அண்ணா என் உடைமைப் பொருள் – 28
இதுக்கு மேலே மரியாதை கொடுக்க முடியாது
– வேதா டி. ஸ்ரீதரன் –
அண்ணா வாழ்க்கை ரொம்ப சீரியஸ் பணிகளை உள்ளடக்கியது என்றாலும், அவரிடம் வேடிக்கைப் பேச்சுக்குப் பஞ்சமில்லை. வேதப் பொருளே மானுடக் காயம் தரித்து வந்தது என்று போற்றப்படும் பெரியவாளும் அப்படியேதான்.
பெரியவா ஜோக்குகள் சீரியஸான வேடிக்கை என்று தான் சொல்ல வேண்டும். அவர் சொல்லும் ஜோக்குகள் பெரும்பாலும் மொழி அல்லது தத்துவம் சம்பந்தப்பட்ட விஷயமாகவே இருக்கும். மொழியறிவும் சாஸ்திர பரிசயமும் உள்ளவர்கள் தான் அவற்றை ரசிக்க முடியும். எனவே, பெரும்பாலும், அவர் சொல்லும் ஜோக் சீரியஸ் விஷயமாகத் தென்படுவதும் உண்டு.
ஒருமுறை அண்ணா மடத்துக்கு வரும்போது, மடத்தில் இருந்து அவசரமாகக் கிளம்பும் ஓர் அன்பருக்கு லிஃப்ட் தர வேண்டி நேரிட்டது. போகும் வழியில் அந்த மனிதர் பெரியவாளின் கருணையை வியந்து பேசிக் கொண்டே வந்தார். அவர், தனது மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று பெரியவாளிடம் பிரார்த்தனை பண்ணுவதற்காக மடத்துக்கு வந்திருந்தாராம். பெரியவாளும் கருணையுடன் ஆசீர்வாதம் பண்ணினாராம். எனினும், மடத்தில் இருந்து வெளியே வரும் போதே பெரியவாளின் ஆசி பலிதமாகி விடுவது என்பது கற்பனைக்கெட்டாத ஆச்சரியம் அல்லவா என்று அந்த மனிதர் வியந்து கூறினார்.
அதுமட்டுமல்ல, தன் மகளுக்கு வாய்த்த வரன் என்ன சாமானியமான மனிதரா? எப்பேர்ப்பட்ட ஞானம், எப்பேர்ப்பட்ட எழுத்தாற்றல், எவ்வளவு பிராபல்யம்? யாருக்குக் கிடைக்க முடியும் இத்தகைய மாப்பிள்ளை என்று பெரியவாளின் அனுக்கிரக மகிமையைப் போற்றியவாறே வந்தார்.
அண்ணாவுக்கோ ஒரே குழப்பம். அந்த மனிதர் சாக்ஷாத் தன்னையே தான் அவருக்கு மாப்பிள்ளை ஆகப்போகும் வரனாகக் கருதுகிறார் என்பது அண்ணாவுக்கு நன்றாகவே புரிந்தது. இதில் பிரச்சினை பெரியவா சம்பந்தப்பட்டது. இந்த மனிதரிடம் பெரியவா என்ன சொல்லித் தொலைத்தார் என்பது பெரிய கேள்வி. அவர் ஏடாகூடமாக அண்ணாவைப் பற்றி ஏதாவது சொல்லி இருந்தால்….? பெரியவா வார்த்தையை அண்ணாவால் எப்படி மீற முடியும்?
அந்த அன்பரை ட்ராப் பண்ணி விட்டுத் திரும்பிய அண்ணா, குழப்பம் தீராத நிலையிலேயே பெரியவாளிடம் வந்து சேர்ந்தார். தனது சன்னியாசக் கனவு காலாவதி ஆகி விடுமோ என்ற குழப்பமும் பயமும் மட்டுமல்ல, தனது கல்யாண விஷயமாகப் பெரியவா ஏதோ சொல்லி விட்டார் என்று அவர் மீது படு பயங்கர ஆத்திரமும் பொங்க அவரை நமஸ்கரித்து எழுந்தார்.
அந்த அன்பர் சொன்ன விஷயங்களைப் பெரியவாளிடம் தெரிவித்த அண்ணா, ‘‘அவர் கிட்ட பெரியவா என்னைப் பத்தி என்ன சொன்னேள்?’’ என்று தயங்கித் தயங்கிக் கேட்டார்.
‘‘ஐயய்யோ, அப்படியா புரிஞ்சுண்டுட்டான், அவன்? குழந்தைக்கு நல்ல மாப்பிள்ளை அமையும்னு தானே ஆசீர்வாதம் பண்ணினேன்! உன்னாட்டம் மாப்பிள்ளைன்னு சொல்லவே இல்லையே!!’’ என்ற பெரியவா, ‘‘அவன் தப்பாப் புரிஞ்சுண்டதுக்கு நானா பழி? நீ ஏன் என்கிட்ட கோவிச்சுக்கறே?’’ என்று கேட்டாராம்.
(பெரியவா சொன்னதை அப்படியே என்னிடம் சொல்லிக் காட்டினார், அண்ணா. நல்ல மாப்பிள்ளை என்பதைப் பெரியவா சொன்னது போலவே மிகவும் அழுத்தமான உச்சரிப்புடன் சொன்னார். எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்தது.)
பீடாதிபதி முன்னிலையில் நின்று பேசும் போது யாராக இருந்தாலும் உடலை வளைத்து நின்று தான் பேசுவார்கள். மேலும், உள்ளங்கையை வாய்ப்பகுதிக்கு முன்பாக வைத்துக் கொண்டு பேசுவார்கள். (எச்சில் தெறித்து விடாமல் இருப்பதற்காக.)
அண்ணாவும், பெரியவா முன்பாக இருக்கும் சமயங்களில், வாய் பொத்தி நிற்பதுண்டு. ஆனால், அண்ணாவால் நீண்ட நேரம் வளைந்து நிற்க முடியாது. (அண்ணாவின் நிமிர்ந்த முதுகு பற்றிய சில விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்.) அன்பர்கள் அனைவரும் கடைப்பிடிக்கும் வழக்கத்தைத் தன்னால் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அண்ணாவுக்கு இருந்தது. ஒருநாள் பெரியவாளிடம் இதைத் தெரிவித்து மன்னிப்புக் கோரினார், அண்ணா.
‘‘உன்னால இதுக்கு மேல எனக்கு மரியாதை குடுக்க முடியாதுன்னு சொல்றே. பரவாயில்லை, ஏதோ இந்த அளவுக்காவது குடுக்கறியேன்னு நான் சந்தோஷமா அக்ஸெப்ட் பண்ணிக்கறேன்’’ என்றாராம் பெரியவா.
பெரியவாளின் பல்துறை அறிவு பற்றி முந்தைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அந்தப் பல்துறைகளில் சமையலும் ஒன்று. சமையலின் பல்வேறு நுட்பங்கள் பற்றிப் பெரியவா ரொம்ப ரசித்துப் பேசுவதுண்டு. இதனால் அன்பர்கள் மத்தியில் அவருக்கு அடுப்பாங்கரைச் சாமியார் என்ற திருநாமம் வழக்கில் இருப்பதையும் அண்ணா எழுதி உள்ளார்.
சைத்தான், பிசாசு ஆகிய இரண்டும் அவருக்கு அண்ணா சூட்டிய திருநாமங்கள். பெரியவா மகாசமாதி அடைந்ததும், அண்ணா, என்னைப் பிடித்துக் கொண்டு வலுக்கட்டாயமாக எழுத வைத்த பிசாசு மலையேறி விட்டது என்று அண்ணா குறிப்பிட்டார்.
அடுப்பாங்கரை என்றதுமே அடுத்தவர் வீட்டு அடுப்பங்கரைக்குள் ‘‘திருட்டுத்தனமாக’’ப் பெரியவா நுழைந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1930களில் நடந்த இந்தச் சம்பவம் மடத்து அன்பர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். எனினும், இதர அன்பர்களுக்குப் புதிய விஷயமாக இருக்கலாம் என்பதால் அதை இங்கே தருகிறேன்.
ஒருநாள் இரவு தஞ்சையை அடுத்த ரிஷிவந்தியம் கிராமத்தின் வழியே பெரியவா மேனாவில் (பல்லக்கில்) வந்து கொண்டிருந்தார். அந்த கிராமத்து எல்லையில் தங்கலாம் என்று முடிவானது. மேனா தூக்குபவர்கள் சற்றுத் தள்ளி மரத்தடியில் படுத்து உறங்கி விட்டனர். பெரியவா மேனாவிலேயே ஒடுங்கி அமர்ந்த நிலையில் உறங்க ஆரம்பித்தார்.
வழக்கம்போல அதிகாலை மூன்று மணியளவில் உறக்கம் கலைந்து எழுந்த பெரியவா மேனாவிலேயே அமர்ந்திருந்தார். அப்போது அருகே இருந்த ஒரு வீட்டின் வாசல் கதவு தாழ்ப்பாள் நீக்கப்படும் சத்தம் கேட்டது. வீட்டை விட்டு பால் பாத்திரத்துடன் வெளியே வந்த ஒரு பாட்டியம்மாள், பால்காரன் இன்னும் வரவில்லை என்று தனக்குத் தானே பேசிக்கொண்டதும் பெரியவா காதில் விழுந்தது. உள்ளே சென்ற பாட்டியம்மாள் வாசல் கதவைத் தாழிட மறந்து விட்டார். அடுத்ததாக, வீட்டின் கொல்லைப்புறக் கதவு திறக்கும் ஓசை கேட்டது. பல நிமிடங்கள் ஆன பின்னரும் அந்தக் கதவு மூடப்பட்ட சத்தம் கேட்கவில்லை. எனவே, அந்தப் பாட்டியம்மாள் கொல்லைப்பறத்தில் இருந்து வீட்டுக்குள் திரும்பி விட்டார் என்று பெரியவா ஊகித்தார்.
இதன்பின்னர்தான் பால்காரன் வந்தான். அவன் பலமுறை குரல் கொடுத்தும் பாட்டி கதவைத் திறக்கவில்லை. பாட்டி அசந்து உறங்கி விட்டார் என்பதை ஊகித்துப் புரிந்து கொண்ட பெரியவா, மேனாவில் இருந்த ஒரு வெள்ளை சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு வீட்டின் பின்புறம் ‘‘திருட்டுத் தனமாக’’ சுவரேறிக் குதித்து வீட்டினுள் நுழைந்தார்.
ஆகா! வாராணசியில் மண்டன மிச்ரர் வீட்டுக்குள் ஆசார்யாள் நுழைந்த சம்பவம் நினைவு வருகிறதா!! அங்கே ஆதி சங்கரர் மரத்தின் உதவியால் சுவரைத் தாண்டினார். இங்கே நம் அறுபத்தெட்டாவது சங்கரரோ (பெரியவா காஞ்சி மடத்தின் 68-வது பீடாதிபதி) சுவரேறிக் குதித்தார்.
அடுப்பங்கரை வாசலில் வைக்கப்பட்டிருந்த பால் பாத்திரத்தை நிலவொளியின் உதவியால் கண்டுபிடித்த பெரியவா, அதை ஓசைப்படாமல் எடுத்துக் கொண்டு, பாட்டியின் தூக்கம் கலைந்து விடாமல் இருப்பதற்காகப் பூனை மாதிரி நடந்து வீட்டு வாசலுக்கு வந்து பாத்திரத்தை திண்ணையில் வைத்தார். சாக்ஷாத் ஜகத்குரு சந்திரசேகர ஸ்வாமிகள் தான் விதவைப் பாட்டி கோலத்தில் வீட்டு வாசலில் நிற்கிறார் என்பதை அறியாத பால்கார்ரும், தான் கொண்டு வந்திருந்த பாலைப் பாட்டியின் பாத்திரத்தில் ஊற்றிவிட்டு இடத்தைக் காலி பண்ணினார். சந்தடி இல்லாமல் வீட்டுக்குள் நடந்து போய் பால் பாத்திரத்தை அடுக்களை வாசலில் வைத்த பெரியவா, ‘‘திருட்டுத் தனமாக’’ வந்த வழியிலேயே திரும்பி மீண்டும் மேனாவுக்குள் முடங்கினார்.
உறக்கம் கலைந்து எழுந்த பாட்டியம்மாள் பால் பாத்திரத்தை எடுத்துப் பார்த்தால், உள்ளே பால் நிரம்பி இருக்கிறது. தான் உறங்கிக் கொண்டிருக்கும் போது பால்காரன் வீட்டுக்குள் நுழைந்து பாத்திரத்தில் பாலை ஊற்றி இருக்கிறான் என்று நினைத்த பாட்டிக்கு ஒரே ஆத்திரம். பால்காரன் வீட்டுக்குள் நுழைந்ததைப் பெரிய ஆசாரக் குறைவாகக் கருதிய பாட்டி, வெளியே வந்து, வாய் நிறைய அர்ச்சனையுடன் அவனைத் தேட ஆரம்பித்தாள். பாட்டியின் அர்ச்சனையில் பிரதானமாக இடம் பெற்ற வசவு ‘‘கட்டையில போறவன்’’ என்பதே. ‘‘எங்கே போயிட்டான், எங்கே போயிட்டான் கட்டையில போறவன்?’’ என்று புலம்பிக் கொண்டிருந்த பாட்டியின் முன்னால் சென்று காட்சி அளித்த பெரியவா, ‘‘ஒங்கும் போயிடல, இங்கே தான் இருக்கான்’’ என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
பெரியவா திருவாக்கின் மூலம் நடந்த செய்கைகளை அறிந்த பாட்டியம்மாள், தனது பாமர வீட்டுக்குள் பெரியவா பாதம் பதித்ததையும், விஷயம் புரியாமல் தான் பெரியவாளைக் கண்டபடி ஏசியதையும் நினைத்து மிகவும் துக்கப்பட்டு அழ ஆரம்பித்தாள்.
ஆனால் பெரியவாளோ, ‘‘பாட்டீ, நீ ஒண்ணும் தப்பாச் சொல்லலை. சரியாத்தான் சொல்லி இருக்கே. நான் கட்டையில போறவன் தானே!’’ என்று சொல்லித் தன் பாதுகைகளையும் மேனாவையும் சுட்டிக் காட்டினாராம். இரண்டுமே மரத்தால் ஆனவை. (பெரியவா பாதுகை ஃபோட்டோக்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வரும்.)
சிரிப்பு வருகிறது.
சிரிப்பு மட்டும் தானா வருகிறது?