வசிஷ்ட மகரிஷியின் அற்புதமாக வாக்கு சாஸ்திரத்தில் காணப்படுகிறது.
“தர்மம் சரத மா அதர்மம் சத்யம் வதத நா அன்ருதம்
தீர்கம் பஸ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஸ்யத மாபரம் !!”
இதில் மொத்தம் நான்கு வாக்கியங்களை சூத்திரங்களாக அளித்துள்ளார். இவற்றை ருஷி வாக்கியங்களாக நாம் புரிந்து கொள்ள முடிந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பயன்படும் அம்சம் இதில் உள்ளது என்பது தெரியவரும். இவை மத வாக்கியங்கள் அல்ல! மானுடனுக்கான வாக்கியங்கள்!
தர்மம் சரத மா அதர்மம் – இந்த நான்கு சொற்களையும் நினைவில் வைத்துக் கொண்டாலே போதும்! “தர்மத்தைக் கடைபிடி! அதர்மத்தை அல்ல!”
முதலில், இதை செய்! என்று கூறுகிறார். அடுத்து, இதைச் செய்யாதே! என்கிறார். இவ்வாறு கூறுவதுதான் உண்மையான போதனை. எப்போதும் குரு போதிக்கும் போது இவ்வாறு இரு என்றும் கூறுவார். இவ்வாறு இருக்காதே என்றும் கூறுவார். இவ்விரண்டின் மூலம் தர்மம் நிலைநாட்டப்படுகிறது.
அதனால் தர்மத்தைக் கடைபிடி! அதர்மத்தைக் கடைபிடிக்காதே! என்று கூறுகிறார். தர்மத்தின் வழி நட என்று கூறினால் போதாதா? மீண்டும் அதர்மத்தின் வழி போகாதே என்று கூட கூற வேண்டுமா? என்று கேட்டால்… அதைக் கூறாவிட்டால் மனிதன் தர்மத்தையும் கடைபிடித்து அதர்மத்தையும் கடைபிடித்து வாழ்க்கை நடத்துவான்.
அதனால்தான் தீய செயல்களின் பக்கம் போகாமல் நல்ல செயல்களைச் செய் என்கிறார்.
அதேபோல் “சத்யம் வதத நா அன்ருதம்!” – சத்தியதத்தையே பேசு! அசத்தியம் பேசாதே! இந்த ஒரு விரதத்தை கடைபிடித்தாலே போதும். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு வார்த்தை கூறுவார். “கலியுகத்தில் சத்தியமே விரதம்!” என்பார். அதனால்தானோ என்னவோ கலியுகத்தில் சத்தியநாராயண விரதம் செய்யும்படி சொல்லியுள்ளார்கள். சத்தியநாராயண விரதம் என்றால் கலசம் வைத்து பூஜை செய்யும் வழிமுறை. அது மட்டுமே அல்ல! சத்தியமே நாராயணன் என்பதை அறிய வேண்டும்.
ஏனென்றால் இந்த யுகத்தில் யாகம், யக்ஞம், யோகம் இவையெல்லாம் செய்யும் வாய்ப்புகள் குறைவு. சத்தியமாக, உண்மையே பேசி வாழ முடியுமானால் அதுவே எத்தனையோ யாகங்கள் செய்த பலனை அளிக்கக்கூடியது. ஏனென்றால் விஸ்வம் சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டுள்ளது!
“சத்யே சர்வம் ப்ரதிஷ்டிதம்” என்பது வால்மீகி ராமாயணத்தில் ராமச்சந்திர மூர்த்தியின் வாக்கு! அதனால் உண்மை பேசி வாழ முடிந்தால் அதுவே பெரிய விரதம். சத்தியம் இறைவனின் சொரூபம்! அந்தக் காரணத்தால்தான், “சத்யம் வதத நா அன்ருதம்!” என்றார்.
“தீர்கம் பஸ்யத மா ஹ்ரஸ்வம்” – இதுபோன்ற வாக்கியங்களை தற்போதுள்ள மேனேஜ்மென்ட் கோர்ஸ், பர்சனாலிட்டி டெவலப்மென்ட் கோர்ஸ்…. போன்றவற்றில் சேர்த்து கற்றுத்தரவேண்டும். “தீர்கம் பஸ்யத மா ஹ்ரஸ்வம்” – தீர்க்க காலத்தைப் பார்! குறுகிய அற்பப் பார்வை பார்க்காதே! என்கிறார்.
‘விஷன்’ எப்படி இருக்க வேண்டும் என்று காட்டுகிறார். குறுகிய காலப் பிரயோஜனம் என்பது மிகவும் அற்பமானது… குட்டையானது. நீண்ட கால நலனை கருத்தில் கொள் என்கிறார்.
ஒரு நோயாளி ஒரு பதார்த்தத்தை தின்னக் கூடாது என்று கூறும் போது அந்த உணவே அவனுக்குக் கண்ணில் தென்படும். உடனே அதன் மேல் ஆசை கொண்டு ருசிக்காக அதைத் தின்று விடுகிறான். இங்கு குறுகிய காலப் பலன் கிடைத்தது. ஆனால் நீண்ட நாள் வாழ்க்கைக்கு தீங்கு விளைந்தது.
அதனால் அப்போதைக்கு சுகமாக காணப்படுகிறது என்பதற்காக அதர்மத்தின் பக்கம் சென்றால் சாசுவதமான சுகத்தை இழந்து விடுவோம். தர்மத்தை கடைபிடிப்பது கஷ்டமாகத் தோன்றினாலும், தர்மமே நமக்கு நிரந்தரமான சுகத்தை தரக்கூடியது. ஓரொரு சமயம் தர்மத்தைக் கடைப்பிடிப்பது கடினமாகத் தோன்றும். ஆனால் அந்த கஷ்டத்தை சகித்துக்கொண்டு தர்மத்தை செயல்படுத்தும்போது சாஸ்வதமான சுகத்தை அளிக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் தீர்க்க கால பலனை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த கருத்தை எதில் வேண்டுமானாலும் நாம் பொருத்திப் பார்க்க முடியும். ஒரு வேலையில் ஈடுபடுகிறோம் என்றால் அதற்கு உண்மையில் நீண்ட கால பலன் என்ன? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இதனை இன்று ‘லாங் டெர்ம்’ என்று கூறுகிறோம். லாங் டெர்ம் பலன்களைப் பார்க்கப் வேண்டும். தாற்காலிகமாக கஷ்டப்படுவதற்கு தயாராக இருந்தாலும் அதன் மூலம் சாசுவத பலன் நமக்கும் சமுதாயத்திற்கும் உள்ளது என்றால் அந்த கஷ்டத்தைக் கூட இஷ்டமாக ஏற்க முடியும். அதனால்தான் வனவாசத்தை இஷ்டமாக ஏற்றார் தர்மபுத்திரர். கையாலாகாமல் அல்ல! தர்மத்துக்கு கட்டுப்பட்டு செய்தார். அதனால் தாற்காலிகமான கஷ்டத்தை சகித்துக் கொண்டு எதிர்கால நலனை கருத்தில் கொண்டார்.
ஏனென்றால் எத்தனையோ பெரியதாகத் தோன்றும் மானுட ஜீவிதம் உண்மையில் மிகவும் சிறியது. இதனை நினைவில் கொள்ள வேண்டும். நாம் சுகம் என்று நினைக்கும் அனைத்தும் போய்விடும்! நாமும் போய்விடுவோம்! அது நிச்சயம்.
அதனால் கவனம் எதன் மேல் இருக்க வேண்டும் என்றால் இந்த வாழ்க்கைக்கும் மேல் ஆத்மாவின் இருப்பு என்று ஒன்று உள்ளது என்பதை அறிய வேண்டும்.
“பரம் பஸ்யத மாபரம்” என்பது அடுத்த வாக்கியம். “பரம் என்பதை கருத்தில் கொள்! இகத்தை அல்ல!” இவ்வுலக வாழ்க்கைக்கு இரு குணங்களுண்டு. கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அதையே குறிப்பிடுகிறார்.
“அநித்யமசுகம் லோகம் இமம் ப்ராப்ய பஜஸ்வமாம் !!” – இந்த உலகத்திற்கு இரண்டு குணங்கள் உள்ளன. அநித்தியம், அசுகம். நிலையற்றவை, சுகமற்றவை. இதற்கு நித்தியத் தன்மையும் கிடையாது, சுகமும் கிடையாது என்று தீர்மானமாக கூறிவிட்டான் பரமாத்மா!
நாம் சிந்தித்துப் பார்த்தால் நமக்கும் புரியும். ஆனால் நாம் ஒப்புக் கொள்ள மாட்டோம். அதுதான் நாம் செய்யும் தவறு. இங்கு நித்தியமும் இல்லை. சுகமும் இல்லை. பின் எதற்காக இந்த உலகு? என்று கேட்டால்… நித்யமும் சுகமுமற்ற இந்த உலக வாழ்க்கையை சாதனமாக உபயோகித்து நித்தியமும் சுகமுமான பரமாத்மாவைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். இது போதனை!
இப்படிப்பட்ட சிறந்த போதனையை கவனத்தில் இருத்த முடிந்தால் மானுடன் தாற்காலிக பலன்களுக்காக அதர்மத்தைச் செய்யமாட்டான். சமுதாயத்திற்குத் தீங்கிழைக்க மாட்டான். தனக்கும் சமுதாயத்திற்கும் நலன் விளையும்படி வாழ்வான் என்பது இந்த நான்கு வாக்கியங்களின் சிறந்த போதனை! இதனை அருளிய வசிஷ்ட மகரிஷிக்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்