
யாக சாலையை மொத்தமாக அழித்து, பிரமனுடைய வேள்வியைச் சிதைத்து , எம்பெருமானை தரிசித்து விடவேண்டும்; பிரம்ம பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அவனுடைய எண்ணத்தைத் தவிடுபொடியாக்கிட விரும்பின அஸுரர்கள் , பெருங்கூட்டமாக யாக பூமியை நெருங்கவும் , வழக்கம் போல் அயன் பெருமானைப் பணிந்தான் !
அப்பொழுது பெருத்த சப்தத்துடன், யாக சாலையின் நடுவில் ,மேற்கு நோக்கியபடி நரஸிம்ஹனாய் பகவான் தோன்றி யாகத்தையும் பிரமன் முதலானவர்களையும் காத்தான் என்பதனை,
“ந்ருஸிம்ஹோ யஜ்ஞசாலாயா : மத்யே சைலஸ்ய பச்சிமே |
தத்ரைவாஸீத் மகம் ரக்ஷந் அஸுரேப்ய: ஸமந்தத : ”
என்கிற புராண ச்லோகத்தினால் நாம் அறியலாம் !!
மெய் சிலிர்த்து நின்றான் பிரமன் !
இமையோர் தலைவா ! அழைக்கும் முன்பே..நினைத்த மாத்திரத்திலே ஓடோடி வந்து ரக்ஷிக்கின்றாயே !! இப்பெருமைக்குரியவன் உனையன்றி மற்றொருவருளரோ ??
“சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி ” எங்கும் பரந்தாற் போலே , இப்படி எங்கும் நிறைந்து எங்களை ரக்ஷிக்கும் இந்நீர்மையை யாரே வருணிக்கவியலும் ?!
அதுவும் நரஹரியாக, நரஸிம்ஹனாகவன்றோ தேவரீர் ( நீங்கள் ) தோன்றியிருக்கிறீர் !!
அவதாரங்களுக்குள்ளே மிகச்சிறந்த அவதாரமாக கொண்டாடப்படும் பெருமை உடைய அவதாரம், இப்படி என் கண்களுக்கு விஷயமானதே ! என்னே என் பாக்கியம்!!
என்று பலவாறாகத் துதித்தான்..
” த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ : ” என்பர் வேதாந்த தேசிகன் !
எம்பெருமானுக்கு வைகுண்டன் ( வைகுந்தன் ) என்று பெயர் !
வைகுண்ட கண்டீரவன் = பகவத் ஸிம்ஹம் ( பகவானாகிற ஸிம்ஹம் ) என்று பொருள் !!
நரங்கலந்த சிங்கமாய் அவன் தோன்றியது ப்ரஹ்லாதாழ்வானைக் காக்க மட்டுமன்று என்றருளுகிறார் தசாவதார ஸ்தோத்ரத்தில் !!
பிரமன் விஷயத்தில் எத்தனை ஸத்யமான வார்த்தைகளாயிற்று இவைகள் !
வேள்வியைக் காக்க நரஸிம்ஹனாய் வரவேண்டும் என்கிற நிர்ப்பந்தமேதுமில்லையே !!
ஆயினும் , யாகத்தைக் காத்து , பின்பு இங்கேயே தங்கி நம் அனைவரையும் ரக்ஷித்திடத் திருவுள்ளம் பற்றியன்றோ அவன் இவ்விதம் தோன்றியது ..
பிரமன் , மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்ட சீரிய சிங்கத்தின் அழகில் தன்னையே பறி கொடுத்திருந்தான் !
பிரமன் மட்டுமா !? வசிஷ்டர், மரீசி முதலான ஆசையை வென்றவர்களாக அறியப்பட்டவர்களும் அவனை (பரமனை) ஆசைப்பட்டனர்..
ஸாக்ஷாத் மந்மதனும் மயங்கும் மந்மதனன்றோ இவன் ! அதனாலன்றோ காமன் என்று இவனை அழைக்கிறோம் ! ( பகவானுக்கு காமன் என்றொரு பெயர் உண்டு ..தமிழில் அதுவே ” வேள் ” என்றாகிறது – வேள் ஆசையோடிருக்குமிடம் வேளிருக்கை !! அதுவே மருவி வேளுக்கை ஆயிற்று !! )
“அழகியான் தானே அரியுருவன் தானே ” என்றார் மழிசை வந்த சோதி .
அதனால் தான் பெருமானுக்கு அழகிய சிங்கன் என்று திருநாமமாயிற்று ! ஸஹஸ்ரநாமமும் ” நாரஸிம்ஹ வபு : ஸ்ரீமாந்” என்றது .. ஸ்ரீமாந் – செல்வமுடையவன்.. அழகையே பெருஞ்செல்வமாகவுடையவன் என்றபடி !!
அவதாரங்களில் சில அவதாரங்கள் ம்ருகாவதாரங்கள் ( மிருக உருக் கொண்டவை ) ; சில அவதாரங்கள் மனித உருக் கொண்டு தோன்றினான் !
பராசர பட்டர் ரஸமாக ஒரு விஷயம் ஸ்ரீ ரங்கராஜ ஸ்தவத்தில் ஸாதிக்கிறார் ( பேசுகிறார் ) ..
சிலர் பால் பருகுகின்ற பழக்கத்தினைக் கொண்டிருப்பர்கள்.. சர்க்கரையைத் தொட்டே பார்த்திருக்க மாட்டார்கள்.. சிலருக்கு சர்க்கரை என்றால் ரொம்பப் பிடித்தமானதாக இருக்கும் .. பால் பருக மாட்டார்கள்.. பாலோடு சர்க்கரையும், சர்க்கரையோடு பாலும் சேர்த்துப் பருகினால் அவர்கள் இது நாள் வரையிலும் இந்தச்சுவையை அறியாமல் போனோமே என்று வருந்துவர்களாம்..
ம்ருகமாகவே அவன் எடுத்த பிறப்புகள் வெறும் பாலைப்போலே; மனிதனாகவே அவதரித்தவைகள் வெறும் சர்க்கரையைப் போலே..
ஆனால் , பாலும் சர்க்கரையும் சேர்ந்தாற் போன்ற ( மிருகமும், மனித உருவுமான ) ஒரு அவதாரம் உண்டெனின் அஃது நரஸிம்ஹாவதாரம் மட்டுமே !!
எத்தனைச் சுவையான விளக்கம்..
ஸத்யம் விதாதும் நிஜ ப்ருத்ய பாஷிதம் என்கிறபடியே , ” உண்மையான தொண்டனான ” ப்ரஹ்லாதனுக்காக எத்தனை வேகமாய் ஓடி வந்தான் பகவான்..
பிரமனுக்காகவும் .. ஆம் அவனுமன்றோ அணுக்கத் தொண்டன்.. எனவே தான் இங்கும் யஜ்ஞ ரக்ஷகனாய் நரஹரி தோன்றினான்..
“த்ரவந்தி தைத்யா : ப்ரணமந்தி தேவதா : ” – எங்கு நரஸிம்ஹன் புகழ் பாடப் படுகின்றதோ அங்கு ; தீயவர்கள் ஓட்டம் பிடிக்கின்றார்கள்.. தேவதைகள் பாடுகின்றவர்களை வணங்குகின்றார்கள்..
என்னே அத்புத கேஸரியின் மஹிமை !
அநுபவிக்க அநுபவிக்கத் திகட்டாததன்றோ நம் வேளுக்கை நாயகன் வைபவம்..
அவனுக்கே முகுந்த நாயகன் என்கிற பெயரும் உண்டு !!
அப்படியென்றால்..
வரதன் வந்த கதை ( பகுதி 10ல் -2 )
ஆம்..வேளுக்கை ஆளரிக்கு முகுந்த நாயகன் என்றே திருநாமம் ! முகுந்தன் என்றால் முக்தியளிப்பவன் என்று பொருள்.. ஸம்ஸாரமாகிற பெரும்பிணியிலிருந்து நாம் விடுபட அவனே நமக்கு மருந்து !
இரணியனை வதம் செய்த பிற்பாடு , தான் இளைப்பாறத் தகுந்த இடம் தேடினான் இறைவன்.. இவ்விடமே ( திருவேள் இருக்கை) அவனுக்குப் பிடித்திருந்ததாம். எனவே தான் இன்றளவும் அவன் இங்கு உளன் !
நரஸிம்ஹாவதாரம்..
தானவ சிசுவான ( அசுரன் பிள்ளையான ) ப்ரஹ்லாதனைக் காப்பாற்ற அவன் கொண்ட கோலமிதென்பது நாமறிந்ததே ! பிரமன் வரங்களைக் ( இரணியனுக்கு ) கொடுத்துவிட்டான் என்பதற்காக , அவைகளுக்குக் கட்டுப்பட்டு தூணில் இருந்து வெளிப்பட்டு இரணியனை முடித்தான்.
பிரமன் பேச்சு பொய்யாகி விடக்கூடாது என்பதில் தான் எத்தனை அக்கறை !
அவன் அவதாரங்கள் செய்வதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன.. தானே கீதையில் அவதாரத்திற்கான காரணங்களைப் பட்டியலிடுகின்றான் கண்ணன்.
ஸாதுக்களை ( நல்லவர்களை ) ரக்ஷிப்பதற்காகவும், தீயவர்களை ஒடுக்கவும், தர்மத்தை நிலைநாட்டுதற் பொருட்டும் தான் அவதரிப்பதாக அவனே திருவாய் மலர்ந்தருளியுள்ளான்..
தர்மத்தை நிலைநாட்டுதல் என்றால்.. ?
அதனைத் தெரிந்துகொள்ள ஆசையிருப்பின் , தர்மம் என்றால் என்ன என்று அறிந்து கொள்வது இன்றியமையாததாகிறது !
தர்மம் = திருக் கல்யாண குணங்கள் என்றருளுகிறார் ஸ்ரீ பராசர பட்டர் ..
அப்படியெனில் தன்னுடைய ” எண்ணில் பல் குணங்களை ” வெளியிடுவதற்காகவே அவன் தோன்றுவது !
” அஜாயமான : பஹுதா விஜாயதே ” என்கிறது வேதம்.. ( பிறப்பில்லாதவன் ; பல படிகளாகப் பிறக்கிறான் ) என்பது பொருள் !
அதாவது நம்மைப் போல் கர்மத்தின் காரணமாகவல்லாமல், தன் இச்சையின், மற்றும் நம் பால் கொண்டிருக்கிற அன்பின் காரணமாகப் பிறக்கிறானாம் !
இச்சா க்ருஹீதோபிமதோரு தேஹ : என்கிறது ஸ்ரீ விஷ்ணு புராணம் !
ஓரோர் அவதாரமும் ஓரோர் குணத்தை வெளியிடுவதில் நோக்காயிருக்கும் !
( அவதாரங்களில் எல்லா திருக்குணங்களையும் அவன் பால் நாம் காண முடியுமாயினும், முக்கியமாக ஓரோர் அவதாரத்திலும் ஓரோர் திருக்குணம் ஒளி விடும் ! )
ந்ருஸிம்ஹாவதாரத்தில் , உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருக்கை என்கிற தன்மை வெளிப்படுகின்றதாம் !
அவனுக்கே “அந்தர்யாமி” என்றொரு பெயர் உண்டு ! உள்ளுக்குள்ளே இருந்து கொண்டு ( நம்மை) நியமிப்பவன் என்பது பொருள் !
அந்தர் பஹிச்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண : ஸ்தித : என்று உள்ளும் புறமும் நிறைந்திருப்பவன் அவனே என்கிறது வேதமும் !
இந்தத் திருக் குணத்தை, தன்மையை நமக்கு நன்கு விளக்குவதே நரஸிம்ஹாவதாரம்..ப்ரஹ்லாதன் அதனைத்தானே ” தூணிலும் இருப்பான் துரும்பிலுமிருப்பான் ” என்று சிறு குழந்தையும் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தான்.. !
ஆழ்வாரும் ” எங்குமுளன் கண்ணனென்ற மகனைக் காய்ந்து ” என்று இவ்வர்த்தத்தை அறுதியிடுகிறார் !
சிங்கப்பிரான் பெருமை நாம் ஆராயுமளவோ ?!
வேள்வியைக் காக்க வந்த வேளுக்கை ஆளரி , அசுரர்களை முடித்துப் பிரமனையும் காத்தான் !
பிரமன் வேள்வியைத் தொடர்ந்தார் !
அசுரர்களால் கலங்கின மதியை உடையவளான கலைவாணீ , வேள்வியைக் குலைக்க வேறோர் திட்டம் தீட்டினாள் !
என்ன திட்டம் அது ?!
அறியக் காத்திருப்போம் !
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

With his Thiruttagappanaar (in the framed photo )



