
ருஷிகள் கூறியுள்ள தர்மங்கள் உலகின் செயல்பாட்டுக்கும் மனிதனை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதிலும் எக்காலத்திற்கும் பொருந்தும் விதமாகக் காணப்படுகின்றன.
முக்கியமாக அரசாள்பவர்கள் மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பதை முக்கிய கடமையாக எண்ண வேண்டும். அதிலும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பது என்பது பற்றி அரசாளுபவருக்கு சனாதன தர்ம சாஸ்திரம் ராஜ நீதி சாஸ்திரம் போன்றவை நிறைய கூறியுள்ளன.
ஆண்கள் பெண்களின் விஷயத்தில் காமக் கண்ணோட்டத்தோடு பல தவறுகளை செய்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆண்களை கடினமாக தண்டிக்க வேண்டும் என்ற சாசனம் நம் தர்ம சாஸ்திரங்களில் தென்படுகிறது.
“யோகாமாம் தூஷயேத் கன்யாம் சசஜ்யோ வதமர்ஹதி”
இத்தனை அழுத்தமான வாக்கியத்தை கூறியுள்ளார்கள்.
அதாவது யார் காமத்தினால் ஒரு பெண்ணை துன்புறுத்துகிறானோ அவனைக் கொன்றாலும் தவறு இல்லை என்று ஆணையிடுகிறது தர்மசாஸ்திரம்.
இதனைக் கொண்டு பெண்களைத் துன்புறுத்துவது என்பது எத்தகைய தவறாக கருதப் பட்டது என்பதை அறியமுடிகிறது.
இன்றைய நாட்களில் கல்லூரிகளிலும் பணி இடங்களிலும் பெண்களைப் பலவிதங்களிலும் துன்புறுத்தும் தீய செயல்களில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களை மன்னிக்கக் கூடாது என்று சனாதன நீதி சாஸ்திரங்கள் அனைத்தும் கூறுகின்றன.
இதில் வியப்பு என்னவென்றால் சனாதன தர்மத்தில் ஒரு நீதி சாஸ்திரம் கூறியுள்ளதும் மற்றொரு நீதி சாஸ்திரம் கூறியுள்ளதும் இந்த விஷயத்தில் ஒன்றாகவே உள்ளது. நமக்கு பலப் பல நீதி சாஸ்திரங்கள் உள்ளன. பிரகஸ்பதி நீதி, சுக்கிர நீதி போன்ற பல நீதிகள் உள்ளன. அதோடுகூட தர்ம சாஸ்திரங்களும் பல உள்ளன. இன்னும் ஸ்மிருதிகளும் பல உள்ளன. இவை அனைத்தும் கூட இந்த விஷயத்தில் ஒரே கருத்தையே கூறுகின்றன.
தீய ஆண்களை இத்தனைக் கடினமாக தண்டிக்க வேண்டும் என்று கூறி, “யாருடைய அரசாட்சியில் திருடர்கள், கலகக்காரர்கள், காமுகர்கள், துஷ்டர்கள் இருக்க மாட்டார்களோ அந்த நாடு பாதுகாப்பான நாடு என்று கூறியுள்ளார்கள்.
திருடர்கள் அதாவது திருட்டுத்தனம் செய்பவர்கள் இருக்கக் கூடாது. ஏனென்றால் வழிப்பறித் திருடர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு அரச பயமில்லை என்று பொருள். அதனால் அரசாணை தீவிரமாக இருக்க வேண்டும். திருடர்கள் திருடுவதற்கு பயப்படும்படியாக அரசாளுபவர் தண்டனையை தீவிரமாக்க வேண்டும்.
அதேபோல் காம விஷயத்தில் நீசத்தனமாக நியமத்தை மீறி நடந்து கொள்பவர்கள் சமுதாயத்தில் இருக்கக்கூடாது. அப்படிப்பட்டவர்கள் தென்பட்டால் அவர்களை கடினமாக தண்டிக்க வேண்டும்.
அதேபோல் காமம் தொடர்பான தவறுகளை மிகக்குறைவாக எண்ணும் சமுதாயம் நல்ல சமுதாயம் அல்ல. ஒரு பெண்ணை காமத் தொடர்பாக மானபங்கம் செய்து தொல்லையளிப்பவனுக்கு மிகக் கடினமான தண்டனை அளிக்க வேண்டும். அதன் மூலம் பிறர் பாடம் கற்றுக் கொள்வார்கள்.
தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர் பயப்படும் நிலை உள்ளது. முக்கியமாக பெண்கள் விஷயத்தில் பெற்றோர் பெரும் கவலைக்கு உள்ளாகியுள்ளார்கள் .வெளியே சென்றால் எப்படிப் பட்ட கஷ்டங்களுக்கு ஆளாவார்களோ என்று பயப்படுகிறார்கள். முக்கியமாக காதல் என்ற பெயரில் காமத்தோடு கூடிய மோகத்தால் சில இளைஞர்கள் செய்யும் கொடுமைகள் பெருகிவிட்டன. அப்படிப்பட்டவர்களை சட்டம் மிக கடினமாக தண்டிக்க வேண்டும் . அவர்கள் மீண்டும் எழுந்து வந்து தீய செயல் புரிய முடியாத அளவுக்கு தண்டனை பலமாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது தர்மசாஸ்திரம்.
அப்படிப்பட்ட தர்ம சாஸ்திரத்தை தற்போதுள்ள சட்டத்தோடு இணைத்துக் கொண்டால் உண்மையாகவே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். அதே போல் ஆண்களின் தீய செயல்களையும் பலாத்காரத்தையும் கட்டுப்படுத்த முடியும்.
இனி துஷ்டரும் கலகக்காரர்களும் எந்த ராஜ்ஜியத்தில் இருக்க மாட்டார்களோ அந்த தேசம் இந்திரலோகத்துக்குச் சமம் என்று கூறியுள்ளார்கள்.
கலகக்காரர்கள் என்றால் போராட்டக்காரர்கள். சுயநலத்திற்காக பலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு மக்கள் நலம் பெறும் நிகழ்வுகளையும் அரசாங்க பொறுப்புகளையும் நிர்வாகம் செய்ய விடாமல் தடுப்பவர்கள். அவர்களுக்கு சட்ட பயமில்லை. அதேபோல அரசாணை மீதும் பயமில்லை.
யார் சட்டத்திற்கு கௌரவம் அளிக்கமாட்டார்களோ, ஒரு நாட்டின் தர்மத்தை மதிக்க மாட்டார்களோ, ஒரு நாட்டின் நீதித்துறையை அவமதிப்பார்களோ அவர்களை கலகக்காரர் என்பார்கள். நீதி நியாயம் சட்டம் இவற்றை மதிக்காமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் கலகக்காரர்களே! அப்படிப்பட்டவர்களிடம் அரசாளுபவர் அசட்டையாக இருக்கக்கூடாது. அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம்.
இங்கு இந்த நால்வரின் விஷயத்தையும் கவனிக்கையில் ஒருவன் திருடன், இரண்டாமவன் காமுகன், மூன்றாமவன் துஷ்டன், நான்காமவன் கலகக்காரன். இந்த நால்வரையும் அரசாளுபவர் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று கூறுகிறது தர்ம சாஸ்திரம்.
துஷ்டன் என்ற சொல்லுக்கு வியாபாரம் போன்ற வடிவங்களிலோ ஹிம்ஸைச் செயல்களிலோ வஞ்சனையால் ஏமாற்றுபவன் துஷ்டன்என்ற சொல்லால் குறிக்கப்படுவான். அப்படிப்பட்டவர்களையும் கடினமாக தண்டிக்க வேண்டும்.
எப்போதும் சரி சட்டங்கள் இருந்தால் மட்டும் போதாது. அவற்றை திறமையாக தீவிரமாக அமல்படுத்த வேண்டும் . பொது மக்களுக்கும் சட்டம் நீதி அவற்றை இயக்கும் நிர்வாகத்தின் மீது மதிப்பும் பயமும் இருக்க வேண்டும்.
சில அயல் நாடுகளில் அவற்றின் சட்ட ஒழுங்கை பார்க்கையில் நமக்கு வியப்பாக உள்ளது. அத்தனை சிறப்பாக சட்டத்தை அமுல் படுத்துகிறார்கள். மிகவும் ஆதர்சமாக உள்ளது அவர்களின் சட்ட அமுலாக்கம்.
நம் நாட்டிலும் சட்டங்களை அமல்படுத்துவதில் ஆளுபவர் திறமையானவராக இருக்க வேண்டும். அவரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளும் சட்டத்தை கவனமாக நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகளையும் அவ்வப்போது ஆளுபவர் கவனித்து வரவேண்டும். அதிகாரிகளிலும் இந்த நான்கு வித மக்கள் இருந்தால் அதாவது அதிகாரிகள் திருடனாகவோ காமுகனாகவோ துஷ்டனாகவோ கலகக்காரனாகவோ இருந்தால் அவர்களை கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தண்டனைகளை அமல்படுத்தும் காவல் அதிகாரிகளைக் கூட கண்காணித்து அவர்களில் தவறு தென்பட்டால் கூட தண்டனை அளிப்பதற்கு பின்வாங்கக் கூடாது என்று கூறி யார் யாருக்கு எந்த விதமான தண்டனை அளிக்க வேண்டும் என்று கூட விவரித்துள்ளார்கள்.
சிலருக்கு அபராதத் தொகை செலுத்துவது தண்டனை. வஞ்சனை செய்து ஏமாற்றுபவர் வியாபாரத்தில் தவறு செய்பவர் ஊழல் செய்பவர் போன்றோரை கடுமையான அபராத தொகை மூலம் தண்டிக்க வேண்டும். சிறை தண்டனையும் விதிக்க வேண்டும்.
பெண்களை காமத் தொடர்பாக மானபங்கம் செய்பவர்களை மட்டும் வதைத்துவிட வேண்டும் என்று திடமாக கூறுகிறது தர்ம சாஸ்திரம்.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். தூக்கிலிட வேண்டும் என்று அந்நாளிலேயே கூறியுள்ளது சனாதன தர்மம்.

அந்நாளையின்படி மிகத் தீவிரமான தண்டனையாக தென்பட்டாலும் இன்றைக்கு அந்த அளவு இல்லாவிட்டாலும் அதற்கு சமமான தண்டனை அளித்தால் மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
இவ் விதமாக தேசம் க்ஷேமமாக இருப்பதற்காக பெண்களை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளது அற்புதமான விஷயம்.
அதேபோல் ஊனமுற்றோர் பார்வையற்றோர் முதியோர் போன்றோரை பொருளாதார ரீதியாக அரசாள்பவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது என்கிறார்கள் தர்ம சாஸ்திரத்தில். அவர்களுக்கு பண விஷயமாக பலவிதமாகச் சலுகைகளை அளிக்க வேண்டும். அவர்கள் நலமாக வாழும் வழி ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதேபோல் பண்டிதர்கள் நோயாளி கஷ்டப்படுவர் குழந்தைகள் முதியோர் இவர்களை கௌரவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.
பண்டிதர்கள் என்றால் இப்போதைய மொழியில் கல்வியாளர்கள் என்று பொருள் . அத்தகைய மேதாவிகளை கௌரவிக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான பொருளாதார வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். அப்போது அவர்களால் நாடு பலன் பெறும் என்று தர்ம சாஸ்திரம் விவரிக்கிறது.
இவ்வாறு அரசாட்சி எப்படி இருக்க வேண்டும் என்று கூறியுள்ள சனாதன தர்ம சாஸ்திரங்க ளுக்கு வந்தனம்!!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா.
தமிழில் – ராஜி ரகுநாதன்.



