- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கோவிலில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பாரத மாதாவின் திருவுருவச் சிலை கிறிஸ்தவர்களின் புகார் காரணமாக காவல்துறையால் மூடி வைக்கப்பட்டுள்ளது .
- காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் காவல்துறையினர் இந்த அராஜக செயலை செய்துள்ளனர்.
- பாரதப் பிரதமரை கல்லால் அடிக்க வேண்டும் என்று சொன்ன பெண்மணியை கைது செய்வதற்கு இந்த அரசாங்கத்திற்கு துணிவில்லை .
- அதேநேரம் பாரத மாதாவின் திரு உருவத்திற்கு தடை போடுவதற்கு துணிவு இருக்கிறது என்றால், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது… – இந்து முன்னணி
தமிழகத்தில், சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் போக்கு காவல்துறையினர் மத்தியில் அதிகரித்து வருவது பெரும் அபாயகரமான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போலீஸார் தாங்கள் அரசியல் எஜமானர்களுக்கு அடிபணியப் போய், நாட்டின் சாமானியர்களை வெகுவாக சாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம், பூவியூர் கிராமத்தில் உள்ள பாரதமாதாவின் சிலையை மூடிமறைத்து சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் செயலில் இறங்கி, கன்னியாகுமரி காவல்துறை அதிகாரி, தம்மை தேசத்தின் அடையாளைத்தை அவமதிக்கும் செயலில் ஈடுபடுத்திக் கொண்டார்! பாரத நாட்டின் அடையாளச் சின்னமாகத் திகழும் பாரதமாதாவின் சிலை, அருகிலுள்ள கிறிஸ்தவர்களின் மத உணர்ச்சிகளை புண்படுத்தியதாகப் புகார் கூறப்பட, நாட்டின் தேசிய அடையாளத்தை துணி போட்டு மூடி மறைக்க எப்படித்தான் அந்தக் காவலர்களுக்கு துணிவு வந்ததோ?!
கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் உள்ள தென் தாமரைக்குளம் வட்ட பூவியூர் கிராமத்தில், இசக்கி அம்மன் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. பாரதமாதா சிலை அதன் வளாகத்திற்குள் உள்ளது. இது தனியார் நிலத்தில் உள்ளது. அண்மையில் அந்தக் கோயிலுக்குச் சொந்தக்காரர்களான ஒரு குடும்பத்தினர் பாரதமாதாவின் சிலையை நிறுவி அதை மூவண்ணச் சேலையால் அலங்கரித்தனர். இதை அடுத்து, அந்த கிராமவாசிகளும் சேர்ந்து பாரதமாதாவை வணங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், திடீரென துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தனது துறை அதிகாரிகளுக்கு பாரத மாதா சிலையை மறைக்க உத்தரவிட்டார். இதை அடுத்து, அங்குள்ள எஸ்.ஐ., அந்தச் சிலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சம்பந்தப் பட்ட கோயில் நபர்களுக்கு உத்தரவிட்டார். உள்ளூர் டி.எஸ்.பி., பாரத் மாதா சிலையை யாரும் வணங்கக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டார். இவை எல்லாவற்றையும் கடந்து, மே 21 ஆம் தேதி பாரத மாதா சிலையை, நீல வண்ணத் துணியால் மூடியே விட்டார்கள் போலீஸார்.
பாரத மாதா சிலை என்பது, தேசியத்தை வலியுறுத்துவது. நாட்டின் ஒற்றுமையின் அடையாளம். நம் நாடாகிய பாரதத்தாயின் வடிவம். நாட்டின் சுதந்திரத்துக்கு எடுத்துக் கொண்ட கோஷம், தாயை வணங்குவோம் என்ற பொருள்படும் வந்தே மாதரம் என்பதுதான்! வந்தே மாதரம் என்பது, பாரதத்தாயை வணங்குவோம் என்ற பொருள்படுவதுதானே! வந்தே மாதர கோஷம் இன்றி நாட்டின் சுதந்திரமும் அடையாளமும் சாத்தியமில்லை! அதனால்தான் நாட்டின் தேசிய கீதமாக வந்தேமாதர கீதமும் இடம்பெற்றிருக்கிறது.
ஆனால் கன்னியாகுமரியில் பெரும்பான்மையாக மாறிக் கொண்டிருக்கும் கிறிஸ்துவர்களோ, நாட்டைத் துண்டாட கங்கனம் கட்டிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த மாவட்டத்தில் தேசிய எண்ணம் தலை தூக்க அனுமதிப்பார்களா? அவ்வாறு மிஷனரிகளால் தூண்டப்பட்ட அருகிலுள்ள கிறிஸ்தவர்கள் இந்தச் சிலை தங்கள் மத உணர்வுகளை புண்படுத்தியதாகக் கூறினர். கிறிஸ்துவர்களாகிய ஆங்கிலேயருக்கு எதிராகப் போராட முக்கியக் காரணகர்த்தாவாக இருந்த வந்தேமாதர கோஷமும் பாரதமாதாவின் உருவமும், ஆங்கிலேயர்கள் ஏற்படுத்தி வைத்த மிஷனரிகளுக்கு வேண்டுமானால் விரோதமாகத் தெரியலாம், ஆனால் போலீஸாருக்கு..???
நாட்டின் அடையாளம் தங்கள் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்று கிறிஸ்துவர்கள் கருதுவார்களே ஆனால், கிறிஸ்துவம் இந்த நாட்டுக்கு உகந்ததல்ல, அதை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது, நாட்டின் இறையாண்மை அடையாளத்தை மதிக்காத கிறிஸ்துவத்தை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும் என்று பொருமித் தள்ளுகின்றனர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், பாரத மாதா சிலையை மூடிமறைக்கப் பட்டதைக் கேள்விப் பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் மே 22 அன்று அந்த இடத்தில் ஒன்று கூடி சிலையை மூடிய துணியை அகற்றினர். அவர்கள் அதற்கு மாலை அணிவித்து பாரத மாதாவை வணங்கினர். மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜாவும் கலந்து கொண்டார்.
இதனிடையே, தேவையற்ற இவ்வாறான காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக கோயில் உரிமையாளர் புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
இந்து முன்னணி கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மிசா சோமன் இது குறித்துக் கூறுகையில், “கிராம நிர்வாக அதிகாரி அல்லது வேறு எவரிடமிருந்தும் எந்தவிதமான புகாரும் இல்லாமல், ஒரு கிறிஸ்தவக் குழுவின் உத்தரவின் பேரில் காவல்துறையினர் இந்த தேவையற்ற நடவடிக்கையை மேற்கொண்டனர். எந்த அடிப்படையில், யாருடைய புகாரில் அவர்கள் இந்த நடவடிக்கை எடுத்தார்கள் என்று நாங்கள் கேள்வி எழுப்பினோம். பதிலுக்கு நாங்கள் குழுக்களாகப் பிரிந்து மாவட்டத்தில் 13 இடங்களில் எதிர்ப்புத் தெரிவித்தோம். ஆயினும் போலீஸார் சிலையை மீண்டும் ஒரு துணியால் மூடினர். இவ்வாறு போராட்டம் நடத்தியதற்காக காவல்துறையினர் எங்களை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். “
இதனிடையே, மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில், கோவில் உரிமையாளர் டி.முத்துக்குமார், “சிலை எங்கள் பட்டா நிலத்தில் அமைந்திருக்கிறது. பொது அமைதி அல்லது சட்டம் ஒழுங்கை பாதிக்காமல் அது அமைந்திருந்தது. இது எந்தவிதமான இன மோதல்களையும் உருவாக்கவில்லை. எனது முன்னோர்கள் கோவிலைக் கட்டினர், நாங்கள் தலைமுறைகளாக அதனை பராமரித்து வருகிறோம். ” என்று குறிப்பிட்டு, விற்பனை ஒப்பந்தம், பட்டா ஆவணங்கள் மற்றும் பிற தொடர்புடைய சான்றுகளின் நகலை அவர் அதில் இணைத்திருந்தார்.
இந்நிலையில், மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையங்களிலும் நம் பாரதமாதாவை அவமதித்த டி.எஸ்.பி மீது புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று இந்து முன்னணியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் துணியை அகற்றி பாரத் மாதா சிலையை வணங்கினர்!
சி.எஸ்.ஐ.யின் கட்டளைகளைப் பின்பற்றி காவல்துறையினர் செயல் படுகிறார்களா அல்லது சாதாரண மனிதர்களுக்காக வேலை செய்கிறார்களா என்று கிராம மக்கள் கொதித்தெழுந்து கேட்கிறார்கள். கடந்த ஆண்டு சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை முஸ்லீம் பயங்கரவாதிகளிடம் சோதனைச் சாவடியில் இழந்துவிட்டோம்.. என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் உள்ளூர் வாசிகள்!
தமிழ்நாட்டில், ஒருங்கிணைந்த மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட ரீதியில், இந்து கடவுளர்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள் கேலி செய்யப்படுகின்றன, அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சிகள், சினிமாக்கள் மூலம் தலைவர்கள், சினிமா நடிகர்கள் மற்றும் பிற ‘லெட்டர் பேட் கட்சி’ வெறியர்களால் வாய்வழியாக இந்த அவமரியாதை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது போன்ற நபர்கள் மீது, என்னதான் புகார் கொடுத்தாலும், காவல்துறையினர் ஒருபோதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்! ஆனால் ஒரு சிறுபான்மை சமூக உறுப்பினர் புகார் அளித்தால், போலீசார் உடனே இந்து தலைவர்களைக் கைது செய்வதை கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்பட்டார், ஆனால் தலித்துகளுக்கு எதிராக அவமதிக்கும் கருத்துக்களைத் தெரிவித்தவர் காப்பாற்றப்பட்டார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் துணியை அகற்றி பாரத் மாதா சிலையை வணங்கியதற்காக இந்து தலைவர்களுக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்தவர்கள், பெரும்பாலும் மதம் மாற்றப்பட்டவர்கள், அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள். 1980 களில் மண்டைக்காட்டில் நடந்த வெட்கக்கேடான வெகுஜன மதமாற்றங்களை இந்த மாவட்டம் கண்டது, இது, இந்து இயக்கத்தினரால் கடுமையாக எதிர்ப்புக்கும் உள்ளானது.
கிறிஸ்துவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில், பல்வேறு பொது இடங்களில் ஆக்கிரமித்து, அங்கே திடீர் குருசடிகளை, சர்ச்சுகளை வழிபாட்டுக் கூடங்களைத் திறந்து விடுகின்றனர். இதனால் அங்கே இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படுகிறது. இதற்காக அடிக்கடி காவல் நிலையம் சென்று புகார்களைக் கொடுக்கின்றனர். எனவே புதிதாக எந்த வழிபாட்டு இடமோ சிலையோ படங்களோ அனுமதியின்றி திறக்கக் கூடாது என்பது காவல் துறையினரின் கட்டுப்பாடு.
ஆனால், பாரத மாதா வழிபாடு என்பது, மத வழிபாடல்ல. அது நாட்டின் தேசியத்தை வழிபடுவது. அடையாளத்தை வழிபடுவது. குறிப்பாக, ஒரு தனிநபர், தம் இடத்தில், அதுவும் ஏற்கெனவே தெய்வ வழிபாடு இருந்து வந்த இடத்தில் ஒரு சிலையை நிறுவியிருக்கிறார். அதனை தேசிய எண்ணம் கொண்ட மக்கள் வழிபடுகிறார்கள். சில நவீன மதசார்பற்றக் கோவில்களில் ஷீரடி சாயி பாபா சிலைகளும், குழந்தை ஏசுவுடன் கூடிய மேரிமாதா சிலைகளும் கூட வைத்து வழிபடுகிறார்கள். அவற்றை எல்லாம் எந்த ஹிந்துவும் முன் நின்று, இதை அகற்று என்று புகார்களைக் கொடுப்பதில்லை!
ஆனால் நாட்டின் தேசிய அடையாளமான பாரதமாதா எப்படி, கிறிஸ்துவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது என அறிவார்ந்து சிந்தித்து கேள்வி கேட்கும் விதத்திலோ, அல்லது, ஒரு நாட்டின் அடையாளமான பாரதமாதாவின் சிலை அசிங்கமாக அருவெறுப்பாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றோ, முதலில் இந்த காவல்துறை அதிகாரிகள் பாடம் படிக்கட்டும்! அதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பு பணிக்கு உறுதிமொழி எடுத்து அந்த புனிதமான இருக்கையில் அமரட்டும்!