
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்: (பகுதி 9)
மீ.விசுவநாதன்
சுமார் எட்டு வருடகாலம் தமது போற்றத்தக்க அறநெறிகளாலும், மற்றும் சாஸ்திர ஞானத்தாலும், அனைத்திற்கும் மேலாக தமது அபாரமான குருபக்தியாலும் ஸ்ரீ மகாசன்னிதானத்தின் இதயத்தில் பெரும் திருப்தியைத் தோற்றுவித்தார் ஸ்ரீ ஆஞ்சநேயலு. இத்தகைய ஒரு அபூர்வ புருஷரது ஸத்சங்கம் உலகனைத்துக்கும் கிடைக்கட்டுமே என்று ஸ்ரீ மகாசன்னிதானம் நினைத்தார் போலும்.
விளைவு, ஸ்ரீ ஆஞ்சநேயலுவிற்கு சன்யாச ஆஸ்ரமத்தை அளித்துத் தமது வாரிசாக பீடத்திற்கு நியமித்து விடும் எண்ணம் அம்மஹானது உள்ளத்தில் பிறந்தது. அவரது எண்ணம் சரியே என்பதை ஸ்ரீ சாரதம்பாளே அங்கீகரிப்பது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதையும் இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
ஒருமுறை தர்மாத்மா ஸ்ரீ வைத்யசுப்ரமானிய ஐயர் சிருங்கேரியில் ஸ்ரீ மகாசன்னிதானத்தை தரிசனம் செய்து உரையாடிக் கொண்டிருக்கையில் சிஷ்ய ஸ்வீகாரத்திற்கு ஏற்றதொரு நாளைக் குறிப்பது பற்றிய பேச்செழவே, அதை முடிவு செய்ய அங்கிருந்த பஞ்சாங்கம் ஒன்றை எடுத்துப் பார்க்குமாறு குருநாதர் பணித்தார். அதன்படி செய்த தர்மாத்மா அப்பஞ்சாகம் கன்னடமொழியில் அச்சிடப் பட்டிருந்த படியால் தம்மால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை எனப் பணிவுடன் உரைத்து நின்றார்.
அங்கிருந்த ஒரு புத்தக அலமாரியின் குறிப்பிட்ட ஒரு தட்டில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்க்குமாறு குருநாதர் கூறினார். அப்பஞ்சாங்கத்தை தர்மாத்மா எடுக்கும் சமயம் அந்த அலமாரியின் மேற்தட்டில் இருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. அதைக்கண்ட ஜகத்குரு அந்தக் காகிதத்தை எடுத்துத் தம்மிடம் தருமாறு கூற, ஸ்ரீ ஐயரும் அவ்வாறே செய்தார்.
அந்தக் காகிதத்தைப் பிரித்துப் பார்த்த போது, 1931ம் வருடம் ஸ்ரீ மகாசன்னிதானத்தை அவரது குருவான ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் சிஷ்ய ஸ்வீகாரம் செய்து கொள்வதற்கான நிகழ்ச்சி நிரல்கள் கன்னட மொழியில் அச்சிடப்பட்ட காகிதமே அது எனத் தெரிந்தது. உடனே ஸ்ரீ மகாசன்னிதானம்,” அம்பாள் சிஷ்ய ஸ்வீகாரத்திற்கான சைகையைக் காட்டி விட்டாள்” என தர்மாத்மாவிடம் மகிழ்ச்சி பொங்க அறிவித்தார்.

காலடி வஜ்ர மகோத்ஸவ ப்ரசஸ்தி
காலடியில் ஸ்ரீ சங்கரருக்கும், ஸ்ரீ சாரதாம்பாளுக்கும் கோவில் கட்டி கும்பாபிஷேகம் முடிந்து எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவு விழாவைக் (வஜ்ரவிழா) கொண்டாட வேண்டும் என்ற எண்ணங் கொண்ட சீடர் தர்மாத்மா ஸ்ரீ வைத்திய சுப்ரமணிய ஐயர் அவர்களைப் பற்றி ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் “காலடி வஜ்ர மகோத்ஸவ ப்ரசஸ்தி” என்ற ஸ்லோகத்தில் இப்படி மிகச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் :
” பாணர்ஷிவத்ஸராணாம் பூர்த்திம்ஜாதாமிஹஸ்மர்த்தும்
வஜ்ரோத்ஸவாமாசரிதும் சங்கரகிங்கர இயேஷ கச்சித்தி”
(இந்தப் புண்ணிய கார்யம் நடைபெற்று எழுபத்து ஐந்து ஆண்டுகள் நிறைவுற்றதைக் குறிக்க ஸ்ரீ சங்கரரின் சீடர்களுள் ஒருவர் வஜ்ர விழா எடுக்க விரும்பினார். )
“சௌம்யாப்தே லப்தஜனி: தர்மாத்மேதி ப்ரசஸ்த ஆசார்யை:
வைத்யாதிமபத பூஷித ஸுப்ரஹமண்ய: சரர்ஷிவர்ஷவயா:”
(எழுபத்து ஐந்து வயதான ஸ்ரீ வைத்திய சுப்ரமண்ய ஐயர் சௌம்ய வருடத்தில் பிறந்தவர்; நமது ஆசார்யாளால் (ஸ்ரீ மகாசன்னிதானம்) “தர்மாத்மா” என பட்டம் சூட்டப் பட்டவர்)
“ச்ருங்ககிரி பீடானாம் ஜகத்குருணாமனுக்ரஹம் சாஜ்ஞாம்
லப்த்வாsயம் தர்மாத்மா ப்ராப்யாபி ச ஸாஹ்யமாஸ்திகவராணாம்”
(சிருங்கேரி ஜகத்குருவின் ஆணை மற்றும் ஆசிகளின் பேரில், ஆஸ்திகப் பிரமுகர்களை தர்மாத்மா ஒன்று திரட்டினார்)
“வஜ்ரோத்ஸவம் நிமித்தீக்ருத்ய ச ஸம்ஸ்க்ருத கலாலயம் கஞ்சித்
ப்ருஹதாகாரம் ருசிரம் நிர்மாபயிதும் வ்யதாத் வ்யாவஸ்தாம் ஸ: “
(வஜ்ர விழா கொண்டாடப் பட்ட அவ்வேளையில் அவர் (தர்மாத்மா), காலடியில் ஒரு பெரிய அழகிய ஸம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தை உருவாக்கத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தார்)
“வஜ்ரோத்ஸவஸ்ய பூர்த்த்யை யேஷாம் கருணா நிதானமாஜ்ஞா ச
விஜயந்தாம் தே ஸுசிரம் நவ வித்யாதீர்த்த தேசிகோத்தம்ஸா:”
(எவருடைய கருணையும் கட்டளையும் இந்த வஜ்ர விழா சிறப்பாக நடந்தேற மூல காரணங்களாக இருந்தனவோ அந்த குருவான ஸ்ரீமத் அபிநவ வித்யா தீர்த்த மகாச்வாமிகளைப் போற்றுகிறோம்)
(ஸ்ரீமான் கி.சுரேஷ் சந்தர் எழுதிய “ஞாலம் போற்றும் ஞான குரு” என்ற புத்தகத்தில் இருந்து பகிரப்பட்டது)

சிருங்கேரி ஜகத்குரு நாதர்கள் சென்னைக்கு விஜய யாத்திரையாக 1986ம் வருடம் வந்திருந்தார்கள். தர்மாத்மாவில் இல்லமான நவசுஜாவில் மிகப் பெரிய பந்தல் போடப்பட்டு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகளின் வர்தந்தித் திருவிழா கோலாகலமாக நடத்தப்பட்டது.
ஒவ்வொரு நாளும் ஸ்ரீ சாரதா சந்திரமௌலீச்வர பூஜைகளை ஸ்ரீ ஆசார்யர்கள் செய்த அருளழகை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தார்கள். தர்மாத்மாவின் இல்லமான நவசுஜா ஸ்ரீ சாரதா பீடமாகவே காட்சி தந்தது.
தர்மாத்மா ஸ்ரீ வைத்திய சுப்ரமண்ய ஐயர் அவர்கள் 1986ம் வருடம் சென்னையில் அவரது இல்லமான நவசுஜாவில் திடீரென உடல்நலக் குறைவால் குருவின் திருவடி நிழலை அடைந்தார்கள். உடனடியாக ஆசார்யாளின் பூஜா நிகழ்சிகள் அருகில் உள்ள வித்யா தீர்த்த நகருக்கு, சங்கீத வித்வான் ஸ்ரீமான் வி. சுப்ரமணிய ஐயர் அவர்களின் இல்லத்திற்கு மற்றப் பட்டது.
தொடர்ச்சியாக சென்னையில் பல இடங்களில் முக்கியமாக , கிருபாசங்கரித் தெரு, திருவான்மியூர் சிவசுந்தர் அவின்யூ போன்ற இடங்களில் ஸ்ரீ ஆசார்யாளின் பூஜை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது. பிறகு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் சிருங்கேரிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்ரீ சந்நிதானம் அவர்கள் விஜய யாத்திரையாக தென்தமிழ்நாட்டிற்குச் சென்று விட்டு 1988ம் ஆண்டு “மே” மாதத்தில் சிருங்கேரிக்குத் திரும்பினார்கள்.
சிருங்கேரியில் ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதிக்கு நேர் எதிர்ப்புற கோவில் கற்சுவரில் தர்மாத்மா ஸ்ரீமான் வைத்ய சுப்ரமண்ய ஐயரின் புகைப்படத்தை (photo) ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளின் ஆணையின் படி வைத்திருந்தார்கள். ஸ்ரீ சாரதாம்பாளை தரிசனம் செய்து திரும்பும் பக்தர்களின் கண்களில் தர்மாத்மாவின் படமும் தெரியும் படியாக இருந்தது.
1987ம் ஆண்டில் ஒருநாள் சங்கீத வித்வான் ஸ்ரீமான் வி. சுப்ரமணிய ஐயர் அவர்கள் குருநாதரை தரிசனம் செய்துவர சிருங்கேரிக்குக் குடும்பமாகச் சென்றார். ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்கே மேலே மாட்டி வைத்திருந்த தர்மாத்மாவின் படத்தை பார்த்தார் திரு. வி.சுப்ரமணிய ஐயர் அவர்களின் மனைவி.
அதைப் பார்த்த ஆச்சரியத்தில், தம் கணவருக்கு மாத்திரம் கேட்கும் படியாக, “என்னது… இங்க தர்மாத்மா வைத்திய சுப்ரமண்ய ஐயரோட படத்த மாட்டிருக்கா” என்றவுடன், “நம்ம ஆசார்யாள் எது செஞ்சாலும் அதுக்கு ஏதாவது நல்ல காரணம் இருக்கும்…நீ வா” என்று திரு. வி. சுப்பிரமணியம் தங்கள் குடும்பத்தாருடன் துங்கை நதியின் தென்கரையில் இருக்கும் நரசிம்மவனத்திற்கு ஸ்ரீ ஆசார்யாளை தரிசனம் செய்யச் சென்று விட்டார்கள்.
காலையில் நரசிம்மவனத்தில் ஆசார்யாளுக்கு பாதபூஜை, பிஷாவந்தனம் செய்து முடித்து விட்டு பக்தர்கள் வரிசையாக ஜகத்குருவிடம் தீர்த்தப் பிரசாதம் பெற்றுச் செல்வார்கள். எல்லோருக்கும் தீர்த்தப் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த குருநாதர், திரு. வி. சுப்பிரமணியம் அவர்களின் மனைவிக்குத் தீர்த்தப் பிரசாதம் கொடுக்கும் முன்பாக,” என்னம்மா… எதிர் கரைல சாரதாம்பாளை தரிசனம் பண்ணினேளா?” என்று கேட்டு விட்டு,” அங்க அம்பாளின் சந்நிதிக்கு நேரே “தர்மாத்மா” வின் படத்தை மாட்டி வைச்சிருக்கேன்…. பாத்தேளா….” என்றாராம்.
இந்த அம்மாவுக்கு உடலெல்லாம் புல்லரித்தது. கண்ணீர் மல்க,” தர்மாத்மாவின் படத்தைப் பார்த்தேன் குருநாதா” என்று சொன்னவுடன்,” என்னடா.. நம்மளப்போல ஒரு மனுஷர்தானே அவரும்…அவரோட படத்த எதுக்கு அங்க மாட்டிருக்கா…ன்னு நினைப்பா… அந்தப் படத்த அங்க எதுக்கு நான் மாட்டி வைச்சிருக்கேன்னா ….. இதப் பார்த்து இது யாரோட படம்ன்னு கேப்பா…அதுக்கு அவர் நிறைய தர்மம் செய்த குருபக்தர்… அப்படின்னு பதில் சொல்லுவா…. அதக் கேக்கறவாளுக்கு நாமும் இவரைப் போல தர்மம் செய்யணும்னு ஆசை வரும். அதனால கொஞ்ச நாள் அந்தப் படம் அங்க இருக்கட்டுமேன்னு வைச்சிருக்கேன் ” என்று தீர்த்தப் பிரசாதம் கொடுத்தாராம் மகான் ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகள்.
“விஸ்வநாதா…நான் எங்காத்து மாமாவிடம் ஸ்ரீ சாரதாம்பாள் சந்நிதி முன்பு சொன்னது அவருக்கு மட்டும்தான் கேட்டிருக்க முடியும்னு நெனச்சேன். ஆனா…அந்த சாரதாம்பாளேதான் நம்ம குருநாதர் என்பது அவர் அங்க வந்திருந்த அத்தனை பேரையும் விட்டுட்டு, நான் என்ன சொன்னேனோ அதே வார்த்தையை என்னிடம் மாத்திரம் கேட்டார் பாரு அப்பவே எனக்கு புருஞ்சுடுத்து… மாமா சொன்னதுதான் சரி. “நம்ம ஆசார்யாள் எது செஞ்சாலும் அதுக்கு ஏதாவது நல்ல காரணம் இருக்கும்” என்றார்.
இந்த விவரத்தை எனக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பரான எனக்குத் தாயாருக்கு சமமான அந்த பக்தை கண்ணீர் மல்கச் சொன்னபோது, அவர்கள் செய்த பாக்கியத்தை எண்ணி குருநாதர்களின் திருவடிகளை மனதார நமஸ்கரித்தேன்.
(வித்யையும் விநயமும் தொடரும்)