
15.07.19ம் தேதி, ஆனி மாதம், மூலம் நட்சத்திரம், திங்கட்கிழமை.. இன்று “ஸ்ரீ சைலேச தனியன் திருவவதார வைபவம்” அதாவது, ஸ்ரீசைலேச மந்த்ரம் பிறந்த நாள் மற்றும் திருப்புளி ஆழ்வார் திருநட்சத்திரம்!
திருப்புளியாழ்வார் தரிசனத்தை நாம், நம்மாழ்வார் திருக்கோயில் கொண்டிருக்கும் ஆழ்வார் திருநகரியில் பெறலாம். இந்தத் திருப்புளியின் கீழ், இந்த உறங்காப் புளியின் கீழ்தான், சுவாமி நம்மாழ்வார் அமர்ந்து யோக நிலை பெற்று, இன்றும் நமக்கு அருள் புரிகிறார்.
“நமக்கு மணவாள மாமுனியினிடத்திலே திராவிட வேதமான திவ்யபிரபந்த வ்யாக்யானங்கள் (விளக்க உரை) கேட்க வேணும். ஆகையாலே மாமுனியை கருடமண்டபத்திற்கு அழைத்து வரச் செய்வீர் ” என்று ஆணை பிறப்பித்தார்.
இதன் மூலம் திருப்பவித்ர உத்ஸவம் நடைபெறும் போது மாமுனிகளின் பெருமையை உலகோர் அறியும்படி செய்ய வேண்டும் என்பதே பெரிய பெருமாளின் விருப்பமாகும்.
பெருமாளின் ஆணைப்படி கருட மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்ட மாமுனிகளும் முதலிகளுடன் கோஷ்டியாக நம்பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து கொண்டிருக்க, நம்பெருமாள் ஸ்ரீ சடகோபனை பிரஸாதித்து,
“நாளை முதலாக நம்முடைய பெரிய திருமண்டபத்திலே, பெரியவண்குருகூர் நம்பியான நம்மாழ்வாருடைய திருவாய்மொழி பாசுரங்களின் விளக்க உரையை ஈடு முப்பத்தாறாயிரத்தின் அடிப்படையில் நீர் சொல்ல நாம் கேட்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.
இதைக் கேட்ட மாமுனிகள் மிகவும் அடக்கத்துடன்,
“நாமார்?பெரியதிருமண்டபமார்? நம்பெருமாள்
தாமாகநம்மை தனித்தழைத்து – நீ மாறன்
செந்தமிழ்வேதத்தின்செழும்பொருளை நாளுமிங்கே
வந்துரையென்று ஏவுவதே வாய்த்து ”
என்று விண்ணப்பஞ் செய்து, மறுதினமே தொடங்குவாத கூறி, நம்பெருமாள் நாச்சிமாருடன் கூடி திவ்ய சிம்மாசனத்திலே வீற்றிருந்து, பாகவத கோஷ்டியாருடன் சேர்ந்து விளக்க உரையை அனுபவிக்கும் படி, நம்பெருமாள் திருமுன்பே வடக்கு முகமாக பெரிய பெருமாளை பார்த்துக் கொண்டு அமர்ந்து சொல்லத் தொடங்கினார்.
கலியுகம்4533ம் ஆண்டு, பரீதாபி வருடம் , ஆவணி மாதம் 31ம் நாள், வெள்ளிக்கிழமை, சுக்ல சதுர்த்தி,ஸ்வாதிநட்சத்திரம் (16.09.1432)
நாளில் தொடங்கி, கலியுகம் 4534 ம் ஆண்டு பிரமாதீச வருடம் ஆனி மாதம், ஞாயிற்றுக்கிழமை, பெளர்ணமி திதி, மூல நட்சத்திரம் (09.07.1433) நாள் வரை தொடர்ந்து பத்து மாதங்கள் மாமுனிகள் வ்யாக்யானம் செய்ய மிகவும் உகந்து கேட்டு மகிழ்ந்தார் நம்பெருமாள்.
இந்த வைபவத்தின் சாற்று முறை நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக கொண்டாடி ,தனது நோக்கமான மாமுனிகளின் சிறப்பை உலகறியச்செய்ய விரும்பிய நம்பெருமாள், மாமுனிகளின் திருமுன்னர், ஆச்சாரியர்கள், மஹாஉத்தமர்கள், நிலத்தேவர்கள், அடியார் பெருமக்கள் கூடியிருக்க, பெரிய பெரிய தட்டுக்களில் தேங்காய் வெற்றிலை பாக்கு பழங்கள் புஷ்பமாலைகள் காவி உடைகள் வாசானாதி திரவியங்கள், நெய் தீபங்கள் போன்ற பல வகையானவை இருக்க,
மாமுனிகள் தனது கம்பீரமான குரலினாலே “முனியே நான்முகனே” என்று தொடங்கி,
“அவாவறச் சூழ்” பாசுரங்களை சேவித்து, அதற்கும் விளக்க உரை கூறி, ஈடுசாற்று முறை செய்தார்.
பரமபதநாதனுக்கும் கிடைக்காத பாக்கியம் பெற்ற நம்பெருமாள்,மாமுனிகளுக்கு
சம்பாவனை ( குரு காணிக்கை) செய்யும் சமயம் வந்தது!
என்ன ஆச்சரியம், எங்கிருந்தோ வந்தான் நான்கு வயது சிறுவன், என் பெயர் ரங்கநாயகன் என்று கூறி பெரியோர் நிறைந்த சபை நடுவே நின்றான். அனைவரும் அவனை விலகச் சொல்லியும் அகலமறுத்து, மாமுனிகள் முன் நின்று இருகரம் கூப்பி, கண்ணீர் மல்க தனது கம்பீரமான குரலில் பதம் பதமாக பிரித்து சொன்னான்,
“ஸ்ரீசைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ரப்ரணவம் வந்தே ரம்ய ஜமாதரம் முநிம்”
( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்.)
என்று கூறி அச்சிறுவன் எல்லோரும் காணும் படி கருவறையில் புகுந்து மறைந்தான். இதைக் கண்ட அனைவரும், நம்பெருமாள் மாமுனிகளை ” ஈடு முப்பத்தாறாயிரப் பெருக்கர் என்று பிரகடனப்படுத்தி விட்டார். எனவே திவ்ய தேசங்களில் இந்த சுலோகத்தைக் கொண்டே அனுஸந்தானம் தொடங்க வேண்டும் என்று சேனை முதலியார் மூலமாக ஆணை பிறப்பிக்க வேண்டினர். அதன் பிரகாரமாக இன்றளவும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த வைபவத்தின் மூலமாக, நம்பெருமாள் மாமுனிகளை ஆச்சாரியனாக அடைந்தததையும், ஸ்ரீ நம்மாழ்வாரின் தமிழ்ப் பாசுரங்களின் விளக்க உரையை கேட்க விரும்பியதன் மூலம் தமிழ் மொழியின் ஏற்றத்தையும் நம்மைப் போன்ற எளிய வரும் அறிந்து கொள்ள முடிகிறது.
நம்பெருமாளுக்கு, மணவாள மாமுனிகள் ஆச்சாரியனாக கிடைத்த, நமக்கு
“ஸ்ரீசைலேச” தனியன் கிடைத்த இந்த சிறப்பான நாளை ஸ்ரீவைணவர்களான நாம் அனைவரும் கொண்டாடி மகிழ்வோம்.
“மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும் “.
“ஆச்சாரியன் திருவடிகளே சரணம்”