
மகாபாரதம் அனுசாசனிக பரவத்தில் பார்வதிதேவி பரமசிவனிடம் கேட்கிறாள், “சங்கரா! கைலாசம் இருக்கிறது. வெள்ளிமலை இருக்கிறது. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் நீ! இந்த பூமண்டலத்தில் பிறப்பு இறப்பு இல்லாதவன்! எங்கும் நிறைந்தவன்! தாய் தந்தை அற்றவன்! தயாநிதி! ம்ருத்யுஞ்ஜயன்! காலத்திற்கே காலன்! உன்னைப் போன்ற உதார குணம் கொண்டவர் யாருமில்லை! நீர் உலகிற்கே தந்தை! உம்முடைய கருணை அப்படிப்பட்டது! அப்படியிருக்க மயானத்தில் ஏன் வசிக்கிறீர்? உங்களை நீங்களே ஏன் நிந்தை செய்து கொள்கிறீர்?” என்று கேட்கிறாள்.
சிவபிரான் கூறினார், “பார்வதீ! வேறு வழி இல்லாததால் நான் மயானத்தில் வசிக்கவில்லை. பிரம்மதேவர் கேட்டுக்கொண்டார். “சங்கரா! இருள் கவிந்தவுடன் உக்ர பூதங்கள் எல்லாம் மனிதர்களின் வீடுகளை நோக்கி புறப்பட்டுவிடும். அவர்களை அவை அனுஷ்டானம் செய்யவிடமாட்டா! பூஜைகள் செய்வதில் தடங்கல் ஏற்படும். சூரிய உதயத்திற்கு முன்பே என் நிர்மால்யத்தை அவை தொட்டு எடுத்து விடும். அதன்பிறகு வீட்டு எஜமானி அதை எடுத்தாலும் அதற்குப் பலன் இருக்காது. அந்த உக்கிர பூத பிரேத பிசாசுகள் மனிதர்களின் வீடுகளுக்குள் புகாமல் இருக்கச் செய்ய வேண்டுமென்றால் அவற்றை கொஞ்ச நேரம் விளையாட்டு காட்டி அடக்கி வைக்க வேண்டும்!” என்று அவர் கேட்டுக்கொண்டார். அதனால்தான் நான் மயானத்தில் நர்த்தனம் செய்கிறேன்…. தாண்டவம் ஆடுகிறேன். அவையெல்லாம் அங்கேயே அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும்.
இரண்டாவது காரணம், எதனால் அங்கு இருக்கிறேன் தெரியுமா? பார்வதீ! கேள்! வாழ்நாளெல்லாம், “என் மனிதர், என் மக்கள்…!” என்று கூறி கஷ்டப்பட்டு உழைத்து அங்குமிங்கும் அலைந்து திரிந்து பிரயாணம் செய்து அனைத்தையும் செய்யும் மனிதர்களுள் யாராவது ஒரு முறை உலா சென்று வரலாம் என்று ருத்ர பூமிக்குச் செல்வார்களா? யாரும் போக மாட்டார்கள். ஆனால் எல்லாம் முடிந்த பின்பு ருத்ர பூமிக்கு எடுத்து வருவார்கள். எடுத்து வந்த பின், “நான்… என்னுடையது… என்று இத்தனை காலம் இந்த உடலை பூசித்து அலங்கரித்து வந்தேனே! மெத்தையில் படுத்து உறங்கிய இந்த உடலை கட்டையில் நீட்டி எரித்துவிட்டுப் போகிறார்களே…!” என்று ஜீவன் அழுது கொண்டே தன் உடலை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பான். கர்த்தா நெருப்பிட்டுக் கொளுத்தியதும் தலையிலிருந்து பாதம் வரை கொழுந்து விட்டு எரியும் உடலைப் பார்த்து பதறுவான் ஜீவன். உள்ளங்கால்கள் இரண்டும் வெடித்து ரத்தம் பீரிட்டு எழும். கால்களைப் தூக்கி தலை மேல் போடுவான் வெட்டியான். ‘டப்’ பென்று தலை வெடித்து சப்தம் வரும். “கபால மோட்சம் ஆகிவிட்டது…! போங்கள்…! போங்கள்…!” என்று சைகை செய்வான் காட்டுக் காவலாளி. மகன் தலைக்கு நீர் ஊற்றிக் கொண்டு வந்த உறவுகளோடு திரும்பிப் பாராமல் சென்று விடுவான். மயானத்தில் ஜீவன் ஒருவனே தனியாக நடுக்கத்தோடு நின்றிருப்பான். இருள் சூழ்ந்து கொண்டிருக்கும்! “ஐயையோ…! இவர்கள் எல்லோரையும் நம்பி வாழ்நாளை வீணடித்தேனே! என் மனைவி, என் மக்கள் என்று இவர்கள் மேல் உயிரையே வைத்திருந்தேனே!” என்று கதறுவான் ஜீவன். அவனை சமாதானப்படுத்துவதற்கு அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். பார்வதீ! இறந்தவன் மீண்டும் பலமுறை பயத்தால் இறப்பான் என்பதால், “நான் இருக்கிறேனடா! பயப்படாதே! உனக்கு வேறு ஒரு சரீரம் தருகிறேன். அப்போதாவது கவனமாக இரு!” என்று சொல்லி ஜீவனுக்கு ஆறுதல் அளித்து சமாதானப்படுத்துவதற்காக அங்கே வசிக்கிறேன். அன்றி, எனக்கு இருப்பிடம் இல்லாமல் அல்ல! ஈஸ்வரீ! நான் ஜீவர்களின் தந்தை! என் தயை அப்படிப்பட்டது” என்றார்.

அத்தகைய மகானுபாவர் சிவன். பரமசிவனுடைய கருணை நமக்கு ஞாபகத்தில் வந்தது என்றால்… அவருடனான அனுபந்தம் புரிந்ததென்றால்… அவர் சாஸ்வதமானவர் என்பது புரியும்!
இந்த பூமண்டலமே மிகப்பெரிய ஸ்மசானம். மனிதர்கள் இறந்தபின் மயானத்திற்குச் செல்வார்களா? மயானத்திற்குச் சென்று இறப்பார்களா? வீட்டில், சாலையில், மருத்துவமனைகளில்…. இங்கு… அங்கு… என்றில்லாமல் பூமிமேல் எல்லா இடத்திலும் ஜீவர்கள் மரணிக்கிறார்கள். சாகும் இடமான பூமிதான் அமங்களமே தவிர, இறந்த ஜீவன்களை பிரம்மாண்டத்தில் சேர்க்கும் மயானம் மங்களமானதே!
“சிவனை மயானவாசி!” என்று நிந்திப்பவர்களையும் கூட மயானத்தில் தனியாக நின்று அழும்போது சிவபிரான் ஆறுதல் அளிக்கத்தான் செய்கிறார். தவறான பிரச்சாரம் செய்து சனாதன தர்மத்தை சிலர் பாழ் செய்கிறார்கள். பூத பிசாசுகள் வீடுகளுக்குள் புகுந்து பகவத் காரியங்களை கெடுக்காமல் இருக்க சிவபிரான் மயானத்தில் தாண்டவமாடி அவற்றைக் கட்டி வைக்கிறார். “உத்திஷ்டந்து பூத பிசாசா:” என்று பூஜைக்கு முன் அதனால்தான் சொல்கிறார்கள்.
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாகண்டி கோட்டேஸ்வர ராவு
தமிழில் – ராஜி ரகுநாதன்



