October 23, 2021, 8:20 pm
More

  ARTICLE - SECTIONS

  திருப்புகழ் கதைகள்: கங்கையைத் தரித்த வரலாறு!

  அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய திருக்கரத்திற்றோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருள்

  thiruppugazh stories
  thiruppugazh stories

  திருப்புகழ் கதைகள் பகுதி 98
  சங்கைதான் ஒன்று – திருச்செந்தூர்
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  அருணகிரிநாதர் அருளியுள்ள ‘சங்கைதான் ஒன்று’ எனத் தொடங்கும் ஐம்பத்தியேழாவது திருப்புகழும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழாகும். இப்பாடலில் அருணகிரியார் – முருகா, விலைமகளிர் வயப்பட்டு அழியாமல்,
  உனது அருட்கோலம் காட்டி என்னை ஆட்கொண்டு அருள்வாயாக – என வேண்டுகிறார்.

  சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே
  சஞ்சலா …… ரம்பமாயன்
  சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா
  சம்ப்ரமா …… நந்தமாயன்
  மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால்
  வம்பிலே …… துன்புறாமே
  வண்குகா நின்சொரூ பம்ப்ரகா சங்கொடே
  வந்துநீ …… யன்பிலாள்வாய்
  கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே
  கந்தனே …… விஞ்சையூரா
  கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா
  கண்டலே …… சன்சொல்வீரா
  செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே
  சென்றுமோ …… தும்ப்ரதாபா
  செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள்
  செந்தில்வாழ் …… தம்பிரானே.

  இத்திருப்புகழின் பொருள் – உலகங்கள் அழிந்துபோகா வண்ணம் மிகப் பெருகி வந்த கங்கை நதியைத் தமது சடாமுடியில் சூடிக்கொண்ட கருணைக் கடலாம் கண்ணுதற்பெருமானது திருக்குமாரரே! அழகில் சிறந்தவரே! கந்தப் பெருமானே! ஞான நூற்களை உறைவிடமாகக் கொண்டவரே! இந்திரலோகங்கள் (சூரபன்மனால்) நடுங்கா வண்ணம் தந்தருள வேண்டுமென்று முறையிட்ட தேவர்க்கோமானால் புகழப் பட்டவரே! சிவந்த (தாமரையனைய) கரத்தில் வீற்றிருக்கும் வெற்றியையுடைய வேலாயுதத்தைக் கொண்டு போர்க்களஞ் சென்று சூரபன்மன் அழியுமாறு தாக்கிய கீர்த்தியின் மிக்கவரே! தாமரை மலரையொத்த கண்களையுடைய நாராயணமூர்த்தியும், தாமரையில் வசிக்கும் நான்முகனும் பக்தியுடன் வழிபட்டு வணங்கும் ஆனந்த சொரூபியாகிய அறுமுகவேளே! செந்திமா நகரத்தில் எழுந்தருளியுள்ள தலைவரே!

  ganga 1 1
  ganga 1 1

  விலைமகளிரது மோகத்தால் உண்டாகின்ற துன்பங்களிலிருந்து தேவரீரது அருட்பிரகாசத்தோடு கூடிய திருவுருவத்துடன் வந்து அடியேனை அன்பினால் தடுத்தாட் கொண்டருள வேண்டும்.

  கங்கையைத் தரித்த வரலாறு

  நாம் முன்னரே எவ்வாறு பகீரதன் முயற்சியால் கங்கை நதி பூவுலகிற்கு வந்தது எனக் கண்டோம். இப்பாடலில் கங்கை நதி சிவபெருமானின் சடாமுடியில் சென்றமர்ந்த விதத்தினை வேறு ஒரு கதை மூலம் அருணகிரியார் நமக்குத் தருகிறார்.

  முன்னொரு காலத்தில் உமாதேவியார், திருக்கயிலாய மலையிலுள்ள சோலையிலே ஒரு விளையாட்டாக ஒன்றும் பேசாதவராய்ச் சிவபெருமானுக்குப் பின்புறத்தில் வந்து அவருடைய இரு கண்களையும் தமது திருக்கரங்களாற் பொத்தினார். அதனால் எல்லா உயிர்களும் வருத்தமடையும்படி புவனங்கள் எங்கும் இருள் பரந்தது. சிவபெருமானுடைய திருக்கண்களினாலேயே எல்லாச் சோதியும் தழைத்த தன்மையினால், சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவர்களின் சுடர்களும் மற்றைத்தேவர்களின் ஒளிகளும் அழிந்து எல்லாம் இருள்மயமாயின. அம்மையார் அரனாரது திருக்கண்களைப் பொத்திய அக் கணமொன்றில் உயிர்கட்கெல்லாம் எல்லையில்லாத ஊழிக்காலங்களாயின.

  அதனை நீலகண்டப்பெருமான் நோக்கி, ஆன்மாக்களுக்குத் திருவருள் செய்யத் திருவுளங்கொண்டு, தம்முடைய நெற்றியிலே ஒரு திருக்கண்ணை உண்டாக்கி, அதனால் அருளொடு நோக்கி, எங்கும் வியாபித்த பேரிருளை மாற்றி, சூரியன் முதலாயினோர்க்கும் சிறந்த பேரொளியை ஈந்தார்.

  புவனங்களிலுள்ள பேரிருள் முழுதும் நீங்கினமையால் ஆன்மகோடிகள் உவகை மேற்கொண்டு சிறப்புற்றன. சிவபெருமானுடைய செய்கையை உமாதேவியார் நோக்கி அச்சமெய்தி அவருடைய திருக்கண்மலர்களை மூடிய இருகர மலர்களையும் துண்ணென்று எடுத்தார்.

  gangai bhageerath - 1

  எடுக்கும் பொழுது தமது பத்துத் திருவிரல்களிலும் அச்சத்தினாலே வியர்வைத் தோன்ற, அதனை உமாதேவியார் உதறினார். அவ்வியர்வைப் பத்துக் கங்கைகளாய் ஆயிர நூறுகோடி முகங்களை உடையதாய்ப் பொருந்திச் சமுத்திரங்கள்போல் எங்கும் பரந்தன.

  அவற்றை பிரமாதி தேவர்களும் பிறருங் கண்டு திருக்கயிலையில் எழுந்தருளிய தேவதேவன்பால் சென்று, வணங்கித் துதித்து, “எம்பொருமானே! இஃதோர் நீர்ப்பெருக்கு எங்கும் கல்லென்று ஒலித்து யாவரும் அழியும்படி அண்டங்கள் முழுவதையும் கவர்ந்தது; முன்னாளில் விடத்தையுண்டு அடியேங்களைக் காத்தருளியதுபோல் இதனையுந் தாங்கி எங்களைக் காத்தருளுவீர்” என்று வேண்டினார்கள். மறைகளுங் காணாக் கறைமிடற்றண்ணல் அந்நதியின் வரலாற்றை அவர்களுக்குச் சொல்லி, அதனை அங்கே அழைத்து, தமது திருச் சடையிலுள்ள ஓர் உரோமத்தின் மீது விடுத்தார்.

  அதனைக் கண்டு மகிழ்ந்து நான்முகனும் நாராயணனும் இந்திரனும் “எம்மை ஆட்கொண்ட எந்தையே! இவ்வண்டங்களை யெல்லாம் விழுங்கிய கங்கை உமது அருட்சத்தியாகிய அம்பிகையாரது திருக்கரத்தில் தோன்றினமையாலும், உமது திருச்சடையில் சேர்ந்தமையாலும் நிர்மலமுடையதாகும். அதில் எமது நகரந்தோறும் இருக்கும்படி சிறிது தந்தருளல் வேண்டும்” என்று வேண்டினார்கள்.

  சிவபெருமான் திருச்சடையிற் புகுந்திருந்த கங்கையிற் சிறிதை அள்ளி அம்மூவர்களுடைய கைகளிலுங் கொடுத்தார். அவர்கள் வாங்கி மெய்யன்போடு வணங்கி, விடைபெற்றுக் கொண்டு தத்தம் நகர்களை யடைந்து அங்கே அவற்றை விடுத்தார்கள்.

  அந்த மூன்று நதிகளுள் பிரமலோகத்தை யடைந்த கங்கை பகீரத மன்னனுடைய தவத்தினாற் பூமியில் மீண்டும் வர, சிவபெருமான் பின்னும் அதனைத் திருமுடிமேல் தாங்கி, பின் இந்த நிலவுலகிற் செல்லும்படி விடுத்தார். அந்நதி சகரர்கள் அனைவரும் மேற்கதி பெற்றுய்யும்படி அவர்கள் எலும்பிற் பாய்ந்து சமுத்திரத்திற் பெருகியது. இதனையொழிந்த மற்றை இரு நதிகளும் தாம்புகுந்த இடங்களில் இருந்தன.

  தமது அருட் சத்தியாகிய உமையம்மையாருடைய திருக்கரத்திற்றோன்றிய கங்கா நதி உலகங்களை அழிக்காவண்ணம் திருவருள் மேலீட்டால் சிவபெருமான் அதனைத் திருமுடியில் தரித்த வரலாறு இதுவேயாம்.

  மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றுஒருத்தி
  சலமுகத்தால் அவன்சடையில் பாயும்அது என்னேடீ,
  சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
  பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ.
  – என்ற திருவாசகப் பாடல் இங்கே நினைவுகூரத்தக்கது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,137FansLike
  368FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,580FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-