ராமனின் பாதை!

Sriraman சத்யம் வத; தர்மம் சர: – என்பது வேத வாக்கு. “உண்மையைப் பேசு; தர்மவழியில் நடந்துகாட்டு’ என்பது இதன் பொருள். இந்தப் பொருளை மெய்யாக்கிக் காட்ட ஏற்பட்டதே ராமனின் அவதாரம். தர்மத்தின் வழியில் சிந்திப்பவர்க்கே ராம அவதாரத்தின் உள்நோக்கம் புரியும். அற வழியில் வாழ்ந்து, பின்னர் மீதமுள்ள பொருள், இன்பம், வீடு ஆகிய மூன்றை அடைவதே ராமனின் அவதார நோக்கம். நெறி பிறழ்ந்து போவோரை அழிக்க மட்டுமல்லாது, நெறிப்படி வாழக் கற்றுத் தருவதும் இதன் நோக்கம். தெய்வம் எதுவென்று நிரூபிக்கிறேன்: ராமபிரான் வனம் செல்லத் தயாரானார். அதனைத் தடுக்க எண்ணினான் லட்சுமணன். ராமனிடம் சென்று, “உனது கட்டளை இருக்கும் என்றால், நான் என் ஆயுதம் கொண்டு இந்த அநீதியை அழித்துவிட்டு தெய்வம் எதுவென்று நிரூபிக்கிறேன்’ என்றான். அதற்கு ராமபிரான், “தந்தை சொல் மீற விருப்பம் இல்லை. என் சபதம் திடமானது’ என்றார். ராமனைத் தன் தந்தையைப் போல் எண்ணி மதித்து வணங்கும் லட்சுமணன், இந்தச் சொல்லைக் கேட்டு அறத்தின் உருவாக விளங்கும் ராமனின் உத்தரவு இல்லாது தனது பலத்தைப் பிரயோகிக்க இயலாத நிலையை உணர்ந்தான். அதர்மச் சொத்தை தர்ம வழியில் ஆண்டால் சிறப்பா?: பரதன் சிறந்த ராம பக்தன். சகோதரனாக மட்டுமின்றி, ராமனை தெய்வமாகவே கண்டவன். தன் தாயின் வரத்தால் பெற்று தனக்கு அளிக்கப்பட்ட அரசாட்சியை அதர்ம வழியில் வந்தது என்றே கருதி ஒதுக்கினான். ராமனிடம் இருந்து பாதுகையைப் பெற்று, அதனை அரசபீடத்தில் அமர்த்தி, தான் ஒரு சேவகன் போல் அரசுக் கட்டிலில் பற்றற்ற நிலையில் ஆட்சி நடத்துகிறான். காட்டில் ராமன் அவனிடம் விசாரிக்கும்போது, “இந்த நாடு எனக்கு முறைப்படி சொந்தமல்ல, இது அதர்மச் சொத்து. சொத்தை அதர்மமாகப் பெற்று, அதை தர்மவழியில் ஆட்சி நடத்தினால் அது சிறப்பா என்ன?’ என்று வினவுகிறான். ராமனாவது காட்டில் வனவாசத்தை மேற்கொண்டான். பரதனோ நாட்டிலேயே வனவாசம் மேற்கொண்டான். தர்மத்தில் இருந்து வழுவின் அதர்மம் தலையெடுக்கும்: காட்டிலே ராமனும் சீதையும் வாழும் காலம். பொன் மயமான மானைக் காட்டி தன் ஆசையை வெளிப்படுத்துகிறாள் சீதை. இச்சை துறந்து வாழும் நிலையில் சீதைக்கு இச்சை. தர்மத்தை அனுசரித்து வாழும் ராமனின் அறிவோ பொன் மான் மாயம் எனத் தெரிந்தும் அவரை தர்மத்தில் இருந்து சற்றே விலகச் செய்கிறது. பொன் மானாய் வந்த மாரீசன் இறக்கும் தறுவாயில் குரல் கொடுக்க, சீதை அதையெண்ணிக் கலங்கி லட்சுமணனைத் துரத்துகிறாள். அதுவும் தர்ம நெறியில் இருந்து வழுவி, லட்சுமணனை தகாத வார்த்தைகளால் பேசி! அனைத்திலும் அண்ணனின் வார்த்தையைத் தெய்வ வாக்கெனக் கருதும் லட்சுமணன், தன் தர்மத்தில் இருந்து சற்றே நழுவி அவ்விடத்தை விட்டுச் செல்கிறான். இப்படி மூவரும் தாம் பின்பற்றும் தர்ம நெறியில் இருந்து சற்றே விலகியபோது, அதர்மம் தர்ம உருக்கொண்டு போலி சந்நியாசியாக ராவணன் வடிவில் அங்கே புகுந்தது. இப்படி, தர்மத்தில் இருந்து சிறிதளவேனும் வழுவின் அதர்மம் அங்கே தலையெடுக்கும் என்பதையும் ராமபிரானே உணர்த்தினார். அதர்மத்தைத் தடுத்தல் பெரும் பலன் தரும்: தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட, அதர்மத்தைத் தடுப்பவர்களுக்கு அதைவிட அதிக பலன் கிட்டும். அதற்கு ஜடாயு ஓர் உதாரணம். ராவணனின் கொடுஞ்செயலைத் தடுக்க முற்பட்டு வீழ்ந்தது அது. மாமிசபட்சினியாய் இருந்தும், தர்மத்தின் வழியில் சிந்தித்து அதர்மத்தைத் தடுக்க முயன்ற ஜடாயுவுக்கு, தன் தந்தைக்குத் தன்னால் ஆற்ற முடியாத ஈமக் கடனை விசேஷ தர்மமாக எண்ணி, ஜடாயுவுக்குச் செய்து, அது நற்கதி அடையச் செய்தார் ராமபிரான். ஆபத்துக் காலத்திலும் நெறி மீறாதிருந்தால் அபயம் கிட்டும்: ராமனின் வழி சரண் அடைந்தோரைக் காப்பது. இதில் முக்கியமான சரணாகதி விபீஷணனின் செயலே. போர்க் காலத்தில் எதிரியின் பாசறையில் இருந்து வந்த ஒருவன் உளவாளியாகக் கூட இருக்கலாம். ஆனால், ஆபத்து வந்த நிலையிலும், தர்ம நெறி மீறாது அண்ணனுக்கு புத்தி சொன்ன விபீஷணன், தன் தர்ம நெறியைக் கேட்பாரின்றி, சுயதர்மத்தைக் காக்க ராமனிடம் சரண் புகுந்தான். அவன் கோலம் கண்டு மனம் இரங்கி, விபீஷணனை ஏற்க வேண்டாம் என்று சொன்னவர்களிடம் வாதிட்டு அவனைக் காக்க உறுதி எடுக்கிறார் ராமபிரான். ஆபத்துக் காலத்திலும் தர்மத்தில் இருந்து வழுவாத சிந்தனையை உடையவர்கள், இறைவனை சரண் அடையும்போது எந்தக் காலமாக இருந்தாலும் காப்பாற்றப்படுவார்கள் என்பதைக் காட்டினார் ராமபிரான்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.