‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!
( மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு (சிறு வயதில் நடந்த அனுபவம்)
(பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?)
கட்டுரை-ரா.வேங்கடசாமி

காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்
மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு பல வருடங்களுக்கு முன் (இளமையில்)ஏற்பட்ட அனுபவம்.
அப்போது மகான் ஹைதராபாத் அருகே ஒரு சிறு ஊரில் முகாமிட்டிருந்தார்.
அப்போது செல்லம்மாவுக்கு சிறுவயது. அவரது தந்தை ஒரு மகாவித்வான். வசதிமிக்கவர். அதனால் செல்லம்மாள் நிறைய நகைகள் அணிந்து கொண்டு இருப்பார்.
மகானைத் தரிசிக்க வந்த தந்தையும்,மகளும், அந்தக் கருணைவள்ளலின் அருளைத் தொடர்ந்து சில நாட்கள் அந்த ஊரில் தங்கினர்.
செல்லம்மாவுக்கு எல்லாமே மகான்தான். அப்படி ஓர் ஈடுபாடு,இளமையில் வந்தது.
ஒருநாள் பிற்பகலில்
தனது உறவினர் இருவருடன் செல்லம்மா சில சாமான்கள் வாங்கி வர கடைத்தெருவிற்கு போயிருந்தார். எல்லா சாமான்களையும் விடாமல் வாங்க,பல கடைகள் ஏறி இறங்க வேண்டியதாயிற்று.அதனால் நேரம் அதிகமாகி மாலை மறைந்து லேசாக இருள் பரவ ஆரம்பித்தது.தங்கள் இருப்பிடம் திரும்ப ஒரு டேங்கா வேண்டும் என்றும், குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு, அதில் ஏறிப் புறப்பட்டனர். சிறிது நேரந்தான் வண்டி நேர்பாதையில் சென்றது. பிறகு திடீரென திசைமாறி மிகவும் அருகில் இருந்த ஜனநடமாட்டம் இல்லாத தெருவிற்குள் நுழைந்தது.வண்டியில் இருந்த பெண்கள்
பயந்து விட்டனர்.அவர்கள் பதறிப்போய் வண்டிக்காரனிடம் “இந்த வழியில் ஏன் போகிறாய்” என்று கேட்ட போது, அவன் சிரித்துக்கொண்டே, வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான். அத்துடன் நில்லாது பெண்களைப் பார்த்து விஷமமாகச் சிரித்தான்.அவன் பார்வை செல்லம்மா மீதும், அவள் போட்டிருந்த நகைகள் மீதும் படர்ந்தது.
பெண்கள் பயத்தோடு என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டு இருந்தனர்.
அதே சமயம் மகான் மாலை வேளையில் பூஜை ஆரம்பிக்க இருந்தார்.அவரது கண்கள் சுற்றி அமர்ந்திருந்த பக்தர் கூட்டத்தின் மீது படர்ந்தது. பின் தன் அருகில் இருந்த சிப்பந்தியிடம், “வித்வானும் பெண்ணும் எங்கே?” என்று கேட்டபோது, “சில பொருட்கள் வாங்க அவர்கள் கடைக்குச் சென்று இருக்கிறார்கள்” என்று பதில் வந்தது.
“இது புது ஊராயிற்றே…அவர்களுக்கு பாஷை கூடப் புரியாதே….நீ உடனே வண்டியை எடுத்துக் கொண்டு போய், அவாளைப் பார்த்துட்டு வா ” என்றார்.
புறப்பட இருந்தவரை திடீரென அழைத்து, போகும் மார்க்கத்தைக் கேட்ட பின்னர் மகான் சொன்னார்.
“வேண்டாம்…நீ நேர் வழியில் போகாதே…அதுக்குப் பக்கத்தில் ஒரு குறுக்கு சந்து இருக்கும் பார்….. அப்படிப் போ…” என்றார்.
பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?
வண்டிக்காரன் பெண்களைப் பார்த்து வக்ரமாகச் சிரித்த அதே நேரத்தில் மடத்துச் சிப்பந்தி அங்கே வந்து நிற்க …வண்டிக்காரன் பயந்து போய் வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். செல்லம்மாளும் மற்றவர்களும் அன்று மகானால் காப்பாற்றப்பட்டனர்.
வண்டிக்காரன் கெட்ட எண்ணத்துடன் இருக்கிறான் என்று தெரிந்தவுடன்.செல்லம்மாள் ஒரே ஒரு வினாடி மகானை நினைத்ததன் விளைவு இது.
தன்னை மனதார நம்பிய பக்தர்களை என்றுமே அவர் கைவிட்டதே இல்லை



