spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்திருப்புகழ் கதைகள்: புடவிக்கு அணிதுகில்!

திருப்புகழ் கதைகள்: புடவிக்கு அணிதுகில்!

- Advertisement -

திருப்புகழ்க் கதைகள் – 252
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

புடவிக்கு அணிதுகில் – பழநி
அகத்தியர்

அகத்தியர் தோற்றம் பற்றி பல கதைகள் உள்ளன. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மைத்ராவருணர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியர் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டர் அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார்.

முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் மீண்டும் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.

அகத்தியர் பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.

அகத்தியர் செல்லும் வழியில் மேருமலைக்குக்கூட செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.

agasthyar

வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து, அவர்களை உண்ணவைப்பான். பின்னர் வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.

இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர். சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார். கஜேந்திர மோக்ஷத்தில் வருகின்ற யானை இந்த இந்திரதுய்மன்தான். அகத்தியர் விதர்ப்ப நாட்டை அடைந்து, தம் முன்னோர்களின் பித்ருக்கடன் தீர்ப்பதற்காக, அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து, தென்புலத்தார் கடனை தீர்த்தார்.

தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி “அகத்தியம்” என்னும் நூலை இயற்றினார். அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.

சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காக உருவம் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது. இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு என். கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.

அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe