திருப்புகழ்க் கதைகள் 215
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
சீ உதிரம் எங்கும் – பழநி
குவாலயாபீடம்
கோகுலத்தில் உள்ள அனைவரின் வீட்டிலும் உள்ள பால், தயிர், வெண்ணை, நெய் போன்றவை கம்சனால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்டது. எனவே கோபாலர்களின் குழந்தைகள் பலவீனமானவர்களாக ஆனார்கள். எனவே கண்ணன் அவர்களுடன் சேர்ந்து வெண்ணை தயிர் ஆகியவற்றை திருடித் தின்று அவர்களையும் தின்னச் செய்தான். இதனால் அவர்கள் வலிமையுடையவர்களாகி ஒற்றுமையுடன் விளையாட ஆரம்பித்தார்கள். எனவே கம்சன் கண்ணன் பலராமன் இருவரையும் தலைநகரத்திற்கு அழைத்து குவாலயாபீடம் என்ற யானையைக் கொண்டு கொல்ல நினைத்தான். அதில் அவர்கள் தப்பித்துவிட்டால் சாணூரன், முஷ்டிரன் ஆகிய மல்லர்களைக் கொண்டு கொல்ல நினைத்தான்.
அரண்மனைக்கு வந்த கண்ணனை குவாலயாபீடம் என்ற பெயருடைய அந்த யானை வழிமறித்தது. கண்ணன் அந்தயானையின் கொம்புகளை ஒடித்து அவற்றால் யானையைக் குத்தி அதனைக் கொன்றான். இதன் பின்னர் அரண்மனையுள்ளே சென்று சாணூரன், முஷ்டிரன் ஆகிய மல்லர்களையும் கண்ணனும் பலராமனும் கொன்றார்கள். இந்நிகழ்ச்சிகளை சிலப்பதிகாரம் குறிப்பிட்டுச் சொல்கிறது.
அந்நாளைய பல்வகைக் கூத்துகளில் ஒன்றாகிய விநோதக்கூத்து என்பது குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை என்னும் ஆறுவகைக் கூத்துகளைத் தன்னகத்தே கொண்டது. இவற்றில் இலக்கிய மற்றும் சிற்பச் சான்றுகளால் சோழர் காலத்தில் சிறப்புற்று விளங்கியதாக நாமறிவது குரவை, கலிநடம், குடக்கூத்து என்ற மூன்றும் ஆகும். இவற்றில் குடக்கூத்து என்பது கொடுகொட்டி, பாண்டரங்கம், அல்லியத்தொகுதி, மல்லாடல், துடியாடல், குடையாடல், குடக்கூத்து, பேடியாடல், மரக்கால் ஆடல், பாவை, கடையம் என்ற பதினொரு வகை ஆடல்களிலே ஒன்று. சிலப்பதிகாரத்தின் கடலாடு காதை இப்பதினொரு ஆடல்களை சிறப்புற எடுத்துரைக்கிறது.
“கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியந் தொகுதியும் …. …………” (சிலப்பதிகாரம், 46-48)
கஞ்சன் வஞ்சத்தில் வந்த யானையின் கொம்பை ஒடித்தற்கு நின்றாடியது அல்லியந்தொகுதி என்னும் கூத்து. முகம், மார்பு, கைகளிலே அவிநயம் காட்டி தொழிற் செய்யாது நிற்கும் நிலையை தொகுதி என்றுரைக்கின்றனர்.
மல்லாடல் (திருமால் ஆடியது)
“………………………அவுணர் கடந்த
மல்லின் ஆடலும் ……………”(48-49)
அசுரர்களை வீழ்த்த மாயோன் மல்லனாய் சென்றாடியது மற் கூத்து.
கிரௌஞ்ச வதம்
இத்திருப்புகழில் துங்க வேலகிர வுஞ்ச மால்வரையி டிந்து …… பொடியாக வேலைவிடு கந்த என்ற வரியில் கிரௌஞ்சவத்தியைப் பற்றி அருணகிரியார் பாடுகிறார். சூரபத்மன் அரசோச்சிய காலத்துக்கும் நெடுங்காலத்துக்கு முன்பாகவே தோன்றியவன் கிரௌஞ்சன் என்ற அசுரன். அவன் கிரௌஞ்சப் பறவையாக வடிவெடுத்து வாழ்ந்ததால் அந்தப் பெயர் பெற்றான். அவன் கொடியவன், பற்பல மாயங்களைச் செய்வதில் வல்லவன். தனது மாயத்தால் எல்லோரையும் துன்புறுத்தி அலைக்கழிப்பவன். அவன் செய்த மாயத்தால் மலைத்து மாண்டவர்கள் பலர்.
ஒரு சமயம் மாமுனிவர் அகத்தியர் தன் வழியில் வந்தபோது மலை வடிவில் இருந்து மாயம் செய்து அவரைத் துன்புறுத்தினான். கோபம் கொண்ட அகத்தியர், அவனை மலையாகவே எப்போதும் இருக்கும்படிச் சபித்துவிட்டார். அந்தச் சாபத்தால் அவன் நெடுமலையாகிக் கிடந்தான். மலையாகிவிட்ட போதிலும் அவனது கொடுஞ்செயல் புரியும் புத்தி மாறவில்லை. தம்மிடம் வருகிறவர்களை அழித்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
அவன் சூரபத்மனின் தம்பியாகியாகத் தாருகனிடம் நட்பு பூண்டிருந்தான். தாருகன் கிரௌஞ்ச மலையில் அரண்மனை கட்டிக்கொண்டு தனது பெரும் படை வீரர்களுடன் வாழ்ந்து வந்தான். கிரௌஞ்சகிரி, கடலோரத்தில் அமைந்திருந்தது. அதைத் தாண்டி கடலுக்குள் இருக்கும் தீவில் இருந்த மகேந்திர மலையில் சூரபத்மன் மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்தான். அதனால் சூரபத்மனின் மாளிகைக்குக் கிரௌஞ்சன் காவல் கோட்டையாகவும் இருந்தான்.
முருகன், சூரன் மீது படையெடுத்து வருவதை அறிந்த தாருகன், அவரை எதிர்த்து வந்தான். முருகன் வீரபாகுவைத் தூதாக அனுப்பினார். அவர் தனது தம்பிகளுடன் கிரௌஞ்ச மலையை அடைந்தார். கிரௌஞ்சன் பல குகைகளை உருவாக்கி வீரபாகுவையும் அவனுடைய தம்பிகளையும், வீரர்களையும் அவற்றின் உள்ளே புகும்படிச் செய்தான். அவர்கள் உள்ளே சென்றதும் குகைகளை மூடிவிட்டான். இருளிலும் காற்றின்மையாலும் எல்லோரும் திசையறியாது மயங்கி விழுந்தனர்.
செய்தியை அறிந்த முருகப் பெருமான், தனது வேலாயுதத்தைக் கிரௌஞ்சகிரி மீது செலுத்தினார். அது அந்த மலையைத் தவிடுபொடியாக்கிவிட்டது. தாருகனும் மாண்டு ஒழிந்தான். அதனுள் சிக்கியிருந்த நவவீரர்களும் போர் வீரர்களும் வெளிப்பட்டுப் புத்துணர்ச்சி பெற்றனர். முருகன் கைவேலின் முதல் வெற்றி, தடங்கிரியான கிரௌஞ்ச மலையை அழித்ததும் அதில் வசித்திருந்த தாரகாசுரனை அழித்ததுமேயாகும். தேவர்கள் பொருட்டு கிரௌஞ்ச மலையை அழித்ததைப் போலவே புலவர் ஒருவருக்காகவும் வேலாயுதம் மலையைத் தவிடுபொடியாக்கிய ஒரு கதையும் வரலாற்றில் இருக்கிறது.