ருஷி வாக்கியம் (102) – பாரம்பரியத்தைத் திரும்பிப் பார்ப்போம்!


சனாதன தர்மத்தை நாம் சிறப்பாக கடைபிடிக்க வேண்டுமென்றால் இருக்க வேண்டிய இன்றியமையாத குணம் நம் தர்மத்தின் மீது மதிப்பும் பெருமிதமும்! அவை இருந்தால்தான் தர்மத்தோடு நாம் இணைந்து ஒத்திசைவோடு கடைபிடிக்க முடியும். அப்படியின்றி, நாம் கடைபிடிக்கும் தர்மத்தின் மீது நமக்கே சந்தேகம் இருக்குமானால்…. ஒருவேளை இது உயர்ந்தது இல்லையோ என்ற எண்ணம் இருக்குமானால்… நமது தர்மத்தை நன்கு கடைபிடிக்க இயலாது.

நம் முன்னோர் மீதும் நம் தர்மம் மீதும் அசையாத அன்பும் பெருமிதமும் இருந்தால்தான் மீண்டும் அதனை ஸ்திரமாக நிலைநிறுத்த முடியும். அவ்வாறின்றி சிலர் விசால பாவனை என்ற பெயரில், “நம் சனாதன தர்மம் உயர்ந்ததுதான்! ஆனால் மீதி உள்ள மத தர்மங்கள் கூட மிகவும் உயர்ந்தவை! எனவே அவற்றை கௌரவிக்க வேண்டும்” என்று கூறுவார்கள். அது நல்லதுதான். பிறரை மதிக்க வேண்டும். ஆனால் நம் சொந்த தர்மத்தை எப்போதும் கீழ்மைபடுத்தக் கூடாது. இதை அறிய வேண்டும்.

சில துஷ்டர்கள் அவர்களின் தர்மம் தவறுகளோடு கூடியதாக இருந்தாலும், “எங்களுடையதே சிறந்த தர்மம். இதனை கடைபிடிக்காதவர்கள் உயரமுடியாது. பிறருடையதெல்லாம் கீழானவை!” என்று கிளம்பி வருகிறார்கள். இது மிக விபரீதமான போக்கு!

பிறரை நிந்தனை செய்யாமல் நம் தர்மத்தின் உயர்வை நாம் அறிந்து கொண்டு முன்னேற வேண்டும். நம் தர்மத்தின் மீதும் நன் புராதன முன்னோரின் பாரம்பரிய வைபவத்தின் மீதும் அபாரமான கௌரவமும் கர்வமும் பெற்றிருந்தால்தான் நம் தர்மம் வளர்ச்சியைடைய முடியும். அதை விட்டுவிட்டு கடந்த காலத்தை மறந்து போனால் மனித இனத்திற்கு எதிர்காலம் இருக்காது. இதனை அறிய வேண்டும்.

அதனால் பாரத இனமாகிய இந்த கலாச்சாரத்தைச் சேர்ந்த நாம் இன்னும் முன்னேற வேண்டுமென்றால் இருக்க வேண்டிய சிறந்த குணம் நம் பாரம்பரியத்தின் மீது கௌரவ மரியாதை கொண்டிருக்க வேண்டும். மேலும் அத்தகைய கௌரவத்தை அளிக்கக்கூடிய பெருமிதமான கடந்த காலம் கொண்டவர்கள் பாரத தேசத்து மக்கள்! அதனை மறந்துவிட கூடாது.

பிற நாடுகள் நாகரிகத்தின் கண்களைத் திறப்பதற்கு முன்பே யுக யுகங்களாக தெய்வீகமான கலாச்சாரமும் நாகரிகமும் நம் பாரத தேசத்தின் சொந்தமாக இருந்தது. அதனால்தான் சுவாமி விவேகானந்தர் ஒரு உயர்ந்த வார்த்தை கூறியுள்ளார். “சாதாரணமாக அனைவரும் முன்னேறுங்கள்…! முன்னோக்கிச் செல்லுங்கள்…! என்றுதான் கூறுவார்கள். நான் மட்டும் பாரத தேச மக்களிடம் முடிந்தவரை பின்னோக்கிப் பாருங்கள்! என்று கூறுவேன்” என்றார். எத்தனை தூரம் பின்னோக்கி பார்த்தால் பாரததேசத்தின் உயர்வு அத்தனை தெரியவரும்.

பழங்காலத்தை… வேதகாலத்தை… யோக காலத்தை… நாம் பார்த்தால், தெய்வீகமான குகைகளிலும் மலைகளிலும் தவமியற்றிய மகரிஷிகள்….! அவர்கள் வாழ்ந்த ஆடம்பரமற்ற வாழ்வியல்…! அற்புதமான விஞ்ஞானம்….! ஞானத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் அனைத்துவித கலாச்சாரத்தையும் விஞ்ஞானத்தையும் சாதித்துக் காட்டிய குணம்…! இது பாரதத்தின் பாரம்பரிய இனம்!

அதனால்தான் ஒவ்வொரு துறையிலும் மகாத்மாக்கள் நம் பூர்வ பாரத தேசத்தில் காணப்பட்டார்கள். அனைத்து துறைகளிலும் விஞ்ஞானிகள் இருந்தார்கள். இயற்கையை நன்றாக ஆராய்ந்து அறிந்து பிரக்ருதியின் ஆழமான அம்சங்களையும், அதன் எந்த பொருள் எதற்கு பயன்படும் என்பவற்றையும் நன்றாக பரிசீலனை செய்து அற்புதமான விஞ்ஞானத்தை அளித்தார்கள் பாரதத்தின் மகரிஷிகள்! அவற்றை ஆதாரமாகக் கொண்டு இயற்கைச் சக்தியில் தெய்வீகத்தை தரிசித்தார்கள். பிரகிருதியிலிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நாம் எவ்விதம் மேன்மை அடைய முடியும் என்று கூறினார்கள்.

சூரிய ஒளியிலிருந்து எத்தகைய நன்மையை பெற முடியும் என்று வேதம் கூறுகிறது. சூரிய ஒளியை உபாசனை செய்து சூரியனின் ஒளியாலும் வெப்பத்தாலும் பல்வேறு நோய்களை குணப்படுத்திக் கொள்ள முடியும் என்று வேதம் கூறுகிறது. பின்னர் அபிவிருத்தி அடைந்த சயின்ஸ் கூட அதனை அங்கீகரித்துள்ளது. ஆனால் சூரியனின் மதிப்பையும் அதன் மூலம் நம்மை நாம் எவ்வாறு சரி செய்து கொள்ள முடியும் என்பது பற்றியும் முதல் முதலில் கூறியது நம் வேத விஞ்ஞானமே!

அதேபோல் வைத்திய விஞ்ஞானத்தையும் நம் மகரிஷிகள் அளித்துள்ளார்கள். இன்று தற்போதுள்ள நவீன மருத்துவத்திற்குக் குணமாகாத நாள்பட்ட நோய்களைக் கூட எளிதாக நிர்மூலமாக்கும் சக்தி நம் புராதன ஆயுர்வேத வைத்திய முறைக்கு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே!

அதேபோல் மகரிஷிகள் அளித்துள்ள சங்கீதம், நாத யோகம், வாழ்க்கைமுறை, குடும்ப அமைப்பு, திருமண அமைப்பு… ஒன்றென்ன…? இதுபோன்ற எத்தனையோ அற்புதங்கள்! அதேபோல்.. மந்திர விஞ்ஞானம், யந்திர விஞ்ஞானம், இறைவனின் சக்தியை அநேக விதங்களில் உபாசனை செய்யும் வழிமுறைகள், யோகசாஸ்திரம்… இப்படியாக எத்தனையோ வித அற்புதங்களை கொண்ட பாரத கலாச்சாரத்தை பற்றி முடிந்தவரை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.

எத்தனை பேர் மகான்கள் இதில் ஈடுபட்டிருந்தார்கள் என்று கவனித்துப் பார்த்தால் எண்ணிலடங்காதவர்களின் பெயர்கள் உள்ளன! உயர்ந்த சக்கரவர்த்திகள், மகரிஷிகள், அனேக சாஸ்திர பண்டிதர்கள்… இப்படிப் பலப்பலர். அவர்கள் அனைவரின் பெயர்களையும் ஒவ்வொன்றாக எழுதினாலே பல நூல்களாக நீண்டுவிடும்! அவர்கள் எழுதிய புத்தகங்களை நாம் பரிசீலிக்க ஆரம்பித்தால் நம் ஆயுள் போதுமோ போதாதோ என்ற ஐயம் தோன்றும். அற்புதமான அர்த்தசாஸ்திரம் நம்மிடம் உள்ளது. காமசாஸ்திரம் உள்ளது. அனேகவித சாஸ்திரங்கள் வளர்ந்திருந்தன நம்மிடம். அதிலும் பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், அந்தரிக்ஷ சாஸ்திரம் பற்றியும் நூல்களைப் படைத்தளித்துள்ளார்கள் நம் புராதன மகரிஷிகள்.

அவற்றைப் படைத்த காலத்தில் பிற நாடுகளில் விஞ்ஞானம் அத்தனை முன்னேறவில்லை. இதனை கவனிக்க வேண்டும். சிலர் கூறுவார்கள், “பாரத தேசத்தில் விஞ்ஞானம் பின்தங்கிவிட்டது” என்று. உண்மையில் நம் தேசத்தில் விஞ்ஞானம் மலர்ந்த காலத்தில் பிற நாடுகளில் விஞ்ஞானம் என்பதே இருக்கவில்லை என்பதை அறிய வேண்டும். இது போன்ற எண்ணங்கள் நமக்கு இருந்தால் நம் கலாச்சாரத்தின் மீது கௌரவம் ஏற்படும். அந்த கர்வ பாவனையால் இன்னும் நிறைய முயற்சிக்க வேண்டும் என்ற ஸ்பூர்த்தி கிடைக்கும். நம் எதிர்காலத்தை கூட நன்றாக அமைத்துக் கொள்ள முடியும்.

கடந்து போன நம் புராதன காலத்தின் மீது கர்வமும் கௌரவமும் மிகவும் தேவை என்று சுவாமி விவேகானந்தர் கூறிய வார்த்தைகளை வணங்குவோம்! அந்த வார்த்தைகளின் வடிவிலேயே அவர் இன்றைக்கும் நமக்கு உபதேசங்களாக ஸ்பூர்த்தி அளித்து வருகிறார் என்பதை நினைவு கூர்ந்து, உன்னதமான சிறந்த வரலாறு கொண்ட பாரத கலாச்சாரத்திற்கு நாம் வாரிசுகள் என்ற கர்வத்தோடு வணங்குவோம்!

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...