்கிறானா என்று கேட்டால் அவன் என்ன கூறுவான்? “அந்த பொருள் கிடைக்கும் வரை அது கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அதை சம்பாதித்தபின் அதன்மூலம் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்பதை அறிந்தேன்” என்பான்.
அதனால் மகிழ்ச்சி எதில் உள்ளது? என்ற கேள்விக்கு இதுதான் என்று திட்டவட்டமான பதிலை யாரால் கூற முடியும்? இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒரு செல்வந்தர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று நினைப்போம். அவரிடம் சென்று கேட்டால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறமாட்டார். இல்லை என்றும் கூற மாட்டார். ஏனென்றால் அந்த செல்வதால் சில துன்பங்களை அவர் அனுபவிக்கிறார்.
உலகில் சிலருக்கு குழந்தை பிறக்காததால் துயரம் என்பார்கள். பிறந்த குழந்தைகளால் துன்பப்படுபவர்கள் அதைவிட அதிகம். அதனால் இது இல்லாவிட்டால் துயரம். இது இருந்தால் மகிழ்ச்சி என்று நினைப்பது எதுவும் ஒப்பீட்டு முறையில் ஒவ்வொரு விதமாக காணப்படுகிறது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட வஸ்து கிடைத்தால் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று கச்சிதமாக கூறக்கூடியவர் ஒரே ஒருவர்தான். அவர் யார் என்றால் இறைவனோடு அனுபந்தம் கொண்ட யோகி மட்டுமே!
செல்வம் பெற்றவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால் இறைவனோடு அனுபந்தம் பெற்றவன் ஆனந்தமாக இருப்பான் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
அதற்கு யுக யுகங்களாக வாழ்ந்துவரும் யோகிகளின் வரலாறே பெரிய உதாரணங்கள்.
நிரந்தரம் இறை சிந்தனையில் இருக்கும் மகாத்மாவிடம் சென்று கேட்டால், “ஆமாம். நான் ஆனந்தமாக இருக்கிறேன்” என்று கூறுவார். திட்டவட்டமாக மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுபவர் யார் என்றால் இறைவனோடு தொடர்பு உள்ளவர்கள் மட்டுமே!
ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சர், ஒரு ஆதிசங்கரர், ஒரு சுக யோகீந்திரர், ஒரு பிரகலாதன், ஒரு துருவன், ஒரு ரமண மகரிஷி, ஒரு காஞ்சி மகாசுவாமி…. இவர்கள் அனைவரும் ஆனந்தமாக விளங்கியவர்களே! எதனால்? அவர்களுக்கு இறைவனோடு அனுபந்தம் இருந்ததால்!
இதனைக் கொண்டு இத்தனை வரலாறுகள் மூலம் நமக்கு ருஷிகள் தீர்மானமாகக் கூறும் விஷயம் என்னவென்றால் ஆனந்தம் என்பது இறைவனோடு யோகம் இருந்தால் மட்டுமே கிட்டும் என்பதே!
எனவே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இதுபோன்ற கச்சிதமான ஆனந்தம் கிடைக்கும் உபாயத்தை பிடித்துக் கொள்ள வேண்டுமே தவிர அந்த உபாயத்தை விட்டுவிட்டு அபாயத்தை அளிக்கும் லௌகீக விஷயங்களின் பின்னால் ஓடக்கூடாது.
இறைவனோடு கூடிய தொடர்பு மட்டுமே ஆனந்தத்தை அளிக்கும் என்று தெரிந்து கொண்டு உள்ளத்தை அவனோடு அனுபந்தம் செய்து கொள்ள முயற்சிப்பதே உண்மையான சாதனை. அதுவே மகிழ்ச்சிக்கான உண்மையான முயற்சி.
இந்தக் கருத்தை உபநிஷத்து அழகாக தெரிவித்துள்ளது.
“தமேவ விதித்வா அதிம்ருத்யு மேதி”
நான்ய பந்தா வித்யதே அயனாய”
இந்த “நான்ய பந்தா வித்யதே அயனாய” என்ற வாக்கியம் வேதங்களில் பல இடங்களில் பல மந்திரங்களில் காணப்படுகிறது.
“இதைத்தவிர வேறு மார்க்கமே இல்லை!” என்பது இந்த வாக்கியத்தின் பொருள். அதாவது ஈஸ்வரஞானம் அல்லது ஆத்ம ஞானத்தை மிஞ்சி மற்றொரு ஆனந்தமளிக்கும் வழியே இல்லை என்பது விளக்கம்.
“தமேவ விதித்வா அதிம்ருத்யு மேதி” என்று கூறியுள்ளார்கள். “பரமாத்மாவை அறிந்து கொண்டவன் மரணத்தை ஜெயித்து விடுகிறான்” என்பது இதன் பொருள். மிக உயர்ந்த விஷயம் இது.
‘ம்ருத்யு’ என்றால் அஞ்ஞானமே என்று உபநிஷத் கூறுகிறது. சத்தியத்தை தெரிந்து கொள்ளாமல் உயிர் வாழ்வதே ம்ருத்யு.
இதனைக் கொண்டு நாம் உயிரோடு இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் எவரும் உண்மையில் உயிர் வாழ்வதில்லை, மரணிக்கிறார்கள் என்பதை அறிய வேண்டும். அதாவது இறைவனைப் பற்றிய நினைவு இல்லாதவர்களின் வாழ்க்கை உண்மையான வாழ்க்கையே அல்ல! அவர்கள் “ஜீவன் ம்ருதுக்கள்” அதாவது உயிரோடு இருந்தாலும் மரணித்தவர்களுக்குச் சமம்!
ஏனென்றால் எதற்கு மரணிக்கும் குணம் உள்ளதோ அதாவது அழியும் லட்சணம் உள்ளதோ அவையே உண்மையானவை என்ற பிரமையோடு அலைபவர்கள் அனைவரும் உயிர் வாழ்ந்தாலும் இறந்தவரே! அதனால் எது சத்தியமோ அதை அறிய முடிந்தால் அசத்தியமான விஷயங்களிலிருந்து வெளிவர இயலும்.
அதனால்தான், ““தமேவ விதித்வா அதிம்ருத்யு மேதி” என்றார்கள். பரமாத்மாவின் தத்துவத்தை அறிந்து கொண்டவர்கள் மட்டுமே மரணத்தைத் தாண்டக் கூடியவர்கள். மரணத்தை வெல்லக் கூடியவர்கள்.
அதனால் அவ்விதம் இறை தத்துவத்தை அறிந்து கொள்வதே ம்ருத்யுஞ்ஜயத்திற்கும் மகிழ்ச்சிக்கும் உண்மையான மார்க்கம். அதைத்தவிர வேறு மார்க்கமே இல்லை! இந்த இரண்டு வித போதனைகளைக் கூறுகிறார்கள். “அதுவே உண்மையான மார்க்கம்!” என்று கூறுவது ஒன்று. “அதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை!” என்று கூறுவது மற்றொன்று.
அதனால் ஆனந்தத்திற்கு இது மார்க்கம் என்று கூறினால், “ஆமாம். சரிதான். ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இன்னுமொரு வழி இருந்தால் கூறுங்களேன்!” என்று யாரும் கேட்க வாய்ப்பே இல்லாமல் வேறு மார்க்கமே இல்லை என்று கூறியிருக்கும் போது ஈஸ்வரஞானம், ஈஸ்வர அனுபவம் தவிர ஆனந்தத்திற்கு வேறு வழியே இல்லை என்பது தெரிகிறது.
இறை ஆனந்தமே சிறந்த ஆனந்தம் என்று அவரவர் அனுபவம் மூலம் மகாத்மாக்கள் நிரூபித்துள்ளார்கள்.

இதே கருத்தை தியாகராஜர் கிருதியில்,
“இலாகுன விவரிஞ்ச லேனு சாலா
ஸ்வானுப வேகவேத்யமே ஆ பரம பக்தி எந்த கொப்பரா!” என்றார்.
அது அத்தகைய சிறந்த ஆனந்தமயமான அம்சம். அதனை அனுபவித்து பின் விவரித்துக் கூறியுள்ளார்கள். அத்தகு திவ்யமான ஞானத்தை பெறுவதற்காக ஒவ்வொரு மனிதனும் முயற்சிக்க வேண்டும்.
ஏனென்றால் அது கட்டாயம் அசத்தியத்திலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. மரணத்திலிருந்து தாண்டுவிக்கிறது. மேலும் இறை ஞானம் பெற்றவர் மீண்டும் பிறப்பெடுக்க மாட்டார். ஜனனம் மரணம்… மீண்டும் ஜனனம் மரணம்… இந்த சக்கரமே மிருத்யு சக்கரம். இந்த மரணச் சக்கரம் ஈஸ்வரஞானம் பெற்றவர்களை பாதிக்காது. அவர் இறைவனோடு ஐக்கியம் அடைந்துவிடுவார். எப்போது இறைவனோடு ஐக்கியம் அடைகிறாரோ பிறப்பிறப்பில்லாத பரமாத்மாவோடு அவர் ஒன்றாகி மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாத நிலையை எய்துகிறார். அதனால் மனித வாழ்க்கை இறைவனை அடைவதற்காக ஏற்பட்டது என்ற தீர்மானமான லட்சியத்தை ஒவ்வொருவரும் நினைவில் நிறுத்தவேண்டும்.
இதுபற்றி ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சிறப்பாகக் கூறியுள்ளார். “ஜீவிதம் எதற்காக உள்ளது?” என்று கேட்டபோது, “ஈஸ்வரனை அடைவதற்கு!” என்று ஒரே பதில் உரைத்தார். எந்த சந்தேகமும் இல்லை. அது ஒன்றே இலக்கு. அத்தகைய லட்சியத்தோடு யார் வாழ்கிறாரோ அவருடைய வாழ்க்கை ஆனந்தமயமாக விளங்கும். இதனை அறிந்து கொள்ள வேண்டும்.
அந்த லட்சியத்தோடு வாழ்ந்து வரும்போது வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் ஆனந்தமாக இருக்கும். கவலையே இருக்காது! ஏனென்றால் ஏதாவது ஒரு பொருள் கிடைக்குமா கிடைக்காதா என்பது போன்ற கவலைகள் அவர்களுக்கு இருக்காது. ஏனென்றால் மனது பரமாத்மாவோடு இணைந்திருக்கும். தன் தர்மத்தை பொறுத்து… தன் சிரமத்தைப் பொறுத்து… எது கிடைக்கிறதோ அதை கொண்டு திருப்தி அடைந்து விடுவார்.
எனவே ஆனந்தத்திற்கு அதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை என்று தெளிவாக உபநிஷத்து கூறியுள்ள வாக்கியத்தைப் புரிந்து கொண்டு இறைவனை நோக்கி வாழ்க்கையை நடத்த வேண்டும். அதுவே மனசாந்தி அளிக்கக்கூடியது. இத்தகைய உயர்ந்த கருத்தை கூறிய மகனீயர்களுக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



