
மே 13 ஆம் தேதி அன்று, தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களைக் கொடுக்கச் சென்றனர் திமுக எம்.பிக்கள். டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மேற்கொண்ட இந்த சந்திப்பின் போது தங்களை தலைமைச் செயலாளர் அவமானப்படுத்தி விட்டார் என்று திமுக எம்.பிக்கள் செய்தியாளர்கள் மத்தியில் புகார் தெரிவித்தனர்.
திமுக எம்.பி டி.ஆர்.பாலு பேசிய போது “This is the problem with you people” என்று தலைமைச் செயலாளர் எங்களைப் பார்த்து சொன்னார். இதற்கு என்ன அர்த்தம் தயா என்று தயாநிதி மாறனிடம் கேட்க, அதற்கு அவர் “எங்களை மூன்றாம் தர மக்களைப் போல் நடத்தினார். அந்த வார்த்தையை வாயில் சொல்ல முடியவில்லை. நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?” என்று குமுறிக் கொட்டி, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் தயாநிதி மாறன்.
ஆர்.எஸ்.பாரதி ஏற்படுத்திய சர்ச்சை சமாதிக்குள் உறங்கிப் போயுள்ள நிலையில், இப்போது தயாநிதி மாறன் கிளப்பிய பூதம் எங்கே பூகம்பமாய் வெடித்து திமுக., கூட்டணி கலகலத்துப் போகுமோ என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்க, அதனை புஸ்வாணமாகப் போகச் செய்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், இது ஒரு தோழமைச் சுட்டுதல் என்று செல்லமாய்க் கன்னத்தைக் கிள்ளி கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில் “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்த வேகத்தில் ‘நாங்கள் தாழ்த்தப் பட்டவர்களா’என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை; என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது. இது தோழமை சுட்டுதல்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருமாவளவனின் இந்த அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்து, கார்ட்டூனிஸ்ட் வர்மா, ஒரு கேலிசித்திரத்தைப் போட, அது பெரும் சர்ச்சையில் முடிந்திருக்கிறது. நாங்கள் என்ன தாழ்த்தப் பட்டவர்களா என்று தயாநிதி கேட்ட போது எழுந்திராத எதிர்ப்பு, இந்தக் கார்ட்டூனில் தெரிந்த கேலியைக் கண்டு கொதித்து எழ வைத்திருக்கிறது பலரை! அதுவே வழக்கமான எதிர்ப்பு, புகார்கள், வழக்குகள் என்று இழுத்துச் சென்றிருக்கிறது.
சர்ச்சைகுரிய இந்த கார்ட்டூன் வரைந்த வர்மாவைக் கைது செய் என்று ஜவாஹிருல்லா குரல் எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக பாஜக.,வின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த அ.அஸ்வத்தாமன், இதற்குப் பெயர் தான் கருத்துச் சுதந்திரமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ஒரு கருத்துப் பதிவு…
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் “எங்களை மூன்றாம் தர மக்கள் போல் தாழ்த்தப்பட்டவர்கள் போல் நடத்தினார் தலைமைச் செயலாளர்” என்று கூறுகிறார் தயாநிதிமாறன்.
‘தாழ்த்தப்பட்டவர்கள்’ என்றாலே மரியாதை குறைச்சலாக நடத்தப்பட வேண்டும் என்கின்ற வன்மம் அடிமனதில் இல்லாமல், தாழ்த்தப்பட்டவர்கள் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்பட வேண்டும் என்கிற வக்கிரம் இல்லாமல், மரியாதை இல்லாமல் நடத்தப்படுதல் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கானது என்ற ஏளனம் இல்லாமல் ,பொதுவெளியில் இப்படி ஒரு வார்த்தை வருமா என்பது அறிவார்ந்த சமூகம் யோசித்து உணர வேண்டிய ஒரு விஷயம்.
எங்களை மிகவும் தாழ்மையாக நடத்தினார்கள் என்று சொல்லுவதற்கு உதாரணமாக தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜன மக்களை சொல்லுகிறார்கள் என்று சொன்னால், இவர்கள் மனதில் இருக்கின்ற ‘ஜாதிய பாகுபாடு வெறி’ என்பது, என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் நாம் என்கிற உள்ளூர பயத்தை ஏற்படுத்துகிறது.

இந்த சாதிய வன்மத்தை தான், பாகுபாடு பார்க்கும் வக்கிரத்தை தான் #தோழமை_சுட்டல் என்றார் திருமாவளவன். பாஜக #தமிழகத்தலைவர் #டாக்டர் #L_முருகன் அவர்களோ, காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டதோடு , பாஜகவினர் தமிழகம் முழுவதும் எஸ்சி எஸ்டி சட்டத்தில் புகார் அளிக்கவும் உத்தரவிட்டார்.
இதுதான் #ஈவேரா வை பின்பற்றும் திருமாவளவனுக்கும், #அம்பேத்கரை பின்பற்றும் #டாக்டர் L. முருகன் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். திருமாவளவனின் இந்த ‘சப்பைக்கட்டு’ தமிழகம் முழுதும் எதிர்ப்பை உண்டாக்கியது. அதை விளக்கும் விதமாக கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டுள்ளார் #ஓவியர் #வர்மா அவர்கள்….. அதற்கு, ஜவஹிருல்லா கண்டனம் தெரிவிக்கிறார் !
விசிக கட்சியினர் ஏவப்பட்டு தமிழகம் முழுவதும் புகார் அளிக்கிறார்கள் ! ஹரிஜன மக்களை கீழ்த்தரமான முறையில் விமர்சித்த தயாநிதி மாறன் மீதோ, தாழ்த்தப்பட்ட மக்கள் நீதிபதியானது திமுக போட்ட பிச்சை என்று திமிர்த்தனம் பேசிய திமுக ஆர்எஸ் பாரதி மீதோ புகார் கொடுக்க முன்வராதவர்கள், இதற்கு மட்டும் புறப்பட்டு வருவது அவலத்தின் உச்சம்.
பாஜக லயோலா கல்லூரியில், நமது இந்து தெய்வங்களையும், நமது தேசிய சின்னத்தையும் இந்திய அரசாங்கத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் நிர்வாண ஓவியங்களை காட்சிப்படுத்தியபோது கருத்து சுதந்திரம் என்று கதறிய கருங்காலிகள் !
நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களையும் ராணுவத் துறை அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களையும், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் , தற்போதைய தெலுங்கானா ஆளுநர் மாண்புமிகு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், அவர்களையெல்லாம் அவதூறாக பேசிய போதெல்லாம் பேச்சுரிமை என்று பிதற்றிய பித்தர்கள் !
வெள்ளையர் ஆட்சியில் அதிக ஆண்டுகள் சிறை தண்டனை, அதுவும் கொடுமையான சித்திரவதைகளை அனுபவித்த வீரசவார்க்கர் அவர்களை ‘வெள்ளையர்கள் காலை நக்குவது போன்று கேலி சித்திரம் வரைந்த கீழ்த்தரமான பிறப்புகளை, மனசாட்சியின்றி ஆதரித்த மானமற்றவர்கள்!
இவ்வளவு ஏன்? தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நிர்வாணமாக படம் வரைந்து காட்சி படுத்திய போதும், அதைக்கூட ஆதரித்த அதர்ம வாதிகள்! இன்று ,இதை கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என பொங்குகிறார்கள்!
திருமாவளவனை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக ஜவாஹிருல்லா சொல்லுகிற அந்த ஓவியத்தை பார்ப்பவர்களுக்கு உண்மை புரியும் என்று பொரிந்து தள்ளியிருக்கிறார் பாஜக.,வின் வழக்குரைஞர் அ.அஸ்வத்தாமன்!

இதே போல், ஓவியர் வர்மாவுக்கு ஒரு நீதி! விடுதலை சிறுத்தை வன்னியரசுக்கு ஒரு நீதியா ? *எது கருத்து சுதந்திரம்? மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே! பதில் சொல்லுங்கள்!! என்று கேட்டு இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமாரும் ஒரு கருத்துப் பதிவினை செய்துள்ளார்.
அவரது கருத்துப் பதிவு: சமீப காலமாக தமிழகத்தில் “கார்ட்டூன்” அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஓவியர் “மதி ” கொரோனா விழிப்புணர்வுக்காக ஓவியம் போட ,அறிஞர் அண்ணாதுரை என்று நினைத்து மு க ஸ்டாலின் ஸ்டாலின் கொந்தளிக்க; தினத்தந்தி மன்னிப்பு கேட்கிறது.
மதி நீக்கப்படுகிறார்.
.ஒரு வாரம் கழித்து “வாசகர் கார்டூன்” என்கின்ற பெயரில் தினத்தந்தி நிர்வாகம் “எனக்கு அபிஷேக ஆராதனைகள் வேண்டாம் மாஸ்க் போடுங்கள் என்று “பிள்ளையார்” சொல்வதாகவும், முருகன் பிள்ளையார் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை காண முடியாமல் போனதற்கு காரணம் கொரோனா என்று தினத்தந்தி கார்ட்டூன் வாசகர் கார்ட்டூன் என வெளியிட்டது. இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை.
*லயோலா கல்லூரியில் ஒரு ஓவியக் கண்காட்சி, இந்து தெய்வங்கள் பாரதமாதா இந்து வழிபாட்டு தெய்வத் திருவுருவங்கள் சமயச் சின்னங்கள் இவைகளை அவதூறு பரப்பிபடக் கண்காட்சி வைத்தபோது ஜவாஹிருல்லா கண்ணில் படவில்லை; கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை ;ஓவியரை கைது செய்யுங்கள் என்று சொல்லவில்லை.
*விடுதலை சிறுத்தை கட்சி வன்னியரசு அவர்கள் அவருடைய முகநூல் பக்கத்தில் கடந்த 15ஆம் தேதி பாமக தலைவர் ராமதாஸ் அய்யா அவர்களை கேவலப் படுத்தும் நோக்கத்தோடு கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் வாங்கக்கூடிய கவருக்கு நல்லா குரைக்கிறாய் என்று கார்ட்டூன் போட்டபோது ஜவாஹிருல்லா கண்ணில் படவில்லை; கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை; கைது செய்யச் சொல்லவில்லை .கேட்டால் கருத்து சுதந்திரம்!
*ஆனால் நாங்கள் தாழ்த்தப்பட்ட மக்களா? மூன்றாம் தர குடிமக்களா? என்று பட்டியல் இன மக்களை கேவலமாக பேசிய தயாநிதி மாறனை கண்டித்து ஒரு அறிக்கை விட தைரியமற்ற ஜவாஹிருல்லா, திமுக தயாநிதி மாறன் அவமதிக்கும் படியாக பேசவில்லை.
“டங்”சிலிப் ஆகிவிட்டது. “தோழமை சுட்டுதல் “என்று பதவி சுகத்திற்காக பட்டியல் இன மக்களை அவமதித்தாலும் பரவாயில்லை; பட்டு துணியில் வைத்து சுத்தப்பட்ட புதிய காலணியால் அடி வாங்கினாலும் அவமானம் ஒன்றுமில்லை என்பது போல “உள்ளம்” பொருந்தாத ஒட்டுறவு; சுயநல அரசியலை செய்து கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் அவர்கள் குறித்து படம் வரைந்த ஓவியர் வர்மா மட்டும் அயோக்கியனாம். வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமாம்! ஜவாஹிருல்லா என்னா அரசியல் லாஜிக்!? இதுவா கருத்து சுதந்திரம்? ஜவாஹிருல்லா வே பதில் சொல்லுங்கள்!.. என்று இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இப்போது ‘கருத்துச் சுதந்திர விவகாரம்’ முட்டுச் சந்தில் நிற்பது போல் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.