
சபரிமலையில் ஜன14இல் நிகழும் மகரஜோதி தரிசனம் காண முன்பதிவு நிறைவடைந்தது.சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டு செல்லும் விழா நடக்கிறது.
சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-இல் நடைபெறவுள்ள நிலையில், வெர்ச்சுவல் க்யூ முன்பதிவு முழுமையாக நிறைவடைந்தது.
பொண்ணம்பலமேட்டில் தெரியும் மகரஜோதியை தரிசிக்கும் பக்தர்களுக்காக 9 வியூ பாயிண்ட் தயார் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.ஜனவரி 20-இல் கோயில் நடை சாத்தப்பட்டு, வருடாந்திர சபரிமலை பயணம் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் சபரிமலை செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் அதிகரிப்பால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம்.
அதன்படி, பல்வேறு இடங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராடி வருகின்றனர். இதுபோல அங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர்.
இந்நிலையில், பம்பை நதியில் கோலிஃபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது பம்பை நதியில் வாரத்திற்கு ஒரு முறை கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் மொத்த கோலிஃபார்ம் மற்றும் பீக்கல் கோலிஃபார்ம் அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் கோலிஃபார்ம் என்பது மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். மொத்த கோலிஃபார்மின் அளவு 500க்கு மேல் இருந்தால் குளிக்க உபயோகிக்க முடியாது. ஆனால், பம்பை நதியில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு 6000க்கும் மேல் கடந்துள்ளது.
இதற்கு, பம்பை நதியில் குளிப்பதும் அவர்களது ஆடைகளை ஆற்றிலேயே விட்டு செல்வதும் பாக்டீரியாக்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் நிறைந்த தண்ணீரில் குளித்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால், பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த குள்ளார் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.





