
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்யையும் , விநயமும்
– மீ.விசுவநாதன்
“மந்திரோபதேசம்”
வக்கீல் உத்தியோகம் செய்து வந்த ஒரு சிஷ்யர் ஸ்ரீமத் ஆசார்யாளிடம் (ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் – சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 34ஆவது பீடாதிபதி) வந்து தனக்கு ஸ்ரீ சிவபஞ்சாக்ஷரீ மந்திரம் உபதேசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.
மகாஸ்வாமிகள்: நீங்கள் வக்கீல் அல்லவா?
சிஷ்யர் : ஆம்
மஹா: நித்யப்படி செய்ய வேண்டிய ஸந்தியாவந்தனத்தைச் செய்யக் கூட வக்கீல்களுக்கு அவகாசம் இருப்பதில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.அப்படி இருக்கும் போது, எதற்காக வேறு மந்திரம் கேட்கிறீர்கள்?
சிஷ்யர்: அது சரியல்ல. ஸ்நானம், ஸந்தியாவந்தனம், ஜபம் முதலியவைகளுக்குத் தாராளமாக அவகாசம் இருக்கிறது.
மஹா: அவகாசமில்லாததினால் ஸந்தியாவந்தனம் செய்ய முடியவில்லை என்று சமாதானம் சொல்லுகிற வக்கீல்களும் உண்டல்லவா?
சிஷ்யர்: இது வீண் சமாதானம்.
மஹா: அது எப்படியேனும் இருக்கட்டும். உங்கள் தொழிலில் அவசியம் செய்ய வேண்டிய வைதிக அவகாசமில்லை என்று சொல்லிக் கொள்ளக் கூடிய நிலைமை இருக்கும் போது, எதற்காக இன்னும் அதிகமான கர்மாக்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்? அதிகப் பொறுப்பை இழுத்து விட்டுக் கொண்டால் எல்லாக் கர்மாக்களையுமே செய்யாமல் விட்டு விடத்தான் இடமாகும்.
சிஷ்யர்: எனக்கு தாங்கள் இந்த மந்திரோபதேசத்தைக் கருணையுடன் அருளினால், நான் அதை ஜபம் செய்யாமல் உதாஸீனமாய் இருந்து விடமாட்டேன் என்று உறுதியாகச் சொல்கிறேன்.
மஹா: உறுதி சொல்லி விடலாம். ஓய்வே இல்லாத உகள் தொழிழில் அதைக்
காப்பாற்றி வருவது ஸாத்யமா?
சிஷ்யர்: தவறாமல் நித்யம் மந்திர ஜபத்தை ஜாக்கிரதையாகச் செய்து வருவேன்.
மஹா: வாஸ்தவம். இது உங்கள் இப்போதைய தீர்மானம். அதை சரிவர நிறைவேற்ற முடியுமா என்பதுதான் கேள்வி?
சிஷ்யர்: முடியும். தைகள் சொல்கிறபடி செய்வேன் என்று முழுமனத்துடன் சொல்லுகிறேன்.
மஹா: நான் இவ்வளவு அழுத்திக் கேட்பதினால், உங்களுக்கு உபதேசம் செய்வதற்கு ஒரு நிபந்தனை போன்று உங்களை நிர்பந்தம் செய்து உங்களிடம் இருந்து உறுதிமொழி வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம். குருவினிடம் இருந்து ஒரு மந்திரத்தை உபதேசம் பெற்ற சிஷ்யன் அதை ஜபம் செய்யாமல் அலக்ஷியமாய் இருந்து விட்டால், அதனால் ஏற்படும் தோஷம் அந்த மந்திரத்தை மதித்து வழிபடத் தெரியாத சிஷ்யனுக்கு உபதேசித்த அந்த குருவையே சேரும் என்று சாஸ்திரங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாய்க் கூறி இருக்கின்றன. ஆகையினால்தான், யாருக்காவது மந்திரத்தை உபதேசம் செய்யும் முன் இவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது.
சிஷ்யர்: நான் பொறுப்பை நன்கு உணர்கிறேன். அத்தகைய நிலைமை ஏற்படாதபடிக்கு நன்கு ஜாக்கிரதையாக நடந்து கொள்கிறேன்.
(ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் பெருமைகளைப் பற்றி ஸ்ரீ ஞானானந்த பாரதீ ஸ்வாமிகள் எழுதிய “ஸ்ரீ குருகிருபா விலாஸம்” என்ற நூலில் இருந்து பகிரப்பட்டது.)

“ஆசார்யாள் எனக்கு மந்த்ரோபதேசம் செய்வேளா?”
எனக்குத் தாயார் ஸ்ரீமதி ராமலக்ஷ்மி மீனாக்ஷி சுந்தரம் அவர்களின் சஷ்டியப்த பூர்த்தியை சிருங்கேரியில் ஸ்ரீ ஆசார்யாள் சந்நிதியில் செய்ய வேண்டும் என்று ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகளிடம் மிகவும் பணிவாகப் பிரார்த்தனை செய்து கொண்டேன். குருநாதரும் கருணையோடு அனுமதி கொடுத்தார்.
எனக்குத் தாயாரின் சஷ்டியப்த்த பூர்த்தி 1989ஆம் வருடம் ஐப்பசி மாதம் பூரட்டாதி நக்ஷத்திரம், ஏகாதசி தினத்தன்று (மறுநாள் துவாதசி – துளசி கல்யாணம்) ஸ்ரீ ஆசார்யாளின் பரிபூர்ண கிருபையுடன் வைதீக முறைப்படி வெகு விமர்சையாக நடந்தது. தாயாருக்குப் பட்டுப் புடவை, தந்தைக்குப் பட்டு வேஷ்டி, பிரசாதங்களுடன் அக்னி முன்பாக மந்திரங்கள் முழங்க ஸ்ரீமடத்தின் அதிகாரி ஸ்ரீ ஆசார்யாளின் பிரசாதமாக எனக்குப் பெற்றோர்களிடம் வழங்கினார்கள்.
பெற்றோர்கள் கண்ணீர் மல்க குருநாதரின் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டனர். சஷ்டியப்த்த பூர்த்தி முடிந்தவுடன் நேராக குருநாதரை தரிசனம் செய்துவர குடும்பத்தினர் அனைவரும் துங்கை நதிக்குத் தென்புறம் இருக்கும் நரசிம்மவனத்திற்குச் சென்றோம். அங்கு குருநாதர் “ஸ்ரீ சச்சிதானந்த விலாசம்” என்ற இடத்தில் இருந்தார்கள். மாடிக்குச் சென்று ஒவ்வொருவராக தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொண்டோம்.
அன்று ஏகாதசி திதி ஆனதால் ஸ்ரீ ஆசார்யாள் “மௌனவிரதத்தில்” இருந்தார்கள். அது போன்ற தினங்களில் விபரம் அறிந்தவர்கள் குருநாதரிடம் கேள்விகள் கேட்டு யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். தரிசனம் செய்து விட்டு அமைதியாக வந்து விடுவார்கள்.
எனக்குப் பெற்றோர் ஸ்ரீ ஆசார்யாளை நமஸ்கரித்து தீர்த்தப் பிரசாதம் பெற்றுக் கொண்டு , அடுத்ததாக வந்த என்னிடம் சைகை மூலமாக விஷேசம் நன்றாக நடந்ததா என்று கேட்டார்கள். ” ஒங்களோட கிருபையினால் ரொம்ப நன்றாக நடந்தது ஆசார்யாள்” என்று சொல்லி எனக்கு மனைவியும், மூன்று வயது மகனுடனும் சேர்ந்து குருநாதரை நமஸ்கரித்தேன். மெல்லிய புன்னகை பூக்க, வலது கையை உயர்த்தி ஆசி வழங்கினார்.
உடனே,” ஆசார்யாள் எனக்கு நீங்கள் மந்திரோபதேசம் பண்ணுவேளா?” என்று பணிந்து கேட்டுக் கொண்டேன். ஸ்ரீ ஆசார்யாள் சைகை மூலமாக பதில் உரைத்தார்கள். பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் குருநாதரை நமஸ்கரித்துத் திரும்பி அம்மாவிடம் வந்த பொழுது, விஸ்வநாதையர்… விஸ்வநாதையர்… ஆசார்யாள் ஒங்களுக்கு நாளைக்கு உபதேசம் பண்ணப்போறார். காலைல எட்டு மணிக்கு இங்கே இருங்கோ” என்று ஸ்ரீ ஆசார்யாளின் உதவியாளர் ஸ்ரீமான் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொன்னார். சரி என்றேன்.
“என்னடா இது…அசடு மாதிரி இப்படிக் கேப்பாளா…எத்தனை பணிவா கேக்கணும். இப்பத்தான் ஒழுங்கா சந்தியாவந்தனம் பண்ணராய்..அதுக்குள்ள மந்திரோபதேசம் கேட்டுட்டே..ஆசார்யாள் சொன்னபடி நட” என்று எனக்கு அம்மா என்னிடம் சொன்னாள். ” எனக்கு அதெல்லாம் தெரியாதம்மா… ஆசார்யாள்தான் எனக்கு எல்லாம்…அவர என்னோடு நண்பரா நெனச்சு அவர்கிட்ட வரேன்… “மனசாரப் பேசுவேன். ஆசார்யாள்ட்ட பக்தி இருக்கு. பயம் இல்லை அம்மா” என்றேன். “நீ நன்னா இரு…ஆசார்யாள் சொன்னத்தக் கேளு” என்றாள் அம்மா.
ஏன் என்றால் நான் நன்றாக வரவேண்டும் என்று விரும்புகிறவர்கள் பெற்றோரும் , குருவும்தானே.

மறுநாள் துவாதசி திதி. காலையில் எழுந்து துங்கையில் நீராடி விட்டு, ப்ராத சந்தியாவந்தனம் செய்தேன். ஸ்ரீ தோரண கணபதி, ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ சாரதாம்பாளை தரிசனம் செய்து விட்டு எனக்கு மனைவி சீதாலட்சுமியுடன் நரசிம்மவனத்தில் குருநாதர்களின் அதிஷ்டானங்களை (சமாதிகள்) தரிசனம் செய்தேன்.
ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாஸ்வாமிகளின் அதிஷ்ட்டான கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரமது. அமைதியான அந்த இடத்தை விட்டு வர ஒருவருக்கும் மனம் வராது. அத்துணை மனச்சாந்தி தரும் இடம்.
சரியாக எட்டு மணிக்கு ஸ்ரீ ஆசார்யாள் சந்நிதிக்குச் சென்றோம். ஸ்ரீ ஆசார்யாள் காலை ஜெபங்களை முடித்தவுடன், குருநாதர் இருந்த அறையைத் திறந்து கொண்டு வந்த ஸ்ரீமான் கிருஷ்ணமூர்த்தி ஐயர்,” விஸ்வநாதையர்….வாங்கோ ” என்று அழைத்தார். உள்ளே சென்று ஸ்ரீ ஆசார்யாளை நமஸ்கரித்தோம்.
ஆசார்யாள்: “உங்களுக்கு இதுக்கு முந்தி மந்திரோபதேசம் ஆயிருக்கா?”
அடியேன்: : “இல்லை …ஆசார்யாள்”
ஆசார்யாள்: “இல்லையா….காயத்ரி உபதேசம் ஆயிருக்கில்லையோ?”
அடியேன்: ஆமாம்…
ஆசார்யாள்: ” அப்போ ..ஆசார்யாள் எனக்கு காயத்ரி உபதேசம் ஆயிருக்குன்னு சொல்லணும். முதல் குருநாதர் அப்பாதான்…இது நியாபகம் இருக்கணும்”
அடியேன்: சரி…ஆசார்யாள்.. நீங்கள் சொன்னதைக் கேட்பேன்.
ஆசார்யாள் : காலை சந்தியாவந்தனம் பண்ணியாச்சா…
அடியேன்: பண்ணிட்டேன் ஆசார்யாள்
ஆசார்யாள்: இப்ப உங்களுக்கு ஸ்ரீ சிவபஞ்சாக்ஷரீ மந்திரம் உபதேசம் பண்ணறேன். கவனமாக் கேட்டுத் திரும்பச் சொல்லுங்கோ. ஒவ்வொரு நாளும் சந்தியாவந்தனம் , மாத்யான்னிகம் முடிந்தவுடன் இத மறக்கமச் செயுங்கோ. எப்பெப்போ முடியுமோ அப்பெல்லாம் மனசுக்குள்ள இந்த மந்திரத்த சொல்லிக் கொண்டே இருங்கோ…சிரேயஸா இருப்பேள்” என்று மந்திரோபதேசம் செயத்தருளினார்கள்.
அடியேன்: “ஆசார்யாள் உங்கள மாறக்காம இருக்க அனுக்கிரஹம் பண்ணுங்கோ” என்று நமஸ்கரித்தேன்.
ஆசார்யாள் : “மெல்லிய புன்னகையுடன்…பக்கத்தில் இருந்த சாமவேதி ஸிரௌதிகளிடம் (சாஸ்த்ரிகள்) இவருக்கு இந்த மந்திரங்களை எழுதிக் கொடுங்கோ…இப்ப இவரைக் கூட்டிண்டு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளின் அதிஷ்டான மண்டபத்தில் வைத்து மந்திரப் பிரயோகங்களைப் பாடம் செய்து வையுங்கள் என்று வழிகாட்டினார்.
அடியேன்: ஆசார்யாள் எனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியாது….சீதாலக்ஷ்மிக்குத் தெரியும் என்றேன்.
ஆசார்யாள்: “ஓ …நீ தமிழனோ…..” என்று வேடிக்கை செய்தார்.
அடியேன்: “ஏதேனும் தவறு இருந்தா மன்னிச்சுருங்கோ ஆசார்யாள்.. என்று மனைவியுடன் நமஸ்காரம் செய்து, அவரது ஆசிபெற்று வெளியுலகிற்குத் திரும்பினோம்.
ஸ்ரீ ஆசார்யாளை முதல் முதலில் என்று தரிசித்தேனோ அன்று முதல் அவரது கருணையினால் இன்றுவரை மனவலிமையோடு, ஆன்மிக தாகத்தோடு இருந்து வருகிறேன். குறை ஒன்றும் இல்லை.
இறுதி மூச்சிலும் குருநாதரின் நாமதத்தையே என்மனமும், நாவும் உச்சரிக்க வேண்டும் என்பதே அடியேனின் எளிய பிரார்த்தனை.
குருவை எண்ணிக் கோலம் போட்டால்
திருவே வீட்டில் திருவிளக் கேற்றுவாள்
குருவை அழைத்து குருமொழி கேட்டால்
பெருகும் ஞானம் விலகும் கர்வம்
குருவின் பாதத்தைக் கும்பிட்டு வணங்கினால்
தருமம் தழைக்கும் அமைதி நிலைக்கும்
குருவைப் பார்த்து, குருவும் பார்த்தால்
அருள்தானே வரும்,மன அழுக்காறு அகலும்
(வித்யையும் விநயமும் தொடரும்)