Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்ஸ்ரீமஹாஸ்வாமி - ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 14)

ஸ்ரீமஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 14)

To Read in Indian languages…

mahaswamigal series

14. ஸ்ரீ மஹாஸ்வாமி –
ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி
– Serge Demetrian (The Mountain Path) –
– தமிழில்: ஆர்.வி.எஸ்

கார்வெட்டிநகர் சாலைச் சந்திப்புக்கு வந்துவிட்டோம். அவர் வலதுபுறம் திரும்பி தாமரைக்குளம் செல்லவேண்டும். நான் இடதுபுறமிருக்கும் காந்தி ஆஸ்ரமம் நோக்கி நடக்கவேண்டும். இப்போது அவரைப் பிரியப்போகிறேன். என்னுடைய இதயம் கனத்தது. நடை மெதுவாகி கால்கள் பின்னியது.

அந்தச் சாலைச் சந்திப்பில் ஸ்வாமிஜி எனக்காக சிறிது நேரம் காத்திருந்தார். நான் அவரைப் பிரதக்ஷிணமாகச் சுற்றி முன்னால் வந்தேன். அவர் எதிரில் நிற்க நான் தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன். ஆமோதிப்பது போலவும் ஆசீர்வதிப்பது போலவும் தலையை லேசாக அசைத்தார். பின்னர் தனது நான்கு உதவியாளர்களும் பின் தொடர தாமரைக்குளம் நோக்கி நடந்தார். அப்போது மணி இரவு 9 இருக்கும்.

நான் காந்தி ஆஸ்ரமத்திற்கு சென்று அந்த இடத்தின் உரிமையாளரை எழுப்பி ஸ்ரீ மஹாஸ்வாமி திரும்பி வந்ததைத் தெரிவித்தேன். பின்னர் இரவுக்கான உணவு மற்றும் படுக்கைகளை தயார் படுத்திக் கொண்டேன்.

அடுத்தநாள் ஸ்வாமிஜியைத் தரிசனம் செய்ய என்னால் போக முடியாது என்று தெரியும். ஏனென்றால் சில கிலோமீட்டர்கள் தார் ரோட்டில் செருப்பில்லாமல் நடந்தாலே எனது கால்கள் வீங்கி பாதங்களில் கொப்பளங்கள் வெடிக்கும். இன்று இரவு ஆறு கிலோ மீட்டர்கள் நடந்திருக்கிறேன். எது நடந்தாலும் பரவாயில்லை என்று  அவர் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நித்திரைக்குச் சென்றேன்.

அடுத்த நாள் காலை. முதலில் ஸ்ரீ மஹாஸ்வாமி நினைவு நெஞ்சில் ஆடியது. பின்னர் அவரது புகைப்படத்தைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டேன். அடுத்ததாக என்னுடைய கால்களைப் பார்த்தேன். அது என்னுடைய கால்கள்தானா என்று ஒரு கணம் நம்பமுடியவில்லை.

அவை இரண்டும் ஏதோ என்னுடையதாக இல்லாதது போல சுத்தமாக எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தன. ஒவ்வொரு காலாக என் கைகளால் மடக்கி வைத்துக்கொண்டு மெதுவாக வருடிக்கொடுத்து சோதித்தேன். வீக்கமோ கொப்பளங்களோ எதுவும் இருப்பதற்கான அடையாளங்கள் கூட இல்லை. நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

magaperiyavar
magaperiyavar

உடல்நிலை எல்லாம் சரியாக இருப்பதாகத் தெரிந்தது. என்னுடைய காலை வேளை நித்ய பழக்கங்களான தியானம், யோகா என்று எல்லாவற்றையும் சட்டென்று முடித்துக்கொண்டு அவசராவசரமாகக் குளித்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமியின் ஆஸ்ரம முகாமுக்குச் செல்ல பரபரப்பாக தயாரானேன்.

ஆஸ்ரமக் குடிலின் வாசலுக்குச் சென்றுவிட்டேன். கதவு சார்த்தியிருந்தது. ஸ்வாமிஜி இன்று இதுவரை வெளியே வரவில்லை என்று யாரோ சொன்னார்கள். நான் குடிசையை ஒரு முறை பிரதக்ஷிணம் செய்தேன். அது என்னுடைய தினப்படி வழக்கம். பின்னர் ஸ்ரீ மஹாஸ்வாமியின் உதவியாளர்களில் ஒருவர் தென்பட்டார். நேற்று ஸ்ரீ மஹாஸ்வாமியுடன் வந்த நால்வரில் அவரும் ஒருவர்.

அவர் என்னிடம் வந்து சொன்னார்.
“ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு உடம்பு சரியில்லே. அவர் இன்னிக்கி வெளியிலே வரமாட்டார்”

என்னால் சுத்தமாக நம்பமுடியவில்லை. நேற்று நடந்ததினால் ஸ்ரீ மஹாஸ்வாமிக்கு உடம்பு சரியில்லையா? இதுவரை நான் இப்படிக் கேள்விப்பட்டதேயில்லை.

“அது எப்படி? நேற்று ராத்திரி சௌக்கியமாகத்தானே இருந்தார்!” என்று ஆச்சரியமாகக் கேட்டேன்.

“ஆமாம். ஆனால் இன்னிக்கிக் கார்த்தாலே கால் வீங்கி பாதமெல்லாம் கொப்பளமாயிடுத்து. அவர் இப்போ ரெஸ்ட் எடுத்துண்டிருக்கார்” என்றார் அந்த உதவியாளர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் அவரது அறையின் கதவு திறந்தது. மேற்கு பக்கம் தலை வைத்து படுத்திருந்தார். அவரது கால்களில் காவித் துணியால் பாண்டேஜ் போட்டிருந்ததைப் பார்த்தேன். ஒருவர் படுத்திருக்கும் போது நமஸ்கரிக்கக் கூடாது என்ற சாஸ்திரம் எனக்குத் தெரியும். ஆகையால் தூரத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய முயன்றேன். ஆனால் முடியவில்லை.

நான் எழுந்து அந்த தாமரைக்குளத்தைச் சுற்றிச் சுற்றி வந்தேன். ஒன்றிரண்டு சுற்றுகள் ஸ்ரீ மஹாஸ்வாமியின் வாழுமிடத்தின் திறந்த கதவின் வழியாக அவரது கட்டுப்போட்டக் கால்களைப் பார்த்துக்கொண்டே இருதயம் கணத்துப்போய் வருந்தினேன்.

மூன்றாவது சுற்றில் அப்படியே உறைந்துப் போய் நின்றேன். பாதிக்கப்படாத எனது கால்களையும் அவரது கட்டுப்போட்ட கால்களையும் ஒருமுறை பார்த்துக்கொண்டேன். இப்போது நான் ஒன்றைப் புரிந்துகொண்டேன். அவரது கருணையினால் நேற்றிரவு என்னுடைய வலியை அவர் தாமே எடுத்துக்கொண்டார். என்னுடைய தொண்டை அடைத்தது. கண்களில் நீர் வழிந்தது.

தொலைவில் நின்றிருந்த இடத்திலிருந்தே நான் அவரை துதித்தேன். பின்னர் நான் மெதுவாக அவரது அருகில் வந்து பார்த்தேன். அவர் தூங்கவில்லை. அங்கேயே சிறிது நேரம் நின்று என் இருதயத்தின் அடியாழத்திலிருந்து அவருக்கு நன்றி பாராட்டினேன். பின்னர் வெகுநேரம் அங்கேயே நின்றபடி தியானித்தேன்.

நான் புறப்படவேண்டும் என்று எண்ணிய போது கண்களைத் திறந்தேன். ஸ்ரீ மஹாஸ்வாமி என்னையே உற்றுப் பார்த்தபடி இருந்தார். என் தலைக்கு மேலே இரு கைகளையும் உயரத் தூக்கி கும்பிட்டேன். அவர் தனது வலது கையை அபய முத்திரையாகக் காட்டி தலையை மெதுவாக அசைத்தார். அவருக்கு ரொம்பவும் பக்கத்தில் இல்லையென்றாலும் அவரது குறுகிய வெள்ளைத் தாடியின் உள்ளிருந்த வந்த சிரிப்பின் ஸ்நேகபாவம் புரிந்தது!

periyava bala periyava
periyava bala periyava

ஸ்ரீ மஹாஸ்வாமியின் இருதயகமலம் :

ஸ்ரீ மஹாஸ்வாமியின் கார்வெட்டிநகர் வாசத்தின்போது நாள்தோறும் அவரது அருகாமையில் ஆறிலிருந்து பதினெட்டு மணிநேரங்கள் வரை இருந்தேன். இந்த மாதங்கள் என் வாழ்வில் மிகவும் அமைதியானவை மட்டுமல்ல அவரது கண்பார்வையில் ரொம்ப காலம் இருந்ததும் அப்போதுதான். இந்தியப் பாரம்பரியத்தின் அற்புத எடுத்துக்காட்டாக வாழ்ந்த ஒரு மாமுனியின் சிஷ்யனாகவும் பிறரால் அறியப்பட்டேன்.

அவரைப் போலவே மண்தரைக் குடிசையில் நானும் வசித்ததையும் அடிக்கடி தாமரைக்குளத்தின் படிக்கட்டில் வானம் பார்க்க படுத்துறங்கியதையும் கண்ட உள்ளூர்வாசிகள் அதிசயித்துப்போனார்கள். உடை, உணவு மற்றும் வீட்டுப் பழக்க வழக்கங்களில் என்னுடைய தேகநலனுக்கு எந்த பாதிப்பும் வராதபடி அந்த உள்ளூர் மக்களையே பின்பற்றினேன்.

தரிசனத்தின் போது என்னுடைய அடக்கஒடுக்கம், பேச்சுகள், பிரார்த்தனைகள் தியானங்கள் போன்ற என்னுடைய செயல்பாடுகளை ஸ்ரீ மஹாஸ்வாமிகள் பாராட்டியதாக அறிகிறேன். அவருடனான எனது தொடர்புகள் பலதரப்பட்ட அனுபவங்களை, “விஜயங்களை”, ஆழ்ந்து சிந்திக்கத்தக்க தருணங்களை என்று அலையலையாக எனக்களித்தது. இப்படி வார்த்தைகளால் விளக்கமுடியாதவற்றை  எழுத முற்பட வேண்டாம் என்று என் உள்ளுணர்வு உணமையாகவே அறிவுறுத்தியது.

சில நிகழ்வுகளைத் தவிர்த்து தொடர்ச்சியாக மார்ச் 1971வரை எழுதி வந்ததை நிறுத்திவிட்டேன். ஆனால் 1971, ஆகஸ்ட் 27ம் தேதி தரிசனத்தின் போது இளைய சங்கராச்சாரியார் என்னை மீண்டும் எழுதச் சொன்னார். எழுதுவதன் மூலமாக நமது மனசு என்னும் எதிரியை வீழ்த்தமுடியுமா என்று அவரைக் கேட்டேன். உண்மைக்கு வடிவம் கிடையாது என்ற எனக்கு கருத்து இருந்தாலும் என் பார்வையில் எது முக்கியம் என்று தோன்றுகிறதோ அதை எழுதுமாறு வலியுறுத்தினார்.

என்னைவிட அவர் நிரம்பத் தெரிந்தவர் என்ற காரணத்தினால் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டேன். மேலும் ஸ்ரீ மஹாஸ்வாமிதான் அவரிடம் சொல்லி என்னை மீண்டும் எழுத அறிவுறுத்தியவர் என்பதும் எனக்குத் தெரியும்.

ஆகவே நான் மீண்டும் தொடர்ச்சியாக எழுதத் துவங்கினேன். ஆரம்பமே 1971, ஜூன் மாத நடுவில் நிகழ்ந்த ஒரு சம்பவம்.

தொடரும்….

#ஸ்ரீ_மஹாஸ்வாமி_ஒளிவீசும்_கண்கள்_கொண்ட_மாமுனி
#மஹாஸ்வாமி_ஆர்விஎஸ்_பகுதி14

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Follow us on Social Media

19,023FansLike
389FollowersFollow
84FollowersFollow
0FollowersFollow
4,767FollowersFollow
17,300SubscribersSubscribe