
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும் (பகுதி 4)
– மீ.விசுவநாதன்
தமது விஜய யாத்திரை ஒன்றின் போது தாம் ஓரிடத்தில் அருளிய உபன்யாசம் ஒன்றில் ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் தமது குருநாதரின் மஹிமையைப் பற்றிக் குறிப்பிட்டதாவது:
“புஷ்பதந்தன் என்னும் கந்தர்வன் சிவபெருமானைப் போற்றி எழுதிய சிவ மஹிம்ன ஸ்தோத்திரத்தின் முதல் ஸ்லோகத்தில் “பகவானே, உனது அளவற்ற மஹிமையைப் பூரணமாக அறிந்தவர்தான் உன்னைப் பற்றி ஸ்தோத்திரம் செய்ய முடியும் என்றால், அந்த நான்முக பிரும்மாவிற்குக் கூட அது முடியாது. மாறாக, அவரவர் புத்தி சக்திக்கேற்ப எவரும் உன்னைப் போற்றுவது தவறில்லை எனில் உன்னைப் போற்றி நான் இப்பொழுது இயற்றத் துணிந்திருக்கும் என்னுடைய இந்த ஸ்தோத்திரமும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே”. நமது மகாசன்னிதானத்தின் (ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளின்) மகிமைகளைப் பற்றி நாம் கூற முயல்வதும் இது போன்றதே. நமது ஆசார்யாளின் மகிமையும் அளவிட முடியாத ஒன்றே. ஏதோ நமக்கு இயன்ற அளவிற்கு அவர்களது மகிமைகளைப் பற்றிக் கூற நாம் முயற்சிக்கலாம்.”
மஹிமா என்றாலே “பெருமை” என்றுதான் பொருள். ஆயினும் தமது குருநாதரின் பெருமைகள் ஒன்றும் சாதாரணமானவை அல்ல என்பதை விளக்கும் வண்ணமே ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் “மஹா மகிம ஸம்யுத:” என்னும் இந்த நாமத்தைப் புனைந்திருக்கிறாரோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இளம் வயதிலேயே துறவறத்தைத் தழுவிடும் அளவிற்கு வைராக்கியச் சிகரமாக விளங்கியவர் அவர்.
ஸ்ரீ பரமேஸ்வரனும், ஸ்ரீ சாரதாம்பாளுமே அவருக்கு யோக பாடங்களைக் கற்றுக் கொடுக்க முனையும் அளவுக்கு மஹிமை வாய்ந்தவர் அவர். குருநாதரால் (ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள்) ஸ்ரீ நரஸிம்ம மந்திர உபதேசம் அவருக்குச் செய்யப் பட்ட போது, ஸாக்ஷாத் அந்த நரசிம்மராகவே மாறிய மஹானுபாவர் அவர். யோகத்தின் சிகரமாம் நிர்விகல்ப ஸமாதியையும், அதைத் தொடர்ந்து ஜீவன் முக்தியையும் எளிதில் அடைந்தவர் அவர்.
அறிவிலும் அடக்கத்திலும் இணையற்று விளங்கிய ஸத்குரு ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளின் மஹாமஹிமையினைப் பூரணமாக விவரிக்க எவரால்தான் இயலும்? தம்முடைய மனம், வாக்கு , செயல் ஆகியவற்றில் பரிசுத்தராகத் திகழ்ந்து வந்த ஆசார்யாளின் மஹிமைகளைப் பல்வேறு தருணங்களில் பக்தர்கள் பலர் கண்ணுற்று அனுபவித்திருக்கின்றனர்.
ஆசார்யாளின் செயல் மஹிமைக்கு எடுத்துக் காட்டாக ஒரு சம்பவத்தினைக் காண்போம். தீவிர நாத்திகர்களும் ஆசார்யாளின் விஷயத்தில் மிகுந்த மரியாதையும் பக்தியும் கொண்டிடும் அளவுக்கு மஹிமை வாய்ந்தவராக விளங்கினார் ஆசார்யாள்.
ஆசார்யாள் 1969ல் கோயம்புத்தூர் நகருக்கு விஜயம் செய்த சமயம் பிரபல விஞ்ஞானியான திரு. G. D . நாயுடுவின் ஆய்வுக் கூடத்திற்கு விஜயம் செய்ய விருப்பம் தெரிவித்தார். திரு. G. D . நாயுடுவோ ஒரு நாத்திகவாதி. மேலும் நாத்திகவாதத் தலைவராக விளங்கிய திரு. ஈ.வே.ரா. பெரியாரின் தொண்டரும் ஆவார் என்பதால் ஆசார்யாள் அங்கு செல்வது சரியாகுமா என்று பலருக்கும் ஐயம் ஏற்பட்டது.

ஆயினும், ஆசார்யாள் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. “திரு. நாயுடு அவர்கள் ஒரு விஞ்ஞானி. பல பொறியியல் கண்டுபிடுப்புகளை அவர் நிகழ்த்தி இருக்கிறார். ஆசார்யாளுக்கும் பொறியியல் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் உண்டு. மடத்தின் மராமத்து மற்றும் வளர்ச்சிப் பணிகளில் நாயுடு அவர்களின் ஆய்வுகள் உதவக்கூடும். இம்மாதிரியான பொது நன்மைகளுக்கு இடம் இருக்கும் ஒரு விஷயத்தில் ஆத்திக-நாத்திக கொள்கைகளுக்கு என்ன வேலை” என்ற ரீதியில் இருந்த ஆசார்யாளின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் எவருக்கும் புரியவில்லை. தன்னுடைய கூடத்திற்கு விஜயம் செய்ய ஒரு தலைசிறந்த ஆன்மிகத் தலைவர் விருப்பம் தெரிவித்தது திரு. G. D . நாயுடு அவர்களுக்கே பெரும் வியப்பினைத் தந்தது. ஆயினும், அவர் தமது கூடத்திற்கு வருகை புரிந்த ஆசார்யாளை மரியாதைகளுடன் வரவேற்று தமது ஆய்வுக் கூடத்தினைச் சுற்றிக் காண்பித்தார்.
பொறியியல் விஷயங்களில் ஆசார்யாளுக்கு இருந்த ஆர்வத்தினையும், ஆழ்ந்த அறிவினையும் கண்ட திரு. நாயுடு பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கினார். ஆசார்யாளின் மீது பெருமதிப்பு உண்டாகி விட்டது அவருக்கு. அது எந்த அளவிற்கு என்றால், பிற்பாடு தாம் துவங்கிய பொறியியல் பயற்சி நிறுவனத்திற்கு அவர், “Sringeri Jagadguru Sankaraacharya Vidhyaatheertha Training Institute” என்றே பெயரிட்டதுடன், அதனை ஈ.வே.ரா. பெரியாரே திறந்து வைக்குமாறு செய்யும் அளவுக்கு அவருக்கு ஆசார்யாள் விஷயத்தில் ஈடுபாடு உண்டாகிவிட்டது. பின்பு, 1971ம் ஆண்டு ஆசார்யாள் கோயம்புத்தூர் சென்றிருந்த சமயம் , திரு. நாயுடு அவர்களால் கட்டப்பட்டிருந்த E V R . Periyaar Hall என்னும் கூடத்தைத் திறந்து வைத்தார்.
திரு. நாயுடு அவர்கள் ஒரு உரை ஒன்றில் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டதாவது: “நான் பெரியாருக்கும் சிஷ்யன். அதே சமயம் சுவாமிஜிக்கும் சிஷ்யன்.” இங்ஙனம், “அத்வேஷ்டா ஸர்வபூதானாம் மைத்ரக: கருண ஏவ” (அனைத்து உயிர்களிடத்தும் வெறுப்பு இன்றி, நட்புடன் பழகி, கருணையையே காட்டி..) என்னும்படியான செயல்பாட்டினை வைத்துக் கொண்டிருந்த ஆசார்யாள், “இவர் என்னைச் சேர்ந்தவர்” என்று ஒவ்வொருவரும் எண்ணிடும் வகையில், அனைவருடனும் மிக அன்பாகப் பழகிவந்தார்.
(ஸ்ரீமான் கி. சுரேஷ் சந்தர் தொகுத்த “அருள்மிகு குருவின் பொருள்மிகு நாமங்கள்” என்ற புத்தகத்தில் இருந்து எடுத்துப் பகிரப்பட்டது)
1988ம் வருடம் “மே” மாதம் ஆசார்யாளை தரிசிக்க எண்ணி சிருங்கேரிக்கு வக்கீல் திரு. தியாகராஜன், திரு. ஆர். லெஷ்மீவராஹன் போன்ற நண்பர்களுடன் சென்றிருந்தேன். ஒரு நாள் மதியம் துங்கை நதிக்கரையில் “மாத்யான்னிகம்” செய்து முடித்து எழுந்தோம் .
வக்கீல் திரு. தியாகராஜன் அவர்களும் உடன் இருந்தார்கள். நதியில் தண்ணீர் குறைவாகத்தான் இருந்தது. தண்ணீர் குறைவாக இருக்கும் காலத்தில் மரப்பாலம் வழியாகத்தான் இருகரைகளுக்கும் சென்று வர வேண்டும். மழைக்காலத்தில் பக்தர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் பக்தர்களின் நலனுக்காக ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயப்பகுதிக்கும், தென்கரையில் உள்ள நரசிம்மவனப் பகுதிக்கும் பாலம் அமைக்க விரும்பினார் ஆசார்யாள். (ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள்) அந்தப் பாலம் அமைக்கும் பணிநேரத்தில் ஆசார்யாளே நேரில் வந்து பார்வையிடுவார்கள்.
நல்ல வெயில் நேரமானாலும் அங்கே வேலை செய்து கொண்டிருக்கும் பணியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் கட்டுமானப் பணிகளைப் பற்றி அறிவுரைகள் சொல்லியும், உற்சாகப் படுத்தியும் வருவார்கள். அப்படிதான் அன்றும் அவர் நரசிம்மவனத்தில் இருந்து நதியை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது காரியதரிசியும் இருந்தார். ஆசார்யாளைப் பார்த்தவுடன்,
“ஏய் விச்சு…ஆசார்யாள் வரார்…சீக்கிரம் வா…வந்தனம் பண்ணுவோம் என்றார்” வக்கீல் தியாகராஜன். எனக்கு ஒரே குஷி. வேகமாக மரப்பாலம் வழியாகச் சென்று கீழே இறங்கி நடந்தோம். ஆற்று மணல் சூடாக இருந்தது. ஆசார்யாளுக்கு ஒரு பத்தடிகள் முன்பாக அந்த ஆற்று மணலில் விழுந்து நமஸ்காரம் செய்தோம். “எழுந்திருங்கோப்பா….மணல் சுடப் போறது” என்று மிகுந்த கருணையோடு எங்களைப் பார்த்து ஆசீர்வதித்தார். எனக்கோ கையும் காலும் ஓடவில்லை. என்னுடைய ஜோல்னாப் பையில் சின்ன டப்பா சைசில் ஒரு Codak camera வைத்திருந்தேன்.
அவரச அவசரமாக அதை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு,” ஆசார்யாள்…ஒரே ஒரு போட்டோ எடுக்க அனுமதி தாங்கோ” என்று மிகப் பணிவோடும், பதற்றத்தோடும் கேட்டேன். எங்கள் கால்களில் செருப்பு அணியாததைப் பார்த்து,” சீக்கிரம் எடுத்துக்கோ…கால் சுடப்போறது….” என்று ஒரு தாயின் கனிவோடு சொல்லி அனுமதி தந்தார். அந்த டப்பா கேமராவில் அந்த மகானை அன்போடு பிடித்து வைத்துக் கொண்டேன்.
” அது என்ன கேமரா”…என்றார். “கொடாக்” கேமரா….நூறு ரூபாய்க்கு வாங்கினேன். உங்களைப் படம் எடுக்க ஆசைப்பட்டேன். எனக்கு படம் எடுத்துப் பழக்கம் இல்லை என்றேன். சிரித்துக் கொண்டே ஆசீர்வாதம் செய்தார். மீண்டும் நாங்கள் அந்த மகானை நமஸ்கரிக்கக் குனிந்த போது,”போதும் போதும்….மணல் ரொம்ப சுடும்பா…” என்ற அவரின் குளிர்ந்த அருள்வாக்கைக் கேட்டபடியே நாங்கள் அங்கிருந்து அவரைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மதிய உணவுக்காக அன்னதானக் கூடத்தை நோக்கிச் சென்றோம்.
அந்த மகானும் நரசிம்மவனத்தில் உள்ள பெரிய பாக்கு மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தார்.
(வித்தையும் விநயமும் தொடரும்)