“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப் போங்கள்” சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத்துக்காகச் சென்றிருந்தார்கள், பெரியவாள். சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவாளுக்கு இருந்த பக்திக்கும்,மரியாதைக்கும் எல்லையே காண முடியாது. பிரும்மேந்திரர் பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், உருகிப் போய்விடுவார்கள்,பெரியவாள். அதிஷ்டானத்தில்,ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார்கள்,பெரியவாள். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவுக்குப் போய் நின்று கொண்டார்கள். பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதையோ யாரும் பார்க்கக்கூடாது என்பது,ஸ்ரீமடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள், அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின்விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தாங்கமுடியும்? அந்தச் சமயம் பார்த்து வெகு அவசரமாக வந்தார். ஓர் அன்பர் – ரங்கசாமி. “பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்”. என்று, மனம் திறந்து தொண்டர்களிடம் முறையிட்டார். “சுவாமி, பெரியவாள், கதவை சார்த்திக்கொண்டு அதிஷ்டானத்துக்குள் ஜபம் செய்து கொண்டிருக்கா, இப்போ யாரும் அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவாள் தானாகவே வெளியே வந்தவுடன் முதன் முதலாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.” வந்தவர், இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!. தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார். தொண்டர்களின் சுதந்திரமான வாய்வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். கண்ணிமைக்கும் பொழுதில், புதிதாக வந்த அன்பர் ரங்கசாமி அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்! இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர்பார்க்காததால் எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள். அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரியவாளின் குரல், அதுவரையில் சிஷ்யர்கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது. “நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான்;திரும்பிப்போங்கள்” அன்பர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக்கொண்டு விட்டார்கள். ரங்கசாமி ஒரு கதையே சொன்னார். அவருடைய நெருங்கிய உறவினருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்தெட்டு மணி நேரம் போனால்தான்,உறுதியாக சொல்ல முடியும்” என்று சொல்லிவிட்டார்கள். ஜோசியர், “உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்கள்” என்றார். உடனே போய், பெரியவாளிடம் தெரிவித்துப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தால் நல்லது என்று ஒருவர் ஆலோசனை; வயதான மூதாட்டி ஒருவர், “பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா” என்று சொன்னதை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். அதன்படி தான், அன்பர் ரங்கசாமி அவ்வளவு அவசரப்பட்டிருக்கிறார். அவருடைய அதிர்ஷ்டம் – தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது! ரங்கசாமி வீட்டுக்குள் நுழைந்தபோது அந்த நோயாளி உறவினர், படுக்கையில் உட்கார்ந்து புன்முறுவலித்துக் கொண்டிருந்தார். “ஆமாம், இன்னும் ஒரு நூறாண்டு அவருக்கு காரண்டி!”
“நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் செய்ய வேண்டாம்.!”
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari