ருஷி வாக்கியம் (81) – மனித உடல் பயனற்றதா?

Published:

rv1 8 - 2026
ஆன்மிக மார்க்கத்தில் ஒரு வார்த்தையை அடிக்கடி கேட்க நேரிடுகிறது. “இந்த சரீரம் எதற்கும் பயன்படாது; தோல், ரத்தம், கொழுப்பு, எலும்புக்கூடு இவற்றாலானது. இதன் மீது மோகம் கொள்ளாதே! இந்த உடல் நிலையற்றது!” என்பது போன்ற சொற்களைக் கேட்டு வருகிறோம். இந்த சொற்களைக் கேட்கும்போது மானுட உடலை நம் கலாச்சாரம் நிந்தனை செய்கிறது; உடலை கீழ்மையாகப் பார்க்கிறது என்று தோன்றும்.

இந்த ‘உடல் நிந்தனை’ என்பது நம்முடைய வேதாந்த சாஸ்திரங்களில் ஏன் காணப்படுகிறது? இது குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும். இதனை ”தேக நிந்தை” என்பார்கள். “தேஹ நிந்தா ப்ரகரணம்” என்று வேதாந்த சாஸ்திரத்தில் ஒரு பாடம் கூட உள்ளது.

பக்தி மார்க்கத்தில் கூட இந்த கூற்று காணப்படுகிறது. “சரீரம் நிலையற்றது. பரமாத்மா மட்டுமே சாசுவதமானவர்!” என்று கூறப்படுகிறது. அதில், “சாஸ்வதமானவன் இறைவன் மட்டுமே!” என்ற கூற்றை ஒதுக்கிவிட்டு, “இந்த உடல் நிலையற்றது!” என்று நிந்திக்கும் வாக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேதாந்த சாஸ்திரம் மானுட உடலை அனுமதிக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

ஆனால் உடலின் சிறப்பைக் கூட வேதாந்த சாஸ்திரம் கூறுகிறது. அதனையும் யோசித்துப் பார்க்கவேண்டும். “மனித உடல் மிகவும் உயர்ந்தது .மனித உடல் கிடைப்பதற்கு நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்ற கருத்து கூட வேதாந்த சாஸ்திரத்தில் உள்ளது.

“ஜன்தூனாம் நர ஜன்ம துர்லபம்!” – “ஜீவராசிகளில் மனிதப் பிறவி கிடைப்பது மிகவும் அரிது!”. இங்கு மனிதப் பிறவியையும் மனித உடலையும் மெச்சிக் கொள்ளும் விதத்தைப் பார்க்கிறோம். எதனால் அவமதித்தார்கள்? எதனால் மெச்சிக் கொண்டார்கள்?

கிடைத்த உடலை நல்ல விதமாக பயன்படுத்தாவிட்டால் உடலை நிந்திக்கிறார்கள். நல்லவிதமாக பயன்படுத்தும் போது அதனை போற்றுகிறார்கள். அதனால் இந்த உடல் ஒரு கருவி போன்றது என்பதை அறிய வேண்டும்.

இந்த உடலே நான் என்ற அஞ்ஞானத்தை விட்டுவிட வேண்டும் என்பதற்காக சரீர நிந்தை செய்தார்களே தவிர மானுட உடலை நிந்திப்பது அதன் உத்தேசம் அல்ல. அதனால் இந்த உடலை நமக்கு ஒரு வாய்ப்பாக இறைவன் வழங்கியுள்ளான்; இதனைக் கொண்டு நாம் முக்தியை சாதிக்க வேண்டும் என்ற ஒரு தேடலும் விடாமுயற்சியும் இருக்க வேண்டும் என்பதை அறியவேண்டும்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

உடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றி உபநிஷத்து மிகச்சிறந்த மந்திரங்களைக் கூறியுள்ளது.

“சரீரம் மே விசர்ஷணம்
ஜீஹ்வா மே மதுமத்தமா
கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம்”

இந்த மூன்று மந்திரங்களிலும் உள்ள சிறப்பு என்னவென்றால் நம் உடல் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கோரிக்கை இதில் வெளிப்படுகிறது.

எவ்வாறு இருக்க வேண்டும்? முதலில் என் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது ஒரு கோரிக்கையோ ஒரு பிரார்த்தனையோ மட்டுமல்ல. அவ்வாறு ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் பங்கு முயற்சியை நாம் செய்ய வேண்டும். எனவே சரீரம் எவ்வாறு ஆரோக்கியமாக இருக்குமென்றால்,

“யுக்தாஹார விஹாரஸ்ய யுக்த சேஷ்டஸ்ய கர்மசு
யுக்த ஸ்வப்னாவ போதஸ்ய யோகி பவது து:கஹா !!”

என்று பகவத் கீதையில் கூறியுள்ளதுபோல் சரியான உணவு, உடற்பயிற்சி, நல்ல பழக்க வழக்கங்கள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் பங்கு முயற்சியை நாம் செய்தால் மட்டுமே ஈஸ்வரனின் அனுகூலம் கிடைக்கும். எத்தனை முயற்சித்தாலும் சிலர் நோயுற்றிருப்பதைப் பார்க்கிறோம். அதனால் அவர்கள் நியமத்தோடு இருந்த போதிலும் ஆரோக்கியம் பெறவில்லை. அதனால் நாம் நியமத்தோடு இருக்கத் தேவையில்லை. எதை வேண்டுமானாலும் உண்ணலாம் என்று கூறக்கூடாது. இதனை வைத்திய சாஸ்திரம் கூட ஒப்புக் கொள்ளாது. வினைப் பயனால் வரக் கூடியவை வந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் நாமாகவே வியாதியை வரவழைத்துக் கொள்ளக் கூடாது. நம் முயற்சி எப்போதும் நல்ல விதமாக இருக்க வேண்டும். உடலை ஆரோக்கியமாகப் பேண வேண்டும். அப்போது இறைவனை பிரார்த்தனை செய்தால் இறைவன் அருள் கிடைக்கும். எனவே, “சரீரம் மே விசர்ஷணம்!” சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

அடுத்தது, “ஜிஹ்வா மே மதுமத்தமா !” – “என் நாக்கு எப்போதும் இனிப்பாக இருக்கவேண்டும்”. நாக்கு இனிப்பாக இருக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன? என் நாவு எப்போதும் பிரியமான, இனிமையான, உண்மையான சொற்களையே பேச வேண்டும். அதேபோல் என் நாவினால் எப்போதும் இறைவனைத் துதிக்க வேண்டும். இதுவே நாக்கு இனிப்பாக இருப்பது என்பதன் பொருள்.

இனி, “கர்ணாப்யாம் பூரி விஸ்ருவம்” – என்ற அற்புதமான வாக்கியத்தை கூறியுள்ளார்கள். என் காதுகளால் நான் நிறைய நிறைய கேட்க வேண்டும். ஏராளமாக நல்லவற்றைக் கேட்க வேண்டும். நிறைய விஞ்ஞானங்களை இந்த இரு செவிகளாலும் பெறவேண்டும் என்பது இதன் பொருள்.

இதனைக் கொண்டு, உடல் ஆரோக்கியமாக இருப்பது, வாய் நல்ல சொற்களையே பேசுவது, இறைவனை துதிப்பது, காதுகளால் விஞ்ஞானத்தைப் பெறுவது இந்த மூன்றும் ஆன்மீக சாதனையில் மிகவும் இன்றியமையாத அம்சங்கள் என்பதை அறியலாம்.

சரீரம் ஆரோக்கியமாக இருந்தால்தான் எந்தவித சாதனையானாலும் செய்ய முடியும். அதனால் இவற்றை, “ஆத்ம வித்யைக்கு யோக்கியமான சாதனங்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்.

“சரீர மிந்த்ரியஞ்சைவ மனோபுத்தி ததைவ ஹி
வித்யா யோக்யம் சதா பூயாத் பும்ஸோ வேதாந்த பாஸ்கரஹ !”

“உடல், புலன்கள், மனம், புத்தி.. இவை பிரம்ம வித்யை பெறுவதற்கு யோக்கியமாக இருக்க வேண்டும்” என்கிறார்கள்.

அதனால் திடமான ஆரோக்கியமான உடலோடு ஞானத்தை சம்பாதிக்க வேண்டும். ஞானத்தை விஸ்தாரமாக கிரகிக்க வேண்டும். அதனால்தான், “பூரி விஸ்ருவம்” என்று கூறுகிறார். அதற்காக கண்ணில் படும் எல்லா புத்தகத்தையும் படிக்க வேண்டும். காதில் விழும் எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்பதல்ல! அதிகமாகப் படித்தால் ஓரொரு முறை குழப்பம் கூட விளையும். அதிகமாக படிப்பது என்றால் விஞ்ஞானத்தையும் வித்யையையும் அதிகமாக படித்தறிய வேண்டும் என்று பொருள். எந்த நூல்களில் இறைஞானம் உள்ளதோ அந்த நூல்களைப் படித்து பயிற்சி செய்ய வேண்டும். எந்த குருமார்கள் ஈஸ்வரஞானம் போதிப்பார்களோ அவர்கள் மூலம் அவற்றைக் கேட்க வேண்டும்.

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

எனவே, “காதுகள் அதிகம் கேட்கட்டும்!” என்றால் என் காதுகள் எப்போதும் ஈஸ்வர விஞ்ஞானத்தை கேட்கட்டும் என்று பொருள். இறைவன் தொடர்பாக உள்ள ஞானத்தை கேட்க வேண்டும்.

அதனால்தான் பிரகல்லாதன், “விஷ்ணுவை வணங்கும் உடலே உடல்!” என்றான். இறைவனுக்காக உபயோகப்படுத்தாத போது இந்த உடலானது வீண். இந்த உடலை இறைவனுக்காக பயன்படுத்தும் போது உடல் உத்தமமானது.

எனவே, “எந்த சரீரம் ஞான சாதனைக்கும், இறைவனின் கிருபைக்கும் பிரயத்தனம் செய்கிறதோ அந்த உடலே உயர்ந்த உடல்” என்று உபநிஷத்து கூறியுள்ளதையே பிரகல்லாதனும் பாகவதத்தில் கூறுகிறான்.

எனவே, “இந்த உடல் நாராயணனுக்கு அர்ப்பணமாகாத போது அது வீணே!” என்று கூறிய பிரகல்லாதன், “கமலாக்ஷனை அர்ச்சனை செய்யும் கரங்களே கரங்கள்” என்று அடுத்த வரியில் கூறுகிறான். இறைவனின் கைங்கர்யத்திற்கும் இறை தத்துவத்தை அறிந்து கொள்வதற்கும் உடல் பயன்படுமானால் அது சிறப்பானதாகும்.

எனவே உடலை நிந்திப்பது என்பது வேதாந்த சாஸ்திரத்தின் உத்தேசம் அல்ல! சரீரம் நிந்திக்கத்தக்க நிலையில் இல்லாமல் போற்றிப் புகழும் நிலைக்கு உயர வேண்டும். இந்த சரீரம் இருக்கும்போதே இறைவனுக்காக முயற்சித்தால் அது உயர்ந்ததாகிறது.

இந்த எச்சரிக்கை மூலம் நமக்கு மகரிஷிகள் கூறும் கருத்து என்னவென்றால், “இந்த வாழ்க்கையை நல்ல விதமாகச் செலவிடு! நிலையற்ற தேகத்தால்தான் சாஸ்வதமான பரமாத்மாவை அடைய முடியும்!” என்பதே.

இத்தகைய அற்புதமான உபதேசத்தை அருளிய மகரிஷிகளுக்கு வந்தனம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img