spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கொண்டாடுவோமே... குசேலர் தினத்தை!

கொண்டாடுவோமே… குசேலர் தினத்தை!

- Advertisement -

– கட்டுரை: கமலா முரளி

நண்பேன்டா  !  குசேலர்  தினம் !

நண்பர்கள் தின நாளில் இளைஞர்கள் “நட்பு கைவளையம்” ( friendship band ) அணிந்து கொண்டு, ஒரே நிறத்தில் உடை அணிந்து, சுற்றுலா சென்று, ‘க்ருப்பி’ எடுத்து கொண்டாடும் தலைமுறை இது !

மகாபாரத காலத்தின் சிறந்த நண்பர்களைக் கொண்டாடும் “குசேலர் தினம்” பற்றித் தெரியுமா ?

தனுர் மாதமாகிய மார்கழி மாதத்தின் முதல் புதன் கிழமை தான் குசேலர் தினமாகக் கொண்டாடப் படுகிறது.

ஸ்ரீகிருஷ்ணர் சிறுவயதில் சாந்தீபினி முனிவரின் ஆசிரமத்தில் வேதங்கள் பயின்ற போது அவருடன் உடன் பயின்றவர், கிருஷ்ணரின் நண்பர் சுதாமா !

சுதாமாவின் மனைவி பெயர் சுசீலை. சுதாமா வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். நிறைய குழந்தைகள்.அவரது ஆடைகள் கிழிந்து அழுக்கடைந்து இருக்கும். அதனாலேயே அவர், “குசேலர்” என அழைக்கப்பட்டார்.

“குசேலம்” என்றால் கிழிந்து நைந்துபோன துணி. ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்ததால், சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயர் அவருக்கு !

வறுமை, பசி, பட்டினி !அக்கம்பக்கத்தவர் பரிகசிப்பு !

சுதாமாவின் மனைவி சுசீலை, கணவரை, அவரது பால்ய நண்பரான ஸ்ரீகிருஷ்ணரைப் பார்த்து ஏதேனும் உதவிகள் பெற்று வர வேண்டுமெனக் கேட்டார்.

முதலில் தயங்கினாலும், துவாரகாபுரி மன்னன், அன்புக் கண்ணன், தன் நண்பனைக் காணும் ஆவலில், துவாரகை புறப்பட்டார் சுதாமா.

உறவினர்களை, நண்பர்களை, பெரியவர்களைப் பார்க்கச் செல்லும் போது,
அன்பு பரிசு கொண்டு செல்லக் கூட ஏதும் இல்லை !

மூன்று பிடி அவல் மட்டுமே இருந்தது. அதை ஒரு துணியில் முடிந்து கொடுத்தாள் சுசீலை !

துவாராகாபுரியில் ஸ்ரீகிருஷ்ணரின் அரண்மனையை அடைந்த குசேலரை, அரண்மணை வாசலுக்கே வந்து வரவேற்றார் ஸ்ரீகிருஷ்ணர்.

கருணாமூர்த்தி கண்ணனும், ருக்மணி தேவியும் குசேலருக்கு பலவித உபசாரங்கள் செய்தனர். பாதங்களை அலம்பி, மலர்கள் தூவி, அறுசுவை உணவு அளித்து, தனது சிம்மாசனத்தில் அமரும்படிக் கேட்டுக் கொண்டு…என கண்ணபிரானின் அன்பில் அகமகிழ்ந்து போனார் சுதாமா !

தான் வறுமையில் உழல்வதைக் கூறி, வேண்டிய செல்வத்தைப் பெற வேண்டும் என்பதை சுதாமா மறந்தே போனார் !

முக்காலமும் உணர்ந்த கருணாமூர்த்திக்குத் தெரியாதா சுதாமாவின் நிலை ?

இதுவும் அவனது விளையாட்டு தானே ?

“நண்பா ! எனக்காக என்ன கொண்டு வந்தாய் ?” என வினவிய படியே, உரிமையுடன், குசேலர் வசம் இருந்த அழுக்குத் துணியில் கட்டி வைத்த அவலை எடுத்துக் கொண்டார் ஸ்ரீகிருஷ்ணர் !

”ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா?” என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார். கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் “அட்சயம்” என்று உச்சரித்தார்.

ஒரு பிடி அவலை அவர் உண்ணும் போதே, சுதாமாவின் வீட்டில் லட்சுமி கடாட்சம் !

குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள் கிடைத்தன. கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, மாளிகையாக மாறியது.

அந்த வினாடியில் இருந்து, குபேரனுக்கு நிகரான செல்வச்செழிப்புடன் சுதாமா வாழ்ந்தார்.

சுதாமா, துவாரகாபுரிக்குச் சென்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரைச் சந்தித்த நாள், மார்கழி மாதம் முதல் புதன் கிழமை ஆகும். பக்‌ஷம்,திதி, நட்சத்திரம் போன்ற எதையும் கருத்தில் கொள்ளாமல், மார்கழி ( தனுர் ) மாதம் முதல் புதன் கிழமை அன்று, குசேலர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்பாகக் கொண்டாடப்படும் குசேலர் தினம், அவல் தினம் எனவும் அழைக்கப்படுகிறது ! கொல்கத்தா மற்றும் தமிழகத்தின் பல குருவாயூரப்பன் கோவில்களிலும் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினத்தில், அவல், வெல்லம் கலந்த அவல், அவல் பாயசம் முதலிய நைவேத்தியங்கள் மிகப் பிரசித்தம் !

பக்தர்களும் படிக்கணக்கில், அவலைக் காணிக்கையாகச் செலுத்துவர்.

மார்கழி மாதம் , முதல் புதன் கிழமையில், ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினால்,செல்வம் பெருகும், மகாலக்‌ஷ்மி கடாட்சம் கிட்டும் என்பது ஐதிகம் !

kuselar
kuselar

இந்த ஆண்டு, 22 டிசம்பர் 21 தனுர் மாத முதல் புதன் கிழமை !

கொண்டாடுவோமே அவல் தினத்தை !

கொண்டாடுவோமே குசேலர் தினத்தை !

வறுமை நிலையில் இருந்த போதும் சரி, செல்வங்கள் பெருகிய பின்னும் சரி, சுதாமா,பக்திமானாகவும் ஞானவானாகவும் இருந்தார். சில திரைப்படங்கள், குசேலரை ஒரு வறிய, பரிகசிப்புக்குரிய மனிதனாகவே முன்னிறுத்துகிறது ! அது தவறான பிம்பம் ! ”இருபத்தெழு குழந்தைகள் உடைய சோம்பேறி, வளர்ந்த பிள்ளைகளையும் சோம்பேறியாக வைத்திருந்த அறிவிலிக்கு அருள் பாலித்தாராம் கடவுள். அதைக் கொண்டாடுகிறார்களாம் !” என்று விமர்சிக்கும் விஷமிகளும் உண்டு ! குழந்தைப் பேறு ஒரு செல்வம் என்பதை தற்கால கருத்தரிப்பு மையங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம் !

தன்னை நாடி வரும் நண்பனுக்கு அவன் எதுவும் கேட்காமலேயே அவன் குறை தீர்த்த கண்ணனின் பெருமை சொல்லும் புராணம் குசேலர் சரித்திரம் !

நாராயண பட்டத்ரி, குசேல சரித்திர சுலோகங்களை எழுதும் போது, ஒவ்வொரு சுலோகமாக எழுதி, இப்படி நடந்ததா எனக் கேட்க,குருவாயூரப்பன், “ஆமாம், அப்படித்தான் நடந்தது”எனத் தலையை ஆட்டி அங்கிகரித்தார் எனச் சொல்லப்படுகிறது.
 

”குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்

கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:

த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ

தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ “

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆசிரமத்தில்  குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட  பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?

”ஸமான ஸீலாபி ததீயவல்லபா

ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ

கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே

ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே”

குசேலருடைய பத்தினி அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந்தாள். வாழ்க்கையை நடத்த ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான  கோபாலன் உங்கள்  நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?

”இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா

ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே

ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ

வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்”

குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர்  கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசை  இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா?

”கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்

க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்

ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்

தவாதிஸம்பாவனயா து கிம் புன:”

ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய நகரத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு

எல்லையே இல்லை. அப்படித்தானே?

”ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்

கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்

யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை

ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே”

நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தாள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர்களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர்களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா?

”த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத

ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா

க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்

ரமா கிலோபேத்யகரம் ருரோத தே”

குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’ என்று உன்னைத் தடுத்து நிறுத்தினாள், இல்லையா?

”பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா

புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்

பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ

விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :”

உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக்கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா?

”யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ

வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ

த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:

க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்”

‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் அருமையான பேச்சு, அழகிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது ஜொலிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா?

”கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்

க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்

ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்

புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்”

‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். தோழிகளால் சூழப்பட்டு, ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்ட தன் மனைவியைப் பார்த்தார். உடனே,  உனது கருணையை அப்போது அவர் உணர்ந்தாரல்லவா?

”ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்

ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ

த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ

மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.”

ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.

ஸ்ரீகிருஷ்ணரே , “ஆம்,ஆம்” என்று சொல்லி, மனம் ஒன்றிக் கேட்ட இந்த நாரயணிய சுலோகங்களைக் கேட்கவும் சொல்லவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் !

இந்த சுலோகங்களைச் சொன்னாலும் கேட்டாலும், செல்வங்கள் பெருகும் என்பதோடு, மனநிம்மதியும், பகவானின் பரிபூர்ண அருளும் கிட்டும் என்பது உறுதி !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe