spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கோயில்களுடன் சேர்த்து... பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

கோயில்களுடன் சேர்த்து… பசு மாட்டிலும் வேம்பு மரத்திலும் கூட இருக்கிறது இந்து சமயம்!

- Advertisement -

இந்து சமயம் என்பது கோயில்களோடு சேர்ந்து பசுமாட்டிலும் இருக்கின்றது. வேம்பு மரத்திலும் இருக்கின்றது! அங்கு மஞ்சள் பூசினால் பக்தி மலர்கின்றது., ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் குலதெய்வ வழிபாடு முக்கியம், குலதெய்வ வழிபாடு தான் மனிதனுக்கு மூலதனம், 32 விதமான தர்மங்களில் கோடைக்கு தண்ணீர் கொடுப்பதும் கூட ஒரு தர்மம் தான் என்று கரூர் அருகே காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமது ஆன்மீக உரையில் கூறினார்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், வீரியாபாளையம் கிராமம் பகுதியில் கண்ணமுத்தாம்பட்டியில் வீற்றுஇருந்து அருள் பாலிக்கும் அருள்மிகு அன்ன காமாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிறப்பாக நடைபெற்றது. இதன் மண்டலாபிஷேக நிகழ்ச்சியினை முன்னிட்டு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி  சுவாமிகள் வருகை தந்தார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கரூர் அன்ன காமாட்சியம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து மண்டலாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்று ஆன்மீக உரையாற்றினார்.

முன்னதாக அவருக்கு பூரண கும்ப மரியாதையும், மலர் மாலைகளும் அளிக்கப்பட்டது! நிகழ்ச்சிக்கு முன்னதாக மூலவர் சுவாமி அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சியம்மனுக்கு விஷேச அபிஷேகங்களை அவரே தனது திருக்கரங்களால் நடத்தி, பின்னர் மஹா தீபாராதனையும் நடத்தினார். இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் அருள் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு, ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பொதுமக்களிடையே ஆன்மீக உரையாற்றினார்.

அப்போது…இந்து சமயம் என்பது கோயில்களோடு சேர்ந்து பசுமாட்டிலும் இருக்கின்றது. வேம்பு மரத்திலும் இருக்கின்றது. அங்கு மஞ்சள் பூசினால் பக்தி மலர்கின்றது. ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும் குலதெய்வ வழிபாடு முக்கியம், குலதெய்வ வழிபாடு தான் மனிதனுக்கு மூலதனம், 32 விதமான தர்மங்களில் கோடைக்கு தண்ணீர் கொடுப்பதும் கூட ஒரு தர்மம் தான்!

ஒவ்வொரு மக்களும் தங்களது குலதெய்வத்தினை வணங்கி வருகின்றனர். மேலும் கோயில் இல்லாத இடத்தில் குடியிருக்க வேண்டாம் என்றும், ஆலயமும் தொழுவது சாலமும் நன்று என நமது நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் அமைதியான வாழ்க்கை அமைவதற்கு கோயில்கள் கட்டி அதில் சுவாமிகளை தரிசித்து வருகின்றோம்!

அதன்படி நமது வாழ்க்கை நல்லபடியாக அமைகின்றது. உண்மையாக நாம் வாழ்ந்து நமது கலாச்சாரத்திற்கும்., நமது குடும்பத்திற்கும் உண்மையாக இருந்து குலதெய்வ வழிபாட்டினை நடத்தி நாம் சக்தி பெற வேண்டும்.

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு சக்திகளும், பேசுவதற்கும், எழுதுவதற்கும், நடப்பதற்கும், வியாபாரம் செய்வதற்கும் என அனைத்து விதமான சக்திகளின் மூலம் நடக்கின்றது.

வயதானவர்களை நாம் நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும்! பெரியவர்களை உபசரித்து கவனித்துக் கொள்ள வேண்டியதுடன், விருந்தோம்பல் என்கின்ற குணத்தினை நாம் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கையை அறத்துடன் கூடிய வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

திருமண பத்திரிக்கையில் அன்பும் அறனும் சேர்ந்து, குலதெய்வங்களின் பெயர்களை போட்டு பின்னர் திருமணம் நடக்கின்றது. ஆகவே, அறத்தினை நாம் தெரிந்து கொள்வதற்கு நாம் நிறையப் படிக்க வேண்டும்! பெரியவர்களுடன் சேர்ந்து நடந்து கொள்ள வேண்டும்

கந்த புராணம், ராமாயணம், மகாபாரதம் போன்ற எத்தனையோ நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. அந்தப் புராதன நூல்களைப் படித்து, இறை அருளை மேன்மேலும் பெருக்கிக் கொள்ள வேண்டும்!

கரூரைப் பொறுத்தவரை, புராதனமான ஆலயங்கள் உள்ளன. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர், நெரூர் சதாசிவ பிரமேந்திராள் ஆகிய ஆலயங்கள்… காலையில் கடம்பர் மத்தியானத்தில் சொக்கர் என்றும், இரவில் அர்த்த ஜாமத்தில் கருப்பத்தூர் ஈஸ்வரன் ஆலயம் சிம்மபுரீஸ்வரர் என இருக்கின்றது

இப்படி காலையில் இருந்து நள்ளிரவு வரை விஷேச ஆலயங்களில் தரிசனம் செய்தால், கோடி புண்ணியம் கிட்டும். ஆகவே, விவசாயம், தொழில்கள், படிப்புகள் வளர வேண்டும்!

ஆரம்ப சுகாதார நிலையங்கள் எல்லா கிராமங்களிலும் தேவையான அளவிற்கு வளரவேண்டும்! அதே நேரத்தில், அரசாங்கமும் நிதி உதவியாளர்களும் நிறைய செய்து வருகின்றனர்.

அதோடு சேர்ந்து பக்தி வளரவேண்டும்; கலாச்சாரம் வளர வேண்டும், மனிதன் மனிதனாக இருப்பதற்கு வேண்டிய அளவிற்கு புத்தியும் வளரவேண்டும்!

இதெல்லாம் ஒரு நாளில், ஒருவர் மூலம் கிடைக்க வேண்டிய விஷயம் இல்லை! உலகத்தில் உள்ள பலரின் மூலமாகப் பார்த்து, உணர்ந்து நமக்கு கிடைக்கின்றது. நமது மனதில் பதிகின்றது. பள்ளிக்கூட வயதிலிருந்து முதியவர்கள் வரை, தர்மம் ஞானம் கிடைக்கின்றது.

மனிதன் நன்றாக வாழ வேண்டும், அதே நேரத்தில் மனிதனோடு சேர்ந்து அனைத்து ஜீவராசிகளும் வாழவேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்! ஒவ்வொரு கோயில்களிலும் கோ பூஜை செய்ய வேண்டும்! இதற்காக கோ சாலைகளை உருவாக்க வேண்டும்! பெரிய கோயில்களில் தினசரி கோ பூஜையும், தீபாராதனையும் செய்ய வேண்டும்! இது போன்ற கிராமத்திற்கு நான் வந்ததன் காரணம், கிராமங்கள் சுபிட்சம் பெற்றும், பக்தி பெற்றும் அனைத்து சமுதாயத்தினரும் அவரவர் குலதெய்வ வழிபாட்டினை சிறப்பாக நடத்தி நம் மரபோடு சேர்ந்து வருவது!

ஆகவே, காது குத்து வைக்க வேண்டிய இடம், பெயர் வைக்க வேண்டிய இடம், கல்யாணம் செய்யவேண்டிய இடம் என்று குலதெய்வங்கள் கோயிலில் வைப்பது தான் சிறந்தது. நமது குலதெய்வ வழிபாடு தான் நமது பெயருடன் சம்பந்தப்பட்டது. மூலதனம் என்பது குலதெய்வ வழிபாடு தான்! மற்றது எல்லாம் வேறு!.

அறம் வளர்த்த நாயகி என்று காமாட்சியம்மனுக்கு பெயர்! 32 விதமான அறங்களை சுவாமி காமாட்சியம்மன் செய்துள்ளார்!

அந்த 32 அறங்களில் அன்னதானமும், நோயுள்ளவர்களுக்கு பணிவிடை செய்தல், சத்திரம் கட்டுதல் என எல்லா தர்மங்களும், அறங்களும் இதிலேயே வந்து விடும்!

கோடைக்கு தண்ணீர் கொடுப்பது ஒரு தர்மமும் கூட! ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர்கூட, முசிறியிலிருந்து வடகரையிலிருந்து தென்கரைக்கு வருகின்ற போது அந்த பக்கத்தில் உள்ள ஜீயபுரம் பகுதியில் உள்ள மண்டபத்திற்கு வருவார்! அப்படி வரும் போது கோடைக்காலத்தினை ஒட்டி, வசந்த ருதௌ, அதாவது வருடத்திற்கு 6 பருவங்கள், அதிலேயே வைகாசி மாதம் இருக்க கூடிய, வசந்த ருதௌ பருவத்தில், தண்ணீர் பந்தல் வைப்பது தர்மம் என்பது!

முன்னோர்கள், அன்றே அந்தக் காலத்திலேயே கலைகளை சேர்த்து வளர்த்து இருக்கின்றார்கள். ஆகவே, மக்கள் அனைவரும் எல்லோரிடமும் இணக்கமாக இருக்க வேண்டிய மன பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டும்!

எத்தனையோ புத்தகங்கள் இருக்கின்றன. எப்படி வேப்பை இலை, பாகற்காய் கசப்பு கொடுக்கின்றதோ, அதே போல்,. ஒரு காலத்தில் நமக்கு தர்மம் கசப்பாகத் தான் இருக்கும்! ஆனால் எப்படி வேப்பை இலை, பாகற்காய் நமக்கு வாழ்க்கையில் தேவைப்படுகின்றதோ, அப்படித் தான் தர்மமும்!

தர்மம், நம் அனைவருக்கும் பகவத் கீதை மூலமாக நமக்கு தெரிவிக்கப்படுகிறது.  ஒவ்வொரு சமூகமும், அவரவர்களுக்காக பாடுபட்டு, பொதுமக்களின் நன்மைக்காகவும் பாடுபடவேண்டும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு தேவையும், உள்ளது. நீர் மேலாண்மைக்கு அந்தக் காலத்திலேயே மரங்களை நட்டார்கள். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், நாம் சுதாரித்து நீரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்! இயற்கையை பாதுகாக்க வேண்டும்!

இலக்கியங்களைப் படிக்க வேண்டும், இறைவனை துதிக்க வேண்டும்! இந்த மூன்றையும் நம் வாழ்க்கையில் குறிக்கோளாக வைத்துக் கொண்டு வாழ்ந்தால் நல்லது.

கிராமங்களில் வில்வ மரங்களை நடவேண்டும். ஒரு வில்வம் சிவன் மீது பட்டால் சிவராத்திரி ஆகும்! அப்படிப் பட்டால் அதில் புண்ணியம் உண்டு! ஆகவே இந்து சமயம் என்பது கோயில்களோடு மட்டுமில்லாமல், பசுக்களிலும் உள்ளது வேம்பு மரத்திலும் உள்ளது, அந்த வேம்பு மரத்தில் மஞ்சளைப் பூசி தரிசித்தால் அங்கு பக்தியும் வளர்கின்றது!

உலகிலேயே நிறைந்த சமயம் இந்து சமயம்! நமது கலாச்சாரம், மரம் செடி கொடிகளில் தெரிகின்றது! குளத்தினை தூர்வாருவது ஏரியை தூர்வாருவது என்பது பூர்த்த தர்மம்!

ஆகவே, படிப்போடு இயற்கையை வளர்க்க வேண்டும். இறைவனின் படைப்புகளில் உள்ள சிறப்புகளில் நம்மால், ஒரு செடியையோ, ஒரு கொடியையோ உருவாக்க முடியாது!

ஒவ்வொரு வீட்டிலும் சாணி தெளித்து, கோலங்கள் போட்டு வழிபட்டால் நல்லது. நமது கலாசாரத்தினை நாம் முற்றிலும் தெரிந்து கொள்ள வேண்டும்! அதே நேரத்தில் கணினி நமக்கு வேண்டும்! அதே போல விஞ்ஞானமும் கலாசாரமும் சேர்ந்து பொதுமக்களுக்கு நல்லது செய்ய திட்டங்களை தீட்ட வேண்டும்… என்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ மலையப்பசாமி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக கருவூர் திருக்குறள் பேரவை செயலாளர் மேலை பழநியப்பன், ஜெகநாத ஓதுவார் அவர்களின் ஆன்மீக உரையும், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe