spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

திருப்புகழ் கதைகள்:

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் 245
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்-

பகர்தற்கு அரிதான – பழநி

அருணகிரிநாதர் அருளியுள்ள நூற்றியெழுபத்திமூன்றாவது திருப்புகழ், ‘பகர்தற்கு அரிதான’எனத் தொடங்கும் பழநி தலத்துத் திருப்புகழாகும். “பழநியப்பா, அரிய செந்தமிழ்க் காவியங்களை உணராமல், மாதர் வலைப்பட்டு அடியேன் வீணே அழியாமுன், மயில் மீது வந்து காத்தருள்வீர்”என அருணகிரிநாதர் இத்திருப்புகழில் வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

பகர்தற்கரி தான செந்தமி
ழிசையிற்சில பாட லன்பொடு
பயிலப்பல காவி யங்களை …… யுணராதே

பவளத்தினை வீழி யின்கனி
யதனைப்பொரு வாய் மடந்தையர்
பசலைத்தன மேபெ றும்படி …… விரகாலே

சகரக்கடல் சூழு மம்புவி
மிசையிப்படி யேதி ரிந்துழல்
சருகொத்துள மேய யர்ந்துடல் …… மெலியாமுன்

தகதித்திமி தாகி ணங்கிண
எனவுற்றெழு தோகை யம்பரி
தனிலற்புத மாக வந்தருள் …… புரிவாயே

நுகர்வித்தக மாகு மென்றுமை
மொழியிற்பொழி பாலை யுண்டிடு
நுவல்மெய்ப்புள பால னென்றிடு …… மிளையோனே

நுதிவைத்தக ராம லைந்திடு
களிறுக்கரு ளேபு ரிந்திட
நொடியிற்பரி வாக வந்தவன் …… மருகோனே

அகரப்பொரு ளாதி யொன்றிடு
முதலக்கர மான தின்பொருள்
அரனுக்கினி தாமொ ழிந்திடு …… குருநாதா

அமரர்க்கிறை யேவ ணங்கிய
பழநித்திரு வாவி னன்குடி
அதனிற்குடி யாயி ருந்தருள் …… பெருமாளே.

இத்திருப்புகழின் பொருளாவது – “ஞானமயமாகின்ற இத் திருப்பாலமுதத்தை உண்ணுவாய்” என்று உமையம்மையார் சொல்லிப் பொழிந்தருளுகின்ற ஞானப்பாலை அருந்திய, அறிஞர்கள் புகழ்ந்து “திருக்குழந்தையே”என்று கூறுகின்ற என்றும் இளையவரே; முதலையால் போர் தொடங்கப்பட்டு (ஆதிமூலமென்று) வணங்கிப் புகழ்ந்த “கஜேந்திரம்” என்ற யானைக்குத் திருவருள் புரியும் பொருட்டு கணப்பொழுதிற்குள் அன்புடன் வந்த திருமாலினது திருமருகரே; அகார உகார மகாரங்களடங்கியதும் வேதாகமாதி கலைகட்கு முதல் அட்சரமானதுமாகிய குடிலை மந்திரத்தின் (பிரணவ மந்திரத்தின்) மெய்ப்பொருளை சிவபெருமானுக்கு இனிமையாக உபதேசித்தருளிய குருநாதரே;

தேவர் கோமானாகிய இந்திரன் வணங்கி வழிபட்ட பழநிமலையின் அடியில் விளங்கும் திருவாவினன்குடி என்னும் திருத்தலத்தில் என்றும் நிலைபெற்று எழுந்தருளி யிருந்து அடியார்கட்குத் திருவருள் செய்கின்ற பெருமையின் மிக்கவரே; மொழியின் இனிமையையும் அமைப்பின் அருமையையும் இத்தன்மையுடையது என்று சொல்லுதற்கு அரிதாகிய செந்தமிழ் மொழியாலாகிய சில பாடல்களை தேவரீரிடமுள்ள மெய்யன்புடன் கற்றுக் கொள்ளும் பொருட்டு, பற்பல தமிழ்ப் பெருங்காப்பியங்களை ஓதி யுணர்ந்து கொள்ளாமல், பெண்களினுடைய காம விகாரத்தால் உண்டாகும் நிறவேற்றுமை அடைந்து, விரகதாபத்தால், சகரர்களால் உண்டாகிய கடல் சூழ்ந்த அழகிய உலகில் இவ்வாறு அவமே திரிந்து சருகுக்கு நிகராகச் சாரமற்று உழன்று, உளந்தளர்ந்து உடல் மெலிந்து அடியேன் வீணேயழியாமுன், தகதித்திமி தாகிணங்கிண என்ற தாள ஒத்துடன் நடித்து எழுகின்ற அழகிய மயில் வாகனத்தின் மீது அற்புதமாக வந்து அருள்புரிவீர் – என்பதாகும்.

இத்திருப்புகழில் சொல்வதற்கு அரிதான தமிழ் பற்றியும், முருகப் பெருமான் சிவனார் மனங்குளிர உபதேசம் செய்தது பற்றியும், கஜேந்திர மோக்ஷம் பற்றியும் அருணகிரியார் பாடுகிறார். இவற்றைப் பற்றி நாளை காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe